ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)

 

ஏங்கெல்ஸ் நினைவலைகள்

பால் லஃபார்கே

தமிழில் ச.சுப்பாராவ்

1867ல் மூலதனம் நூலின் முதல் பாகம் வெளிவந்த போது தான் நான் ஏங்கெல்ஸை முதன்முதலாக சந்தித்தேன்.

”நீ இப்போது என் மகளின் காதலன் ஆகிவிட்டதால், உன்னை நான் கண்டிப்பாக ஏங்கெல்ஸுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்,” என்றார் மார்க்ஸ். நாங்கள் மான்செஸ்டருக்குப் பயணித்தோம்.

ஊருக்கு வெளியே சின்னதாக ஒரு வீடு. வீட்டிற்கு சிறிது தூரத்தில் பரந்த வயல் வெளி…. அந்த வீட்டில்தான் ஏங்கெல்ஸ் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர்களோடு ஏங்கெல்ஸின் மனைவியின் சகோதரியின் பெண்குழந்தை ஒன்றும் இருந்தது. ஆறேழு வயதிருக்கும்.

ஐரோப்பாவில் புரட்சி தோற்றதும் மார்க்ஸ் லண்டனுக்கு புலம்பெயர்ந்தது போலவே ஏங்கெல்ஸும் லண்டன் வந்துவிட்டார். அவரைப் போலவே இவரும் அரசியல் போராட்டங்களிலும். அறிவியல் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

புரட்சியின் விளைவாக மார்க்ஸிற்கும், அவரது மனைவிக்கும் எந்த வருமானத்திற்கும் வழியில்லாமல் போனது. ஏங்கெல்ஸ் நிலமையும் அதுதான். எனவே அவர் தன் தந்தையின் அழைப்பை ஏற்று மான்செஸ்டர் திரும்பினார்.  அங்கு முன்பு 1843ல் தன் தந்தையின் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த குமாஸ்தா வேலையிலேயே மீண்டும் சேர்ந்தார். மார்க்ஸ் வாராவாரம் நியூயார்க் டெய்லி டிரிப்யூனில் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்த வருமானம் மிக அத்தியாவசியமான செலவுகளுக்கே போதாமல் இருந்தது.

இந்த காலகட்டத்திலிருந்து 1870 வரை ஏங்கெல்ஸ் கிட்டத்தட்ட ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் ஒரு வர்த்தகராக இருப்பார். நிறுவனத்திற்காக பல்வேறு மொழிகளில் வரும் கடிதங்களைப் படித்து பதில் எழுதிக் கொண்டிருப்பார். அதோடு பங்குச் சந்தையையும் கவனித்துக் கொள்வார்.

தனது வர்த்தகம் சார்ந்த நண்பர்களைச் சந்திக்க அவருக்கு நகரின் மையத்தில் ஒரு அதிகாரபூர்வ இல்லம் இருந்தது. ஊருக்கு வெளியே இருந்த சிறுவீட்டில் தனது அரசியல், அறிவியல் நண்பர்களான வேதியியல் விஞ்ஞானி ஷோர்லெமர், சாமுவெல் மூர் போன்றோரைச் சந்திப்பார்.  இந்த மூர்தான் பின்னாளில் மூலதனத்தின் முதல் பாகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஐரிஷ்காரரும், தீவிர தேசபக்தையுமான அவரது மனைவி மான்செஸ்டரின் பல ஐரிஷ்காரர்களுடன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். அவர்களது சதித் திட்டங்களைப் பற்றியெல்லாம் நிறையத் தெரிந்து வைத்திருந்தார். பல ஷென் ஃபெயினர்கள் ( ஷென் ஃபெயினர்கள் என்போர் 1850 -70களில் இருந்த ஐரிஷ் குட்டி பூர்ஷ்வா புரட்சியாளர்கள். இவர்கள் அயர்லாந்து விடுதலைக்காகப் போராடி வந்தார்கள் – மொ-ர் ) ஏங்கெல்ஸ் வீட்டில் தங்கியதுண்டு. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஷென் ஃபெயின் போராளிகளை விடுவிக்க முயன்று தோல்வியடைந்த சில புரட்சியாளர்கள் போலீசிடமிருந்து தப்பிக்க ஏங்கெல்ஸ் வீட்டில் தலைமறைவாக இருந்திருக்கிறார்கள். ஷென் ஃபெயின் இயக்கத்தின் மீது அக்கறை கொண்ட ஏங்கெல்ஸ் அயர்லாந்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் வ்ரலாறு குறித்த ஆவணங்களைத் திரட்டி வந்தார். அது பற்றி அவர் சிறிது எழுதியிருக்கக் கூடும். அவை அவருடைய ஆவணங்களில் எங்கேனும் இருக்கலாம்.

To those asking if your beard will fill as you age: this is Friedrich Engels | Walrus mustache, Karl marx, Beard

மாலையில் தனது நிறுவனத்தின் அடிமை வேலையிலிருந்து விடுபட்டவுடன், சுதந்திர மனிதனாக வீடு திரும்புவார். அவர் மான்செஸ்டர் உற்பத்தியாளர்களின் வர்த்தக வாழ்க்கையில் மட்டுமின்றி, அவர்களது பொழுது போக்குகளிலும் பங்கேற்றார். அவர்களது கூட்டங்களில். விருந்துகளில், விளையாட்டுகளில் பங்கேற்றார். அவர் மிகத் திறமையாக குதிரை சவாரி செய்வார். நரி வேட்டைக்காக சொந்தமாக நாய் ஒன்றை வைத்திருந்தார். பண்டைய நிலப்பிரபுத்துவ வழக்கப்படி, அக்கம்பக்கத்து விவசாயிகளும், பிரபுக்களும் மாவட்டத்தின் அத்தனை குதிரை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கும்போது, ஏங்கெல்ஸும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வார். புதர்கள், மேடுகளைத் திருத்துவதில் முதல் ஆளாக நிற்பார். ” என்னிக்காவது இவனுக்கு ஏதாவது ஆக்சிடெண்ட் ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு….” என்று ஒரு முறை மார்க்ஸ் என்னிடம் புலம்பியிருக்கிறார்.

அவரது பூர்ஷ்வா நண்பர்களுக்கு அவரது இன்னொரு முகம் பற்றித் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் பொதுவாக  மிகவும் ஜாக்கிரதையாகப் பழகுவார்கள்.  நண்பர்கள் வாழ்வில் தமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள சிறிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எவ்வாறாயினும், தாம் அன்றாடம் பழகும் அந்த மனிதரின் மிக உயர்ந்த அறிவுத்திறன் பற்றி அவர்கள் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. காரணம் ஏங்கெல்ஸ் தனது அறிவுத்கூர்மையை அவர்களிடம் என்றும் காட்டிக் கொண்டதே இல்லை. ஐரோப்பாவின் தலைசிறந்த அறிவாளி என்று மார்க்ஸ் பெரிதும் மதித்து வந்த அந்த மனிதர் அவர்களைப் பொருத்த மட்டில், நல்ல ஒயினை ரசிக்கக் கூடிய ஒரு சிறந்த நண்பர் மட்டுமே….

ஏங்கெல்ஸ் எப்போதும் இளைஞர்களுடன் இருப்பதையே விரும்புவார். அவர் எப்போதுமே பழக இனிமையானவர். அவரைச் சந்திக்க வருபவர்கள் பலரும் லண்டனின் சோஷலிஸ்டுகள். ஞாயிற்றுக்கிழமைகளில் பல நாடுகளிலிருந்தும் லண்டனுக்கு புலம் பெயர்ந்திருந்த சோஷலிஸ்டுகள் அவர் வீட்டிற்கு விருந்துக்கு வந்துவிடுவார்கள். அவரது உற்சாகம், நகைச்சுவை, என்றும் குன்றாத கொண்டாட்டத்தில் நனைந்து விட்டு இரவு வீடு திரும்புவார்கள்.

—————

ஏங்கெல்ஸைப் பற்றி நினைத்தால், மார்க்ஸைப் பற்றிய நினைவுகளும் வந்துவிடும். அதுபோலவே மார்க்ஸைப் பற்றி நினைத்தால் ஏங்கெல்ஸ் நினைவு வந்துவிடும். அப்படி அவர்களது வாழ்க்கை பின்னிப் பிணைந்திருந்தது. இருவரும் சேர்ந்து ஒரே வாழ்க்கையை வாழ்ந்தது போல் இருந்தது. ஆனாலும் அவர்கள் இருவருமே மிகத் தனித்துவமான ஆளுமைகள். வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது, குணாதிசயங்களிலும். உளபாங்கிலும், சிந்திக்கும், உணர்ச்சி வசப்படும் வித்ததிலும் ஒருவரிடமிருந்து ஒருவர் மாறுபட்டவர்கள்.

1842 நவம்பரில் ரெய்னிஷ் ஜெய்டுங்கின் அலுவலகத்திற்கு ஏங்கெல்ஸ் வந்த போதுதான் இருவரும் முதன்முதலாகச் சந்தித்தார்கள். தணிக்கைத் துறை ரெய்னிஷ் ஜெய்டுங்கைத் தடை செய்ததும், மார்க்ஸ் திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் போய்விட்டார். 1844 செப்டம்பரில் பாரீஸ் சென்ற ஏங்கெல்ஸ் மார்க்ஸை சில நாட்கள் சந்தித்தார். ட்யஷ் பிரான்சிஷே யார்புஷரில் இருவரும் சேர்ந்து பணி செய்த காலத்திலிருந்து தாங்கள் இருவரும் கடிதப் போக்குவரத்தை ஆரம்பித்ததாகவும், அது மார்க்ஸின் மரணம் வரை நீடித்ததாகவும் ஏங்கெல்ஸ் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். 1845ன் துவக்கத்தில் புருஷ்ய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி, கீசோ அமைச்சரவையால் மார்க்ஸ் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டதும், அவர் பிரஸ்ஸல்ஸ் சென்றார்.  சிறிது காலத்திற்குப் பிறகு ஏங்கெல்ஸும் பிரஸ்ஸல்ஸ் சென்றுவிட்டார். 1848 புரட்சி ரெய்னிஷ் ஜெய்டுங்கை ( இது புதிய பத்திரிகை. மார்க்ஸை தலைமை ஆசிரியராகக் கொண்டு, 1848 – 49 ல் கொலோனிலிருந்து வெளியானது)  மீண்டும் கொண்டுவந்த போது, ஏங்கெல்ஸ் மார்க்ஸுடன் இருந்தார். மார்க்ஸ் இல்லாத நேரங்களில் அந்தப் பத்திரிகைப் பணிகளை பார்த்துக் கொண்டார். 

ஆசிரியர் குழுவில் திறமையும், போராட்ட குணமும், வீரமும் நிறைந்த இளைஞர்கள் பலர் இருந்தார்கள். பெரும் அறிவாற்றல் நிரம்பியவர் என்றாலும் கூட, ஏங்கெல்ஸால் மார்க்ஸ் அளவிற்கு அவர்களிடையே ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஒரு முறை வியன்னா போய்விட்டு வரும் வழியில் “ஆசிரியர் குழு சண்டைகளால் பிளவு பட்டிருக்கிறது, ஏங்கெல்ஸால் அவற்றை சரிசெய்ய முடியவில்லை“, என்று மார்க்ஸ் என்னிடம் சொன்னார். துப்பாக்கியை கையிலெடுத்துத் தான் தீர்க்க முடியும் என்ற அளவிற்கு சச்சரவு. அவற்றைத் தீர்க்க  மார்க்ஸ் தனது ராஜதந்திரம் அனைத்தையும் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.

How Friedrich Engels' Radical Lover Helped Him Father Socialism | History | Smithsonian Magazine

மார்க்ஸ் ஒரு பிறவித் தலைவர். தன்னைச் சந்திக்கும் எவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடிய ஆளுமை கொண்டவர். இதை முதன்முதலில் ஏற்றுக் கொண்டவர் ஏங்கெல்ஸ்தான். சிறுவயதிலிருந்து தனது தெளிவினாலும், உறுதியினாலும் அனைவரையும் ஈர்த்துவிடக் கூடியவர், அவருக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத துறைகளைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையையும் முழுமையாகப் பெற்ற ஒரு உண்மையான தலைவர் மார்க்ஸ் என்று ஏங்கெல்ஸ் அடிக்கடி என்னிடம் கூறுவார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் கீழே.

மூலதனத்தின் முதல் பாகம் சமர்ப்பணம் செய்யப்பட்டவரான உல்ஃப் ஒரு முறை மான்செஸ்டரில் தனது வீட்டில்  கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தார். மருத்துவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார்கள். ஆனால், ஏங்கெல்ஸ் மற்றும் இதர நண்பர்கள் மருத்துவர்களை நம்பவில்லை. மார்க்ஸிற்கு தந்தி அடித்து வரவழைத்து அவரிடம் நிலமை எப்படி இருக்கிறது என்ற கேட்டார்களாம்.

மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இணைந்து பணி புரிந்தார்கள். ஏங்கெல்ஸே அதீதமாக துல்லியமாக இருப்பவர். அவருக்கே பொறுமையிழந்து போகும் வகையில் மார்க்ஸ் மிகமிக கவனமாக, எந்த சிறுவிபரத்தையும் விட்டுவிடாமல், ஆராய்வார். ஒரு வரியை பத்து பன்னிரண்டு வகைகளில் நிரூபிக்க முடிந்த பிறகே மார்க்ஸ் அந்த வரியை எழுதுவாராம்.

1848ல் புரட்சி தோல்வியடைந்த பிறகு, நண்பர்கள் பிரிய நேர்ந்தது. ஒருவர் மான்செஸ்டருக்கும், மற்றவர் லண்டனுக்கும் சென்றனர். ஆனால் சிந்தனையால் அவர்கள் சேர்ந்தே வாழ்ந்தனர். கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு அரசியல் நிகழ்வுகள் குறித்த தமது சிந்தனைகள், தமது ஆய்வுகளின் முன்னெற்றம் பற்றி நாள்தோறும் கடிதம் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அந்தக் கடிதங்கள் அனைத்தும் இன்று வரை பாதுகாக்கப் பட்டுள்ளன.

தொழிலதிபர் வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும், ஏங்கெல்ஸ் லண்டனில் ரீஜண்ட்ஸ் பார்க் ரோடில் குடியேறினார். இது மார்க்ஸ் வாழ்ந்த மெய்ட்லாண்ட் பார்க்கிலிருந்து பத்து நிமிட நடைதான். தினமும் மதியம் ஒரு மணிக்கு ஏங்கெல்ஸ் மார்க்ஸைப் பார்க்க அவரது வீட்டிற்குச் செல்வார். வானிலை நன்றாக இருந்து, மார்க்ஸின் உடல்நிலையும் நன்றாக இருந்தால், இருவரும் ஹாம்ஸ்டெட் ஹீத்திற்கு நடைபயிற்சிக்குக் கிளம்பி விடுவார்கள். அப்படி இல்லாவிடில், மார்க்ஸின் அறையில் இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு  உலாவிக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் அறையின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு குறுக்காக நடக்க, மற்றவர் அதே போல் எதிர் மூலையிலிருந்து குறுக்காக நடந்து கொண்டிருப்பார்.

அல்பிஜென்சியர்கள் (11ம் நூற்றாண்டில் பிரான்சின் தென் பகுதியில் உருவான ஒரு கிறிஸ்துவ மதப் பிரிவு – மொ-ர்) பற்றிய ஒரு விவாதம் பல நாட்களுக்கு நீடித்தது எனக்கு நினைவிருக்கிறது. அந்த சமயத்தில் மார்க்ஸ் மத்திய காலகட்டத்தில் கிறிஸ்துவ மற்றும் யூத நிதி நிறுவனங்களின் பங்கு பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார். தமது சந்திப்புகளுக்கு நடுவில் வரும் இடைவெளிகளில், ஒரு கருத்தொற்றுமைக்கு வரும் வகையில், தமக்குள் சர்ச்சையாக இருந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தமது சிந்தனைகள், எழுத்துகள் பற்றி பிறருடைய விமர்சனங்களை விட தம் இருவருக்குள் எழும் பரஸ்பர விமர்சனங்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவைகளாக இருந்தன. ஒருவர் மீது மற்றவர் மிக உயர்ந்த அபிப்ராயம் வைத்திருந்தார்.

ஏங்கெல்ஸின் அறிவுக்கூர்மையின் உலகளாவிய தன்மை, ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கு மிக எளிதாக மாறிச் செல்லக் கூடிய அவரது அற்புதமான பல்துறை அறிவு ஆகியவற்றை மார்க்ஸ் வியந்து போற்றிக் கொண்டே இருப்பார். அதே சமயம், மார்க்ஸின் ஆய்வுத்திறன் மற்றும்  முடிவுகளைத் தொகுக்கும் திறனின் வேகத்தைப் பார்த்து ஏங்கெல்ஸ் பூரித்துப் போவார்.

”முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கியல் பற்றிப் புரிந்து கொள்ளுதல், அவற்றிற்கு விளக்கம் அளித்தல், அதன் வளர்ச்சிக்கான விதிகள் பற்றி அறிந்து, அவற்றை விளக்குதல் ஆகியவை எவ்வாறாகினும் இயல்பாகவே நடந்திருக்கும். ஆனால் அதற்கு நீண்ட காலம் பிடித்திருக்கும். அப்படியும் அது துண்டுதுண்டான, ஒட்டு வேலையாகத் தான் இருந்திருக்கும், மார்க்ஸ் ஒருவரால் தான் எல்லாவிதமான பொருளாதார வகைமைகளையும் அவற்றின் இயங்கியல் தன்மையோடு புரிந்து கொண்டு, அவற்றின் வளர்ச்சிக் கட்டங்களை, அவற்றை முடிவு செய்த காரணங்களோடு இணைத்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரம் என்னும் கோபுரத்தை, ஒன்றையொன்று முடிவு செய்வதும், அதே சமயம் ஒன்றிற்கு ஒன்று துணை நிற்பதுமான பகுதிகளை இணைத்து மறு கட்டமைப்பு செய்ய முடிந்தது,“ என்று ஒரு முறை ஏங்கெல்ஸ் என்னிடம் கூறினார்.

Mrs Engels

இணைந்து பணியாற்றியது அவர்களது அறிவுத் திறன்கள் மட்டுமல்ல. அவர்கள் இருவரும் மிகச் சிறந்த நட்பைக் கொண்டிருந்தார்கள். இருவருமே தம்மில் அடுத்தவருக்கு எது மகிழ்ச்சியை அளிக்கும் என்பதைப் பற்றியே போசித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் தன் நண்பரைப் பற்றி பெருமைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.  ஒரு முறை மார்க்ஸின் ஹாம்பர்க் பதிப்பாளர் மார்க்ஸிற்கு தான் ஏங்கெல்ஸை சந்தித்தது பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ஏங்கெல்ஸ் தான் சந்தித்த மனிதர்களிலேயே மிக இனிமையாகப் பழகக் கூடியவர் என்று எழுதியிருந்தார். கடித்த்தைப் படித்த மார்க்ஸ், “ பிரட்டை (ஏங்கெல்ஸை) மாபெரும் அறிவாளியாகப் பார்க்காமல், பழக இனிமையானவராகப் பார்க்கும் இந்த ஆளை நான் பார்க்க வேண்டுமே,” என்றார்.

பணம், அறிவு – எல்லாமே இருவருக்கும் பொதுவானவைகளாக இருந்தன. நியூயார்க் டெய்லி ட்ரிப்யூனின் செய்தியாளராக மார்க்ஸ் பணிக்குச் சேர்ந்த காலத்தில் அவர் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருந்தார். ஏங்கெல்ஸ்தான் அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்த்தார். தேவைப்பட்ட போது மார்க்ஸுக்காக அவரே கட்டுரைகளை எழுதவும் செய்தார். ஏங்கெல்ஸ் டூரிங்கிற்கு மறுப்பு எழுதிக் கொண்டிருந்த காலத்தில், மார்க்ஸ் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்திவிட்டு. பொருளாதாரம் குறித்து ஒரு கட்டுரையை எழுதித் தர ஏங்கெல்ஸ் அதை தனது நூலில் பயன்படுத்திக் கொண்டார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார்.

ஏங்கெல்ஸின் நட்பு மார்க்ஸின் குடும்பம் முழுமைக்குமானதாகும். மார்க்ஸின் புதல்விகள் அவரது சொந்த புதல்விகள் போலத்தான். அக்குழந்தைகள் அவரை இரண்டாவது அப்பாவாகவே கருதினார்கள். மார்க்ஸ் மறைந்த பின்னரும் இந்த பந்தம் தொடர்ந்தது.

மார்க்ஸின் மறைவிற்குப் பிறகு ஏங்கெல்ஸ் ஒருவரால் தான் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதிகளை சரி செய்து அவர் பாதியில் விட்டுப் போன படைப்புளை வெளியிட முடிந்தது. இதற்காக அவர்  அறிவியல் குறித்து தாம் எழுத இருந்த நூலுக்காக பத்தாண்டுகளாக செய்து வந்த ஆய்வை நிறுத்தினார். பத்தாண்டுகளாக அவர் அனைத்து அறிவியல் புலங்களிலும் அன்று வரை ஏற்பட்டிருந்த முன்னேற்றங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அந்த ஆய்வை நிறுத்தி விட்டு, மூலதனத்தின் கடைசி இரு பாகங்களை வெளியிடுவதற்காக தனது நேரத்தை முழுமையாக செலவழித்தார்.

ஏங்கெல்ஸ் படிப்பதில் உள்ள இன்பத்திற்காகவே படித்தார். அவருக்கு அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் உண்டு. 1849ல் புரட்சியின் தோல்விக்குப் பிறகு அவர் ஜெனோவாவிலிருந்து இங்கிலாந்திற்குக் கப்பல் மூலம் சென்றார். சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் வழியாகச் செல்வது ஆபத்தானது என்று அவர் நினைத்தார். இந்தக் கடல் பயணத்தை அவர் கடல் பயணங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் பயணத்தின் போது அவர் ஒரு குறிப்பேட்டில் சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், காற்றின் திசை, கடலின் அன்றாட நிலை போன்ற பல்வேறு தகவல்களைக் குறித்து வைத்துக் கொண்டார். ஏங்கெல்ஸ் பழம் கிழவிகள் போல அனைத்தையும் மிக கவனமாகவும், அக்கறையாகவும் செய்பவர் என்பதால் இந்தக் குறிப்பேடு நிச்சயமாக அவரது ஆவணங்களில் எங்கேனும் இருக்கும். அவர் அனைத்தையுமே மிக பத்திரமாக வைத்திருப்பார். அவற்றைப் பற்றி மிக துல்லியமாக குறித்தும் வைத்திருப்பார்.

தத்துவமும், ராணுவ அறிவியலும் தான் அவருக்கு மிகவும் முதன்மையான விருப்பங்கள். அவற்றில் அவர் எப்போதும் தீவிரமான ஆர்வம் காட்டுவார். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு விடுவார்.  சிறுசிறு தகவல்களைக் கூட மிக முக்கியமானவைகளாக அவர் கருதுவார். ஸ்பானிய சொற்களை சரியான அழுத்தத்துடன் உச்சரிப்பதற்காக ஸ்பெயினிலிருந்து வந்தவரான அவரது நண்பர் மீஸாவுடன் சேர்ந்து அவர் ரோமன்சரோ எனப்படும் ஸ்பானிய நாட்டுப்புறக் காதல் கவிதைத் தொகுப்புகளைப் படித்த்து எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

ஐரோப்பிய மொழிகள் பற்றியும்,  ஏன் அவற்றின் பேச்சு வழக்குகள் பற்றியும் அவருக்கு இருந்த ஆழமான அறிவு நம்பவே முடியாதது. 

கம்யூனின் வீழ்ச்சிக்குப் பிறகு, நான் இன்டர்நேஷனலின் தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரை ஸ்பெயினில் சந்தித்தேன். அவர்கள் ஸ்பெயின் பொதுக் கவுன்சில் செயலாளராக எனக்கு பதிலாக ‘ஏஞ்சல்‘ என்றொருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் காஸ்டிலியன் பகுதியில் புழங்கப்படும் செம்மையான ஸ்பானிய மொழியில் அழகாக எழுதுவதாகவும் சொன்னார்கள்.  ஏங்கெல்ஸைத்தான் அவர்கள் ஸ்பானிய பாணியில் ஏஞ்சல் என்று சொல்லியிருக்கிறார்கள். லிஸ்பனுக்குப் போனபோது நான் போர்ச்சுகல் தேசியக் கவுன்சில் செயலாளரான பிரான்காவைச் சந்தித்தேன். அவர் ஏங்கெல்ஸிடமிருந்து அப்பழுக்கற்ற சுத்தமான போர்ச்சுகல் மொழியில் தனக்குக் கடிதங்கள் வருவதாகச் சொன்னார். இது மிகப் பெரிய சாதனை. ஏனெனில் இந்த இருமொழிகளுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. அதோடு சிறு சிறு வேறுபாடுகளும் உண்டு. மேலும், ஏங்கெல்ஸிற்கு நல்ல புலமை உள்ள இத்தாலிய மொழியுடனும் இதே போன்ற ஒற்றுமைகளும், வேறுபாடுகளும் உண்டு. எனவே, இந்த மூன்று மொழிகளையும் அறிந்தவர் கலப்பற்ற சுத்தமான போர்ச்சுகல் மொழியில் எழுதுவது மிக மிகக் கடினமாகும்.

Socialism: Utopian and Scientific - Mehring Books
Socialism: Utopian and Scientific – Mehring Books

தனது நண்பர்களுக்கு அவரவருடைய தாய்மொழியில் எழுதுவதில் ஏங்கெல்ஸ் மிக கர்வம் கொண்டிருந்தார். லாவ்ரோவ்விற்கு (இவர் ரஷ்ய புரட்சியாளர், முதல் இன்டர்நேஷனலின் உறுப்பினர், பாரீஸ் கம்யூனில் பங்கேற்றவர்) ரஷ்ய மொழியில் எழுதுவார். அதே போல பிரெஞ்சுக்காரருக்கு பிரெஞ்சு மொழியிலும், போலந்துக்காரருக்கு போலந்து மொழியிலும் எழுதுவார். பல மொழிகளிலும் வட்டார வழக்குகளில் வரும் நூல்களைப் படிப்பதை அவர் பெரிதும் விரும்பினார். மிலன் வட்டார வழக்கில் பிகமியின் ( இவர் இத்தாலிய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர், எழுத்தாளர், பதிப்பாளர் ) பிரபலமான படைப்புகள் வெளிவந்த போது உடனடியாக வாங்கிப் படித்துவிட்டார்.

ராம்ஸ்கேட் பீச் பகுதியின் லண்டன் வாசிகள் பிரேசிலிய ராணுவ தளபதி உடையில் தாடி வைத்த சற்று குள்ளமான ஒருவரை அடிக்கடி பார்த்திருப்பார்கள். ஏங்கெல்ஸ் அவரிடம் போர்ச்சுகீசிய மொழியில் பேசிப் பார்த்தார். பதிலில்லை. ஸ்பானிய மொழியில் பேசிப் பார்த்தார். பதிலில்லை. சிறிது நேரம் கழித்து அந்த மனிதர் ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகள் சொன்னார். ” நீங்கள் பிரேசிலியன் என்று நினைப்பவர் ஒரு ஐரிஷ்காரர்,” என்று சொல்லிக் கொண்டே, ஏங்கெல்ஸ் அவரது மொழியில் பேச ஆரம்பித்து விட்டார். அந்த மனிதருக்கு அப்படியே கண் கலங்கி விட்டது.

ஏங்கெல்ஸ் உணர்ச்சிவசப்படும் நேரங்களில் சற்று திக்குவார். கம்யூனிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஒரு தோழர் இதைப் பற்றி, “ஏங்கெல்ஸ் இருபது மொழிகளில் திக்கக் கூடியவர்,” என்பார் வேடிக்கையாக.

ஏங்கெல்ஸிற்கு எந்த ஒரு துறையும் வேண்டாததல்ல. தன் கடைசிக் காலத்தில் அவர் மகப்பேறு பற்றிய நூல்களை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தார். காரணம், அவரது வீட்டிற்கு அருகில் இருந்த திருமதி. ஃப்ரேபெர்ஜர் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவுவதற்காக இவர் படித்துக் கொண்டிருந்தார். ( இந்தப் பெண்மணி ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சோஷலிஸ்ட். 1890 முதல் ஏங்கெல்ஸின் செயலாளராகப் பணியாற்றினார்.)

இப்படி வாசிப்பு தரும் சந்தோஷத்திற்காகவே பல்வேறு விஷயங்களைப் பற்றி வாசித்துக் கொண்டு, ‘மனித இனத்தின் விடுதலைக்காகச் செய்ய வேண்டிய பணிகளிலிருந்து‘ ஏங்கெல்ஸின் கவனம் திசை திரும்புவது பற்றி மார்க்ஸ் அடிக்கடி அவரைத் திட்டுவார். பதிலுக்கு அவரும், “ முதலில் நீ வாசித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய விவசாயிகள் நிலை பற்றிய அந்த பெரிய பெரிய புத்தகங்களை எரிக்க வேண்டும். அப்போதுதான் வருடக்கணக்காக நீ எழுதிக் கொண்டிருக்கும் மூலதனம் புத்தகத்தை எழுதி முடிப்பாய்,” என்று மார்க்ஸைத் திட்டுவார்.

அந்த சமயத்தில், பீட்டர்ஸ்பர்க்கிலிருந்த மார்க்ஸின் நண்பர் டேனியல்சன் என்பவர் ரஷ்ய விவசாய நிலை குறித்த ஏராளமான பெரிய பெரிய ஆய்வறிக்கைகளை அனுப்பியிருந்தார். அந்த அறிக்கைகள் நாட்டின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியதால், ரஷ்ய அரசாங்கம் அந்த அறிக்கைகளை தடை செய்திருந்தது.

The Spark! — KARL MARX REMEMBERED

தான் படிக்கும் ஒரு விஷயத்தின் மிகச் சிறிய நுட்பமான தகவல்களைக் கூட அறிந்து கொள்ளும் வரை ஏங்கெல்ஸின் அறிவுத் தாகம் தீராது. பரபரப்பான வாழ்க்கை கொண்டவரும், எந்தத் துறையிலும் தொழில்ரீதியான படிப்பு இல்லாதவருமான அவர் எப்படி இந்த அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்து, இவ்வளவு பரந்த அறிவு கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரியதாகும். அவரது நினைவாற்றல் அபாரமானது. அனைத்தையும் குறித்த பரந்த அறிவு, அசாதாரண வேகத்தில் சிந்தித்துச் செயலாற்றும் திறன் ஆகியனவும் அந்த நினைவாற்றலோடு இணைந்தன.

அவர் மிக விரைவாக, எந்த சிரமமும் இன்றி வேலை செய்வார். அவரது வெளிச்சமான, பெரிய, சுவர் முழுக்க அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் படிப்பறையில் தரையில் ஒரு துண்டுக் காகித்த்தைக் கூட பார்க்க முடியாது. அவரது மேஜையில் அப்போது அவர் படித்துக் கொண்டிருக்கும் சுமார் ஒரு டஜன் புத்தகங்கள் தவிர மற்ற அனைத்தும் தமக்குரிய இடத்தில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். அவரது அறையைப் பார்த்தால் ஒரு அறிவுஜீவின் அறை போல் இல்லாமல், பெரிய வரவேற்பறை போலவே இருக்கும்.

தனது தோற்றத்திலும் அவர் மிகவும் அக்கறை செலுத்துபவர். எப்போதும் மிக சுத்தமாக நேர்த்தியாக உடையணிவார். பிருஷ்ய ராணுவத்தில் தன்விருப்ப சேவையாற்றிய நாட்களில் இருந்தது போல், எப்போதும் ராணுவப் பரேடுக்குப் போகத் தயாராக இருப்பவர் போல் தோற்றமளிப்பார். ஒரே உடையை பல நாட்களுக்கு அழுக்காக்காமல், சின்ன சுருங்கல் கூட இல்லாமல் அணிந்து கொள்வதில் அவருக்க இணை யாருமே இருக்க முடியாது. தனது தனிப்பட்ட தேவைகளைப் பொருத்த மட்டில் அவர் மிக சிக்கனமாக இருப்பார். மிகமிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவழிப்பார். கட்சி, கட்சித் தோழர்கள் விஷயத்தில் மட்டும்தான் கணக்கே இல்லாமல் செலவழிப்பார்.

முதல் அகிலம் தோற்றுவிக்கப்பட்ட போது, ஏங்கெல்ஸ் மான்செஸ்டரில் வசித்து வந்தார்… அகிலத்தையும், அதன் பொதுக் குழுவால் தோற்றுவிக்கப்பட்ட தி காமன்வெல்த் என்ற பத்திரிகையையும் அவர் தான் செலவழித்து ஆதரித்தார். பிரான்ஸ் – புருஷ்ய யுத்தத்தின் போது, அவர் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.  அங்கும், மற்ற அனைத்திலும் காட்டும் அதே அக்கறையோடு அவர் அகிலத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.

யுத்தத்தில் முதலில் அவரை ராணுவத் தந்திரங்கள் தான் ஈர்த்தனா. ஒவ்வொரு நாளும் அவர் இருதரப்புப் படைகளின் நடமாட்டத்தையும் மிகக் கூர்ந்து கவனிப்பார். பல முறை ஜெர்மன் தளபதி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். அவை பால்மால் கெஜட்டில் அவர் எழுதிய கட்டுரைகளில் வந்தன.  (இது 1865லிருந்து லண்டனில் வெளியாகி வந்த பத்திரிகையாகும். இதில் 1870 ஜுலை முதல் 1871 மார்ச் வரை ஏங்கெல்ஸ் யுத்தம் பற்றிய கட்டுரைகளை எழுதினார்.) சேடன் யுத்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவர் நெப்போலியனின் ராணுவம் சூழப்பட்டு விடும் என்று எழுதினார்.  ஆங்கிலப் பத்திரிகைகள் ஏங்கெல்ஸின் இந்த தீர்க்க தரிசனத்தை வெகுவாகப் புகழ்ந்தன. அதன் காரணமாகத் தான் மார்க்ஸின் மூத்த மகள் ஜென்னி அவருக்கு ‘ஜெனரல்‘ என்று பட்டம் கொடுத்தாள். பிரெஞ்சு அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரெஞ்சு குடியரசு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே ஆசை, நம்பிக்கை. மார்க்ஸிற்கும், ஏங்கெல்ஸிற்கும் தாய்நாடு என்று ஒன்று கிடையாது, மார்க்ஸின் கூற்றின்படி, இருவருமே இந்த உலகின் குடிமக்கள்.

Paul Lafargue y Laura Marx en España
Paul Lafargue And Laura Marx

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

பால் லஃபார்கே பிரெஞ்சு மார்க்சிய சோஷலிஸ்ட், பத்திரிகையாளர், எழுத்தாளர், போராளி. மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவின் கணவர்.