நூல்: “பொய்க்கால் குதிரை”
ஆசிரியர்: டி. செல்வராஜ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள்: 108
விலை: ₹85
சாகித்ய அகாதெமி விருது பெற்ற”தோல்” நாவலின் ஆசிரியர் டி.செல்வராஜ் அவர்கள் எழுதிய நாவல் என்ற எதிர்பார்ப்பில் இந்த நூலை நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன். நூலின் அணிந்துரையிலேயே இந்நாவல் இதுவரை அவர் எழுதிய நாவல்களிலிருந்து மாறுபட்டது என்ற தகவல் கிடைத்தவுடன் ஆச்சரியப்பட்டேன்.
2011 இல் எழுதப்பட்ட இந்த நீண்ட கதை(?) (எழுத்தாளர் அப்படித் தான் குறிப்பிடுகிறார்) பேசும் காலம் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்த போதிலும் இன்றளவும் பொருந்துவதாக இருப்பதே இந்நூலின் வெற்றியாக கருதலாம். முழுக்க முழுக்க அங்கதச் சுவையுடன் எழுதப்பட்ட நாவல் என்பதே கூடுதல் சிறப்பு.
கருப்புத்துரை என்ற  மெய்ஞ்ஞான சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை படர்க்கை நிலையில் பகரும் வண்ணம் இந்நாவலை வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் அவர்கள். சிருங்காபுரி ஜமீன் வாரிசான கருப்புத்துரை புதரை வண்ணார் இனத்தில் வாழ்ந்து முனீஸ்வரன் அவதாரம் தரித்து மெய்ஞ்ஞான சித்தராக மாறி பெறும் அனுபவங்களே இக்கதையின் சுருக்கமாக கருதலாம்.
கருப்புத்துரை(றை) பெயர்க்காரணத்திற்கான கதையே ஏளனத்தில் துவங்கி நம்மை நகைச்சுவை உணர்வுடன்  பயணிக்க வைக்கிறது நாவலின் தொடக்கம். மூடநம்பிக்கைகளைச் சாட அங்கதச் சுவையே சிறந்தது என்பதை நிரூபணம் செய்யும் நூலே இது. கருப்புத்துரையின் ஜனனக்கதை புனைவாகத் தோன்றினாலும் அது பேசும் பாடுபொருள் கவனத்தில் கொள்ளத்தக்கதே.
புதரை வண்ணார் சமூகத்தின் வாழ்வியல் அவலங்களை மிக காத்திரமாக காட்சிபடுத்தியுள்ளார் எழுத்தாளர். ஊருக்குள் சென்று கஞ்சி கலயத்தில் சோறு வாங்கி சாப்பிடும் பழங்கால வழக்கத்தை கண்முன் கொண்டு வந்து சிந்திக்கத் தூண்டுகிறார். கருப்புத்துரையின் வளர்ப்புத் தாயான ஈனப்பேச்சியின் கற்பு நிலை குறித்த தகவல்கள் மதிப்புமிக்கவை.


வண்ணான்குடியில் வளர்ந்தாலும் சிருங்காபுரி ஜமீன் பரம்பரை என்ற எண்ணத்திலேயே திளைத்து கற்பனை உலகிலேயே சஞ்சாரித்து வாழும் கருப்புத்துரை அடையும் வேதனைகளை வசை, ஏளனம், அங்கதச் சுவையில் வெளிபடுத்தியுள்ளார் எழுத்தாளர் அவர்கள்.
கருப்புத்துரை என்ற கதாபாத்திரம் வாயிலாக பழங்கால ஜமீன்தார் வாழ்வியல் மற்றும் ஜமீன்தார் முறை ஒழிந்து நிலாச்சுவான்தார்கள் (அய்யண அம்பலம்) பெற்ற முக்கியத்துவம், வட்டித்தொழிலின் வளர்ச்சி(?)யை (லேவாதேவிக்காரர்) சினா தானா சித்திரபுத்திரன் செட்டியார் வாயிலாகவும்  அடகு பிடித்து ஏப்பமிடும் கலையை அவர் மனைவி கூத்தநாச்சி ஆச்சி வாயிலாகவும் எடுத்தியம்பிய விதம் கவனத்திற்குரியதே… சமீப காலங்கள் வரை இத்தொழில்கள் கொடிகட்டி பறந்தன என்பது கண்கூடு.
சித்திரபுத்திரன் செட்டியார் மகள் பத்மாவதிக்கும் கருப்புத்துரைக்குமான பகுதிகள் காமக்கிளர்ச்சியை ஊட்டுவதாக தோன்றினாலும் அந்நிகழ்வு பேசும் கருப்பொருள் கருத்தாழமிக்கதே… அந்நிகழ்வு ஏற்படுத்தும் மாற்றங்களால் சித்திரபுத்திர செட்டியின் வசதி வாய்ப்பின் கைங்கர்யத்தால்  கருப்புத்துரை வாழ்வில் ஏற்படும் துயரங்கள் அதிகாரவர்க்கத்தின் சூழ்ச்சியை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளன.
வறட்சியும் அதனால் ஏற்படும் பஞ்ச நிலையும் அதன்பின் முனீஸ்வரன் வந்து மழை பொழிந்து ஊர் செழிப்பது போன்றவை அமானுஷ்யமாகத் தோன்றினாலும் அக்கொடிய காலத்திலும் வட்டித் தொழிலுக்கு எதிராக சட்டத்திட்டங்கள் கடுமையாக இருந்த போதிலும் செட்டியின் தந்திரத்தால் அவன் தொழில் செழித்து அவன் கொழுத்து திரிந்ததாக காட்டுவது யதார்த்தமான வாழ்வியலின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
முனீஸ்வரன் , மெய்ஞ்ஞான சித்தராக மக்களால் சித்தரிக்கப்படுவதும் மெய்ஞ்ஞான சபை (சங்கம்) அமைத்து வசூல் வேட்டையில் அய்யண அம்பலம் இறங்குவதும் பட்டித் தொட்டியெல்லாம் சித்தரின் புகழ் பரவுவதும் “எச்சில்” பிரசாதமாக மாறுவதுடன் “எச்சில் பீடி”க்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதான காட்சிகள் வசை வடிவில் மூடநம்பிக்கைகள் மீது சாட்டையடி சுழற்றும் காட்சி வடிவங்களாகவே தோன்றுகின்றன.


இந்நாவலில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகக் கருதுவது, கருப்புத்துரை என்னும் மெய்ஞ்ஞான சித்தர் மேல் எந்த தவறுமில்லை என்பது மட்டுமே. போலிச் சாமியார் அல்ல… சாமியாராக மூட நம்பிக்கை மக்களால் சுயநல விரும்பிகளால் பேராசை பிடித்த நயவஞ்சகர்களால் உருவாக்கப்பட்டவன் இந்த கருப்புத்துரை என்பதே நிதர்சனம். கருப்புத்துரை எவ்வித எதிர்ப்புமின்றி மௌனசாமியாக இருந்ததற்கான காரணமே இந்நாவலின் அடிநாதமாகக் கருதுகிறேன்.
இந்த சித்தகரிப்பும் வண்ணாரக் குடியில் வளர்ந்தாலும் தனது ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் ஜமீன் வம்ச உணர்வின் வெளிப்பாடாக மிக மிக நுணுக்கமாக எழுத்தாளர் இணைந்தவிதம் பிரமிக்க வைக்கக்கூடியதே. செட்டி வீட்டில் கொலையுடன் களவு நடப்பதும் அது புரட்சி இயக்கத்தின் செயலாக இருந்த போதிலும் மெய்ஞ்ஞான சித்தர் பலிகடா ஆவதும் நாவலின் மீது ஈர்ப்பைக் கூட்டுவதாகவே அமைந்துள்ளது. சீவலப்பேரி பாண்டி திரைப்படம் ஏனோ கண்முன் வந்து போனது.
மரணத்தையும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் கருப்புத்துரை கதாபாத்திரம் பேசாமலே பேசும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தாழ்ந்த குடி மக்களின் வாழ்வியல் சித்திரங்களேயன்றி வேறேது. வாசலில் நின்று கஞ்சிக் கலயத்தில் சோறு வாங்கிச் சாப்பிடும் கருப்புத்துரை தனது பிறப்பின் பூர்வீகம் சார்ந்து ஜமீன்குடி என்ற கற்பனா வாழ்விலே மிதந்து இன்று யார் வீட்டினுள்ளும் நுழைந்து விரும்பி உண்ணும் நிலைக்காக மெய்ஞ்ஞான சித்தராக வாழ்வதாக சித்தகரிக்கப்பட்டுள்ள இந்நாவல் நேரிடையாக பேசும் கருத்துக்களை விட பேசாமல் நம்மை அதனை நோக்கி நகர்த்துவதில் தன்னிகரற்ற இடத்தை பெறுவதாக கருதுகிறேன்.
எவ்வித சுணக்கமுமின்றி அங்கதச் சுவையில் மூடநம்பிக்கையைச் சாடும் இந்த பொய்க்கால் குதிரை நாவல் ஏழுகால் பாய்ச்சலாக விறுவிறுப்பாக ஓடும் வண்ணம் அமைந்துள்ளது. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *