நூல் : என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா
ஆசிரியர் : ச.மாடசாமி
விலை : ரூ.₹90/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஆசிரியர் மாடசாமி அவர்களின் கல்வி,ஆசிரியர்,மாணவர் குறித்த பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்த “என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா” புத்தகம். பள்ளிக்கூடம் என்பது படிப்பு, ஒழுக்கம் மட்டுமே கற்றுத் தரும் இடம் மட்டுமல்ல, பள்ளியோடு இணைந்தது கற்றல் மட்டுமல்ல,குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பும் தான்.இன்றும் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிச்சை எடுக்கவும், முன்பின் தெரியாத நகரங்களில் வீட்டு வேலை பார்க்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவும் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் பெரும்பாலோனர் பள்ளிக்குச் செல்லாதவர்கள், பள்ளியில் இருந்து இடை விலகியவர்கள். பள்ளிகள் உள்ளவரை பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை தன் குழந்தைகள் போல எண்ணுவதால்.

முதலாவது கட்டுரையே புத்தகத்தின் தலைப்பாகவும் உள்ளது. மாணவர்களின் விடைத்தாள்களில் சிவப்பு பேனா நிகழ்த்தும் வன்முறையினை வலிமையாக உணர்த்துகிறது. குறிப்பாக வரிக்கு வரி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மாணவர்களால் பக்குவபடுவார்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். பின்பு ஆசிரியரின் பெயரை துண்டு சீட்டுகளில் எழுதி கேவலப்படுத்தும் நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.ஆம் இப்போது வரை தனக்கு பிடிக்காத,கண்டிப்பாக உள்ள ஆசிரியர் பெயரை கண்ட இடங்களில் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்.

இரண்டாவது கட்டுரை ‘ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்” மே மாதம் என்றாலே ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயத்தை உண்டாக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் மாதம். சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்வது அங்கங்கே நடப்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் மரணத்தை விட மோசமானது நாம் அனுபவிக்கும் வலி குறிப்பாக சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மாணவர்களை அவமதிக்கும் விதமாக சில எடுத்துக்காட்டுகளை குறிப்பிட்டுள்ளார். சரியாகக் காது கேட்காத சிறுமியை ஏ செவிடு காதுல உணகு விழுகலையா?, இரட்டை சடை போட்டுட்டு வர தெரியும் உனக்கு ஹோம் ஒர்க் போட முடியலையா? இது போன்று மாணவர்களின் குறைகள் சுட்டிக்காட்டி அவர்களை தனிமைப்படுத்துவது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மூன்றாவது கட்டுரையாக “பங்கஜம் சொன்ன கதை” ஆசிரியர் கூட்டங்களில் பயிற்சியளிக்கும் போது நடந்த விவாதங்களின் தொகுப்புக் கட்டுரையான “பங்கஜம் சொன்ன கதைகள்” நிறைய செய்திகளை நமக்குக் கூறுகிறது. மேலும் வகுப்பறைகளில் ஆசிரியரல்லாத திறன் வாய்ந்த மனிதர்களின் அறிவைப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
அரசுப்பள்ளி மாணவர் போல திறம்பட பேசக்கூடிய, விவாதிக்கக் கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில் காண்பதரிது. பாட்டு, நாடகம் என்றாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று அரசுப்பள்ளி மாணவர்களை பாராட்டுகிறார். இப்போது சமீப காலத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா இதுக்கு சான்றாகும்.

நான்காவது கட்டுரையில் “தப்பித்த குரங்குகள் முக்கியமானவை” இதற்கான அர்த்தத்தை ஆசிரியர் கூறியிருப்பது. யார் கைகளிலும் படாமல், யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்த அனைத்தும் ஒரிஜினல். வடிவமைக்கப்பட்டது எல்லாம் ஜெராக்ஸ். ஒரு பேப்பரை மதிப்பிடுவதும் அதிகாரம் தான். விடைத்தாளில் எப்போதும் சில தவறுகளை தேடுவது அதிகாரம் தான். மாவட்ட பேச்சுப் போட்டிக்கு மாணவன் ஒருவரை தயார் செய்யும் போது இயல்பாக பேசுபவனை நீ அதற்கு ஏற்றவாறு இல்லை என்று அவனே விலக்குவதும் அதிகாரம் தான். மாணவர்களுக்குள் இருக்கும் திறனை மேம்படுத்த வேண்டும், அதற்கான வாய்ப்பை வழங்கிட வேண்டும் எனவும், பள்ளியில் நடத்தும் போட்டியில் ஒரு மாணவன் ஆர்வத்தோடு கலந்து கொள்ள வந்தால் அவனிடம் உள்ள குறைகளை உற்று நோக்கி எதற்கு நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று கூறி அனுமதிக்க மறுக்கக்கூடாது என வலியுறுத்துகிறார். அப்போ எப்போது அவனுடைய தனித் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு வரும் அதற்கான சூழல் வரும் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்க வேண்டும்.

ஐந்தாவது கட்டுரை “பரிசோதனைக்கால தனிமையும் வாசிப்பின் தோழமையும்” வாசிப்பு தரும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். வாசிப்போடு உள்ள உறவும் ஆளுக்கு ஆள் மாறும். ஆசிரியர்கள் சிலர் வருத்தப்பட்டு சொல்லும் கருத்து வகுப்பறையில் புதுப்புது பரிசோதனைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களோடு நெருக்கமாகவும் இருக்கிறேன் ஆனால் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு எனக்கு இல்லை. தனித்து விடப்பட்டது போல் உணர்கிறேன் என்கிறார்கள்.வகுப்பறையில் புதுப்புது செயல்பாடுகளை நிகழ்த்திப் பார்கக அருமையான இரண்டு யோசனைகளை முன்வைக்கிறார். ஒன்று தனது எண்ணங்களை அக்கறையுடன், பரிவுடன் உள்வாங்கக் கூடிய மனிதர்களிடம் பகிர்வது. இது போன்றவர்கள் பெரும்பாலும் வேலை பார்க்கும் இடங்களில் கிடைப்பதில்லை, இரண்டாவது நல்ல நூல்களை வாசிப்பது. இந்த வாசிப்புக்கான முக்கிய புத்தகங்களாக ஒரு முழுமையான பள்ளி அனுபவமான *“டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி” நூலையும், ஒரு வகுப்பறை அனுபவமான ஜுஜூபாய் பதேக்காவின் “பகல் கனவு” நூலையும்* பரிந்துரைக்கிறார். நாம் உண்மைதான் ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களை நல்ல முறையில் வடிவம் மிக்க தங்கள் முயற்சிகளை தாங்கள் மட்டுமே கடைசிவரை செய்து கொண்டிருப்பார்கள்.

ஆறாவது கட்டுரை “வகுப்பறை உறவு_ நெருக்கமும் இடைவெளிகளும்” ஒரு வினோதமான விளையாட்டை நமக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். அந்த விளையாட்டின் பெயர் “பேய் பிடிச்சிருக்கு”இந்த விளையாட்டு ஆசிரியரை கற்பிப்பவரகா மட்டும் பார்க்காமல் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளத்தான். சில மாணவர்கள் ஆசிரியர்களை வெத்தல பெட்டி, மீசகார, நெடுமரம், மாடசாமி என்பதற்கு பதிலாக மடசாமி என்றெல்லாம் பெயர் வைத்தால் நமக்கு எவ்வளவு கோபம் வரும் அதுபோலதான் சில ஆசிரியர்கள் மாணவர்களின் அடையாளத்தை, அவன் உயரத்தை, அவன் நிறத்தை வைத்து அழைப்பார்கள். இதற்கான வேறுபாட்டை, பக்குவத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழாவது கட்டுரையாக “பள்ளியும் பண்பாட்டுப் புரட்சியும்” என்னும் கட்டுரை. அனைவருக்குமான உடல் உழைப்போடு கூடிய கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டது என்பதையும், அதனால் சீனாவில் கல்வி விழுக்காடு எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்தது என்பதையும் பற்றிப் பேசுகிறது. இக்கட்டுரை. நம் தமிழகத்தில் இப்போது முன்னெடுத்துள்ள “இல்லம் தேடிக் கல்வி”, “முதியவர் கல்வி” போன்றவைகளால் நம் நாட்டின் கல்வி விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எட்டாவது கட்டுரை “பொய்களுக்கும் ஒரு இடம்” மாணவர்களின் பொய்யை சிறிது கூட ஏற்றுக்கொள்ளாத ஆசிரிய மனம், As I am suffering from…. என லீவ் லெட்டரை முதல்நாளே கொடுத்துவிட்டு சொந்த வேலையில் ஈடுபடுவதை நகைச்சுவையுடன் “பொய்களுக்கும் ஓர் இடம்” கட்டுரையில் விவரிக்கிறார். மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, ஆசிரியர் வந்தால் எழுந்து நிற்பதில்லை போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். மருத்துவ விடுப்பு எடுத்து சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள். மாணவர்கள் மட்டும் வகுப்புக்கு புத்தகம் கொண்டுவராமல், தாமதமாக வருவது, வகுப்புக்கு விடுப்பு எடுப்பது போன்ற செயல்களுக்கு பொய் சொல்வதை நாம் அனுமதிக்காமல் ரசித்தால் என்ன என்பதை குறிப்பிட்டுள்ளார். மறைமுகமாக நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக விடுப்பு எடுக்கிறோம் அதை காண்பிக்கவும் மாணவர்கள் விடுப்பு எடுத்தால் ஏன் கோபம் வருகிறது என நம்மை ஆசிரியர்.மாடசாமி கேட்கிறார்.

ஒன்பதாவது கட்டுரை “ஜென் வகுப்பறை” ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள். அவர்களும் சில நேரங்களில் கோபத்தில் சறுக்கி விடுகிறார்கள். கண்மண் தெரியாமல் அடித்துவிட்டு ‘அந்த நேரத்தில் என்னை எந்தப் பேய் பிடிச்சுச்சோ, அவன் அழுக அழுக அடிச்சுப் புட்டேன்’ என்று கண்கலங்குகிறார்கள்” என்பதைப் பதிவு செய்துவிட்டு வகுப்பறைகளில் நடக்கும் சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர், மாணவனை பார்த்து மண்டையில் மூளை இருக்கா? களிமண் இருக்கா?திங்க மட்டும் தெரியுது, படிக்க தெரியல இவ்வகைக் கேள்விகள் குறித்து சில ஜென் கதைகளையும், தத்துவங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கடைசி கட்டுரை “வீதியில் விதைத்த நம்பிக்கை” என்னும் அறிவொளி இயக்க அனுபவங்கள் பற்றிய கட்டுரை இது. கட்டிடங்களுக்குள் கிடந்த கல்வியை வீதிக்கு அழைத்து வந்தது அறிவொளி இயக்கம். வீதிகளில் ஒரு சுதந்திரம் இருந்தது,புத்தகங்களுக்குள் கட்டுப்படாத பாடத்திட்டம் இருந்தது. பாட்டும் சிரிப்புமான வகுப்பறை இருந்தது, கல்வி வியாபாரிகள் கவனம் விழாத தூரம் இருந்தது. மாற்றத்திற்கான நம்பிக்கை இருந்தது.*பட்டா,படி* இரண்டு வார்த்தை தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள் தமிழில் எழுத சுலபமான எழுத்து “ட, பா” என்பதை குறிப்பிட்டுள்ளார். கடைசி கட்டுரை வகுப்பறை மொழி எனும் புத்தகத்தில் இன்னும் விளக்கமாக உள்ளது.

இப்புத்தகம் உண்மையில் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆளுமையை வளர்க்கக்கூடிய நல்ல ஒரு புத்தகம்.

தி.தாஜ்தீன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *