புத்தகம் : மார்க்சிய பார்வையில் அம்பேத்கர்
ஆசிரியர் : பி.பி.சான்ஸ்கிரி, தமிழில்:சார்வாகன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 20
புத்தகம் வாங்க: https://bit.ly/3b9XxOU

அம்பேத்கார் நூற்றாண்டை ஒட்டி பிபி.சான்ஸ்கிரி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் அச்சு வெளியீடு

யார் இந்த அம்பேத்கர்?என்ன செய்தார் இவர்? எதனால் போற்றப்படுகிறார்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்க முற்படும் தருணம் அவர் ஏன் கம்யூனிஸ்ட்களுடன் உடன்பட மறுத்தார் என்பதற்கான விடையையும் சேர்த்து அளிக்கிறது இப்புத்தகம். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இவர் முன்வைத்த சீர்திருத்தங்களும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் இங்கு பேசப்பட்டுள்ளன. அம்பேத்கர் முன்வைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் யாருக்கானவை? அவை எதிர்க்கப்பட காரணங்கள் என கூற விளையும் பொழுது இந்துமத வர்ணாசிரம கொள்கைகளையும் முதலாளித்துவ நலன்களையும் தூக்கிப்பிடித்த ‘சமூக சீர்திருத்தவாதிகள்’என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களை விமர்சனம் செய்திருக்கும் இந்நூல், வர்க்க வேறுபாட்டை களைவதற்கான வழிகளையும் எடுத்துரைக்கிறது. பூலே, ஆர்.பி.மோரே போன்ற தலைவர்கள் உருவாக்கிய சீர்திருத்தத்தை ஆதரிக்கும் அம்பேத்கர் ஒரு கட்டத்தில் இவர்களுடன் வேறுபடவும் செய்கிறார்.

இங்கு முக்கியமாக பேசப்பட வேண்டியது என்னவென்றால் முதலாளித்துவக் கொள்கை,வர்ணாசிரம உடன்பாடு போன்ற கருத்துக்களால் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களோடு முரண்பாடு கொண்டிருந்த அம்பேத்கர் சோசலிசப் புரட்சியை வழியாக கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளிடமும் உடன்பட மறுத்தார் என்பதே அம்பேத்கர் மற்றும் பல சீர்திருத்தவாதிகள் அதிகார வர்க்கத்திடம் இருந்து தமது உரிமைகளை கேட்டுப் பெறவே முயன்றனர் அன்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்கவில்லை. காந்தியைப்போல் அகிம்சை (புத்தம்) வழியில் அதிகார வர்க்கத்தினரை மனமாற்றம் செய்து தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பினர். வர்க்க பேதத்தை ஒழித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அமையும் சோசலிச சமூகத்தை அவர் ஏற்கவில்லை.



ஆயினும் புத்தரின் துன்பம் என்பதற்கு சுரண்டலினால் ஏற்படும் துயரத்தையும் துக்க நிவாரணம் என்பதற்கு தனி சொத்தை ஒழிப்பதன் மூலம் சுரண்டலுக்கு முடிவு கட்டுவதையும் ஒப்புமை செய்தார். தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் திரட்டலுக்கு பாதகமானது என்பதாக அம்பேத்கர் கம்யூனிசத்தை எதிர்த்தார்.

அம்பேத்கார் போராடுவதற்கான காரணம், புத்தமதத்தை மேற்கொண்டது போன்றவற்றை விளக்கியிருக்கும் இப்புத்தகம் “சீர்திருத்தவாதிகள்”என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரு, காந்தி, திலகர், கோகலே போன்றோர் பிராமணிய பிற்போக்கு வாதத்தில் நம்பிக்கை கொண்டு முதலாளித்துவத்தை ஆதரித்ததை சாடியுள்ளது.

அம்பேத்கர் காந்தியுடன் முரண்பட்ட விடயங்கள்
1. காந்தி வர்ணாசிரம கொள்கையில் உறுதியாய் இருந்தது
2. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி தரக்கூடாது என்பதற்காக காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்

இப்படியான சூழ்நிலையில் அன்றைய இடதுசாரிகள் “பாட்டாளி வர்க்க ஒற்றுமையை பேசிய அளவிற்குக்கூட சாதிக்கு எதிரான போராட்டத்தையும் குறைந்தபட்சம் அதனை கணக்கில் எடுத்து மண்ணுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும்” என்பதே டிமிட்ரோவ் சுட்டிக் காட்டியதும் கம்யூனிஸ்டுகளிடமிருந்து அம்பேத்கருடன் முரண்பட்டதற்கான காரணமும் ஆகும்.

இன்றைய சூழ்நிலையில் நிலச்சீர்திருத்தம், பொருளாதார உயர்வு, இட ஒதுக்கீடு போன்றவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழக்கப்பட்ட தங்கள் உரிமையை மீட்டுத் தரும் எனவும் நீலமும் சிவப்பும் இணைந்து வர்க்கத்தின் ஒரு பகுதியான சாதியையும் வர்க்க பேதத்தையும் உடைத்தெறிந்து சோசலிச சமூகத்தை படைக்க சுய பரிசீலனை யுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை உறுதிபட எடுத்துரைக்கின்ற இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம்…



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *