isaivu book reviewed by jayasreebalaji நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜிisaivu book reviewed by jayasreebalaji நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு
எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த்
வெளியீடு: முகவரி வெளியீடு
பக்கங்கள்: 72
விலை: ரூ. 100

வணக்கம்,

எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

தன்னை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் சாட்சியாய் நிற்பவன் மனிதன். சில நிகழ்வுகள் சாதகமாகவும் சில நிகழ்வுகள் பாதகமாகவும் அமைந்து விடுவது எழுதப்படாத விதி. குறிப்பாக பெண்கள் “இப்படித்தான் வாழ வேண்டும்” என்ற சமுதாய கட்டமைப்பால் ஒரு சிறிய வட்டத்திற்குள் பூட்டி வைக்கப்படும் பேராற்றல்.

21ஆம் நூற்றாண்டு பெண்கள் பல துறைகளில் சாதித்து வந்த போதிலும் இன்னும் சரியான அங்கீகாரம் பெற முடியாமல் மறைமுக ஒடுக்குமுறையில் வாழ்ந்து வருபவர்கள் ஏராளம். அதில் ஒருவராக தான் இசைவின் ப்ரீத்தி நிற்கிறார். குடும்ப பொறுப்புகள் அலுவலக பொறுப்புகள் இரண்டினையும் சரிசமமாக தோள்களில் சுமக்கும் ஒரு இளம் பட்டதாரி பெண். டீம் லீடர் மனைவி தாய் சகோதரி மகள் மருமகள் தோழி என பன்முகத்தன்மையின் கோணங்கள் மாறாமல் தன்னை சரியாக தக்க வைத்து, காலத்தின் பிடியில் தன்னை இழந்து நிற்கும் ஒரு சாமானிய பெண்ணாகவே குறுநாவலில் வலம் வருகிறார்.

கார்ப்ரேட் சூழ் உலகில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பெண்கள் உயர் அதிகார வட்டத்தில் வளர்ந்து உயர் தலைமை பொறுப்பை பெறுவது என்பது கின்னஸ் சாதனைக்கு நிகரான போராட்டம். ப்ரீத்தி ராஜ் மற்றும் அஷ்வின் இவர்களுக்குள்ளான முக்கோண அலுவலக கதை களம் நாவலை உயிர்ப்புடன் வைத்து உள்ளது.
கார்ப்பரேட் சூழலில் ஒரு பெண் சந்திக்கும் அத்தனை சவால்களையும் பக்கத்துக்கு பக்கம் விவரித்து கதை களத்தை ஆழமாகவும் நுட்பமாகவும் எடுத்துச் சென்றுள்ளார் பிரியா.

நாவலில் பாராட்டுதலுக்கும் அதே சமயம் பரிதாபத்திற்கும் உரித்தாகுகிறார் ப்ரீத்தியின் இணையர். ப்ரீத்தி பணியை சிரத்தியின்றி மேற்கொள்ள வேண்டி எல்லா வசதிகளையும் வழிகளையும் செய்து தரும் இணையர். அவள் சந்திக்கும் சவால்களையும் இன்னல்களையும் புரிந்து கொள்ள இயலாத சாமானிய கணவராகவே திகழ்கிறார். பெரும்பாலான வேலைக்கு செல்லும் திருமணமான பெண்கள் அங்கு சந்திக்கும் பாலியல் ரீதியான சிக்கல்களை இணையரிடம் பகிர்வதற்கு தயக்கம் காட்டுவது ஒவ்வொரு வீட்டிலும் நிகழும் ஒரு அவலம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கும் பெரும்பான்மை பெண்களின் பிரதிநிதியாகவே ப்ரீத்தி வாழ்கிறார். எல்லா அலுவலகத்திலும் ப்ரீத்தி போன்ற திறம் கொண்ட பெண்களும் அஷ்வின் போன்ற புரிதல் நிறைந்த பக்குவமான சக ஊழியரும் ராஜ் போன்ற ‘சபலிஸ்ட்’ மேலதிகாரியும் இருப்பது நிதர்சனம்.

ஐ.டி துறையில் நடக்கும் அனைத்து விதமான கார்ப்ரேட் அரசியல் மற்றும் அலுவலக வரைமுறைகள் அவற்றின் தன்மை மாறாமல் அனைத்து விதமான வாசிப்பாளர்களுக்கும் சென்றடையும் விதமாக எழுத்து நடை மற்றும் எளிமையான விவரனை நூலின் பக்க பலம்.

நாவல் இரண்டு விதமான கற்பிதங்களை ஆணித்தரமாக அதே சமயம் எளிமையாக எடுத்து வைக்கிறது. ஒன்று – தனக்கு நேரும் கடினமான அவலமான அனுபவங்களை பெண்கள் சரியான இடத்தில் சரியான நபரிடம் கொண்டு சேர்த்து தனக்கான நியாயத்திற்காக போராடும் மனவலிமை கொள்ள வேண்டும். இரண்டு – ஐ.டி கம்பெனி என்றாலே ஒழுக்கச் சீர்கேடு நிகழும் இடமாகவே கருதப்படும் அந்த கருத்தியலை உடைக்கும் விதமாக வலிமையான தரமான மேலாண்மையை நிலை நிறுத்த வேண்டும்.

நானும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியும் பெண் என்பதால் பல இடங்களில் என்னை ப்ரீத்தி கதாப்பாத்திரத்தோடு நானும் ஒன்றி இருப்பதை, நான் கடந்து வந்த மற்றும் எதிர் கொண்ட சிக்கலின் பிரதிபலிப்பாகவே உணர்ந்தேன். எனக்கு கிடைத்திருக்கும் அலுவலக நட்பு வட்டம் மற்றும் என் வளர்ச்சிக்கு பக்க பலமாக நிற்கும் மேலாண்மை கொண்ட நிறுவனம் எல்லா வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் கிடைத்து விட்டால் நாம் சரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.

“இசைவு” மாற்றத்தை நோக்கி சிறுஅடி எடுத்து வைக்க இசையும் ஒரு குறுநாவல் என்பதே எனது கருத்து.

வாழ்த்துகள் பிரியா அடுத்த நூலுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *