நாம் சமீபமாக கேட்ட, பகிர்ந்த, தலைப்பு செய்திகளில் பார்த்த பெயர்கள் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ். குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் கடையைத் திறந்துவைத்தார்கள் எனும் அற்ப காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் வைத்து கொலை செய்யப்பட்டவர்கள்.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்லாடு என்பவர் கறுப்பினத்தை சார்ந்தவர் என்பதாலேயே போலிசாரால் நடுரோட்டில் வைத்து கொலை செய்யப்பட்டதும் உலகம் அறிந்தது. இப்படியாக கொரோனா காலத்திலும் தொடரும் சாமானியர்கள் மீதான காவல்துறையின் லாக்கப் வன்முறைகள்.
அதிகாரத்தின் அநாகரீகம்
லாக்கப்பில் சித்திரவதை அனுபவிப்பவர்கள் அனேகமாக அற்பக் காரணங்களுக்காகவும் சந்தேக கேசில் விசாரணைக்காகவும் கைது செய்யப்பட்டவர்களே.லாக்கப் வன்முறைகள் பெரும்பாலும் வெளியுலகிற்குத் தெரிவதில்லை. காரணம் இவர்கள் பெரும்பாலும் யாருமற்றவர்களாக, படிப்பறிவற்றவர்களாக, சாமானியர்களாக, உழைக்கும் மக்களாக, ஒடுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். அதனாலேயே இவர்கள் சித்ரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப் படுகிறார்கள். அதிகாரம் இருக்கும் திமிரில் அதிகார வரம்பை மீறி சில உயர் அதிகாரிகள் மனநோயாளியைப் போலப் புத்தி பேதலித்து மனிதாபிமானம், இரக்கம், கருனை இவையெல்லாம் என்னவென்றே தெரியாதது போல் கைதிகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதை ஏதோ தனிப்பட்ட அதிகாரிகளின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. உண்மையில் இந்த ஆதிக்க வர்க்கத்தை பிரிதிபளிக்கும் நபர்களே அவர்கள்.
லாக்கப்பில் சிக்கிய நான்கு நாடோடிகளின் கதையே இந்நாவல். குமார், ரவி, மொய்தீன், நெல்சன் இவர்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கை பிடிக்காமலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ வீட்டைவிட்டு வெளியேறி நாடோடிகளாகச் சுற்றுபவர்கள். ஆந்திர மாநிலம் குண்டூரில் கடையில் வேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட நட்பு. ஒருநாள் திடீரென சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் என்ன காரணம் எனத் தெரியாமலே லாக்கப்பில் அடைக்கப் படுகிறார்கள். அங்கு இவர்களுக்கு ஒரு வேலை உணவுதான், ஒரு முறைதான் கழிப்பிடம் செல்லவும் அனுமதி. அந்த லாக்கப்பிலேயே தான் ஒரு மூலையில் சிறுநீர் கழிப்பார்கள். அந்த சிறுநீரின் முடை நாற்றத்திலும், வியர்வை நாற்றத்திலும் தான் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
லாக்கப்பில் குறைந்த பட்சம் கைதிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சுதந்திரம், உரிமைகள், இறையாண்மை இவற்றில் எதுவுமே அவைகளுக்குக் கிடைக்கவில்லை.
இவர்கள் அந்த லாக்கப்பில் காரணமே கூரப்படாமல் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். மெல்லத்தான் தெரிய வந்தது இவர்கள் ஒரு கடையில் திருடியதாகச் சந்தேகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்று. ஆனால் உண்மையில் இவர்கள் திருடவில்லை. போலீசார் விசாரணை என்ற பெயரில் இவர்கள் குற்றம் செய்தார்களா என விசாரிக்காமல் போலீசார் சொல்லும் திருடிய குற்றத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி இவர்களை லட்டியால் கடுமையாகப் பாதங்களிலும், உடல் முழுவதும் பட்டை பட்டையாக வீங்கிப்போகும் அளவிற்கு அடித்து சித்ரவதை செய்கிறார்கள்.
குமாரின் உரிமைக் குரல்
இந்நாவல் முழுவதும் குமாரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கும். லாக்கப்பில் இருந்த மற்ற கைதிகள் இவர்களிடம் போலீசார் கேட்கிற எதையாவது ஒப்புக்கொண்டு விடுங்கள் இல்லையேல் அவர்கள் உங்களை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்றனர். ஆனால் குமார் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூடாது என உறுதியாக இருந்தான். பல நாட்களாக வெளியிலும் விடாமல், கோர்டுக்கும் அனுப்பாமல் வைத்திருந்தனர். இதற்கு முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்று குமாரும் மற்றவர்களும் ஒன்று வெளியில் விடவேண்டும் இல்லையேல் கோர்டுக்கு அனுப்பவேண்டும் என உண்ணாவிரதம் இருப்பது என முடிவுக்கு வந்தனர். இப்படி சிறையிலும் உரிமைகளுக்காக தன்னால் முடிந்த எதிர்ப்பைக் காட்டினர். குமார் தான் மற்ற மூவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தான்.
அவர்களைத் தனித்தனியே பிரித்து வேறு வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று காவல்துறையினர் சூழ்ச்சி செய்து மிரட்டியதில் மற்றவர்கள் காவல்துறை சொன்னதை ஒப்புக்கொண்டனர். ஆனால் குமார் இறுதிவரை உறுதியாக இருந்தான் ஒப்புக் கொள்வதில்லை என. கடைசியில் குமாருக்கும் ஒரு சிறிய வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பினர். குமார் கோர்ட்டு விசாரணையின்போது தனக்குநடந்த அநீதிகளைச் சட்டையைக் கழட்டி அம்பலப்படுத்தினான்.
இப்படி உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் காவல்துறையின் எதேச்சதிகார போக்கும், அதிகார துஷ்பிரயோகமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பாதிக்கப் படுவது சாமானியர்களே தவிர அதிகாரம், பணபலம், சமூக பின்புலங்கள் உள்ள ஒருவரும் இல்லை என்பதே நிதர்சனம். இந்நாவலைத் தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ திரைப்படம் பல விருதுகளைக் குவித்துள்ளது.
புத்தகத்தின் பெயர் – லாக்கப்-சாமானியனின் குறிப்புகள்
ஆசிரியர் – மு.சந்திரகுமார்
பதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்-145
விலை – ₹140