சில சந்திப்புகளும் பல திருப்பங்களும்..

-டாக்டர் இடங்கர் பாவலன்

பிறந்து கண்விழித்து அம்மாவின் முகத்தை அடையாளம் கண்ட தருணத்திலிருந்து இன்றுவரையிலும் நாம் எத்தனையெத்தனை மனிதர்களை சந்தித்திருப்போம்! நம்மை எத்தனையாயிரம் மனிதர்கள் சந்தித்திருப்பார்கள்! ஆனாலும் நாம் இலட்சக் கணக்கான மனிதர்களைக் கடப்பது போல ஒருசில மனிதர்களைக் கடந்துவிடுவதில்லை. அப்படியானவர்கள் நம் வாழ்வில்  அடிக்கடி நினைவின் எல்லைக்குள் வந்து நம்மை ஆராதித்தபடியே இருப்பார்கள்.

கடந்த முப்பது வருடங்களில் நான் கடந்து வந்த மனிதர்கள் இலட்சக்கணக்கானவர்களாக இருக்கக்கூடும். யாரேனும் தன் வாழ்வில் தான் சந்தித்த மனிதர்களை கணக்குப் போட்டு நாட்குறிப்பில் எழுதி வைத்திருப்பார்களா என்று ஏனோ இக்கணத்தில் யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் நாட்குறிப்பில் இருப்பதைப் போல மனக்குறிப்பிலும் யாரோ ஒருசில குறிப்பிட்ட மனிதர்களின் சந்திப்பினூடே நிகழ்கிற அனுபவங்களும் அழியாத பக்கங்களாக எழுதப்பட்டிருக்கின்றன.

நாம் சந்திக்கிற மனிதர்கள் எல்லோருமே நம் மனதில் சலனத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்திச் செல்வதில்லை. ஒருசில நேரங்களில் முகம் தெரியாத மனிதர்கள்கூட நம் வாழ்வில் திருப்புமுனையாக வந்து சேர்வார்கள். அப்படியாக எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரையிலும் என் வாழ்வில் கல் விழுந்த குளத்து நீரைப்போல சில சலனத்தையாவது ஏற்படுத்திச் சென்ற மனிதர்களின் பட்டியலை நான் எழுதி எழுதிப் பார்க்கிறேன். அதில் முதலாவது பெயராக வந்து விழுவது என்னவோ சரண்குமாராகத் தான் இப்போதும் இருக்கிறான்.

ஏழு மலையேறி கோவிலுக்குச் சென்றால் திருப்பம் வருமென்று கால்நடையாக நடந்துச் செல்பவர்களுக்குத் தெரிவதில்லை திருப்பங்களென்பது கொண்டைஊசி வளைவுகளல்ல, அசாத்தியமான மனிதர்களின் சந்திப்புகளென்று. வாழ்வின் மீதான அசாத்தியமான நம்பிக்கையும் வாழ்வதற்குத் தேவையான அவதானிப்பும் நிம்மதியான வாழ்விற்கான சிறுசிறு மாற்றங்களும் ஏதோ முன்பின் தெரியாத மனிதர்களிடமிருந்தே நமக்குள் கடத்தப்படுகிறது என்பதை நாம் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை.

யாரோ ஒருவரின் முகம் நம் பால்யத்தில் தொலைத்த யாரோ ஒருவரின் முகத்தை ஞாபகப்படுத்திவிடுவதில்லையா? அப்படி யாரோ ஒரிவரின் கூர்மையான சொல்லும் செயலும் நம்மை சட்டென்று நிலைகுலைய வைத்து நம்மை நாமே மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதில்லையா! அப்படியொரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாராத வலிய சொற்களோடு எதிர்கொண்ட சரண்குமார் என் வாழ்வில் நிகழ்த்திச் சென்ற மாற்றங்களின் சரடுதான் இத்தொடரின் சாராம்சம்.

Tirupur School For The Deaf Photos, Iduvampalayam, Tirupur- Pictures & Images Gallery - Justdial

உடலிலும் மனதிலும் ஆயிரமாயிரம் நோய்மையைச் சுமந்தபடி வந்து செல்கிற மருத்துவமனைக் கூடங்களில் என்றும்போல அன்றும் சிறு நெரிசலுடன்கூடிய கூட்டம் வந்து போய்க் கொண்டிருந்தது. எப்போதும் சோபையான முகத்தோடு உடலின் நோய்மையே முகத்தில் ஒட்டுமொத்தமாக குடிதங்கியதைப் போல வாடிப்போய் வருபவர்களிடம் கொஞ்சமேனும் வலிந்து சிரித்துப் பேசி அவர்களின் முகத்தை ஒரு சிற்பியைப் போல மாற்றியமைக்க நான் முயன்று கொண்டிருப்பேன். ஒரு சிறுகீற்றுப் புன்னகை எப்பேர்ப்பட்ட அசட்டு முகத்தையும் அழகு வடியும் பாவமாக மாற்றிவிடும். தூங்கியபடி சிரிக்கும் குழந்தையைப்போல நோய்மையில் உள்ளுக்குள் துவண்டு கொண்டிருக்கும் மனிதர்கள் வெளியே சிரிக்கிற முகமும் அத்தகைய மகோன்யமானதுதான்.

தூரத்தில் நின்று உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த முப்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியை நானும் கவனிக்காமலில்லை. மருத்துவரின் முன்னால் அமர்ந்து கவனிக்கப்படுகிற பார்வையைவிட வரிசையில் நிற்கிறபோதே ஒரு நோய்மைக்குள்ளானவரின் உடலையும் மனதையும் கச்சிதமாக படித்துவிட முடியும். அடர் காய்ச்சலில் போர்வைப் போர்த்திக் கொண்டு அனத்திக் கொண்டு நிற்பவர்கள், முதுகைத் தளர்த்தி கால்முட்டுகளை கைகளால் முட்டுக் கொடுத்தபடி நிற்கிற மூட்டுத் தேய்மானக்காரர்கள், பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு அவஸ்தையோடு அங்குமிங்கும் கண்கள் அலைபாயக் காத்திருக்கிற பாலூட்டும் தாய்மார்களென எப்படியோ ஒரு செயல் மருத்துவனின் கவனத்திற்கு வந்துவிடுகிறது. ஒரு நோயாளி மருத்துவனிடம் வருவதற்கு முன்பே அவர்களைப் பற்றிய முன் அறிமுகம் வரிசையில் நின்று அவர்களை அவதானிக்கும்போதே கிடைத்துவிடுகிறது.

ஆனால் அந்த பெண்ணிடம் எந்தச் சலனமுமில்லாமல் வெறுமனே காத்திருப்பதைப் போன்றதொரு தோற்றம் நான் நிமிர்ந்து பார்க்கிற போதெல்லாம் மனதை மெல்ல அழுத்திக் கொண்டே இருந்தது. அவர்கள் வரும்போது வரட்டுமென நானும் காத்துக்கொண்டிருந்தேன். மதியவேளை நெருங்குகிற சமயத்தில் பசி எப்படி அடிவயிற்றிலிருந்து தொண்டைவரை கவ்விப்படித்து சாப்பாட்டை நோக்கி வழிநடத்துகிறதோ அதற்கேற்ப வேகவேகமாக நோயாளிகளைக் கவனிக்கச் சொல்லி சொல்லும் எழுதும் வேகமும் கூடிக் கொண்டே போகும். அத்தகைய விருவிருப்பான கட்டத்தில் நோயாளிகளும் அவசரகதியாக அறிகுறிகளை சொல்லிக் கொண்டும் வேகவேகமாக மருந்துகளை வாங்கிக் கொண்டும் கிளம்பிக் கொண்டிருப்பார்கள்.

அந்த பெண்மணியின் கண்கள் இப்போது என்னைக் கவனிப்பதைவிட எனது ஆழ்ந்த இதயத்தின் ஊற்றுக்கண்ணை திறந்து பார்ப்பது போலான அப்படியொரு பார்வையை வீசிக் கொண்டிருந்தாள். அவளருகே பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அப்போதுதான் என் கண்ணிலே பட்டுக் கொண்டிருந்தான்.

வறண்டுவிட்ட குளத்தினது மீன்முட்டைகள் பருவகாலத்து மழைக்காக காத்திருப்பதைப்போல நான் தனியராய் இருந்து அவர்களுடன் பேசுவதற்கான நேரத்திற்காக ஒருவேளை அவர்கள் காத்துக் கொண்டிருக்கக்கூடும். மனதில் அழித்துவிட முடியாத சோகமும் ஆழப் பதிந்துவிட்ட துயரமும் நிரம்பியவர்கள் எப்போதுமே மருத்துவரின் தனிமையை நாடியே நிற்பார்கள். ஒரு நோயாளி மருத்துவரிடம் தனியராய் பேச வேண்டுபவராய் இருக்கிறாரென்றால் அவரது துயரம் கடும் வாதையுடையதாகவும் அதேசமயம் அவை பேசியே தீர்த்துவிடக் கூடியதாகவும் இருக்குமென்பது இன்றளவிலும் என் அனுபவமாய் இருந்திருக்கிறது.

Image of the Day: March 28 - The New York Times

“என்னம்மா வேணும்?”

“உங்களைத் தான் பாக்கனும் சார்!”

“சொல்லுங்கம்மா, என்ன விசயம்?”

“என் பையனுக்குப் பாக்கனும் சார்..”

“என்னாச்சு பையனுக்கு. காய்ச்சல், சளி எதாவது இருக்கா?”

“அது இல்ல சார். எனக்கு ஒரு உதவி வேணும்???”

“என்னம்மா வேணும், சொல்லுங்க.”

“எனக்கு ஒரே பையன்தான் சார். வயசு பதினோரு ஆகுது. அவனுக்கு சின்ன வயசுல இருந்தே வாய் பேச வராது. காதும் கேக்காது.”

“…………………………”

“அச்சச்சோ, என்னமா அழறீங்க. அழாதிங்கம்மா. பையன் வேற உங்க மொகத்தையே புரியாம பார்த்துகிட்டு இருக்கான் பாருங்க. பொறுமையா சொல்லுங்க.”

“சார்ர்ர்ர்! எதாவது பண்ணி ஒரே ஒரு தடவை என் பையன் என்னைய ஆசையா ‘அம்மா’ ன்னு மட்டும் கூப்பிட வச்சுர முடியுமா சார்?” என்று சேலையின் முகப்பால் பாதி முகத்தை மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல குழுங்கி குழுங்கி அழுதுகொண்டே நின்றவரைப் பார்த்து பரிதவித்தபடி நான் அங்கேயே நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தேன்.

அந்த நாளும் நிமிடமும் அந்தக் கண்ணீரும் கதறியழுத வார்த்தைகளும் இன்னும் என் மூளைக்குள் ஒரு பெரும் மலையுச்சியில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற குரலைப்போல வந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

தொடரும்..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *