கார்ல் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து 1848இல் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகின் அனைத்து மொழிகளிலும் படிக்கக் கிடைக்கும் மிக முக்கியமான ஆவணமாக அறியப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய வேலைத் திட்டங்களுக்கு அது அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த அறிக்கை மூலம் கம்யூனிசத்தை நோக்கிய மனித குலத்தின் வரலாற்றுப் பயணத்தை மார்க்சியம் துவக்கி வைத்தது. அதிலிருந்தே ஜனநாயகத்துக்கும், சோசலிசத்துக்குமான புரட்சிகளின் சகாப்தம் துவங்கியது. பைபிள், குர்ஆன் ஆகிய மதநூல்களுக்கு அடுத்தபடியாக உலக மக்களின் கைகளில் அதிகம் தவழ்ந்திடும் அரசியல் ஆவணமாக உலகை உலுக்கிய இக்குறுநூல் திகழ்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் உழைப்பாளிகள் ’கம்யூனிஸ்ட் லீக்’ எனும் கட்சியை 1840களில் உருவாக்கினார்கள். வர்க்கப் பிரிவினைகளும், தனிச் சொத்துரிமையும் இல்லாத புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவதே அந்தக் கட்சியின் நோக்கமாகும்.

லண்டனில் 1847இல் கூடிய கம்யூனிஸ்ட் லீக் தனது செயல்பாட்டிற்கான கையேடைத் தயாரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது. அந்தப் பணியை மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரிடமும் ஒப்படைத்தது. இருவரும் செவ்வனே பணியாற்றி ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட உலகம் போற்றும் அறிக்கையை 1848 பிப்ரவரியில் வெளியிட்டு அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தை எழுத்து வடிவில் வெளிக்கொணர்ந்த முதல் முயற்சியாகத் திகழ்கிறது.

Image Credits: Amazon.com

உலகக் கண்ணோட்டத்தை நோக்கி அறிக்கை எழுதுவதற்கு முன்பே மார்க்சும், எங்கெல்சும் தனித்தனியாக எழுத்துலகில் பயணிக்கத்  தொடங்கியிருந்தனர். 1843இல் “ஹெகலின் தத்துவத்தின் விதிகள் மீதான விமர்சனத்திற்கான பங்களிப்பு” என்ற புத்தகத்திலிருந்து மார்க்சின் பயணமும், 1844இல் ”இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற புத்தகத்திலிருந்து எங்கெல்சின் பயணமும் தொடங்கின. இருவரும் இணைந்து எழுதிய ‘ஜெர்மன் தத்துவஞானம்’ (German Ideology) புத்தகம் கம்யூனிஸ்ட் அறிக்கைக்கான அடித்தளத்தை அமைத்துத் தந்தது. அதுவொரு அறிக்கை என்பதால் சுருக்கமாக, ஆனால் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியிருந்ததால் வீரியத்துடன் எழுதப்பட்டிருந்தது..

மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து எழுதிய ஆவணம் என்றாலும் அதில் மார்க்சின் பங்கு அதிகம். தன்னுடைய முப்பதாவது வயதில் இவ்வறிக்கையை உலகுக்கு மார்க்ஸ் அளித்துள்ளார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இரட்டையர்களின் கடின உழைப்பில் உருவான இந்நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பை 1850இல் ஹெலன் மெக்ஃப்ர்லான் கொண்டு வந்தார்.

சமதர்ம அறிக்கை – Thamizhbooks.com – Buy Tamil books online

சுயமரியாதை இயக்கத்தின் வார ஏடான ’குடி அரசு’ அறிக்கையின் முதல் பகுதியை மட்டும் தமிழில் முதன் முதலாக ஐந்து பகுதிகள் கொண்ட தொடராக 1931இல் வெளியிட்டது. அறிக்கை முழுமையாக வெளியிடப்படாத காரணம் தெரியவில்லை. அந்த தொடருக்கு பெரியார் எழுதியுள்ள முன்னுரையில் பொதுவுடைமை சிந்தனை இந்தியாவில் வளராமலிருப்பது குறித்த தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். மதத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அடிமைத்தனத்தை இழிவாகக் கருதாமல் விதிப்பயன் என்று கருதுவதே அதற்கான காரணம் என்று கூறினார். இஸ்மத் பாட்சாவின் மொழிபெயர்ப்பில் முழுமையான, முறையான  அறிக்கையை இந்திய பொதுவுடைமைக் கட்சியின் ஜனசக்தி பிரசுராலயம் 1948இல் வெளியிட்டது.

வரலாறு, தத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றின் சாராம்சமாக  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளது. பொருள் முதல்வாதப் பார்வையிலிருந்து அது வரலாற்றை விளக்குகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றை கவனத்துடன் ஆய்வு செய்து சுருக்கமாக அதே நேரத்தில் முழுமையாகத் தொகுத்துத் தருகிறது. உலக வரலாறு என்பது  வர்க்கங்களுக்கிடையிலான மோதல்களின் வரலாறு என்கிறது. ஆடம் ஸ்மித், மால்தூஸ், ரிக்கார்டோ, போன்றோரின் செவ்வியல் பொருளாதாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சோசலிச பொருளாதாரத்தை அறிக்கை முன்வைக்கிறது. மார்க்ஸ் சுட்டிக் காட்டிய சோசலிசம் அன்று பிரான்சிலிருந்த செயிண்ட் சைமன், ஃபூரியர், இங்கிலாந்தில் இருந்த ராபர்ட் ஓவன் ஆகியோரின் கற்பனாவாத சோசலிசத்திடமிருந்து வேறுபட்டதாக இருந்தது.

”கம்யூனிச பூதம் ஐரோப்பாவை ஆட்டுவிக்கிறது. போப்பாண்டவர், பிரான்சின் முதலாளித்துவ வரலாற்றாசிரியர் கிஸோ, ஆஸ்திரியாவின் சான்சிலரான மெட்டர்னிக் வழிவந்த பழமைவாதிகள், ரஷ்யாவின் ஜார் மன்னர், ஜெர்மனியின் காவல்துறை ஒற்றர்கள் என்று அனைவரையும் கம்யூனிச பூதம் பிடித்தாட்டுகிறது, இந்தப் பூதத்தை ஓட்டுவதற்கு பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் கூட்டு சேர்ந்துள்ளன. இதிலிருந்து கம்யூனிசமானது ஒரு தனிப்பெரும் சக்தியாகிவிட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டன என்பது புலனாகிறது. எனவே உலகம் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும், நோக்கங்களையும்  விளக்க வேண்டிய சரியான தருணமிது” என்ற முன்னுரையுடன் அறிக்கை தொடங்குகிறது.

முதலாளிகளும், பாட்டாளிகளும்

”முதலாளிகளும், பாட்டாளிகளும்” என்ற தலைப்பிலான முதல் பாகம் இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்று குறிப்பிடுகிறது. சீமான்கள்-அடிமைகள், நிலப்பிரபுக்கள்-பண்ணையடிமைகள், கைவினைச் சங்க ஆண்டான்கள்-கைவினைப் பணியாளர்கள், முதலாளிகள்-பாட்டாளிகள், மொத்தத்தில் ஒடுக்குபவர்-ஒடுக்கப்படுவோர் இடையிலான மோதல்களையே வரலாறு முழுவதும் காண்கிறோம் என்கிறது.

அடுத்து முதலாளித்துவத்தின் வரலாற்றைச் சுருங்கக் கூறுகிறது. ஐரோப்பிய மாலுமிகள் கண்டுபிடித்த உலகின் புதுப்புது நாடுகளைக்  காலனிகளாக்கி முதலாளித்துவம் வளர்ந்த கதையை விளக்குகிறது. தொழிற்புரட்சி, கப்பல், ரயில் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களால் உலகளாவிய சந்தை உருவானதைக் காட்டுகிறது. அதனால் உற்பத்தியிலும், அதன் பரிவர்த்தனையிலும் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மதத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியியலாளர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் முதலாளித்துவம் எவ்வாறு தனக்குச் சேவகர்களாக மாற்றிக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. குடும்ப உறவுகள் சீரழிந்து பண அடிப்படையிலான உறவுகளாக மாறுவதையும், மனித உறவுகள் பாழடைந்து தன்னலம் மேலெழுந்திருப்பதையும் காட்டுகிறது. நகரங்களின் வளர்ச்சியையும், கிராமங்களின் வீழ்ச்சியையும், அளவுக்கு மீறி உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாவதையும் சுட்டிக் காட்டுகிறது. சந்தையையும், லாபத்தையும் தேடி முதலாளித்துவம் அலைகிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப்  பகைமைகளுக்கு முடிவு கட்டி விடவில்லை. முதலாளித்துவம் தனக்கான அழிவைத் தானே தேடிக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்துடன் தவிர்க்க முடியாத வளர்ச்சியாக பாட்டாளி வர்க்கமும் இணைந்து வளர்வதை அறிக்கை குறிப்பிடுகிறது.

இன்றைய நாடுகளின் அரசுகள் எல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகளின் சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள எண்ணற்ற, அரிய சுதந்திரங்களை எல்லாம் விட்டு விட்டு வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஓரேயொரு சுதந்திரத்தை மட்டுமே முதலாளித்துவம் சிம்மாசனத்தில் ஏற்றியுள்ளது. திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை மட்டுமே  நிலைநாட்டியிருக்கிறது.

பாட்டாளி வர்க்கத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அறிக்கை விவரிக்கிறது. தொழிலாளிகளின் உழைப்பு சந்தைப் பொருளாகிறது. சுரண்டப்படுகிறது. இயந்திரமயம் உழைப்பைச் சுவையற்றதாக மாற்றுகிறது. அதிவேக இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, வேலைப் பிரிவினை, வேலைநேர அதிகரிப்பு ஆகியன பாட்டாளிகளை மேலும் அடிமைகளாக்குகின்றன. முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பல படிநிலைகளை அறிக்கை விளக்குகிறது. முதலில்  தொழிலாளியின் தனித்த போராட்டமாகத் தொடங்குகிறது. அடுத்து தொழிற்சங்கப் போராட்டமாக வளர்ச்சி பெறுகிறது. பின்பு அரசியல் போராட்டமாக வலுப்பெறுகிறது. இறுதியில் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க யதேச்சதிகாரமாகப் பரிணமிக்கிறது. முன்பிருந்த பொருள் உற்பத்தி உறவுகளுடன் வர்க்கப் பகைமைகளும் அப்போது ஒழிந்திடுகின்றன.

Pls read : CommunismOnline
Image Credits: Reddit.com

கம்யூனிஸ்டுகளும், பாட்டாளிகளும்

“கம்யூனிஸ்டுகளும், பாட்டாளிகளும்” எனும் அறிக்கையின் இரண்டாம் பாகம் கம்யூனிஸ்டுகளுக்கு ஏனைய தொழிலாளிகளுடன் இருக்க வேண்டிய உறவு குறித்துப் பேசுகிறது. கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க நலன்கள் குறித்து மட்டுமே சிந்திப்பவர்கள் என்கிறது. பல்வேறு நாடுகளில் தேசிய அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களும், அவை ஈட்டிடும் வெற்றிகளும் தேசியங்களுக்கு அப்பால் நிலவிடும் உலகளாவிய பாட்டாளி வர்க்க நலங்களுக்கானது என்பதைச் சுட்டிக் காட்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமை என்கிறது. உலகெங்கிலும் தொழிலாளி வர்க்க கட்சிகளை வழிநடத்தும் உறுதிமிக்கவர்களாக கம்யூனிஸ்டுகள் விளங்குகிறார்கள் என்கிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகத் திரட்டுவதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை என்கிறது.

சொத்துடைமையை பொதுப்பட ஒழிப்பதல்லாமல், முதலாளித்துவ சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிஸத்தின் நோக்கமாகும்.  முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது. கம்யூனிச சமுதாயத்தில் நிகழ்காலம் கடந்த காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது என்பதை அறிக்கை குறிப்பிடுகிறது. பாட்டாளி வர்க்கம் அரசியல் மேலாண்மை பெற்ற வர்க்கமாக வளர்ந்திட வேண்டிய தேவையை அறிக்கை வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் எப்போதுமே அந்தந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தான் இருந்து வந்துள்ளன. கம்யூனிஸப் புரட்சியானது மரபார்ந்த சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாகத் துண்டித்துக் கொண்டு விடுகின்ற புரட்சி என்பதால், அந்தப் புரட்சியின் வளர்ச்சியின் போது மரபார்ந்த கருத்துகளிடமிருந்தும் மிகவும் தீவிரமாகத் துண்டித்துக் கொள்ளும் என்று அறிக்கை அறுதியிட்டுக் கூறுகிறது. அப்போது தனிமனிதச் சுரண்டலும், நாடுகளுக்கிடையிலான சுரண்டலும் முடிவுக்கு வருகின்றன. வர்க்கப் பிரிவுகள் மறைந்து வர்க்க மோதல்கள் இல்லாத உலகம் உருவாகிறது என்பதுடன் இரண்டாம் பாகம் முடிகிறது.

சோசலிச, கம்யூனிச இலக்கியம்

’சோசலிச, கம்யூனிச இலக்கியம்’ என்ற தலைப்பிலான அறிக்கையின் மூன்றாம் பாகத்தில் மற்றைய சோசலிச சித்தாந்தங்களிலிருந்து கம்யூனிசம் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

’பிற்போக்கு, பிரபுத்துவ சோசலிசம்’ நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவம் வளர்ச்சி பெறத் தொடங்கிய காலத்தில் புதிதாக உதித்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைத்தது. நிலப்பிரபுக்கள் முதலாளித்துவத்தின் மீது வசைபாடினார்கள். நவீன முதலாளித்துவம் தங்களின் சமூக அமைப்பு தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்ததே என்பதை மறந்து புலம்பினார்கள். பழைய சமுதாய அமைப்பு முறையினை முதலாளித்துவம் முற்றாக வேரோடு வெட்டி வீழ்த்தி விட்டதற்காக வசைபாடுகிறார்கள். மீண்டும் எழுந்து முதலாளித்துவத்தை தங்களால் வீழ்த்த முடியாது என்பதறிந்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். அரசியல் போராட்டத்துக்குச் சாத்தியம் இல்லாமல் போனதால் இலக்கியப் போர் மட்டுமே புரிந்தனர். இதுவே பிற்போக்கு பிரபுத்துவ சோசலிசமாகும் என்கிறது அறிக்கை.

’கற்பனாவாத சோசலிசம்’ முன்வைக்கும் கருத்துகளின் போதாமையை அறிக்கை விளக்குகிறது. இது செயிண்ட் சைமன், ஃபூரியர், ராபர்ட் ஓவன் போன்றோர் உயர்த்திப் பிடித்த சோசலிசமாகும். நல்ல உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை தொழிலாளிகளுக்கு உறுதிப்படுத்தினால் போதும் என்ற சிந்தனையைக் கொண்டது. பாட்டாளி வர்க்கம் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும், முதலாளிகளின் நல்லெண்ணத்தால் முரண்பாடுகளைத் தவிர்த்து விடலாம் என்றும் தவறான சிந்தனைகளை முன்வைக்கிறது.

’கிறித்துவ சோசலிசம்’ குறித்த எச்சரிக்கையையும் அறிக்கை கொடுக்கிறது. ’கிறித்துவ சோசலிசம்’ நிலப்பிரபுத்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டதைப் போல் முதலாளித்துவத்துடனும் கைகோர்த்துக் கொள்ளும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

’சிறு முதலாளிகளின் சோசலிசம்’ (Petty Bourgeois Socialism) எவ்வாறு நம்பத்தகாதது என்பதையும் அறிக்கை விளக்குகிறது. சிறு முதலாளிகள் எப்போதும் பாட்டாளி வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் ஊசலாடுபவர்கள். தடுமாறுபவர்கள். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ’சிறு முதலாளிகளின் சோசலிச’ கோட்பாட்டிற்கு ஸ்விஸ் பொருளாதார வல்லுனர் சிஸ்மாண்டி தலைமை தாங்கினார்.

’ஜெர்மன் அல்லது மெய்யியல் சோசலிசம்’ எவ்வாறு ஜெர்மனியின் நிலைமைகளுக்குப் பொருந்தாதது என்பதையும் அறிக்கை விளக்கத் தவறவில்லை. மெய்யியல் சோசலிசம் முதலாளித்துவக் கொடூரத்தையும், பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் ஒரு சேரத் தாக்கியது. ஜெர்மானிய குட்டி முதலாளிகளைத் திருப்திபடுத்துவதாக அது இருந்தது. சீர்திருத்தவாதம் பேசும் புரட்சிக்கு எதிரான தத்துவமாக இருந்தது. அது பாட்டாளிகளுக்கு சில வசதிகளைச் செய்து கொடுத்து முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் முயற்சியாகும்.

Images Credits: Quora

கம்யூனிஸ்டுகளும் பிற கட்சிகளும்

’கம்யூனிஸ்டுகளும் பிற கட்சிகளும்’ என்ற நான்காம் பாகம் உடனடித் தேவைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள் தங்களின் எதிர்காலக் கடமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதைத்  தெளிவுபடுத்துகிறது. தேவைப்படும் போது கூட்டணி தந்திரத்தைப் பயன்படுத்தும் கம்யூனிஸ்டுகள் அடிப்படை முரண்பாடுகளை என்றும் மறக்க மாட்டார்கள் என்பதை வலியுறுத்துகிறது. நிலைமைகளுக்கு ஏற்றவாறு  பிரான்சில் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராக சோசியல் ஜனநாயகவாதிகளுடனும், ஜெர்மனியில் முடியாட்சியை வீழ்த்த வேண்டியதன் காரணமாக முதலாளிகளுடனும், ஸ்விட்சர்லாந்தில் தீவிரவாதிகளுடனும் கூட்டணி அமைந்திடலாம் என்பதை அறிக்கை தெளிவாக்குகிறது. ஜெர்மனியில் நடந்து கொண்டிருந்த முதலாளித்துவப் புரட்சி வரவிருக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகையாகும் என்பது மார்க்ஸ்-எங்கெல்ஸ் இணையர்களின் கணிப்பாகும். பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிலும் இருந்ததை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ள பாட்டாளி வர்க்கம் ஜெர்மனியில் இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கம்யூனிஸ்டுகள் அந்தந்த நாடுகளில் நிலவிடும் சமூக அரசியல் அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கங்கள் அனைத்தையும் ஆதரிப்பார்கள் என்கிறது அறிக்கை.

தமது நோக்கங்களை கம்யூனிஸ்டுகள் மூடி மறைப்பதில்லை. அவர்கள் இன்றுள்ள சமுதாயத்தை பலவந்தமாய் வீழ்த்தி தமது லட்சியங்களை நிறைவேற்றுவோம் என்று ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள். அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள்! கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!  தொழிலாளி வர்க்கம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால் பெறுவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்ற முத்தாய்ப்புடனும், ’உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற அறைகூவலுடனும் அறிக்கை முடிவடைகிறது. வெளியிடப்பட்ட காலத்தில் மார்க்சியத்தைக் கட்டுவதற்கான கோட்பாடாக அறிக்கை திகழ்ந்தது. இன்று மார்க்சியத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான உட்கருவைக் கொண்டதாக இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. முதலாளித்துவ முகாம்கள் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் முடிவடைந்து விட்டது என்று கொக்கரித்தன. அந்தக் குதூகலம் தற்போது அடங்கி விட்டது. ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகமும் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இத்தகு பொருளாதாரப் பின்னடைவுக் காலத்தில் மாற்றுத் திட்டங்கள் ஏதுமின்றி வெற்றிடம் உருவாகியுள்ளது. இச்சூழலில் பிற்போக்கு சக்திகளும், மத அடிப்படைவாதப் போக்குகளும் வளர்ச்சியடைவதற்கு ஏதுவாக சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு அமைந்து விட்டது. முதலாளித்துவம் மிகவும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது என்ற உண்மையையும், பெரிய பொருளாதாரப் பின்னடைவை அது சந்திக்கிறது என்ற உண்மையையும் வைத்தே சோசலிசம் தானாகப் புத்துயிர் பெற்று விடும் என்று கூறி விட முடியாது. புரட்சிகரமான மாற்றுச் செயல்திட்டத்தை முன்வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சியத்தை மறுகட்டமைப்பு செய்து மார்க்சியத்தில் மற்றுமொரு சிகரத்தை எட்டுவதற்கான வாய்ப்பு புலப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு மாற்றில்லை என்ற மாயையை முறியடித்து முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்பதை நிரூபிக்க காலம் கனிந்து வருகிறது.  நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகிறது. அதை நோக்கி நகர்ந்து பொன்னுலகைப் படைப்போம்!

பெ.விஜயகுமார்.


4 thoughts on “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: ஓர் எளிய அறிமுகம் – பெ.விஜயகுமார்”
  1. வணக்கம் தோழர். சூப்பரான பதிவு ..”
    “முதலாளித்துவத்தின் வரலாற்றைச் சுருங்கக் கூறுகிறது. ஐரோப்பிய மாலுமிகள் கண்டுபிடித்த உலகின் புதுப்புது நாடுகளைக் காலனிகளாக்கி முதலாளித்துவம் வளர்ந்த கதையை விளக்குகிறது. தொழிற்புரட்சி, கப்பல், ரயில் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களால் உலகளாவிய சந்தை உருவானதைக் காட்டுகிறது. அதனால் உற்பத்தியிலும், அதன் பரிவர்த்தனையிலும் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மதத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியியலாளர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் முதலாளித்துவம் எவ்வாறு தனக்குச் சேவகர்களாக மாற்றிக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. குடும்ப உறவுகள் சீரழிந்து பண அடிப்படையிலான உறவுகளாக மாறுவதையும், மனித உறவுகள் பாழடைந்து தன்னலம் மேலெழுந்திருப்பதையும் காட்டுகிறது. நகரங்களின் வளர்ச்சியையும், கிராமங்களின் வீழ்ச்சியையும், அளவுக்கு மீறி உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாவதையும் சுட்டிக் காட்டுகிறது. சந்தையையும், லாபத்தையும் தேடி முதலாளித்துவம் அலைகிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவு கட்டி விடவில்லை. முதலாளித்துவம் தனக்கான அழிவைத் தானே தேடிக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்துடன் தவிர்க்க முடியாத வளர்ச்சியாக பாட்டாளி வர்க்கமும் இணைந்து வளர்வதை அறிக்கை குறிப்பிடுகிறது.”

    அழகாக கொண்டு செல்கிறீர்கள் . வாழ்த்துகள் தோழர். சிறப்பு. நானும் இதனை கீழே கொண்டு செல்கிறேன். மோகனா

  2. எழுகடலையும் குறுக தரித்த குறள் என்பது போல் பேரா.விஜயகுமார் கம்யூனிஸ்ட் அறிக்கையை மிக எளிமையாக கேப்சூலுக்குள் அடக்கி சொல்லி விட்டா ர். விரித்துச்சொல்லுவது எளிது.சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் கடினம்.அதை எளிமையாகச்சொல்லி விட்டார்.வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *