கவிஞர்கள் முகம் பார்ப்பதில்லை; வலி பார்க்கிறார்கள். பூ பார்ப்பதில்லை; மணம் நுகர்கிறார்கள். நிறம் பார்ப்பதில்லை; நிஜம் பார்க்கிறார்கள்.
நாம் பார்த்ததைத்தான் அவர்களும் பார்க்கிறார்கள். ஆனால் நமக்கு எதையெதையோ காண்பிக்கிறார்கள்….
ஒரு கவிதையோ…. ஒரு கவிதையில் சில வரிகளையோ…. உங்கள் முன் படைக்கிறேன். அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றி.
இன்றைய உலாவில் சில கவிதைகள்
இந்த வினாத்தாள்கள்
ஏன் இப்படி உயிர் பறிக்கின்றன
விடை தெரிந்த வினாக்கள் ஏராளமிருக்க
சூழ்ச்சிகளே வினாக்களான பின்….
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தேர்வுகளைத் தீ தின்னும் காலம்….
இப்போதைக்கு முடிந்ததெல்லாம்
தனித்த குரல்களையெல்லாம்
கூட்டுக் குரல்களாக்குவதுதான்
க.அம்சப்ரியா Punnagai Amsapriya
*****
கறையான் புற்றை
சிதைத்துவிட்டு மழைத்துளியில் அலகு
துடைக்கிறது தவிட்டுக் குருவி
சிறுமி குலுக்கி விளையாடும்
கூழாங்கல்லில்
ஓடும் நதியின் சப்தம்
கவி.விஜய்
*****
என் கண்கள் கண்ணீர் வடிக்காததனால்
என் இதயம்
காயப் படவில்லையெனப் பொருளாகாது
ஷாஃப்னா நசீர் Shafna Nazeer
*****
எத்தனை பலகீனங்களால்
பின்னப்பட்டிருக்கிறோம் என்பதை
ஒரு தற்கொலையும்
எத்தனை
கொடூரம் மிக்கவர்களின்
அருகில் வாழ்கிறோமென்பதை
அம்மரணம் குறித்த ரசனைகளும்
வெளிப்படுத்திவிடுகிறது….
சந்துரு Chandru Rc
*****
பறவை….
சின்னஞ் சிறிய சிறகுகளால்….
திருப்பி வைக்கிறது….
அத்தனை திசைகளையும்.
ஸ்ரீசொக்கர் திருநெல்வேலி ஜங்ஷன்
Sri Chokkar Tirunelveli Junction
*****
மடக்கிப் பிடித்ததும்
ஒளிந்து கொண்டது
குடைக்குள் நிழல்.
கோவை நா.கி.பிரசாத் Naki Prasath
******
தெய்வம் நின்று கொல்லும்
பேனர் சரிந்து கொல்லும்
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்
அரசியலில் பிழைப்போர்க்கு
அறம் கூத்தாகும்.
தங்கேஸ் Thangeswaran
*****
என்ன செய்வது
கனியும் வரைக் காத்திருப்பதில்லை
இந்தக்
கவி மைதுனக்காரர்கள்.
வண்ணை வளவன் Vannai Valavan
*****
புல்தரையில் நடக்கும் பாதங்கள்
மூச்சுத் திணறுகின்றன
மெல்ல நகரும் எறும்புகள்.
ச.கோபிநாத், சேலம் Gopinath Salem
*****
முதுமை நமக்கொரு தவச்சாலை – வாழும்
முதியோர் வாய்மொழி மந்திரமாம்
குதிக்கும் பேரனோர் மான்குட்டி – கட்டிக்
குலவிடு பேத்தி தேன்சிட்டு.
தவழ்ந்திடு காற்றெலாம் அனுபவங்கள் – சுற்றித்
தாவிடு புள்ளினம் உறவினங்கள். – வாழும்
கவலை மகிழ்ச்சியின் அதிர்வலைகள்.
கவிஞர் ஜவர்கர்லால் Kavingar Jawaharlal
அருமையான கவிதைகள் தந்த அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.