கவிஞர்கள் – வழிப்போக்கன், கதிரவன் வீ, சந்துரு Chandru Rc. சுஜாதா கண்ணன் Sujatha Kannan, முகமது பாட்சா Mohamed Batcha. வசந்ததீபன் Vasanthatheepan. ஆலங்குடி வெள்ளைச்சாமி, Punith Puni Kokkarapatty
கவிஞர்கள் தங்கள் மொழியைத் தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள். சொல்ல வேண்டியவற்றை சூட்சுமமாகச் சொல்கிறார்கள். நல்ல கவிதைகளின் கருப்பைகளை அவரவர் பேனாவிலோ, கணினியின் எலிப் பொறியிலோ தங்கள் கையசைவிலேயே வைத்திருக்கிறார்கள். இலக்கிய உலகில் பிரமாதமான பிரசவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், ஒரு மூக்கு கொண்ட முகத்தில் அதே விதமான உறுப்புகள்தாம்…. ஆனால் வெவ்வெறு சாயல்கள். தமிழ்க் கவிதைகளுக்கும் இது பொருந்தும். எனது கவிதை உலாவின்போது நான் கண்டடைந்த கவிதைகள்…. கவிஞர்கள்….
வழிப்போக்கன்
நிலவையும் சூரியனையும் வைத்து நிகழ்த்தும் ஒரு கவிதை ரசவாதம்.
மிகச் சிறந்த உளவியலை சர்வ சாதாரணமாகப் பேசுகிறான் கவிஞன்.
“தனக்கெனத் தனியே
ஒளியென்று எதையும் வைத்துக்கொள்ளாத
நிலவிலிருந்து வரும் ஒளியை
நிலவொளி என சுட்டும் போது கூட
சூரியன் அங்கே
சிரித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த நிலவுதான் ஏனோ
சோகத்தில்
தேய்ந்துகொண்டும்
வளர்ந்துகொண்டும்
மாதத்திற்கொருமுறை
மறைந்துகொண்டும் இருக்கிறது.”
கதிரவன் வீ
இரண்டே வரிகளில் இதயத்தில் ஒரு குத்தீட்டியைச் செருகி விட்டுப் போகிறான் கவிஞன்….
“பானை செய்தேன் தட்டி பார்த்து பேரம் பேசினார்கள்
சிலை செய்தேன் வணங்கி வாங்கி போனார்கள்……”
சந்துரு Chandru Rc
குழந்தைகளை ஏமாற்றுவதை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கும் குடும்பங்கள்! ஆனால் வானத்திலிருந்து வந்திருந்தாலும் மழைத்துளிகளோ குழந்தைகளுக்கு மலர்களைத் தருகின்றன. கவிஞனின் மனம் மலர்களின் மீது மகரந்தமாகப் படிந்துகிடக்கிறது….
“கிண்ணமாய் கை குவித்து
விளையாடும்
விரல்களுக்குள் சிக்காமல்
ஏமாற்றும் மழைத்துளிகள்
நழுவி நிலம் விழுந்து
பிறிதொரு நாள்
வாய்க்காலோரத்தில்
மணம் வீசும் பூக்களை
அக்குழந்தைக்கு
பரிசளிக்கக்கூடும்…”
சுஜாதா கண்ணன் Sujatha Kannan
இன்றைய கல்வி முறையின் விளைவுகளை ஒரு கேமரா பதிக்கப்பட்ட பேனாவால் காட்சிப் படுத்துகிறார் கவிஞர்.
“நீள அகலங்களின் வரையறைக்குள் ஒப்புவிக்கப்பட்டு
மதிப்பெண் இடப்பட்டு
மாண்புடையதாய் ஆக்கப்பட்டு
பார்த்தலோடும்
படிப்போடும் தொடர்பு
கொண்டதில்
ஒருமுறைகூட விழுந்தெழுவதை
ஏற்றுக் கொள்ளாது உடலாலும் மனதாலும் கொண்டாடப்படாது
ஒடுங்குகிறது
ஏகப்பட்ட விளையாட்டுகள் சிறைப்பட்ட கல்விக்குள்”
முகமது பாட்சா
கவிதைகளால் சிறை வைக்கப்பட்ட ஒரு கவிஞனின் கதறல்கள் வரிகளாக வந்து விழுகின்றன….
“எதனை எப்படி எங்கு
எந்தவிடத்தில் தொடங்குவேன் தைபா!
என் கவிதைகள்
என்னையே சிறை வைக்கின்றன!”
வசந்ததீபன்
காலத்தைக் கணக்கிடும் ஒரு விஞ்ஞானியைப் போல கவிஞனின் ஒவ்வொன்றைப் பற்றிய வர்ணனையும் நம் உள்ளே நுழைந்துவிடுகிறது.
“ஓநாயின் நாக்கில் பசி
ஊறிச் சொட்டுகிறது
மரங்கள் கூட அசையாமல் நிற்கின்றன
பிடரியிலுள்ள உண்ணியைத் தட்டிவிட
அது பெருமுயற்சி எடுக்கிறது.
யானை மண்டியிட்டு
பூனை கால் மேல் கால் போட்டு
பணம் படுத்தும் பாடு.
இரவு நடுங்குகிறது
பகல் கொதிக்கிறது
தேசம் தூங்கிக் கொண்டிருக்கிறது.”
ஆலங்குடி வெள்ளைச்சாமி
கொரோனா காலத்துக் கொடுமையும், இந்தக் காலத்தில் வாழ்ந்தாக வேண்டிய வறுமை நிலையையும் இரண்டு தராசுத் தட்டிலும் வைத்துவிட்டு நீங்கள்தான் நீதிபதி என்று ஒதுங்கிக் கொள்கிறான் கவிஞன்.
“அடகுக் கடைக்குச்
சென்ற
ஏழைப் பெண்ணின்
நகையைப்போல
திரும்பாமலேயே செல்கின்றன
மருத்துமனைக்குச் சென்ற
சில உயிர்கள்”
க .புனிதன் Punith Puni Kokkarapatty
மெனக்கிட்டு மேலோங்கிப் பேசவில்லை. புஜக் கட்டைகள் கட்டி அடவு கட்டி ஆடவில்லை. ஆனால் அதிகாரங்களின் முகத்தில் அழகியலாகக் காறி உமிழ்கிறான் கவிஞன்.
“ராணுவ கிட்டங்கியில்
பீரங்கிகள்
துப்பாக்கிகள்
குண்டுகள்
நடுவே
ஒரு தும்பியின் சிறகு.
யவன மொழியால் ஆனது
ஆப்பிள் தோட்டத்தில் திரிந்த
பனி காற்றில்
சூடுஏற்றிய
நாடோடி பாடலை பாடிய
புற்கள் முத்தமிட்ட
அத் தும்பியின் சிறகு
யாரும் கவனிக்காமல் கிடக்கிறது”
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
1 Comment
View Comments