நூல் அறிமுகம்: தாழை. இரா.உதயநேசனின் ’செவத்த இலை’ – பாரதிசந்திரன்
தாழை இரா உதயநேசன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு இந்நூல். இந்நூலில் 30 சிறுகதைகள் காணப்படுகின்றன. சிறுகதைக்கே உரித்தான அடித்தளக் கட்டமைப்பைப் பெற்று, மன உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் மற்றும் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் சிறுகதைகள் இத்தொகுப்பில் காணப்படுகின்றன.

குறிப்பாகச் சிறுகதைகள், அந்த அந்தக் காலகட்டத்தின் சமூக நடப்புகளை வெளிப்படுத்துகின்றனவாக அமைய வேண்டும். தனிமனித உள்ளத்தின் உணர்வுச் சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும்.

சிறுகதைகளைப் படிப்பவர்கள், ஆசிரியர் கூற வந்திருக்கும் செய்தியை, கருத்தை, அறிவுரையை, நடப்பை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே சிறுகதை வெற்றி பெற்று விட்டதாகப் பொருளாகும். அந்த நிலையில் 30 சிறுகதைகளில் ஆசிரியர் என்ன கூற நினைத்தாரோ அந்தக் கருத்தும், நடத்தைகளும், அறிவுரைகளும் மிகத் தெளிவாக வாசகனுக்குப் போய்ச் சென்றடைந்து இருக்கிறது.

எந்தவிதமான மிகைச் சொல்லாடல்களும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் எங்கும் காணப்படவில்லை. வசன உரைநடைகள், ஆசிரியரின் உள்ளீடுகள், காட்சிப் பின்புல விளக்கம், இவைகள் அனைத்தும் வெற்றுச் சதைகளைச் செதுக்கி மிகச் சரியான உடல் அமைப்பில் ஒரு உருவத்தைச் சமைத்துத் தந்திருக்கிறது.

சிறுகதை படித்து முடித்தவுடன் அந்தச் சிறுகதை படித்தவரின் மனதில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இத்தொகுப்பிலுள்ள 30 கதைகளும் படித்து முடித்தவுடன் 30 விதமான எண்ணக் கிணறல்களை ஏற்படுத்துகின்றன.

அந்தக் கிளர்ச்சிகள் வாசகனை ஆசிரியரின் எல்லைக்கு அருகில் கொண்டு சென்று, ஆசிரியரையே தரிசிக்க வைக்கின்றன. உண்மையில் எல்லாச் சிறுகதைகளும் உணர்வு மேலிடல்களின் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றன.

உளவியல் பூர்வமான பல உள்ள வெளிப்பாடுகள், மனதின் அகோர எண்ணங்கள், பாச உணர்வுகள், குற்ற உணர்வுகள், தெளிவற்ற நிலை, பாசாங்கு, போலித்துவம் போன்ற பல உளவியல் தாக்கங்களை, இந்தச் சிறுகதைகள் விளக்கி நிற்கின்றன. ஒட்டுமொத்தமாய் உளவியல் சார்ந்து இருக்கின்ற மிக ஆழமான சிறுகதை தொகுப்பு இதுவாக இருக்கலாம்.

உளவியல் பூர்வமான படைப்புகளைக் குறித்து டாக்டர் தி.சு. நடராஜன் அவர்கள் கூறுகிற பொழுது,”சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக மன உணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப்படுகின்றன. இவ் உணர்வுகளும் அடி மனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும் பாலியல் உணர்வுகளும் நனவிலி மனத்தின் ஊடாக, அவனே அறியாத நிலையில், அவனுடைய சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. கலைஞனிடம் இத்தகைய உணர்வுகள் அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும், உணர்வுகளையும் மீறி அவனுடைய கலை படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன.” என்று கூறுவார்.

இந்தக் கோட்பாடு முழுமையும் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஊடாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிகச் சரியாகப் பொருந்தி வரும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பர். அவனிடம் சமயத்திற்குத் தகுந்த பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அந்த உணர்வுகளை, அந்தக் கணம் எப்படி உணர்ந்ததோ அதே உணர்வோடு அந்தக் காட்சியை வெளிப்படுத்தச் சிறுகதைகள் முனைந்திருக்கின்றன. அந்த முனைப்பை தாழை.இரா.உதயநேசன் அவர்கள் செய்திருக்கின்றார்.

உதாரணத்திற்குச் ’செவத்த இலை’ என்று ஒரு கதை. இதில், ’பச்சம்மா’ எனும் கதாபாத்திரம். எதார்த்தமான வாழ்வியல் சூழலில், எளிமையான, ஏழ்மையான வாழ்க்கை வாழும் ஒரு கிராமத்துப் பெண்மணி. அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் வாழ்வாதாரச் சிக்கல்கள், அரசு அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள், இதை மீறிய பாலியல் உணர்வுகள் போன்ற அனைத்துக் காரணிகளையும் மையம் கொண்டு இச்சிறுகதைகள் நடை போடுகின்றன.

சிறிய கதை தான் இது. ஆனால், சமூகப் பிரச்சனைகள் முழுவதும் பேசப்படுகின்றன. ஒரே ஒரு வார்த்தை ஒரு பிரளயத்தின் வார்த்தையாகவும் இருக்கலாம். ஆயிரம் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

இச்சிறுகதையினுடைய காலம் குறுகியது ஆனால், அடிமை வரலாறு நீண்டகாலமுடையது. ஒவ்வொரு வார்த்தைகளும் சமூகப் பிரச்சனைகளை வெகுண்டு பேசுகின்றன. பச்சம்மா, ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சார்ந்தவள். இவள் கணவன் ஆடு மேய்த்துத் திரும்பாமல் இருக்கிற பொழுது, அந்த ஊர் காரர் அவருக்கு நேர்ந்த கொடுமையைப் பச்சம்மாவிடம் கூறுகிறார்.

ஒரு கிராமத்துப் பெண்மணி எதற்கும் துணிந்தவளாக அரசு அதிகாரியின் அலுவலகம் தேடிச் செல்லுகிறாள். அங்கு அவளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. லஞ்சம் கேட்கப்படுகிறது. இவளின் அழகிய மேனி கேட்கப்படுகிறது. வெகுண்டு எழுந்த அந்தக் கிராமத்து பெண்மணி, தன் ஆடுகளுக்கு இலை பறித்துப் போடும் துரட்டியால் அந்த அரசு அதிகாரியின் கழுத்தை அறுத்து கீழே போட்டு விடுகிறார்.

அதிகாரியிடமிருந்து வழிந்த ரத்தம் காய்ந்து சறுகாய் கிடந்த இலைகளைச் சிவப்பாக மாற்றுகிறது. இதுவே கதையின் தலைப்பாகவும் மாறுகிறது. இந்த இடம் உச்சகட்டமான சிறுகதையின் மையப் புள்ளியாகயிருக்கிறது.

இந்த இடத்தில் அரசு அதிகாரியின் அநீதி தண்டிக்கப்படுவது ஒரு பெண்ணால். தன்னை இழந்து விடாமல் காப்பாற்றிக்கொள்வது, தன் கணவனுக்கு நேர்ந்த அநீதியைத் தட்டிக் கேட்பது, போன்ற பல புரட்சிகரமான வெளிப்பாடுகள் இக்கதை மூலம் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏலகிரி மலையின் அடிவாரம் நம் கண் முன் விரிகின்றது. கிராமத்திய வாழ்வியலும், கிராமத்துப் பேச்சு நடையும், பச்சம்மாவின் ஏக்கமும், ஆடுகளின் தவிப்பும், இந்தக் கதையின் வழியாகப் படிப்பவர் மனதை வாட்டி வதைக்கின்றன.

குடியினால் வேதனைப்படும் ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூகச் சூழல், வாழ்வியலைப் பெண் கடத்திச் செல்லும் பாங்கும், திருமணமாகிக் குழந்தை இல்லாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மன வேதனையும், அதற்கான தீர்வுகளும், மண்பாண்டங்களை விற்று வரும் ஒரு பெண்ணின் இயலாமை, அந்த மண்பாண்டங்கள் அனைத்தும் விபத்தில் இழந்து விட அவள் தவிக்கும் தவிப்பு, விவசாயிகளின் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகள் அரசு அதிகாரங்களும் நாட்டாமை போன்ற அதிகார வர்க்கங்களும் ஏழைகளையும் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களையும் படுத்தும் பாடு. அதன் உக்கிரமான மன ஓட்டங்கள் இவை அனைத்தையும் அதன் மையப் புள்ளியைப் பிடித்துப் பார்த்தும் இக்கதைகளின் ஊடாக வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். இதற்கான கதைக் கருவை அவர் எங்கெல்லாம் தேடினார், இதற்காக அவருடைய தேடல் மிகப்பெரியதாக இருக்கின்றது,

சமூகத்தில் பணக்காரர்களின் மகிழ்ச்சிகளையும், சந்தோசங்களையும் இலக்கியங்கள் பேசுவதை விடுத்து, பாமர மக்களின் இன்னல்களை என்று இலக்கியம் பேசுகிறதோ அன்று அந்தச் சமூகம் மேல்நிலை அடையும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி இவ்விலக்கியம் தாழை இரா. உதயநேசன் அவர்களின் இந்தச் சிறுகதை இலக்கியம் முற்றிலுமாக மனம் சார்ந்த மன ஓட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூகம் முன்னேற்றமடையும்.

சிறந்த சமூகச் சிந்தனையுள்ள சிறுகதைகள்.

– பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
திருநின்றவூர்
9283275782
[email protected]

நூலின் பெயர்: செவத்த இலை.
நூல் ஆசிரியர்: தாழி இரா.உதயநேசன்
பக்கம்: 112
விலை:100
பதிப்பகம் : நூலேணி பதிப்பகம், சென்னை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.