Let's ensure food security through integrated fish farming! Article By K. Vijay. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

 

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
க. விஜய், B.F.Sc. நான்காம் ஆண்டு மாணவர்,
முனைவர் இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர்

முன்னுரை:
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மீன்வளம் முக்கியப் பங்காற்றுகிறது. முக்கியமாக ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் மூலம் உள்ளுர் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு என்பது மீன் வளர்ப்புடன் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, தேனி வளர்ப்பு மற்றும் காளான் உற்பத்தி போன்ற வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலுடன் சேர்த்து ஒரே இடத்தில் அதிக இலாபம் ஈட்டக்கூடிய தொழில் முறையாகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையானது முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

இந்த முறையானது சிறு, குறு, பெரு என அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெற்றுத் தருவதுடன், நீர்வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி, மீன் உற்பத்தி மற்றும் வேளாண் உற்பத்தியை பெருக்கி நாட்டின் உணவுப் பாதுப்பை உறுதிசெய்கிறது.

வரலாற்றுப் பின்னணி:
முதன் முதலில் சீனா இந்த ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தது. நீர் நிலைத் தாவர வளர்ப்புடன் மீன் வளர்க்கும் முறையை சீனா முதலில் செயல்படுத்தியது. அதன்பிறகு நெல் சாகுபடியுடன் மீன் வளர்ப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, இம்முறையை பல்வேறு நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தாலும் அந்நாடு உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் அந்நாட்டில் வேளாண்மைக்கு தரப்படும் முக்கியத்துவமாகும். முக்கியமாக ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு போன்ற புதிய முறைகளை ஊக்குவிப்பதுமே ஆகும்.

இந்தியாவில் முதன் முறையாக வடகிழக்கு இந்திய பகுதியான அசாம் மாநிலத்தில் ஓருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமாக பெண் விவசாயிகளால் அதிகம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்புடன் மீன் வளர்ப்பு மற்றும் வாத்து வளர்ப்புடன் மீன் வளர்ப்பு போன்ற ஓருங்கிணைந்த பண்ணைத்தொழிலும் வளர்ச்சிக் கண்டது. தற்போது ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறையானது ஒரு முக்கிய வாழ்வியல் மேம்பாட்டு முறையாக விளங்குகிறது. இதன் மூலம் மனிதனுக்குத் தேவையான அனைத்து கால்நடை, வேளாண் உற்பத்தி வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்தியாவில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் தற்போதைய நிலை: 
இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் வேளாண்மைக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. 1990–ம் ஆண்டிற்கு முன்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை முதன்மை இடத்திலும் தொழில்துறை இரண்டாமிடத்திலும் சேவைத்துறை மூன்றாம் இடத்திலும் இருந்தது.

தற்போது சேவைத்துறை முக்கிய இடத்தில் உள்ளது. 1990–ம் ஆண்டுக்குப் பின்பு சேவைத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. வேளாண்மைத் துறை மூன்றாம் இடத்திற்கு வந்திருப்பதற்க்கு முக்கியமான காரணம் வேளாண்மைக்துறைக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைவு என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களின் விலை உயர்விற்க்கு முக்கியமாக இடைத் தரகர்களே காரணமாக உள்ளனர். ஒருங்கிணைந்த பண்ணைமுறை மூலம் இடைத்தரகர்களின் ஈடுபாட்டை தடுக்க முடியும். இதனால் குறைவான விலையில் விலைபொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய முடியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) ஆய்வின்படி இந்திய வேளாண்மை என்பது மனித உழைப்பைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு கடினமான தொழிலாகவே இருந்து வருகிறது. இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும், மக்களின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும், என்ற நோக்கத்துடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஒருங்கிணைந்த பண்ணைய முறை (IFS) என்பதை அறிமுகப்படுத்தியது. இவற்றின் மூலம் மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையான உணவுத் தேவையான தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பால், பழங்கள், தேன் மற்றும் இறைச்சிகள் முழுவதுமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

நாட்டில் உணவுப் பஞ்சம் என்பது முழுவதுமாக இருக்கக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பல்வேறு உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பண்ணை முறையுடன் பல்வேறு முறைகளை அரசு ஊக்கப்படுத்துகிறது.

இதன் காரணமாக நம் நாட்டில் பல்வேறு வேளாண் அறிவியல் மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தற்போது (2020) அவைகளின் மொத்த எண்ணிக்கை 725 ஆக உள்ளது. இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மேலும் புதிய வேளாண் தொழில் நுட்பங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்கள் ஓருங்கிணைந்த பண்ணையின் அவசியத்தையும், அதற்கான பயிற்சியையும் வழங்குகின்றன. இங்கு மீன் வளர்ப்புடன் சேர்த்து கூட்டுப் பண்ணைய முறையில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, குளங்களில் கூண்டு முறையில் கோழிவளர்ப்பு, வாத்து வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, வேளாண்மை, தோட்டக்கலை போன்ற அனைத்து விதமான பராமரிப்பு முறைகளும் செயல்படுத்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையில் வெற்றி கண்ட விவசாயிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் சூழ்நிலைகள்:
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1.83 லட்சம் ஆகும். (Book of Fisheries Statistics 2020) அதில் 270 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 30 (Krishi Vigyan Kendra) வேளாண் அறிவியல் நிலையங்கள் உள்ளன. இவையனைத்தும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்குச் தீர்வுகளும் சரியான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த பண்ணை மீன்வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தினால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும். இம்முறையில் அதிக மீன் உற்பத்தியையும், அதிக வருவாயும் ஈட்டிய விவசாயிகள் பலர் நம் நாட்டில் உள்ளனர். இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பேணிக் காப்பதில் கூட்டுப்பண்ணைய மீன் வளர்ப்பானது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இனி ஒருங்கிணைந்த மின் வளர்ப்பின் பயன்களைப் பற்றிக் காண்போம். மாடு வளர்ப்புடன் மீன் வளர்ப்பதனால் மனிதனுக்கு இரு மடங்கு இலாபமும் அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கின்றன.ஆடு வளர்ப்புடன் மீன் வளர்ப்பதனால் இரட்டிப்பான இலாபம் மற்றும் இறைச்சித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆடுகளை விற்பதால் உள்ளுர் விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். இறைச்சிக்காக பயன்படுத்தும் போது தமக்கான உணவுத் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.

வாத்து மற்றும் மீன் வளர்ப்பில் மீன்களின் வளர்ப்புக் குளங்களுக்குத் தேவையான நுண்ணூட்ட உரத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியும். மேலும் அவைகள் இறைச்சிக்காகவும் வருமானத்தைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கோழி மற்றும் மீன் வளர்ப்பு முறையில் மீன்களை வளர்க்க ஏதுவான உரங்களை கோழிக் கழிவிலிருந்து பெற முடிகிறது. அதிக வருமானத்தை இவற்றின் மூலம் பெறலாம். இறைச்சி மற்றும் உணவுத் தேவையை இவற்றின் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

தேனீ வளர்ப்புடன் மீன்களை சேர்த்து வளர்ப்பதால் மருத்துவ பயன்களை தேன் மூலமாகப் பெறலாம் மற்றும் மீன்களை விற்றும் நிகர இலாபம் ஈட்டலாம். காளான் வளர்ப்புடன் மீன்களை வளர்க்கும் போது மீன்களின் மூலமாக மட்டுமல்லாமல் காளான்களின் மூலமூம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. சந்தைகளில் மீன் மற்றும் காளான் ஆகியவற்றிற்கு தேவை அதிகமாக இருப்பதனால் வருமானம் உறுதி செய்யப்படுகின்றன.

நெல் மற்றும் மீன் வளர்ப்பு முறையில் வயல்களில் நெற்பயிரிட்டு அதனை குளமாக பயன்படுத்தி வெள்ளிக் கெண்டை, புல்கெண்டை போன்ற சீன வகை கெண்டை மீன்கள் மற்றும் திலேபியா என்ற அயல்நாட்டு வகை மீன் இனங்களை வளர்பதன் மூலம் அடிப்படைத் தேவையான மீன் மற்றும் தானிய உற்பத்தி பெருக்கமடைகின்றன. மேலும் முழுமையான ஊட்டச் சத்துக்களைப் பெற வகை செய்கின்றன. தோட்டக்கலையுடன் மீன்வளர்ப்பு செய்வதனால் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் விவசாயிகளின் பொருளாதாரமானது உயர்த்தப்படுகிறது. மீன்கள் மற்றும் பழங்கள் உண்ணும் உணவுப்பட்டியலில் முதன்மை வகிப்பதனால் எளிதில் விற்பனை செய்து விடலாம் மேலும் நுகர்வோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

மீன்களைத் தனியாக பராமரிப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். இருப்பினும் மீன்கள் மட்டும் உணவுத் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்வதில்லை. எனவே மற்ற உணவப் பொருட்களான சிறு தானியங்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள், பழங்கள், ஆடு, மாடு, கோழி போன்றவற்றையும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் பராமரிப்பு செய்வதால் வருமானம் அதிகரிக்கப்படுவதோடு பசி, பட்டினி, பஞ்சம் போன்றவைகள் போக்கப்பட்டு வறுமை இல்லா இந்தியாவை உருவாக்க முடியும்.

மேலும் இதன் சிறப்புகள் என்னவென்றால், குறுகிய இடத்தில் அதிக வருமானமும் மகசூலும் பெற முடிகிறது. குறுகிய பராமரிப்புக் காலம் போதுமானது. அத்தியாவசியமான மூலப்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதனால் நேரமும் பணமும் சேமிக்கப்படுகின்றன. மனிதனின் உணவுத் தேவை முழுவதும் பூர்த்தி செய்யப்படுகின்றன. மகளிர், இளைஞர்கள் மற்றும் ஏழை எளியோர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகின்றன. இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க முடியும்.

முடிவுரை:
நாட்டில் எவ்வளவோ வறுமை ஒழிப்புத் திட்டங்கள் இருந்தாலும் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களை ஊக்குவிப்பதின் மூலம் நிரந்தரமான உணவுப் பாதுகாப்பு நிலையினை உருவாக்கிட முடியும். இதற்கு ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வுகளைப் பொதுமக்களிடம் அதிகம் ஏற்படுத்திட வேண்டும். இதன் மூலம் வேளாண்மை, மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்றவை வளர்ச்சி அடைவதால் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் விவசாயிகளின் வருமானம் 2025 ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும் நிலை இதன் மூலம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

ஒருங்கிணைந்த பண்ணை மூலம் இயற்கை விவசாயம், கால்நடை உற்பத்தி மீன் உற்பத்தி முழுமையான நீர் பயன்பாடு, வேலைவாய்ப்பு, தற்சார்பு என பல்வேறு நன்மைகள் உள்ளது. இவை அனைத்தும் முழுமையான உணவுப் பாதுகாப்பிற்கு வழி செய்கிறது. எனவே ஓருங்கிணைந்த மீன் வளர்ப்பின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

தொடர்புக்கு:
முனைவர் இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர்
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
பொன்னேரி – 601 204.
கைப்பேசி எண்: 95663 62894
மின்னஞ்சல்: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *