நூல் அறிமுகம்: எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் *”இலக்கியச் சாதனையாளர்கள்”* – உஷாதீபன்”இலக்கியச் சாதனையாளர்கள்”
க.நா.சுப்ரமண்யம்
வெளியீடு:- சந்தியா பதிப்பகம், சென்னை-83.

எழுத்துலக ஆளுமை க.நா.சு. அவர்களின் விமர்சனங்களில் எப்பொழுதும் உண்மையின் ஒளி இருக்கும். வேண்டுபவர், வேண்டாதவர் என்கிற பாகுபாடு கிடையாது. மனதில் பட்டதை எழுதி விடுவது. அதிலிருக்கும் உண்மையை உணர்ந்து விருப்பமிருந்தால் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டியது எதிராளியின் பணி. அல்லது அதனிலிருந்து ஒதுங்குவது. அப்படித்தான் அவரது கட்டுரைகள். உரிய சகிப்புத் தன்மையோடு படிக்க வேண்டியது நமது பொறுப்பு. இத்தனை கறாராகச் சொல்கிறாரே என்று நினைத்தால் அதிலுள்ள உண்மை புலப்படாமல் போகும் அபாயம் நிச்சயம். யார் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, என் மனதில் தோன்றியதை உங்கள் முன் வைக்கிறேன். அதை நேர் கோட்டில் பார்த்துப் புரிந்து கொண்டாலும் அல்லது கோணலாக உணர்ந்து கொண்டாலும் சரி அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இது என் கருத்து. இலக்கியம் சார்ந்த என் அசலான பார்வை. இதுவே நிஜம் என்னைப் பொருத்தவரை….இதுதான் அவர் முன் வைத்த பாணி.

இப்படியானவராக இலக்கிய வெளியில் இவரும் திரு.வெங்கட்சாமிநாதன் அவர்களும் தென்படுகிறார்கள். இவருடையதாவது சற்று நெகிழ்ச்சியோடு. அவரது கட்டுரைகள் எல்லாமும் சுட்டுரைகள்தான். சுடத்தான் செய்யும். அந்த எழுத்தின் நேர்மை நம்மை அவர்கள் மீது, அவர்களின் எழுத்தின், விமர்சனங்களின் மீது ஈர்ப்பு கொள்ளச் செய்கிறது. மதித்துப் போற்றத் தக்கதாகிறது.

தன் மனதுக்கு நேர்மையாக இருக்கும் எழுத்தாளன் இவர்களின் விமர்சனங்களை ஒதுக்க மாட்டான். அப்படியான தெளிந்த, சார்பு நிலையற்ற விமர்சனப் பார்வையோடு இலக்கியச் சாதனையாளர்கள் சிலரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தன் கருத்துக்களை முன் வைக்கிறார் திரு.க.நா.சு. இவரின் கருத்துக்கள் அந்தக் கால ஜாம்பவான்களுக்கே அலர்ஜியாக இருந்திருக்கிறது. தங்கள் படைப்புக்களைப் பற்றிய அவரது கருத்து அவர்களுக்கு ஒவ்வாததாக இருந்திருக்கிறது. பொருட்படுத்தாமலோ அல்லது பொருட்படுத்தித் திட்டியோ பதிலிறுத்திருக்கிறார்கள். யார் கேட்டது என்னைப் பற்றி எழுதச்சொல்லி இவரை…என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அவர் ஏதாவது நம்மைப் பற்றிச் சொல்கிறாரா என்று கவனித்திருக்கிறார்கள். அதையெல்லாமும் மனதில் வாங்கிக் கொண்டு கோபம் கொள்ளாமல் நிதானமான, பதமான சிந்தனையில் என் மனதில் தோன்றியவைகளைத் தெரிவித்தேன். ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் அவர்கள் பொறுப்பு. அதுபற்றிக் கவலை ஒன்றுமில்லை – இலக்கியத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்கிற கேள்வி எழவில்லை என்றார் இவர். இவரது இலக்கிய ஆளுமையை மதித்துக் கொண்டே, இந்த மனுஷன்ட்டப் போய் மாட்டிக்கிட்டமே என்று அவரின் புகழுரைக்காக ஏங்கியிருக்கிறார்கள். சாதனை படைத்தவர்களாகக் கருதுபவர்களின் சொந்த குணாதிசயங்களை, அவர்கள் மீதான அன்பும் நட்பும் கருதி வெளிப்படையாக, அன்பொழுக, உரிமையோடு அவர்களது எழுத்து சார்ந்து சொன்ன கருத்துக்களும் க.நா.சு.வின் எழுத்தில் விரவியிருக்கின்றன.

நகுலனின் ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது. இவர் முறையாகத் தமிழ் படித்தவரல்ல / இலக்கணம் இவரை மீறியது / கவிதை இவருக்குக் கை வராத கலை / சிறுகதையோ நாவலோ சுத்தமாகப் பிரயோசனம் இல்லை / விமர்சனமோ ஒழுங்காக நான்கு வார்த்தை எழுதத் தெரியாது மனுஷனுக்கு / அது போகட்டும்…இவர் என் கதைபற்றி என்ன சொன்னார்?

எப்படி முடிகிறது பார்த்தீர்களா? குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் பட வேண்டும் என்பது போல, பெரிய பெரிய எழுத்தாளர்களே இவரை எதிர்நோக்கி நின்றிருக்கிறார்கள். அதுதான் க.நா.சு.வின் பெருமை. நினைவிலிருந்து சொல்வதாக அசோகமித்திரன் சொன்ன நகுலன் கவிதை இது.

இந்நூலில் பெரிய பெரிய ஆகிருதிகளைப்பற்றி, அவர்களது முக்கியமான படைப்புக்கள் பற்றிய தனது கருத்துக்களை விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் க.நா.சு. பக்குவமாயும், சார்பின்றியும். . அறுபதுக்கு முந்திய தமிழ் எழுத்தாளர்கள், பிற மொழி எழுத்தாளர்கள் மற்றும் பிற தேச எழுத்தாளர்கள் என்று. அத்தனையும் விவரிக்க ஏலாது என்றாலும் க்ளாசிக் ரைட்டர்ஸான சில மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அவரது கருத்துக்களை ஸ்வாரஸ்யமான அனுபவமாக உணர முடிந்தது.புதிதாக எழுத வந்தவனை எழுதாதே, உருப்பட மாட்டாய்…எழுத்தை நம்பி வாழ முடியாது…நான் சீரழிவது உன் கண்களுக்குத் தெரியவில்லையா…என்று விரட்டியடித்தார் அந்த எழுத்தாளர். அதே சமயம் யாரையும் நட்பு முறித்துப் பிரிவதில்லை. எவ்வளவு பெரிய புத்தங்களைக் கையில் கொடுத்தாலும், ஆரம்பத்தில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் என்று முகர்ந்து விட்டு, அதன் உள்ளார்ந்த ஓட்டத்தைக் கிரஉறித்துக் கொண்டு மூடி வைத்து விடுவார். அந்தளவுக்கான உள் மன ஓட்டம், ஆழ்ந்த புரிதல் கொண்ட திறமைசாலி. ஒரு பத்து வருடங்கள் அமைதி தராத நட்பு நீடித்தது, அவரிடம் சவால் விட்டுச் சென்றுதான் ஒரே மாதத்தில் சர்மாவின் உயில் நாவலை எழுதி முடித்தேன் என்று மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார் க.நா.சு.. தமிழில் எழுத ஆரம்பித்துத் தொடர்ந்து எழுதியது அவரது பாதிப்பினால்தான் என்று க.நா.சு. கூறுகிறார். கலாமோஉறினி என்ற பத்திரிகை அவரை அட்டைப் படம் போட வேண்டும் என்று ஒரு படம் கேட்டபோது, தன் இருதயத்தை ஸ்கேன் செய்த எலும்புக்கூட்டுப் படத்தைக் காண்பித்து இதைப் போடுங்கள் என்றாராம். கடைசி நொடிகளில் மருந்துச் செலவுக்குக்கூடப் பணமின்றி தவித்த நாட்கள் அவை. இரகுநாதன் என்ற நண்பர் சொ.வி.க்கு மருந்துச் செலவுக்குப் பணம் வேண்டும் என்று எழுதிய வரிகளை அடித்துவிட்டு, இன்று புதுமைப் பித்தன் காலமானார் என்று வந்திருந்த போஸ்ட்கார்டு மனத்தைச் சுமையாக்கியது என்று வருந்துகிறார். புதுமைப் பித்தனைப் பற்றிய இந்தக் கட்டுரை அத்தனை மன நெருக்கத்தைப் புரிய வைக்கிறது நமக்கு.

மௌனியைப் புகழ்ந்து சொன்ன ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன். சென்னையில் அவர் வசிக்கவில்லையே, அனுதினமும் அவரோடு சம்பாஷிக்க இயலவில்லையே என்று வருந்துகிறார். பெயர்தான் மௌனியே தவிர, மணிக்கணக்காகப் பேச அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் க.நா.சு. மௌனி தன் எழுத்துக்களைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம். 1960க்கு பிறகு மாறிவிட்டார் என்கிறார். காதல் மௌனியின் கதைகளில் சிறப்பான அடிநாதம். மனித மனோ தத்துவத் தேடல் அவரது விசேஷம். ஐம்பது ஆண்டுக் காலப் பழக்கம் எனக்கும் அவருக்கும். நாங்கள் சந்திக்கும்போது மனித வாழ்வின் நோக்கம், போக்கு, இவற்றில் மத சிந்தனைகளின் ஆதிக்கம் இப்படியாகத்தான் பேசியிருக்கிறோம். புதுமைப்பித்தன் சொன்னதுபோல் மௌனி ஸ்வாரஸ்யமான மனிதர், அவரது கதைகள் அமர இலக்கியத் தன்மை பெற்றவை. அவர் இறந்த போது ஒரு சகாப்தம், ஒரு யுகம் முடிந்து விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

சண்முகசுந்தரத்தோடான என் நட்பு என் வாழ்க்கை வளத்துக்கும், இலக்கிய வளத்துக்கும் உதவியது என்கிறார் க.நா.சு. இந்தக் கட்டுரையில். இலக்கிய விவாதம் என்பதை அறிவுப் பூர்வமாகவும் அணுகலாம், அனுபவப் பூர்வமாகவும் அணுகலாம் என்று எனக்குச் சொன்னவர் சண்முக சுந்தரம். அவர் அனுபவப்பூர்வமாக அணுகியவர். குடும்பத்தை நடத்திச் செல்ல பணத் தேவைக்காகவே எழுதினார் அவர். நீங்கள் காசிக்குப் போய்ச் சம்பாதிக்கிற புண்ணியத்தை விட ஒரு குழந்தையின் படிப்புக்குச் செலவு செய்தால் அதிகப் புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு நண்பரிடம் இருந்து சாமர்த்தியமாய்ப் பேசி ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் என்று ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார். வாழ்க்கைக்கு ஆதாரமான நம்பிக்கையை அவர் என்றும் இழந்ததே கிடையாது. உரியக் காலத்தில் ரயிலில் கிளம்ப முடியவில்லையென்றால் நாளை பிளேனில் போய்விடலாம் என்று சொல்லுவார். அந்த அளவுக்கான நம்பிக்கையான பேச்சு அவருடையது. வெற்றிலை போடுவார். என்னைத் தேடி வந்து நான் வீட்டில் இல்லையென்றால், கதவில் ஒரு வெற்றிலையைச் செருகிவிட்டுச் சென்று விடுவார். தான் வந்து போனதற்கு அடையாளமாய். நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது ஆகிய அவரது நாவல்களை மறக்கும் தமிழர்கள் துரதிருஷ்டக்காரர்கள். எழுத்தாளர் சண்முகசுந்தரத்தைப்பற்றி க.நா.சு.வின் இந்த அபிப்பிராயங்கள் எத்தனை தரமானவை? 

எங்க சீமையைச் சேர்ந்த புள்ளையாண்டான் பிரசண்ட விகடனில் எழுதறான்….இது புதுமைப் பித்தன் அழகிரிசாமியைப் பற்றி க.நா.சு.விடம் சொன்னது. பிரசண்ட விகடனிலா? என்று கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்தேன் நான். அதில் நல்ல இலக்கியம் வந்ததில்லை என்பது என் அபிப்பிராயம். ஆனால் அதைப் பொய்யாக்கியவர் கு.அழகிரிசாமி என்று புகழுரைக்கிறார் க.நா.சு. நான் படித்து உயர்வாக நினைத்த சில நூல்களைப் பற்றி அவரோடு விவாதித்தபோது அவர் சொன்னார். எந்தப் புத்தகத்தையும் வாசித்து முடித்து, உடனடியான பலனை வைத்து மதிப்பிடக்கூடாது… அப்படி மதிப்பதென்றால் வாய்ப்பாடுதான் நல்ல புத்தகம். அதற்குத்தான் முதல் இடம். கு.அழகிரிசாமியின் இந்தக் கருத்து என்னை ஈர்த்தது. நம் அறிவிலே காலிப் பிரதேசங்கள் என்று இருக்கத்தான் இருக்கும். நான் அதை அடைக்க, எதையும் தேடி ஓட மாட்டேன் என்றேன் அவரிடம். அவர் சொன்னார்…அறிவுத் துறைபற்றிய புத்தகங்களைத் தேடி ஓடிப் படித்து அந்தப் பொத்தல்களை அடைத்துக் கொள்வதில் என்ன தவறு? என்றார்.அனுபவங்களைப் புதிது புதிதாகப் பெற நான் லைப்ரரியைத் தேடிப் போவேன். அவரோ பழைய புத்தகக் கடைகளைத் தேடி அடைவார். போன வேறு காரியத்தை மறந்துவிட்டு நாள் பூராவும் அங்கேய கிடப்பார். இது அவர் பழக்கம். மௌனி, லா.ச.ராமாமிர்தம் இவர்களை அவருக்குப் பிடிக்காது. எழுத்தில் ஏதோ பம்மாத்துப் பண்ணுகிறார்கள் என்பார். அவருக்கு ஏதாவது ஆராய்ச்சி செய்து நூல் எழுத மான்யம் வாங்கிக் கொடுங்களேன் என்று மு.வ.விடம் நான் கேட்டேன்…வெறும் பிஏ., கூடப் படிக்க வில்லையே அவர் நான் என்ன செய்ய? என்று மறுத்துவிட்டார் மு.வரதராசனார். குவாலாலம்பூரில் எடிட்டராக இருந்த வேங்கிடராஜூலு நாயுடு ஒரு முறை என்னிடம் சொன்னார். அவர் படைப்பைப்பற்றி நீங்கள் உறிண்டுவில் எழுதிய விமர்சனத்தைக் காட்டித்தான் கல்யாணம் செய்து கொண்டார் கு.அழகிரிசாமி….என் எழுத்து அப்படி ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்பட்டிருக்கிறதே என்று சந்தோசமடைந்தேன் நான். இது க.நா.சு.வின் கூற்று. 

மணிக்கொடி என்கிற சிறு பத்திரிகையைப் பற்றிப் பேசிய அளவு அதைத் திறம்பட நடத்திய அதன் ஆசிரியர் திரு பி.எஸ்.ராமையா பேசப்படவில்லை என்கிறார் க.நா.சு. நான் தமிழில் எழுத வந்ததற்குக் காரணமே ராமையா தான் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். அதில் கண்ட இன்பம், உற்சாகம் இன்றுவரை தொடர்கிறது எனக்கு. காந்தி என்கிற இதழில் வந்த “அவரின் “வார்ப்படம்“ என்ற கதையைப் படித்தபிறகுதான் அந்த ஆவல் எனக்கு ஏற்பட்டது என்கிறார். சந்திப்பவர் யாருடைய உள்ளத்திலும் ஆழ்ந்த சலனம் ஏற்படுத்தக் கூடியவர். வாழ்க்கையின் அனுபவ ரேகைகள் அவர் முகத்தில் ஆழமாய் ஓடிக் கொண்டேயிருக்கும் ஏழ்மையுடன் போராடி அப்படியொரு வெற்றி கண்டவர் அவர். அவருடனான முதல் சந்திப்பிலேயே ஒன்றைத் தெளிவாக்கினார் எனக்கு.

“பணம் வரவேண்டும், எழுதுகிறவற்றிற்குப் பணம்தான் முக்கியம் என்றால் பிராட்வேயைத் தேடிக் கொண்டு போய்விடுங்கள். இங்கு இலக்கியமும் தரமும்தான் முக்கியம். பணம் கொடுத்துத் தன் கதையை மணிக்கொடியில் போடச் சொல்லவே பலர் தயாராக இருக்கிறார்கள்”

குதிரைப் பந்தயங்களில் பயங்கரமான நம்பிக்கையுள்ளவர். குதிரைகள் கடைசி நிமிடத்தில் ஓடி பணம் கட்டியிருப்பவர்களின் ஆசையையும், நம்பிக்கையையும் தூண்டுவதை இலக்கிய பூர்வமாக விவரிப்பார். அவர் மாதிரி பரபரப்பாக அதைச் சொல்ல வேறு யாராலும் முடியாது. ஒரு சினிமா ப்ரொட்யூசருடன் இங்கிலாந்து சென்று வந்த அவர் அங்கு என்ன பார்த்தீர்கள் என்றபோது டெர்பி குதிரைப் பந்தயம் பார்த்தேன் என்றார். 

ஆனந்தவிகடன் பொன்விழாக் காலத்தில் உங்களைக் கூப்பிட்டுக் கௌரவிக்கவில்லையே என்றபோது அதுதான் என் படைப்புக்களுக்குப் பிரசுரத்திற்குப் பணம் கொடுத்து முன்பே கௌரவித்து விட்டார்களே…என்றார். விடாமல் விகடனில் இரண்டாண்டுகள் தொடர்ந்து கதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர் பி.எஸ்.ராமையா….பணத்தின் தேவைக்காகவே அப்படி எழுதினார். அத்தனையும் தகுதியுடையதாகவே இருந்தன என்பதுதான் இங்கே கவனிக்கப்படத்தக்கது. 

ஐந்தே ஐந்து எழுத்தாளர்களைப் பற்றிய க.நா.சு.வின் கருத்துக்களை மிகச்  சுருக்கமாக ஸ்வாரஸ்யம் கருதி இங்கே பகிர்ந்துள்ளேன். இவர்களைப் பற்றிய மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ளவும் மற்றும் ராஜாஜி, வ.ரா., கல்கி., கு.ப.ரா.,ஆர்,கே.நாராயண், தகழி, டி.கே.சி, சிதம்பர சுப்ரமணியம், கி ரா., தி.ஜா., கொத்தமங்கலம் சுப்பு, கம்பதாஸன், கே.எஸ்.வேங்கடரமணி, பிற மொழி எழுத்தாளர்கள் என்று மொத்தம் 41 படைப்பாளிகளுடனான அனுபவங்கள், அவர்களது எழுத்துக்கள் பற்றி க.நா.சு அருமையாய்ச் சொல்லி விளக்கியிருக்கும் சின்ன சின்னக் கட்டுரைகள் இப்புத்தகத்தில் விரவியிருக்கின்றன. இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய பெட்டகம் இது.

———————————————