அன்பான அப்பா…
*********************
நான் பொறந்த போது
நீ கொண்ட மகிழ்வுக்கோ…
அளவில்லைனு அடிக்கடி சொன்ன…

நான் எட்டு வைச்சு நடநடக்க…
எங்க அம்மா…தேவைதைனு புகழ்ந்த…

ஒரு பொருள் கேட்டா போதும்…
ஒன்னுக்கு நாலா…வாங்கிப் போட்டுக் குவிச்ச…

என் சிணுங்கலுக்கும்…
அர்த்தம் அறிந்தே…தூக்கிக்கொண்டு
சுமந்த…

உடம்பு நோக…நோய் வந்த போதும்…
பக்கத்திலே இருந்து…
தூங்காம கண் விழிச்ச…

என் நலமே…உன் நலமென…
உள்ளுக்குள்ள துடிச்ச…

பருவம் வந்த போதும்…
பார்த்துப் பார்த்து ரசிச்ச…
உனக்குப் பொறுப்பு கூடுதுனு…
ஊரெல்லாம் சொல்லி வச்ச…

கலர் கலரா…ஆடையும்…
வளைவியும்…வாங்கி வாங்கி
வருவ…அதன் ஓசையில
உன் உலகம் மறந்து கெடப்ப…

எனக்குக் கல்யாணம்னு…
ஊரெல்லாம் சொல்லி இப்போ
திரிஞ்சாலும்…என் மனசுக்குள்ள
அப்பனை விட்டு என்ன வாழ்க்கை இதுனு சொல்ல
மனம் ஏங்குது…

இந்த ஏக்கம் மறைக்க…
நீயும்…நானும் போடும் வேஷம்
எப்போ இங்கே கரையுமோ…

புன்னகையால…போயிட்டு வான்னு
சொல்லுவியோ…இல்ல…
புது முகத்தைக் கண்ணீரால
கழுவுவியோ…

இதெல்லாம் நினைச்ச பின்னும்
சிரிக்குறோம்… சமூகத்தில்
நானும்… நீயும்…
பிரிவின் யதார்த்தத்தில் நடிக்கிறோம்…

அன்பான அம்மா
*********************
இவள் இல்லாமல்
ஓர் அணுவும் அசையாது இல்லத்திலே…
இல்லை என்ற சொல்லும் கண்டதில்லை
இவள் ஞாலத்திலே…

காலையிலே…டீயில் துவங்கிய
வேலை ஒவ்வொன்றாய்…
அடுக்கடுக்காய்…இவள் உயரம்
தாண்டிய போதும்…
ஒருபோதும்…இவள் சலிப்பை
வேலையில் காட்ட எண்ணியதில்லை…விடுமுறை
கொடுங்கள் என்றோர்…
வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை…

சட்டை…எங்கே…ஷூ..எங்கே
எனக் கேட்கும் கணவனுக்கு…
கண் முன்னே இருக்கும் பொருள்
தேட…நேரமில்லா பொழுதில்
இவள் நேரம் செலவழிக்க
தவறியதில்லை…

படுக்கையில் புரளும் குழந்தைக்கு
இல்லா அக்கறை…பள்ளியில்
என்னவெல்லாம் கேட்பார்களோ…என
பலமுறை புத்தகப்பைகளை சரிசெய்து…எடுத்து வைப்பதில்
இவள் அக்கறைக்கு ஈடு இணை
எதுவுமில்லை…

இட்டலி அவிப்பதிலும்…சாம்பாரின்
சுவையை இரசிப்பதிலும்…
யாருக்கெல்லாம் இவை பிடித்திருக்கும் என்பதில் இவள்
போடும் கணக்குகளில்…இவள்
பிடித்தம் என்னவோ…என்பதை
மறந்தே…ருசிக்கிறாள்

குக்கர் இசை…ஒருபுறம் இருக்க
பிடித்த பாடல் எங்கோ ஒரு முனையில் காதுகளைத் துளைக்க…
மனம் லயித்து கேட்கத் துடிக்கும்
இசையில்… குக்கர் இசைக்கே
முன்னுரிமை அளித்து காரியம்
சாதிக்கிறாள்…

விடைபெறா குழந்தையின் அழுகையை நிறுத்தி
பள்ளிக்கு அனுப்பி…
டாட்டா காட்டி…கணவனுடன் அனுப்பி
வைத்தே… வேலையெல்லாம்
முடிந்தது என்ற எண்ணத்திற்கு
முட்டுக்கட்டையாய்…

பாத்திரங்கள்…ஒருபுறம்…
துணி மூட்டைகள் … மறுபுறம்…
பயன்படுத்திய பொருளெல்லாம்…
ஆங்காங்கே…என வீடு முழுவதும்
நிறைந்திருக்க… அனைத்தும்
சுத்தம் செய்தே…வீட்டை முறைப்படுத்தில்
முறைதவறியதில்லை…இவளது
செயல்கள்…

எல்லாம்..முடித்த பின்னே…
சற்றே அமர்வோம் என சிந்திக்கும் வேளையிலே…
ஏம்மா…டீ போடுறீயா…என்ற மாமனாரின்
குரலுக்கு செவிசாய்த்தே… மீண்டும்
அடுக்களைக்குள் நுழைந்தே
இல்லா வேளையை…இழுத்துப் போட்டு செய்வதில்
இன்னல் கண்டதில்லை இவள் ஒருபோதும்…

இல்லம் முழுதும் வெளிச்சமாய்…
இன்முகம் எனும் வருகையாய்…
இரவை வரவேற்று… மீண்டும்
அடுத்த விடியலுக்குக் காத்திருந்து…
நகர்வதில் இவள்…போல்
சிறப்புடையோர்…யாருமில்லை…

இல்லத்தரசி என்றோர் பெயருக்கு
பொருத்தமாய்…இல்லம் காக்க
வேறொரு… உறவுமில்லை…

தாய்மாமன்
***************

ஊரெல்லாம் அழைப்பு விடுத்தாச்சு…
உறவெல்லாம் அழைப்பை ஏற்று வந்தாச்சு…

வந்த ஜனமெல்லாம்…புன்னகையால
சுத்திச் சுத்தி வர…உடன்பிறப்பெல்லாம் பொறுப்பா ஒரு வார்த்தை…
சாப்பாட்டுக்கு சொன்னியா…
வந்தவங்களைப் பார்த்தியானு…
வேறெதுவும் செய்யனுமா என…

எல்லாம் பொறுப்பா செய்த பின்னும்…
உடன்பிறப்பின் சொற்கேட்டு இணையரிடம்
ஒரு வார்த்தை…எல்லாம் சரியா தானா போய்க்கிட்டு இருக்கென…

உறவைப் போல புன்னகைக்க…
வேறு யாரும் பொருத்தமில்லை…
ராஜா போல எம்புள்ள…இரத்தினமா
என்னைச் சுத்தி வர…

தாயாக நானிருந்தாலும்…
தாய்மாமன் மடி தேடி அமரும் நாளோ…இந்நாளே…

எப்போதும் மாமாவின் அரவணைப்பில் சொக்கிய எம்புள்ள…இன்றும்…
இறுக்கி அணைச்சு
மார்போடு படுத்திருக்க…

குலம்காத்த…குலதெய்வத்திற்கு
முடிஇறக்க…முன்னேற்பாடெல்லாம்
சிறப்பா இருக்க…புன்னகைத்த
எம்புள்ள…முடியிறக்க அழுது புலம்ப…
துள்ளியெழும்…குட்டிக்காளையை
பூவாய் அடக்க…என் அண்ணன் போராட…

சுற்றி இருந்த சொந்தமெல்லாம்…
கருத்துக்கணிப்பை அள்ளி வீச…
போராடி வெற்றி பெற்று… முடியெல்லாம் காணிக்கை செலுத்தி…

அழுத கண்ணின் நீரோடு…நீர் சேர்த்து குளிக்க வைத்து…
முடியிருந்த இடமெல்லாம் சந்தனம் வைத்து…புது சொக்கா…
சோக்கா போட்டு அழகு பார்க்க…

அழுத கண்ணும்…அழ மறந்து
தன் அழகை இரசித்துப் பார்க்க…

அச்சமயம்
அழுத்தி அணைத்ததில்
அண்ணனிடம் வர மாட்டானோ…என
பின்னிருந்து தயக்கமுடன் குரல் எழுப்ப…

நடந்ததெல்லாம்…மறந்தவனாய்…
தாயாக எண்ணும் உறவாய்…
தாய்மாமன் தோள் பற்றி…மழலை மொழியில் எல்லாம் இரசித்தவனாய்…முகம் பார்த்து
புன்னகையால் பதில் சொன்னான்…

என் தாய் போல் நீயும்…
என் தாய்மாமன் உறவென…

-சக்திராணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *