eevukalam auppuvathu mattum thaan ariviyalaa ? - ayisha .r.natarasan ஏவுகலம் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா? - ஆயிஷா. இரா.நடராசன்eevukalam auppuvathu mattum thaan ariviyalaa ? - ayisha .r.natarasan ஏவுகலம் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா? - ஆயிஷா. இரா.நடராசன்

ஏவுகலம் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா?

சந்திரயான் வெற்றி, ஆதித்யா வெற்றி ஆகியவை பற்றி நாம் நிச்சயம் பெருமிதம் கொள்ள வேண்டும். நிலவின் தென் முனையில் தனது உலாவியை இறக்கிய முதல் நாடு. சூரியனைச் சில லட்சம் மைல் அருகில் ஆய்வுசெய்யவுள்ள நான்காவது நாடு, 2013இல் மங்கள்யான், 2015இல் விண்ணின் புறஊதாக் கதிரியக்கத்தையும் எக்ஸ் கதிர்வீச்சு மூலத்தையும் சேர்த்தே ஆய்வுசெய்யும் ஒற்றைச் செயற்கைக்கோள் அஸ்ட்ரோ-சாட் (அப்படி நிகழ்த்திய மூன்றாவது நாடு) வெற்றி என்று விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட் கொண்டவை.

சவால்கள்: சர்வதேச ஏவுகலம் சார்ந்த அரசியலில் நமக்கிருக்கும் நெருக்கடிகள் ஏராளம். உதாரணமாக, மொத்தம் 3,378 செயற்கைக்கோள்கள் இன்று விண்வெளியில் வலம்வருகின்றன; அதாவது, செயல்பாட்டில் உள்ளவை. அவற்றில் 1,878 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுடையவை.

அடுத்தடுத்த இடங்களில் உள்ள சீனா (405), ரஷ்யா (174), பிரிட்டன் (164), ஜப்பான் (82) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 61 செயற்கைக்கோள்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. நம்மைவிட வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்துள்ள பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பட்டியலுக்கான போட்டியில் இல்லை.

2019இல், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க விண்வெளிப் படை என்கிற ஒன்றை உருவாக்கிவிட்டதாகவும் விண்வெளி இனி யுத்தகளம் என்றும் அறிவித்தார். அதே ஆண்டு ஜூலை மாதம் இந்திய ஏவுகணையான ராக்கெட் மிஷன் சக்தியை ஏவி ஒரு செயற்கைக்கோளை வீழ்த்திவிட்டதாகப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா மட்டுமே அதைச் சாதித்ததாகப் பெருமிதப்பட்டார். டென்மார்க், ஜப்பான், ஸ்வீடன் ஏன் இஸ்ரேல், சவுதி அரேபியா என எந்த நாடும் இந்தப் போட்டிப் பட்டியலில் இல்லை.

இந்தியாவில் இஸ்ரோவுக்குத் தரப்படும் அளவுக்கு சிஎஸ்ஐஆர் எனப்படும் இந்திய அறிவியல் தொழில் துறை ஆய்வு நிறுவனத்துக்கோ, ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கோ ஏன் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பது விளங்காத புதிர். சமீபகாலமாக இந்த நிறுவன ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகூடப் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

இஸ்ரோவுக்கு மட்டும் அங்கீகாரம்: இஸ்ரோவின் விஞ்ஞானிகளே பத்ம விருது போன்ற பெரிய அங்கீகாரம் பெறுகிறார்கள். ‘இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்’; ‘அவர் அரசுப் பள்ளியில்’ படித்தவர் என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஊடகங்களால் கதாநாயகர்கள் ஆக்கப்படுவதில் தவறில்லை.

கோவிட் தடுப்பூசி, கோவாக்ஸின் கண்டுபிடிப்பில், கேரளத்தின் மெல்வின் ஜார்ஜ் ஒடிஷாவின் மருத்துவர் சத்யஜித் இருவரோடு இணைந்து பெரிய வெற்றியைச் சாதித்துக்கொடுத்த தமிழ்நாட்டு மருத்துவர் ஆர்.பாலாஜியை இதேபோல் கொண்டாடியிருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.

அதிகக் கண்டுபிடிப்பு உரிமங்கள் வைத்திருப்பதில் 2,971 உரிமங்களுடன் சிஎஸ்ஐஆர் உலகிலேயேஇரண்டாம் இடத்தில் உள்ளது. மஞ்சள், வேப்பெண்ணெய் போன்ற இயற்கைத் தயாரிப்பின் உரிமத்தைக்களவாட சர்வதேசச் சதி நடந்தபோது, நம் விவசாயிகளுக்காக அதைப் போராடிப் பெற்றது சிஎஸ்ஐஆர் தான். 2009இல் மனித மரபணு கட்டுடைப்பில் உலகையே அசரவைத்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி டாக்டர் வினோத், அவரது குழுவுக்கு ஊடக அங்கீகாரம் எதுவும் இல்லை. ஜெர்மனி, தான்சானியாநாடுகளின் விருதுகளை அவர் வென்றார்.

ஜெனோமிக்ஸ் துறையில் இன்றும் உலக அளவில் பேசப்பட்டாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அவருக்கு இங்கே எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்திய வயல்வெளிக்குத் தகுந்தாற்போல (ஸ்வராஜ்) முதல் டிராக்டர் வாகனத்தைத் தயாரித்து சிஎஸ்ஐஆர் மிகக் குறைந்த விலைக்கு வழங்கியது ஏவுகலம் அனுப்புவதற்கு இணையான சாதனையாக ஏன் பார்க்கப்படுவது இல்லை?

அங்கீகாரம் கிட்டாத அறிவியலாளர்கள்: தளவாட இயல் ஆய்வகம் (டிஆர்டிஓ), சமீபத்தில் இந்திய ராணுவத்துக்குப் புதிய ஆயுத ஊடுருவல் கண்டறியும் ரேடார் (டபிள்யூஎஸ்ஆர்) வழங்கியதோடு, நமது பெருநகரங்களின் காற்று மாசுபாட்டைக் கண்டறிய எளிய கதிர்வீச்சு அளப்பான் ‘இன் மாஸ்’ கருவியையும் தந்துள்ளது. விபத்தில் காயம்பட்டு ரத்தப்போக்கு இருக்குமிடத்தில் தடவும்போது, உடனே செயல்பட்டு ரத்தப்போக்கை நிறுத்தும் ஒரு நானோ மருத்துவ அதிசயம் – ‘நானோஇன் மாசிஸ் களிம்பு’ என்பது டிஆர்டிஓ ராணுவ மருத்துவ ஆய்வகக் கண்டுபிடிப்பு.

இன்று இது சர்வ சாதாரணமாக 108 ஆம்புலன்ஸில் உள்ளது. இதை அடைந்த குழுவின் லெப்டினென்ட் டாக்டர் தெய்வசிகாமணியை எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படியான சாதனைகளை நமது நாளிதழ்களோ, இணையதளங்களோ, வாட்ஸ்ஆப் குழுக்களோ கொண்டாடுவதே இல்லையே… ஏன்?

அனைத்து அறிவியல் பிரிவுகளையும் கொண்டாடுவோம், இஸ்ரோ தவிர ஏனைய ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் கோடிக்கணக்கான இந்தியர்களைக் கோவிட் பேராபத்திலிருந்து காப்பாற்றிய கோவாக்ஸின் – கண்டுபிடிப்பாளர்கள் உள்பட யாரும் திருப்பதிக்குச் சென்று வழிபட்ட தாகவோ, ஏன் குறைந்தபட்சம் தேசியக் கொடியோடு மீம்ஸ் எதிலும் இடம்பெற்றதாகவோகூட நாம் பார்த்தது கிடையாது. நிலவின் தென் துருவத்தில் ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம் இறங்கியது ஒரு வரலாற்றுச் சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்கண்ட ஏனைய சாதனைகளும் அதேபோல் கொண்டாடப்பட வேண்டாமா என்பதே கேள்வி.

சூரியனுக்கு ஆய்வூர்தி அனுப்பியது சாதனை என்றால், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பாதாளச் சாக்கடையில் மனிதர்கள் இறங்கும் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உதவியோடு தஞ்சை இளைஞர் விமல் கோவிந்த் கண்டுபிடித்திருக்கும் அற்புதக் கருவி கொண்டாடப்பட வேண்டிய சாதனை என்பதை மறுக்க முடியுமா?

இஸ்ரோ சாதனைகள்போல ஏனைய அற்புதங்களையும் பாராட்டி விருதுகள் கொடுத்துப் பாடப்புத்தகத்தில் இடம்பெறவைத்து, அங்கீகரிக்க வேண்டும். ஏவுகலம் அனுப்புவது மட்டுமே அறிவியல் என்கிற கண்ணை மறைக்கும் ஒற்றை மனநிலையிலிருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற அது ஒன்றே வழி என்பதை உணர வேண்டும்.

– தொடர்புக்கு: [email protected]

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *