ஆவாரம் பூ, தமிழில் வந்த படத்தைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். அதையும் பரதன் தான் இயக்கினார். நல்ல படம். ஆனால் அதைக் காட்டிலும் காட்டமாக அதற்கு முன்பு  தகர என்கிற பெயரில் மலையாளத்தில் வந்த படத்தையும் பரதன் தான் இயக்கினார். அந்தப் படத்தைப் பற்றி யோசிக்கும்போது  பத்மராஜனை விட்டுவிட நுடியாது. பத்மராஜனை சொல்லும்போது தகர படத்தை விட்டுவிட்டு சொல்ல முடியாது . ஏனென்றால் அப்படத்தில் அவர் அந்த அளவிற்கு கவனிக்கப்பட்டார். அவருடைய எழுத்து அந்த மாதிரி இருந்தது.

வழக்கமான ஒரு எழுத்தாளர் சினிமாவிற்கு எழுத முடியாது. அப்படி எழுதினால் அதில் சினிமா வராது. பத்மராஜன் மனதினால் ஒரு சினிமா ஆளாக இருக்கவே அவரது படைப்புகள் சினிமாவாக மாறும்போது அது இலக்கியமாக இல்லாமல் சினிமாவாகவே இருந்தது. இலக்கியத்தை விழுங்கி செரித்து இன்னமும் தன்னை வலு கூட்டிக் கொண்டு அது தனது முத்திரையை பதித்தது.  

Thakara Movie Clip 2 | Nedumudi intro - YouTube

ஆவாரம்பூ படத்தில் கதாநாயகனுக்கு ஒரு முன்கதை சொல்லப்படும். அப்படி பார்க்கும்போது அவன் சிறுவனாகவே இருந்தபோது தாயைப் பறிகொடுத்தவன். ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே என்று இளையராஜாவின் குரல் உயரும் அந்த தருணங்கள் ஞாபகம் இருக்கிறதல்லவா? அனாதையாக வளருகிறான் என்று சொல்லலாம். ஊருக்கே பிள்ளையாக வளருகிறான் என்று சொல்லலாம். எடுப்பார் கைப் பிள்ளையாக வளர்ந்து விட்டான் என்றும் சொல்லலாம். புகைவண்டிப் பாலத்துக்கு கீழே அவனது இரவுப் படுக்கை இருக்கிறது. ஓடுகிற புகைவண்டி சப்தம் கேட்டு விழித்தால், அந்தப் புகைவண்டி போன பிறகு தண்டவாளத்தில் புகைவண்டி போலவே ஊதிக் கொண்டு ஓடுவது வழக்கம். ஒரு குடும்பம் இருந்து வளர்த்துக் கொண்டு வந்ததில் செதுக்கப்படக் கூடிய வாய்ப்பை இழந்தவன். அதனாளாயே சூதும் தந்திரமும் சுயநலமும் இல்லை. இவைகளில் புழங்காத ஒருவன் குழந்தையாக தானே இருக்க முடியும்?

முழுமையாக மனதினால் வளராத குழந்தையை போன்ற தகர என்கிற வாலிபனின் வாழ்க்கைக் கதையை சொல்ல முயன்றாரா பத்மராஜன்?

குறைந்தபட்ஷம் அவனுக்கு வந்துவிட்ட காதல் கதையை?

இரண்டுமே இல்லை.

உலகம் தெரியாது வளர்ந்து விட்ட ஒருவன் தனது பாலியல் கூறை கண்டு கொள்கிற பருவத்தை படம் சொல்லுகிறது. அதற்கான தீர்வை அவன் அடைவதை சொல்கிறது. இயற்கையாக அவன் இருக்கக் கூடிய சூழல்கள் அவனை எப்படி அதற்கு செலுத்துகின்றன என்பதை நாம் பார்க்க முடியும்.

Thakara (1979) Malayalam Full Movie - YouTube

சுபாஷினி மூப்பனின் மகள். உழைப்பாளியான மூப்பன் எவ்வளவு கரடுமுரடானவனோ அங்கே விளையக் கூடிய செழிப்பில் கட்டுமஸ்தாக ததும்பி வழிந்து கொண்டு சுதந்திரத்தில் திளைக்கிற ஒரு காட்டு குதிரையைப் போலிருக்கிறாள் அவள். தகர அவ்வீட்டில் மூப்பன் போஷிக்கிற பொலிக் காளையை பராமரிக்க வந்து கிட்டுவதை மூக்குமுட்ட சாப்பிடுவான். சுபாஷினி கேலியும் கிண்டலுமாக அவனை சீண்டினாலும் பொறுப்பாகவே பார்த்துக் கொள்கிறாள் என்பதில் சந்தேகமில்லை.  கதை ஒன்றைத்தான் சொல்ல வருகிறது. அவனுக்கு அருகே இருந்தவாறு வளர்ந்த பொக்கிஷம் போன்ற பேரழகின் வனப்பை அவன் கவனிக்கவே இல்லை. 

தமிழில் கவுண்டமணி செய்திருந்த செல்லப்பன் ஆசாரி பாத்திரத்தை மலையாளத்தில் நெடுமுடி செய்திருந்தார். ஊமைக் காமம் நிரம்பிய ஒரு நடுத்தர வயதினன். கோபித்துக் கொண்டு போன மனைவியை திரும்ப அழைக்க முடியாமல் அவள் எங்கே போய் விடுவாள், திரும்ப வந்து விடுவாள் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிற அவனுக்கு சுபாஷினி போன்ற அசுர வடிவை மோகிக்காமல்  முடியுமா? அவன் கொஞ்சம் மரத்தூள்களையும், கட்டை துண்டுகளையும் கொடுத்து விட்டால் தன்னோடு படுத்து விடுவாள் என்று மயங்கி, அவளிடம் வம்பு செய்து மூப்பனிடம் சரியான அடி வாங்கி முடிக்கிறான். அவனது சிஷ்யப் பிள்ளையும் அவமானப்படுகிறான்.  மெல்ல இருவருக்கும் தகர ஒரு அதிர்ஷ்டசாலியாக பட்டுவிடுகிறது. எப்போதும் அவளோடு இருக்கிறவன் !  

செல்லப்பன் ஆசாரி , சிஷ்யப் பயல், தகர மூவருக்குமே குஷாலான ஒரு உறவு இருக்கிறது. தகர, ஆசாரிக்கு எடுப்பு வேலை செய்வதுண்டு.  பாதியில் போட்டுவிட்டுப் போய் விடுவதும் உண்டு. ஆற்றில் எருமைமாடுகள் போல ஊறிக் கொண்டு கிடந்து என்னடா என்று கிளுகிளுக்கிறார்கள்.  ஆசாரி கிசுகிசுப்பாக ஒன்றை கேட்டு தகரயை வெட்கம் கொள்ள வைக்கிறான். வேறென்ன கேட்டிருக்கப் போகிறான், அவளோடு படுத்திருக்கிறாயா என்பதைத் தவிர.  அடுத்தது தொடருமல்லவா? இந்த பூலோகத்தில் சுபாஷினியைப் போல ஒரு பெண்ணில்லை என்று முழங்குகிறான் ஆசாரி.  அது உண்மைதான் என்று தகர நேரில் கண்டு அறிகிறான். வசந்தம் பூத்து நிற்கிற இளவெயிலின் கனிமரமல்லவா அவள்? அவளது ஒவ்வொரு அசைவிலும் அவன் திகைக்கிறான். பொங்கி வருகின்ற புதுவெள்ளம் போன்ற அவளது இளமை அவனுக்கு மூச்சிரைப்பைக் கொண்டு வருகிறது. தொடுகிறான் !

ഇംഗ്ലീഷ് ചുവയുള്ള മലയാളം ...

சுபாஷினி  அவளை நெருக்கப் பார்க்கிற எவ்வளவோ ஆண்களால் தன் உள்ளே உள்ளது என்ன என்பதை அறியாமல் இருந்திருக்க மாட்டாள். அவளோடு அவள் அம்மா இல்லை. வப்பாட்டி வீட்டில் குடித்துக் கொண்டு சௌகர்யமாக இருந்த மூப்பன் கூட வாழாமல் நகர்ந்து கொண்ட அவள் எதிர்க்கரையில் இருக்க, இவள் கட்டுப்படுத்தப்பட முடியாத தனிமையில் ஒரு வெல்ல முடியாத மகாராணியாக நீடிக்கிறவள். அவளுக்குள் காமத்தின் ரீங்காரம் இருந்தவாறே இருக்கும் என்பது இயற்கையின் சட்டம். யாரோ அழைத்துக் கொண்டு வந்த பசுவை காளை அணையும்போது அவளுக்கு கற்பனைககள் பெருகுவதை திரைக்கதை சொல்லுகிறது. தகர அவளை கவனிக்கவில்லை, அவளுக்கும் அவனை கவனிக்க காரணமில்லை. ஒருநாள் வழக்கமில்லாத புதிய தினுசில் ஒரு ஆணின் பார்வையை நேரிட்ட கணத்தில் ஓரிருமுறை பின் வாங்கினாலும், அதட்டுவது போல இருந்து கொண்டாலும் இறுதியில் தொட்டவனை அவள் கட்டிக் கொள்ளவே செய்கிறாள்.

அந்த உறவு இனிமையாக தொடர்கிறது.

தனிமையும் வயதும் சுற்றிலும் இருப்பவர்களின் பாலியல் துருத்தலும் எல்லாமே இயற்கையின் கண்ணிகள் தான். அது யாரோ ஒரு ஆணையும், யாரோ ஒரு பெண்ணையும் ஜோடி சேர்க்கிறது. அதில் மனிதனின் பொறுப்பு இல்லையா என்று கேட்டால் அது இனிமேல் தான் வருகிறது. இதுவரை அவன் பேணின ஒழுங்குகளுக்குள் அவன் பேதம் துழாவுகிறான். அவன் கட்டிக்காக்க வேண்டிய அவனது சமூகம் அவனை ஒரு அடுக்கில் வைத்திருக்கிறது. அது அவனை தனது தகுதி பார்க்க சொல்லுகிறது. என்ன தான் கடைசி அடுக்கில் இருக்கிற சாதாரண மனிதன் என்றாலும் மூப்பனுக்கு, யாராரும் இல்லாத மூளை வளர்ச்சியில்லாத ஒரு எடுபிடிக்காரனான தகர ஒரு மருமகனாக ஏற்றுக் கொள்ளக்கூடியவன் தானா? இயற்கை தான் இருக்கிற அளவிற்கு பெருந்தன்மையுடன் மனிதனைப் படைக்கவில்லை. இதுதான் படத்தின் மற்றொரு பகுதி.  என்றோ ஒருநாள் மற்ற யாராலுமே இது நடந்திருக்கக் கூடும், என்றாலும் ஆசாரி என்கிற வெறும் ஒரு பொறாமைக்காரன் கொண்ட வயிற்றெரிச்சலால், தகர மூப்பனால் ரத்தக் களரியாக்கபபட்டு வீசப்படுகிறான்.

காணாமல் போகிறான்.

உண்மையில் தகர அந்தப் பெண்ணை ஆட்கொள்ள முடியாதிருந்தானா? அன்பு செலுத்தாதிருந்தானா? உழைக்க முடியாத சோம்பேறியாக இருந்தானா? பொறுப்பற்று போகிறவனாக இருந்தானா. எதுவுமில்லை.  ஆனால் இவை எவையும் கல்யாணம் செய்கிற ஆண்களுக்கான யோக்கியதைகள் இல்லை. அவன் கள்ளம் கபடம் சூது வாது இல்லாமல் இருக்கிறான் என்பதுவே மக்களுக்கு ஒரு கோணத்தில் அவன் வேலைக்கு ஆக மாட்டான் என்கிற படிப்பினையை சொல்லுவதாக இருந்து விடுகிறது. அவ்வளவு துரோகித்த ஆசாரியையும், சிஷ்யனையும் இப்போதும் கூட, கண்டதும் அணைத்துக் கொள்கிறான் தகர. அவனுக்கு எந்த விரோதமும் இல்லை. அவர்களோடு குதுகூலிக்கிறான். நான்தான் உன்னை மூப்பனிடம் போட்டுக் கொடுத்தேன் என்று ஆசாரியால் தகரயின் முகம் நோக்கி சொல்ல முடிகிறது. அவன் அதில் காழ்ப்பு கொள்ளவில்லை.  ஆனால் தன்னைக் கண்டம் பண்ணின மூப்பனிடம் பகையிருக்கிறது. நான் அக்கரைக்கு வருவேன் என்கிறான். மூப்பனைக் குத்திக் கொன்று விட்டு சுபாஷினியை கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறான். இக்கரைக்கு வராதே என்று மனிதர்களை புரிந்து, பயந்து சொல்லுகிற ஆசாரியின் குரலோ, சிஷ்யனின் குரலோ அவனுக்குள் நுழையவில்லை.

ഇംഗ്ലീഷ് ചുവയുള്ള മലയാളം ...

பிச்சுவா வாங்குகிற காசு சேர்ந்தவுடன் அதை வாங்கிக் கொண்டு அங்கே நான் வருவேன் !

சுபாஷினியும் வெட்டுப்பட்டவள் போல தான் இருக்கிறாள்.

எப்போதும் சண்டைப் பிடித்துக் கொண்டிருந்த மூப்பனின் வைப்பாட்டி வந்து ஆறுதல் சொல்லும்போது, அது கூட அவளுக்கு தேவையாக இருக்கிறது.   

சொல்லப்போனால் அவளது கண்ணீருடன் கூடிய விசாரிப்பு ஆசாரியை தளர்த்துகிறது. அவனுக்குள் இருக்கிற ஒரு மனிதன் கண் விழிக்கிறான். அதனால் தான் அவன் தகரையை தேடிக்கொண்டு போனான். அவள் அவன் இங்கே வந்து விட்டால் இருக்கக் கூடிய அபாயங்களை அறியாதவள் இல்லை. அவன் வர வேண்டாம் என்று தான் அவள் சொல்லுகிறாள். ஒருவேளை அவன் வரமாட்டான் என்று தான் நம்புகிறாள். அந்த அத்தியாயம் முடிந்து விட்டது என்கிற சோர்வு மட்டுமே மிஞ்சுகிறது. 

ஆனால் தகர வருகிறான்.

கடல் மணலில் தான் வாங்கி வந்து பிச்சுவாவைக் குத்திக் கொண்டு அமர்ந்திருப்பதை, அவன் வெறி கொண்டிருப்பதை நூறு ஜனம் பார்க்கிறது. மூப்பன் தானாக அந்த இடத்துக்குப் போகிறார். குத்துடா குத்து என்றவாறு அவனை அறைந்து தள்ளியவாறு இருக்கிறார். அவன் குத்தி விடுவேன் என்பதை சொல்லி வீரிட்டவாறு இருப்பதை அவர் லட்சியம் பண்ணவில்லை. உன்னைப் போன்ற ஒரு ஈனப்பயல் என்னைக் குத்தி விட முடியுமா என்கிற அகம்பாவம் அவரை சாவை நோக்கி உந்துகிறது.

அவன் குத்துகிறான். ஒருமுறை, இரண்டு முறை அல்ல . குத்தத் துவங்கியதை அவனால் நிறுத்தவே முடியவில்லை.

Thakara (1979) | Thakara Malayalam Movie | Movie Reviews ...

சூழுகிற ஜனங்களை கத்தி காட்டி விரட்டி அவன் ஓடிவருவது சுபாஷினியைப் பார்ப்பதற்கு தான். அவளும் அவனது கத்தியோடு கூடிய வருகைக்கு அஞ்சி வீட்டுக்கு ஓடுகிறாள். விரட்டி வந்த கூட்டம் நடந்ததை சொல்லிக் கூச்சலிடுகிறது. அவள் உறைந்து நிற்கும் போது அசாதாரணமான மூச்சிரைப்புடன் தகர உன் அப்பனை கொன்று விட்டேன், வா போகலாம் என்று புதிய வாழ்க்கைக்கு அழைக்கிறான்.

தந்தையைக் கொன்றவனுடன் வாழப் போவது எப்படி?

நாம் காணும் இந்த உலகிற்கு நியதிகள் உண்டு. அவை சரியோ தவறோ, நிலையானதோ மாற்றம் கொள்ளக் கூடியதோ அவைகள் தான் அனைவரும் வாழ்வதற்கான சமநிலைகளை பேணக் கூடியவை. அந்த கோணத்தில் அதற்கு மாறுபட்டவர்களை விலக்கி நிறுத்துவதற்கான முகாந்திரங்கள் இயல்பாகவே அதன் செயற்பாடுகளில் உள்ளன. எப்போதும் அது மெஜாரிட்டியின் வலிமையோடு கூடிய ஆங்காரத்தை வெளிப்படுத்தும். கூட்டத்துக்கு நடுவே இருக்கிற எந்த ஒரு மனிதனும் மிருகத்திற்கு சமம். அவனால் அல்லது அவர்களால் தனித்துவம் கொண்ட பிறிதொன்றை சகித்துக் கொள்ளவே முடியாது.  பிசகி போனால் எந்த தனி மனித மனசையும் அவர்களால் வேட்டையாட முடியும்.

ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தகர,  அவன் வழக்கமாக ஓடும் தண்டவாளத்தில் தான் ஓடுகிறான். இந்த முறை அவனுக்கு எதிரே புகைவண்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *