“டா வின்சி கோட் “
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ
தமிழில் :எதிர் வெளியீடு
முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021
600 பக்கங்கள்- ரூபாய் 699
தமிழாக்கம் :பெரு.முருகன்&இரா .செந்தில்
” நிஜம் “என்ற தலைப்பில் நூலின் முதல் பக்கமாக…
சியான் துறவு மடம்… 1999இல் உருவாக்கப்பட்ட இந்த ரகசிய ஐரோப்பிய அமைப்பானது நிஜமான ஒரு சங்கம். 1975 ஆம் ஆண்டில் பாரிஸ் நேஷனலால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட “லெஸ்டோசியர் ரகசியங்கள்”
என்பனவற்றில் சியான் துறவு மடத்தின் உறுப்பினர்களாக எண்ணற்றோர் இருந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதில் சர் ஐசக் நியூட்டன், பொட்டிசெலி,விக்டர் ஹியூகோ மற்றும் லியானாடோர் டாவின்சி முதலானோர் அடக்கம். வாட்டிகனின் சமயகுருப் பதவியான ஓப்பஸ்டெய் ஒரு ஆழ்ந்த கத்தோலிக்க பிரிவின் இயக்கமாகும் .அண்மையில் இதில் மூளைச்சலவை, பலவந்தப்படுத்துதல் ,பெரும் அபாயகரமான பயிற்சியான ‘உடலை அவமானப்படுத்துதல் ‘முதலியன நிகழ்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .இந்த ஓபஸ்டெய் நியூயார்க் நகரத்தில் 243 லெக்ஸிடன் 47 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தன் தேசிய தலைமையகத்தை கட்டி முடித்து இருக்கிறது. இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள கலைச் சொல்லாடல் ,கட்டடங்கள் ஆவணங்கள் மற்றும் ரகசிய சடங்குகள் எல்லாமே மிகச் சரியானதாகும்.
இதயத்துடிப்பை எகிறவைக்கும் திரில்லர் நாவல் என்று நூலின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ,நூலின் தமிழ் வடிவில் அப்படி ஒன்றும் எகிறவைக்கவில்லை. ஆனால் கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை.. பக்தி வைத்திருப்போருக்கு இதயத்தை எகிறவைக்கும் செய்திகள் நாவல் முழுவதும் நிரம்பியுள்ளது.
டாவின்சியின் Last supper.. கடைசி விருந்து ஓவியத்தில் இயேசு கிறிஸ்துவின் வலது புறத்தில் அமர்ந்துள்ள பெண்ணின் படம் அவரது மனைவி “மெக்டலின்மேரி ‘எனும் இந்த நாவல்.. இயேசுகிறிஸ்துவின் மகள் “சாரா” என்கிறது. இயேசு யூதர்களின் ராஜ பரம்பரையில் வந்தவர் என்றும் அவரது ராஜ பரம்பரை பிரான்சை ஆண்டது என்றும் நாவல் குறிப்பிடுகிறது .
சோபியா நெவ்யூ நாவலின் நாயகி ..அவளின் தாத்தா ஜாக்குவார் சோனியர், லாங்டன் ..சிலாஸ், பிஷப் மேனுவல் அரிங்கரோசா ..லீபிங் ..என முக்கிய கதாபாத்திரங்கள் .இயேசு கிறிஸ்து தன் மரணத்திற்குப் பின் தன் மதபீடத்தை தன் இணையர் மேக்தலின் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்தார். ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்த அவரது சீடர்களில் பலர் தயாராக இல்லை .அதனால் வரலாறு மாற்றப்படுகிறது .ஆணுக்கு முக்கியத்துவம் தரும் முறையில் சடங்குகள் மாற்றப்பட்டன .ஏவாளின் விலா எலும்பிலிருந்து ஆதாம் தோன்றினான் என்பது மாறி ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதாக மாற்றப்பட்டது. பெண் மதகுரு ஆவது தடுக்கப்பட்டது. “இயேசுவின் மாற்று வரலாறு “என இந்நூலை கூறலாம். இது நாவலா… வரலாறா… என்று பகுத்து அறிய முடியாத வகையில் சம்பவங்கள் வரலாற்றுச் சான்றுகளோடு பிண்ணப்பட்டுள்ளது. உண்மையான கருத்துக்களை நாவலின் சர்ச்சைகள் …கற்பனைகள் ..என முன்வைத்தது இந்த நாவலாசிரியர் தப்பிப்பதற்காக செய்த தந்திரமா என தெரியவில்லை .இந்நூலில் வெளிவந்த கருத்துக்கள் ஏன் கடுமையான ஆட்சேபத்திற்கு உள்ளாகின… ஏன் சர்ச்சைக்குரியது எனக் கூறப்பட்டது என இந்நூலை வாசகனே படித்து தெரிந்து கொள்ளலாம் .
இயேசுவின் ராஜவம்ச வாரிசுகளை பாதுகாக்க ரகசிய சங்கம் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக இயங்குவதை இந்நாவல் பதிவு செய்கிறது. பெண்களின் முக்கியத்துவம்… ஆண் -பெண் உறவின் தெய்வீகம்… யெஹோவா என்பதில்
யெ=ஆணையும், ஹோவா =பெண்ணையும் குறிப்பது என பல செய்திகள் உள்ளன.
இயேசுவின் ராஜவம்சவாரிசுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடும் சிலுவை சங்கத்தினருக்கும்,வாட்டிகனுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறும் ரகசிய யுத்தம் இந்நூல் முழுவதும் வருகிறது. காப்பாற்றப்படும் இயேசுவின் உண்மை வாழ்க்கை வரலாற்று குறிப்புகள், ரோஜா மலர் ,கோளம், கற்சாவி ,நட்சத்திரம் ,ஆண்- பெண்ணை குறிக்கும் அடையாளக் குறியீடுகள்.. டாவின்சியின் ஓவியங்கள்.. சாங்கிரியஆவணங்கள்.. சிலுவை வீரர்களின் ரகசிய அமைப்புகள்… இயேசு தான் கைப்பட எழுதிய வாசகங்கள்.. பைபிள் எப்படி எழுதப்பட்டது… சங்கேத ரகசிய குறியீடுகள்… வால்ட்டிஸ்னியின் படைப்புகள் வழியாக மறைக்கப்பட்ட மேக்டலின் வாழ்க்கை.. சிண்டரெல்லா ..தூங்கும் அழகி ஸ்நோஒயிட் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. ஏவாள் ஆப்பிளை தின்றதால் அவள் கடவுள் வார்த்தையை மீறிய பாவியாக சித்தரிக்கப்பட்டதுடன் ..பெண்கள் சாத்தான் என்றும் கதை கட்டப்பட்டது .பெண்ணுடன் வாழும் இல்லற வாழ்வை தெய்வீகமாக இயேசு முன்வைத்த போது அதற்கு மாறாக பெண்ணை நீங்கி வாழும் துறவறத்தை கத்தோலிக்க மதம் முன்வைத்து மதத்தை கைப்பற்றியது.
ஏசு மீண்டும் உயிர்த்தெழுவார் என பக்தியை பராமரிப்பது , இயேசுவின் மனைவி என பல விவரங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. தனது எதிரிகளை வாட்டிகன் எப்படி தடம் தெரியாமல் அழித்துவருகிறது என்பதே நூலின் மையக்கருத்தாகும் .ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க்கிற்கு தெற்கே 7 மைல் தொலைவில் சிலுவை வீரர்கள் 1446 இல் ரோஸ்லின் கப்பலை கட்டினர் .யூதர்கள், கிறிஸ்தவர்கள், எகிப்தியர்கள் ,மசோனிக் ,பேகன் பாரம்பரியம் இதில் இடம்பெற்றுள்ளது. பெண்ணின் கர்ப்பமடையும் திறனை எகிப்தியர்கள் “ஹெரோஸ் காமாஸ் “புனிதமான திருமணம் என்ற புனிதமான சடங்காக கொண்டாடினர். ஆன்மீகத்தில் முழுமையற்ற ஆண், பெண்ணுடன் உடல் ரீதியாக புணரும் போது ஆன்மீக ரீதியில் முழுமை அடைவதாக அவர்கள் சடங்குகளை மேற்கொண்டனர் .இயேசுவின் நம்பிக்கைக்குரிய மாமாவாகிய ஜோசப் அர்மேத்யா உதவியுடன் ரகசியமாக பிரான்சுக்கு பயணம் போனார் மேக்டலின். இயேசு இறந்தபின் (அப்போது பாரிசின் பெயர் கவுல்) அங்கே மேக்டனிலுக்கு யூத சமூகத்தினர் அடைக்கலம் தந்தனர். இயேசு இறக்கும்போது கர்ப்பமுற்றிருந்த மேக்டனிலுக்கு இங்கேதான் “சாரா “பிறந்தாள்.மேக்டலினின் குழந்தை டேவிட் மற்றும் சாலமன் ஆகிய யூத அரசர்களின் வம்சவழி வந்ததால் மேக்டலின் ராஜமாதா எனப்படுகிறார் .இதை எப்படி நம்புவது என்றால் பைபிளை எப்படி நம்புகிறோமே அப்படித்தான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
மெரோவின்ஜியன்கள் பிரான்சை ஐந்தாம் நூற்றாண்டில் ஆண்ட இயேசுவின் ராஜ வம்சத்தினர் .ரகசியம் வெளியே எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று ஒருபுறமும் ,இயேசுவின் வாரிசுகள் பற்றிய ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று மறுபுறமும் சிலுவை மடத்தின் மூலம் செயல்படுகிறார்கள். நவீன காலத்திலும் இயேசுவின் வம்சம் இருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டில் பிரெஞ்ச் அரசாங்க வம்சத்துடன் திருமண உறவு மூலம் இயேசுவின் வாரிசுகள் “மெரோவின்ஜியன்கள் “என்ற பெயரில் ராஜ வம்சமாக ஆண்டு வரத் தொடங்கினார்கள். எனவேதான் பிரான்சில் புனித கோப்பைக்கு மதிப்பு இருக்கிறது .கிறிஸ்தவ மதத்தின் மதிப்பை, நம்பிக்கையை காப்பாற்ற கிறிஸ்துவின் வாரிசுகளும் சிலுவை சபையினரும் வேட்டையாடப்பட்டனர்,படுகின்றனர் என்கிறது நாவல். இந்த நாவல் எழுப்பும் கேள்வி இந்த நாவல் புனைவா அல்லது நாவல் என்ற பெயரில் வெளிப்படுத்தப்படும் ரகசியங்களா? என பகுத்தறிய வேண்டியது வாசகர் கடமை.
இது ஏதோ கத்தோலிக்க மத நம்பிக்கைக்கு எதிரான நூலாக எண்ணாமல், வரலாறுகள் எப்போதும் வெற்றிபெற்றவர்களால் மட்டுமே அவர்களுக்கு தோதாக மாற்றப்படுகிறது என்பதையும் உள்வாங்கி உண்மையை தேட வேண்டும் என்பதை உணர்த்துவதே ஆகும்.