….ம்மா…
*********************
கன்றைவிட்டு நகர்ந்தது
தாய்ப் பசு
மாட்டுப் பொங்கலன்று.

***

எல்லோரையும் வரவழைத்து
பொங்கல் இனாம் தரும்
பொன்னான நாளில்
நீ இல்லாது போனாய்
நீட்டிய கைகளின்
நகக் கண்களிலும் கண்ணீர்.

***

கண்ணாடிப் பேழைக்குள்
நீ
என் இதயம் முழுக்க
கீறல்கள்.

***

நினைத்துப் பார்க்கிறேன்
நீயிருந்த நாட்களை
நினைக்கவே முடியவில்லை
நீயில்லாத நாட்களை.

***

வாழ்க வளமுடன்
உனக்கு
வாழ்த்திதான் பழக்கம்
அழவைக்கிறாய்.

***

உன்னுடன் இருந்த நாட்களில்
ஆரவாரங்களுக்குத்
தலைமை வகித்தேன்
இப்போது…
கைவிடப்பட்ட இரயில் நிலையமாய்
வெறிச்சோடிக் கிடக்கிறேன்.

***

அரிச்சந்திரன் மயானத்தில்
நினைவு வந்தது
நீ சொன்ன பொய்
பயப்படாம போ
நான் நல்லா இருக்கேன்.

***

உள்ளங்கையின் மத்தியில்
வைத்திருந்தேன்
எப்படி நழுவ விட்டேன்.

***

போதுமான
உயரம் நீ
மின்மயானத்தின்
சிம்னி வழியாக
வெளியேறினாய்.

***
தூளியில் நான் கண்ணயர்வதற்கு
ஆராரோ ஆரிரோவை தவிர்த்து
‘மாலைப் பொழுதின்
மயக்கத்திலே ‘
‘காதல் சிறகை காற்றினில் விரித்து’
சுசிலாம்மாவே வந்து
தூளியாட்டுவதாக தெருவே
சொக்கிக் கிடந்த அப்போதை
இப்போதிந்த தருணத்தில்
ம்மா.

***

நீ வாழ்ந்த நாட்களில்
நீ அறிந்ததே
நான் வாங்கும் ஒவ்வொரு
புதிய பேனாவும்
முதன் முதலில் எழுதியது
உன் பெயரைத்தான்
அது ரூபம்
இனியும் வாங்குவேன்
எழுதுவேன்
இது அரூபம்.

***

மாலை நேரத்து
மொட்டைமாடியில்
நிலா தவழ
தென்றல் வருட
அன்னம் பதித்த
வெள்ளிக் கிண்ணத்தில்
நெய் பிசைந்த பருப்பு அன்னத்தோடு
ஒவ்வொரு வாய்க்கும்
ஒவ்வொரு கதை

***

மருத்துவமனையில் நீ கிடந்த
துயரமான தருணத்தில்
மருத்துவர் குழு
மெல்லக் குனிந்து
‘என்னம்மா செய்யுது’ கேட்டபோது
ஒரு வாய் சோறிறங்கமாட்டேங்குது
டாக்டர்
நீ சொன்னபோது
என் அடிவயிற்றிலிருந்து
இன்றும் கேட்குமோர் அலறல்….
….“ம்மா….”

-துரை நந்தகுமார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *