கொரானா என்பது நோயே அல்ல எப்போதும் நமக்கு வரும் சளி-இருமல் போலத்தான் இதை வைத்து மிகப்பெரிய சதி நடக்கிறது வியாபாரம் நடக்கிறது என்று முதலில் சொல்ல ஆரம்பித்தார்கள் பிறகு அப்படியே ஏதேனும் கொரானா அறிகுறி இருந்தால் மருத்துவமனை சென்று மருந்து உட்கொள்வதோ தடுப்பூசி போடுவதோ அவசியமற்றது என்றார்கள்.

சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறந்துவிட்டார் பார்த்தீரா.? இயக்குநர் கே.வி.ஆனந்த் இறந்துவிட்டார் பார்த்தீரா..? இன்னும் எத்தனை எத்தனை மரணங்கள் இப்படி நடந்திருக்குமோ என கேள்வியெழுப்பி மரணங்களை தனக்கு ஆதரவான பிரச்சாரமாக பேச ஆரம்பித்தார்கள்.
தடுப்பூசி குறித்து சாமான்ய மக்களுக்கு எழும் அச்சங்களையும் மாற்று மருத்துவம் என சொல்லி போலி மருத்துவம் பேசும் இது போன்ற பிரச்சாரங்களையும் இரண்டையும் ஒப்பீட முடியாது….

சாமான்ய மக்களின் கேள்விக்கும் அச்சத்திற்கும் அரசும், நவீன மருத்துவ துறையும் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும். ஆனால் தடுப்பூசியை தவிருங்கள் இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கு ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவத்தில் தீர்வு இருக்கு ஆங்கில மருத்துவம் நாடாதீர்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கும் போலி மருத்துவ கும்பலிடமிருந்து மக்களை விழிப்படைய செய்யும் பொறுப்பு மக்கள் இயக்கங்களுக்கு அதிக அளவு உண்டு..
போலி மருத்துவம் பேசுபவர்கள் சிறிய கூட்டம் தான் என்றாலும் மக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள்…

தடுப்பூசி குறித்து தெளிவுபடுத்த வேண்டிய மத்திய அரசும் பிற்போக்குத்தனத்தில் மூழ்கி போயுள்ளதால் கொஞ்சம் மெத்தனமாகவே இதை கையாள்கிறது
இன்று(15-5-21) கூட உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி கொரானா நோய் தீர்வதற்கு 15லட்சம் ரூபாய் செலவில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்
அவரது பாஜக சகாக்கள் மாட்டு மூத்திரம் கொரானாவை விரட்டும் என பிரச்சாரம் செய்கின்றனர்.

Go Corana என கூட்டாக அமர்ந்து கொண்டு பஜனை பாடுகின்றனர். இத்தகைய பிற்போக்கு கும்பலோடு மாற்று மருத்துவம் என போலி மருத்துவம் பேசுபவர்களை அப்படியே முழுவதுமாக ஒப்பிட முடியாது என்றாலும் இவர்கள் செய்வதும் அதற்கு இணையான ஆபத்தான பிரச்சாரமே…. மத்திய அரசே AYUSH என்ற தனித்துறையை உருவாக்கி மாற்று மருத்துவம் என்கிற அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படாதவற்றை அங்கீகரிக்க தொடங்கியுள்ளது.. இது 1998ல் பாஜகவின் வாஜ்பாய் அரசால் போட்ட விதை 2014ல் மோடி அதை முழுமைபடுத்திவிட்டார்.அரசே இப்படி பிற்போக்குத்தனத்தை ஊக்கப்படுத்தும் இந்த சூழலில் எது மக்களுக்கு பயன்படும் மருத்துவம்.? எது பயன்படாது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அறிவியல் இயக்கத்தினர்க்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பிரதான பணியாகும் அந்த முக்கிய பணியை டாக்டர். சட்வா எழுதிய இந்த புத்தகம் நிறைவு செய்திருக்கிறது. நவீன மருத்துவத்தின் அவசியம் என்ன..? அதன் வரலாற்று வளர்ச்சி, தடுப்பூசியின் பயன்கள் எத்தகையது.? இது குறித்து உலக அனுபவம் என்ன..? என்பதை மிக எளிமையாக தெளிவாக பல புள்ளிவிவரங்களுடன் தொகுக்கப்பட்டு சிறப்பாக எழுதியிருக்கிறார்..

நாங்கெல்லாம் அந்த காலத்தில் வாழும் போது சர்க்கரை போன்ற நோயெல்லாம் இல்லை. இப்போது பலர் உழைப்பது குறைந்துவிட்டது எனவே நோய்கள் அதிகமாயிற்று ஆரோக்கியமான வாழ்க்கை போய்விட்டது என்று புலம்புகிறவர்கள் பலரை பார்த்திருப்போம் இன்று அன்றாட வாழ்வில் உடல் உழைப்பு ஒப்பிட்டளவில் குறைந்துவிட்டது என்றாலும் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு சில பிரச்சனைகள் உண்டாகிறது என்றாலும் இவர்கள் சொல்லும் அந்த காலத்தில் அதாவது 1947ற்கு முன்பு இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 31 வயது தான். ஆனால் தற்போது 2021ல் 68 வயது. இதை சாதித்தது நவீன மருத்துவம் தானே தவிர போலி மருத்துவம் அல்ல ஒட்டுமொத்த மனித குல ஆயுளை அதிகரித்திருக்கிறது நவீன மருத்துவம் தான் என்பது தெளிவு.

கார்ப்பரேட் லாபவெறி முதலாளித்துவ சுரண்டலால் இயற்கை அழிப்பு போன்றவற்றால்தான் வைரஸ் உருவாகிறது என்ற பார்வையில் உடன்பட்டாலும் முதலாளித்துவ, சமூகம் உருவாவதற்கு முன்பே நிலப்பிரபுத்துவ சமுகத்திலும் அதற்கு முந்தைய சமூக அமைப்பிலும் கூட தொற்று நோய்கள் இருந்து வந்திருக்கிறது.

மனிதர்கள்-விலங்குகள் சமூகமாக வாழத்துவங்கிய காலத்திலிந்தே நோய்கள் இருந்திருக்கிறது. மக்கள் அதனால் மடிந்து போயிருக்கிறார்கள். 13ம் நூற்றாண்டில் எலியின் மூலம் உண்டாகும் ப்ளேக் நோயால் மட்டுமே ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகை பாதியாக குறைந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் பெரியம்மை எனும் நோயால் மட்டும் உலகம் முழுவதும் 50கோடி மக்கள் இறந்து போயுள்ளார்கள். அப்போதும் இந்த மாற்று மருத்துவம் என சொல்லப்படும் போலி மருத்துவம் பேசுவோர் இருந்தார்கள். ஆனால் எந்த மாற்று தீர்வையும் அவர்கள் முன்வைக்கவில்லை அப்பிரச்சனையை தீர்க்கவும் இல்லை.

1798ல் எட்வர்டு ஜென்னரால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி தான் பெரியம்மையை ஒழித்தது 1980ம் ஆண்டு இந்நோய் முற்றிலுமாக அழிந்துவிட்டது என நவீன மருத்துவம் உலகிற்கு அறிவித்தது. அதேபோல் நாய் மூலம் வரும் ரேபீஸ் நோயால் பலர் இறந்து போயிருக்கிறார்கள், ஏகப்பட்ட தொற்று நோய்கள் அந்த காலத்திலும் நடைமுறையில் இருந்து வந்துள்ளதை வரலாறு பதிவு செய்கிறது இவற்றை ஒவ்வொன்றாக முடிவுக்கு கொண்டு வந்ததது நவீன மருத்துவமே தவிர மாற்று மருத்துவம் எனும் போலி மருத்துவம் இல்லை இல்லவே இல்லை என அழுத்தமாக இப்புத்தகம் பல ஆதரங்களோடும் உதாரணங்களோடும் முன்வைக்கிறது..
நவீன மருத்துவம் என்ற சொற்தொடர் வெறுமனே ஆங்கில மருத்துவம் என்றோ அலோபதி என்றோ புரிந்துகொள்ள வேண்டியதில்லை.உடலியல் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் மருத்துவமுறை அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தி நடைமுறை உதாரணங்களோடு மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமாயின் அதை அங்கீகரிக்கலாம் அதோடு அடுத்த நாள்முதலே அந்த முறை நவீன மருத்துவத்தோடு இணைந்து விடுகிறது…
ஆனால் வீட்டிலே பிரசவம் பார்க்கலாம், மஞ்சள் காமாலைக்கு சூடு போடலாம், கொரானா காலத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்படுமாயின் முக கவசத்தை கழட்டி ப்ளாஸ்டிக் Fanடம் முகத்தை காட்டலாம் போன்ற அறிவியல் அடிப்படையற்ற பொய் கருத்துகளை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது….

தற்போதுவரை தடுப்பூசி அதிகளவு போட்டுக்கொண்ட நாடுகள் மட்டுமே கொராணவிலிருந்து மீண்டு வந்திருக்கிறதே தவிர வேறு வந்த வழியிலுமில்லை..

திரைத்துறையினர் சிலர் மரணித்ததை முன்னுதாரணமாக வைத்து தடுப்பூசி பொய் பிரச்சாரத்தை பரப்பும் இதே காலகட்டத்தில் தான் அதே திரைத்துறையில் இயங்கும் நடிகர் பொன்வண்ணன் தடுப்பூசியை போட்டுக்கொண்டு நான் விஞ்ஞானத்தை நம்புகிறேன் என்னிடம் தருவதற்கு வேறொன்றும் இல்லை என சொல்லியிருக்கிறார். அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என அறிவுறுத்திருக்கிறார். குறிப்பாக அரசும் பல பிரபலங்களும் மக்கள் அமைப்புகளும் இந்நேரத்தில் நவீன மருத்துவத்தை மக்கள் முன் வைக்க வேண்டுமே தவிர மாற்று மருத்துவம் என்கிற பெயரில் இயங்கும் போலி மருத்துவத்தை அல்ல என்பதை 46 பகுதிகளாக 139 பக்கத்தில் மிகத்தெளிவாக இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நவீன மருத்துவத்தில் நடைபெறும் கொள்ளை லாபத்தையும் சேர்த்தே பதிவு செய்கிறது. ஆனால் அதற்கு மாற்று கியூபா போல் சுகாதாரத்தை மக்களுக்கு இலவசமாக்க வலியுறுத்துவது தானே தவிர போலி மருத்துவம் பின் செல்வது அல்ல என்பதையும் சேர்த்தே இப்புத்தகம் பேசுகிறது,… அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் PDF வடிவத்தில் கிடைக்கிறது எனக்கு இப்புத்தகத்தை படிக்க சொல்லி அனுப்பிய பேராசிரியர்.நா.மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!

-S.மோசஸ் பிரபு, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவள்ளூர் மாவட்டம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *