நூல் அறிமுகம்: கோமல் சுவாமிநாதனின் “பறந்து போன பக்கங்கள்” – உஷாதீபன்நூல்: பறந்து போன பக்கங்கள் 
ஆசிரியர்: கோமல் சுவாமிநாதன்
வெளியீடு: குவிகம் பதிப்பகம், சென்னை

உண்மையிலேயே இப்புத்தகம் பறந்து போய் விடும் பக்கங்களாகத்தான் என் கைக்குக் கிடைத்தது. முதல்முறையாகப் பக்கங்களைப் புரட்டியபோதே கிழிந்து விடும் நிலையில் தாள் தாளாக வந்தது. அத்தனையையும் ஒட்டி, மென்மையான ஒரு வருடலில் படிக்க ஆரம்பித்தபோது அங்கங்கே துண்டு துண்டாகக் கிழிய ஆரம்பித்தது. அவற்றையும் டேப் போட்டு நிறுத்தி விடாமல் படிக்க ஆரம்பித்தேன். இருக்கும் ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுத்து விடுங்கள் என்பதான ஆர்வ மிகுதி இது.

சுபமங்களா இதழில் திரு.கோமல் அவர்கள் தொடராக எழுதிய அவரின் நாடக, சினிமா அனுபவங்கள் ஒவ்வொன்றும் சுவையானவையாகவும், சோகமானவையாகவும், வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுத் தருபவையாகவும், மன முதிர்ச்சியும் செயல் முதிர்ச்சியும் கொள்ளத் தக்கவையாகவும் விளங்கி அவரின் தொடர்ந்த முயற்சியையும், மனம் தளராத முனைப்பினையும் நமக்கு உணர்த்துகின்றன.

நிரந்தர வருவாயைத் தரும் வேலையா அல்லது நாடக வாழ்க்கையா என்று மனம் சஞ்சலப்படும்போது வருவாயைத் தரும் வேலையை ஒப்புக் கொண்டு அதில் மனம் ஒன்றாமல் திரும்பவும் நாடகமும், சினிமாவுக்கான முயற்சியுமே தனது வாழ்க்கை என்று உணர்ந்து. அதில் கிடைக்கும் சுதந்திரத்தில் மனம் லயித்து, என்னதான் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தாலும் இதிலிருக்கும் ஆத்ம திருப்தி வேறெதிலும் இல்லை என்று தொடர்ந்து புதிய புதிய நாடகங்களை எழுதுவதும் அதை எடுத்துக் கொண்டு போய் தெரிந்த நண்பர்கள் மூலமாய், அறிமுகம் கிடைத்த முக்கியக் கலைஞர்களிடத்திலும், நடிகர்களிடத்திலும், இயக்குநர்களிடத்திலும் உட்கார்ந்து மணிக் கணக்காய்ப் படித்துக் காண்பித்து, அவர்களின் திருப்திக்காகக் காத்திருப்பதும், ஆரம்பக் காலத் தோல்விகளைச் சந்திப்பதும், பின்பு அவர்களே அவரின் வேறொரு கதையை, நாடகத்தை ஒப்புதலளிப்பதுமான கோமலின் அனுபவம் இவர் எப்படியாவது வெற்றி பெற்றுவிடக் கூடாதா, ஏற்றம் கண்டு விடக் கூடாதா என்கிற ஏக்கத்தை நம் மனதில் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அப்படி அவர் ஒவ்வொருவராய்த் தேடித் தேடிச் செல்வதும், பின்னர் இவரின் விடா முயற்சியையும், திறமையையும் கணித்து, அவர்களே இவரை மதித்து அழைப்பு விடுப்பதும், அப்படியான ஒரு காலம் கனிந்த வேளையில் புதுப்புது சமுதாய முற்போக்குச் சிந்தனைகளில் அவர் மனம் லயிப்பதும், அவை காலப் போக்கில் வெற்றி காண்பதும் படிக்கும் நமக்கு மிகுந்த ஸ்வாரஸ்யத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி என்றேனும் இவருக்கு வெற்றி நிச்சயம் என்கிற உறுதிப்பாட்டை நம் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன.

வாசிப்பில் மிகுந்த ஆர்வமுள்ளவராய் கலை, ஜோதிடம், சித்த வைத்தியம், அரசியல், தத்துவம் என்று பன்முகக் கலைஞராய் விளங்கிடவும், ஞானம் பெற விழையும் ஆர்வலராய் விளங்கும் இவரது அனுபவங்கள் நமக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. இக்கட்டுரைகள் வெறும் பொழுது போக்காய் அமையாமல், தமிழ் நாடகங்கள், சினிமா, ஆத்ம திருப்திக்காகவே வாழும் நாடகக் கலைஞர்கள் ஆகியவர்களைப் பற்றிய ஆவணமாகக் திகழ்கிறது. பம்பாய், டில்லி என்று சென்று நாடகங்கள் போடுவது, அங்கு அவற்றிற்குக் கிடைத்த வரவேற்பு என்று உற்சாகமாய்க் கால் பதித்த அனுபவப் பயணங்கள் படிக்கப் படிக்க நம்மையும் அந்தக் குழுவுடன் பயணிக்க வைத்து விடுகிறது.

வத்தலக்குண்டில் எனக்குத் தெரிய பி.ஆர்.ராஜமய்யர் நூற்றாண்டு விழாவின்போது ”தேரோட்டி மகன்“ நாடகம்தான் மேடையேற்றப்பட்டது. ஆனால் “கமலாம்பாள் சரித்திரம்” நாடகமாக்கப்பட்டு நடத்தப்பட்டது என்று ஒரு புதுத் தகவல் இப்புத்தகத்தில் உள்ளது. தமிழ் நாட்டின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் அன்று வத்தலக்குண்டு வந்திருந்தனர் என்கிற தகவலின்படி அது மேற்கண்ட விழாவுக்குத்தானா அல்லது அதற்கு முன்பே வேறு ஒரு விழா ஏதேனும் நடந்தேறியதா என்று ஒரு ஐயப்பாடு எழுகிறது. ஆனால் அந்த நிகழ்வுக்குப்பிறகு புதிய நாடகச் சிந்தனை துளிர்விடப் பல காலமாயிற்று என்று சொல்கிறார். அது 1980வாக்கில்தான் ஆரம்பமாகியிருக்கிறது. கூத்துப்பட்டறை, பரிக்-ஷா ஞாநி என்று துவங்கியிருக்கிறது.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறைத் தலைவராக இருந்த திரு.சே.இராமானுஜம் அவர்களின் தயாரிப்பில் தமிழ் நாடக மேடையில் புதிய காற்று வீச ஆரம்பித்தது என்கிற தகவல்…அவரின் நாடகங்களை நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கண்டு களித்த நினைவுகளை உசுப்பி விட அந்த நிகழ்வின்போது இம்மாதிரியெல்லாமும் நாடகங்கள் நடக்கின்றனவா என்று நான் வியந்த காலங்களை எனக்கு நினைவுபடுத்தியது.

முதல் மரியாதையில் நடிகர்திலகம் ஒரு கஷ்டமான முரண்பாடுள்ள கதாபாத்திரத்தை ஏற்று அதை மிக அமைதியாகவும் யதார்த்தமாகவும் செய்திருந்தும், அவரது பெயர் நடுவர் குழுவிலிருந்த கோமல் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டும் அவர் காங்கிரஸ்காரர் என்பதற்காக (அந்த சமயத்தில்) அந்த விருது அவருக்குத் தவறிப் போனதும், ஜெயா பச்சன் மூலமாக அந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டு கடைசியில் அந்த விருது சசிகபூருக்குச் சென்றடைந்ததுமான தகவல் அறியப்படுகையில் நமக்கு வருத்தமே மேலிடுகிறது.

கோமலின் தண்ணீர்…தண்ணீர் நாடகத்தைப் பார்த்துவிட்டு இதை நான்தான் படமாக எடுப்பேன் என்று இயக்குநர் கே.பாலசந்தர் அவர்கள் கிளம்பியதும், கதையில் வரும் அத்திப்பட்டி போன்ற ஒரு கிராமம் தேடி கோவில்பட்டிப் பகுதியில் தேடிக் கண்டடைந்து அந்த மஞ்ச நாயக்கன்பட்டியில் படப்பிடிப்பை நடத்தி முடித்ததும்…அழுக்கு வேஷ்டியும், அழுக்குத் துண்டுமே அப்படத்தின் காஸ்ட்யூம் என்று சொல்லி உள்ளூரிலேயே உடைகளைப் பெற்றதுமான புதிய தகவல்கள் மிகுந்த ஸ்வாரஸ்யமானவை.. படம் வந்த காலத்தில் அதை ஒரு நாடகத்தன்மையோடு இருப்பதாக உணர்ந்து ரசிக்காமல் விட்டவன் நான்.இப்போது திரும்பப் பார்த்தபோதும் அந்தச் சாயல் எனக்குத் தோன்றத்தான் செய்தது. ஆனாலும் ஒரு சிறந்த சமுதாயக் கருத்து அப்படத்தில் ஆழமாக விழுந்திருப்பதும், அதற்குப்பிறகு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம் நாட்டின் தண்ணீர் பஞ்சம் படு மோசமாகி நிற்பதுவும் இப்பொழுது நினைக்கையிலும் மனதை வேதனை கொள்ளத்தானே வைக்கிறது.

சுவர்க்க பூமி என்ற நக்சலைட்டுகள்பற்றிய நாடகத்தை எழுதியதும், தனி மனித சாகசத் தீவிரவாதம் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்து அதில் வலியுறுத்தப்பட்டதும், அந்த நாடகத் திற்குப் பெருத்த வரவேற்பு இருந்ததையும் கோமல் இதில் பதிவு செய்கிறார்.

பட்ட கடனுக்காக வீட்டு வாசலில் தண்டோராப் போட்டு நோட்டீஸ் ஒட்டியும், அயராது உள்ளே நாடகத்திற்கான ஒத்திகை நடத்திக் கொண்டிருந்த எஸ்.வி. சகஸ்ரநாமம்பற்றிய தகவல்கள், என்.எஸ்.கிருஷ்ணனைப்பற்றி தவறான தகவல்களை எழுதிய இந்து நேசன் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று அச்சு இயந்திரங்களைச் சுத்தியால் அடித்து உடைத்துவி்ட்டு வந்த சகஸ்ரநாமம்பற்றிய தகவல் நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதைவிட அவரை பிராமண ரௌடி என்றும்.ஆர்.ராதா செல்லமாக அழைத்ததும் அந்தக் காலத்தில் கலைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் எத்தனை மதிப்பும் மரியாதையும் உள்ளவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

சாண்டோ சின்னப்பாத் தேவர் கோமலுக்கு அழைப்பு விடுக்கிறார். அவரிடம் தான் சென்னைக்குப் படமெடுக்க வந்த கதையைச் சொல்கிறார் தேவர். ஐயாயிரம் வச்சிட்டு படமெடுக்க வந்தியாக்கும் என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார். நாகிரெட்டியைப் போய்ப் பார்க்க உதவுகிறார். அவரது பேருதவியால் தாய்க்குப்பின் தாரம் படம் தயாராகி வெளி வருகிறது.

அனுராதா ரமணனின் தலைமையில் நடந்து கொண்டிருந்த சுப மங்களா இதழ் இவர் கைக்கு வருவதும். அது பெண்கள் பத்திரிகை போலிருக்கிறதே என்று தயங்க, உங்கள் சாமர்த்தியத்தால் அதை மாற்றுங்களேன் என்று ஸ்ரீராம் க்ரூப் அதிபர் சொல்ல அதையே லட்சியமாய்க் கொண்டு அவர் சுபமங்களா இதழை அதுவரை வந்திராத மிகத் தரமான இலக்கிய இதழாக மாற்றிக் காண்பித்த சாதனை….

எழுத்து பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாக சி.சு.செ. இவரிடம் வந்து தகவல் சொல்ல, முதல் சந்தாவாய் ஐந்து ரூபாயை எடுத்து கோமல் அளிக்க, எழுத்து பிரசுரம் மூலம் புதிய பாதை புத்தகமாக வந்து, நல்ல இலக்கியம் வாங்குங்கள் என்று பள்ளி பள்ளியாக அலைந்தது வீண் போகவில்லை என்று கிடைத்த பணத்தில் பாதியைக் கொண்டு வந்து கொடுத்த சி.சு.செயை நினைக்கையில் நம் கண்கள் கலங்கிப் போகிறது.ஜீவாவை மின்சார ரயில் பயணத்தின் போது சந்தித்தல், இவர் கேட்ட ஒரு கேள்விக்கு  உடனடியாக அடுத்த ஸ்டேஷனில் இவரோடு இறங்கி பொறுமையாய் விளக்கமளித்தல், தி.ஜா.வின் மோகமுள்ளை சி.சு.செ. புகழ்ந்து பேச, அதன் வர்ணனைகள் ஆபாசமாக இருப்பதாக பி.எஸ்.ராமையா கூறுவதும், இருக்கட்டுமேய்யா..ஒரு வீடு கட்றோம், வீடு முழுக்கவா பூஜை ரூமா வைக்க முடியும்,  படுக்கையறை, லாவட்டரின்னும் வேணும்ல… பூஜை ரூம் இல்லாமக் குடியிருக்கலாம் லாவட்டரி இல்லாமல் குடியிருக்க முடியுமா என்று கேட்க, அது சரி…லாவட்டரி நடு வீட்டுக்குள்ள இருக்கிறமாதிரில்ல இருக்கு…ஒதுக்குப் புறமால்ல இருக்கணும் என்று ராமையா மறுத்துப்பேச….இலக்கிய விசாரங்கள் பரவலாய், முரணாய் இருந்தாலும், அவர்களின் நட்பின் ஆழத்தை எடுத்துரைப்பதும்….இந்தக் கால இலக்கிய உலகுக்கு சற்றும் பொருந்தாத தன்மையில் அதன் மதிப்பும் மரியாதையும் நம் மனதில்  நிமிர்ந்து நிற்கிறது. 

பி.எஸ்.ராமையாவின் மல்லியம் மங்களம் நாடகம் வெற்றியடைந்தபோது வாயில் வெற்றிலையோடு பெருமிதமாக ”எப்பிழி..?.” என்று அவர் கேட்க…தேரோட்டி மகன் ஒத்திகையின்போது குந்திதேவியாக நடித்த எஸ்.என்.லட்சுமிக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுக்கையில் வாயில் வெற்றிலை புகையிலையோடு “குண்டீ…நீ இப்படிச் செய்…” என்று கூற கூடியிருந்த நடிகர்களெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க, சகஸ்ரநாமமும் நமுட்டுச் சிரிப்பு வெளிப்படுத்த வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் “குந்தி” உச்சரிக்க வேண்டாம் என்று சகஸ் சொல்ல, விஷயம் புரிந்து ராமையா வெட்கிச் சிரிக்க….அடேயப்பா…என்ன ஒரு அனுபவ சாரமான ஸ்வாரஸ்யம் ….!

நான் சொல்லியிருப்பது மிகக் கொஞ்சமே…! ஏராளமான விஷயங்கள் இப்புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. வீராச்சாமி, சாமிக்கண்ணு போன்ற திறமை மிக்க நாடக நடிகர்களைக் கண்டடைந்தது, அவர்கள் சினிமாவில் அதிகமாய்ப் பரிமளிக்க முடியாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தது என்று மனதை நெருடும் பல விஷயங்கள்.

நானூறு பக்க அளவைக் கொண்ட இப்புத்தகம் தமிழ் நாடக உலகின், சினிமா அனுபவங்களின், ஒரு இலக்கியவாதியின், ஒரு எழுத்தாளனின் பயண அனுபவமாகப் பரிணமித்து, வாழ்க்கை அனுபவமாக விரிந்து, இலக்கிய ரசிகர்களுக்கு ஒரு பெரு விருந்தாகக் காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய சிறந்த ஆவணமாக கோமல் சுவாமிநாதன் அவர்களின்  இந்த “பறந்து போன பக்கங்கள்” விளங்குகிறது. வாசிப்பு ருசியுள்ள அன்பர்கள் கட்டாயம் படித்து அனுபவிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. 

———————————————————————-