பித்தப்பூ
க.நா.சுப்ரமண்யன்
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் 88
₹. 70

சமீபத்தில் வாசித்த “தபால்காரன்” – பிரெஞ்சு நாவலை மொழிபெயர்ப்பு செய்தவர் எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யன். அந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தில் இந்நூல் வாங்கி சில மாதங்கள் ஆன நிலையில் தற்சமயம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

” பித்தப்பூ” என்ற தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ காதல் கதையாகவே இருக்குமென்று அனுமானித்தேன். “உனக்கு பித்தம் தலைக்கேறி போச்சு” என்ற பேச்சு வழக்கின் உள்ளார்ந்த அர்த்தத்தின் வியப்பை இந்நூலில் தரிசிக்கலாம் என கருதுகிறேன்.

நூலின் முன்னுரையிலேயே அதற்கான தெளிவுரை வழங்கிய போதிலும் நமக்கான தேடலை அதிகப்படுத்துவதிலேயே இந்நூல் தன்னிகரற்ற நிலையை அடைந்து விட்டதாக கருதுகிறேன். எழுத்தாளர் தனது வாழ்வில் சந்தித்த தியாகராஜன் என்ற நபரின் உண்மைக் கதையை அவர் அறிந்த வகையில் புலப்படுத்தும் முயற்சியே இந்நாவல்.

தொடக்கத்தில் இந்நாவல் பெரும் குழப்பமூட்டுவதாக அமைந்துள்ளதாக கருதுகிறேன். ஒரு கிராமத்தில் வாழும் பல குடும்பங்கள் பற்றிய அறிமுகத்தின் நீட்சியால் உண்டான குழப்பம் ஒருபுறமென்றால்… அக்குடும்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கை ஏற்படுத்தும் குழப்பமோ மறுபுறமென நம்மை திக்குமுக்காட வைக்கும் வண்ணமே அமைந்துள்ளது.

இயல்பான தெளிந்த நீரோடை வடிவில் நாவலை வடிவமைக்காமல் புதிய கோணத்தில் நாவல் பயணிப்பது சற்று ஆறுதலளிப்பதாகவே உள்ளது. அவ்வப்போது வந்து எழுத்தாளரை தியாகு சந்திக்கும் அத்தியாயங்கள் சுவாரஸ்யமான அனுபவங்களாக விரிந்துள்ளன. அதிலும் குறிப்பாக தியாகுவின் கடந்த காலம் குறித்த தகவல்கள் இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.

மனநிலை பாதிப்பு குறித்த நாவலாக இருந்ததாலோ என்னவோ ஒரு கட்டத்தில் நாமும் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகிவிடுவோமோ என்ற பய உணர்ச்சியளிப்பதாகவோ நாவல் பயணிக்கிறது. அதுதான் படைப்பின் வெற்றியாக இருக்குமோ… தியாகு தான் பைத்தியமா… இல்லை கதை சொல்லி தான் பைத்தியமா என்ற குழப்பம் தொடக்கத்தில் வந்தது என்பதே உண்மை.

விபத்து ஏற்படுத்திய பாதிப்பின் விளைவாக மட்டுமே அதனைச் சுருக்கி பார்த்தலும் முறையாகாது என்றே எண்ணத் தோன்றுகிறது. இளவயதிலேயே ஓவியக் கலையில் ஆர்வங்கொண்டனுக்கு அது கிடைக்காத விரக்தி மனநிலையின் வெளிப்பாடோ என்ற ஐயமும் உண்டாகிறது. தியாகுவின் நிலையை உணர்ந்து அவனுக்கு வைத்தியம் பார்க்கும் பெண்ணே அவனை திருமணம் செய்த நிலையிலும் அவனுள் உண்டாகும் தடுமாற்றங்கள் அவசியமற்றதாகவே எண்ணத் தோன்றுகிறது.

No description available.

எழுத்தாளரை சந்தித்து உரையாடுவதே சிறு ஆறுதலளிப்பதாக தியாகு கூறும் நிகழ்வுகள் எல்லாம் அவன்மீது இனம்புரியாத பச்சாதாபம் வர வைப்பதாகவே அமைந்து நம்மை கலவரப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. தனக்குத்தானே தானொரு பைத்தியமா என்ற வினாவுடன் வாழும் மனிதனின் உள்ளுணர்வுகளை முடிந்த வரையில் படம்பிடித்துக் காட்ட முயற்சித்துள்ளார் எழுத்தாளர் எனலாம்.

மனநிலைப் பிறழ்வு வருவதற்கான காரணங்கள் பற்றிய தேடலுக்கான முயற்சியில் வெற்றி கிட்டவில்லை என்பது வருந்ததக்கதே. இதுவொன்றும் அய்வு நூலன்று என்பதையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. உன்மத்த நிலையிலேயே நம்மை இருக்கச் செய்து நாவலுடன் ஒன்றி பயணிக்க வைத்தலில் எழுத்தாளர் முழு வெற்றி பெற்றுள்ளார் என நம்புகிறேன்.

இந்நாவல் தொட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம். சிறு வயது ஆசைகள், பெரியவர்களின் ஏக்கங்கள், மனதர்களின் சுயநலப் போக்கு, தியாகுவின் தந்தையின் பெருந்தன்மை என பல யதார்த்தமாக நிகழ்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன. சுயநலம் பார்க்காமல் பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவர்களையெல்லாம் “பிழைக்கத் தெரியாத மனிதர்கள்” என்று முத்திரைக் குத்தும் சமூகத்தின் முகத்திரையை கிழிக்கவும் தவறவில்லை எழுத்தாளர்.

பைத்தியம் என்பது பரம்பரை வியாதியாக இருக்குமோ என்ற கோணத்திலும் நம்மை பயணிக்க வைத்து மனம் மட்டும் சார்ந்ததா? இல்லை உடலும் சார்ந்ததா என்ற புதிய கோணத்தில் தேடுதல் வேட்டை நிகழ்த்தியுள்ளார் எழுத்தாளர் அவர்கள்.

மீண்டுமொருமுறை நிதானமாக படிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. உள்ளூர சிறு பயமும் இருக்கிறது. பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கிவிடக்கூடாது அல்லவா??? பித்தப்பூ வின் நறுமணம் (?) சற்று கூடுதலாகவே வீசுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை நானும் பைத்தியம் தானோ என்னவோ???

இதற்கான விடையாக இந்நாவலில் எழுத்தாளர் கூறும் வாசகத்துடன் நிறைவு செய்வதே உத்தமமாக இருக்குமென்று கருதுகிறேன். “நானொரு பைத்தியமா என்று கேட்பவர்கள் நிச்சயமாக பைத்தியமாக இருக்க முடியாது.”

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *