wrapper of the book containing an image of Lenin“உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” – லெனின் (மார்ச் 1913)
என்ன ஒரு நம்பிக்கையான வரிகள். இது ஏதோ வெற்று முழக்கமல்ல என்பதை லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி அடுத்த ஐந்தாண்டில் நிரூபித்து காட்டியது.
“வாய்ச்சவடால் அடித்து அவற்றை (நெருக்கடியை) அகற்றிவிட நடக்கிறமுயற்சிகள் போல் தீங்கிழைக்கும் கோட்பாடற்ற செய்கை வேறெதுவுமில்லை” என்கிறார் லெனின். ஆகவே தான் லெனினின் வார்த்தைகள் வாய்ச்சவடாலாக இல்லாமல் மார்க்சியத்தை அடிப்படையாக கொண்ட செயலுக்கான வழிகாட்டியாக அமைந்தது.
இதைத்தான், மார்க்சியம் என்பது “செயலுக்கான வழிகாட்டியே தவிர வறட்டு சூத்திரம் அல்ல” என்கிறார் ஏங்கல்ஸ்.
அத்தகைய மார்க்சியத்தின் அடிப்படைகளை மிக சிறப்பாக, எளிய நடையிலான மாமேதை லெனினின் எழுத்தே “மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்” என்கிற இப்புத்தககம்.
குறிப்பாக மார்க்ஸ் பற்றிய சிறிய வாழ்க்கை குறிப்புடன் மார்க்சியத்தின் அடிப்படைகளை லெனின் விளக்கும் பகுதி கவனிக்கத்தக்கது. மார்க்சிய போதனை என்று துவங்கும் பகுதியில் இயக்கவியல் பற்றியும், பொருள்முதல்வாதம் பற்றியும், வரலாற்று பொருள்முதல்வாதம் பற்றியும், வர்க்கப்போராட்டம் பற்றியும் சுருக்கமாக அதேநேரம் எளிமையாகவும், நேர்த்தியாகவும் விளக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மார்க்சியத்தின் பொருளாதார போதனைகள் என்ற பகுதியில் மதிப்பு, உபரி மதிப்பு, வர்க்கப்போராட்டம் பற்றிய எளிய குறிப்புகள், விருப்பத்தோடு மார்க்சியத்தை பயில நினைப்போருக்கு நிச்சயம் உதவும்.
கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி தனது வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும், தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவிற்காக (உழைப்பாளிக்கு கிடைக்கும் கூலி) உழைப்பதில் கழிக்கிறான். மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்பு தான் லாபத்திற்கு தோற்றுவாய். அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்திற்கு தோற்றுவாய்.” என்று உபரி மதிப்பு பற்றி எளிமையாக விவரிக்கிறார் லெனின்.
மய்யம், நடு சென்டர், நடுநிலையாளர்கள் என்றெல்லாம் பல அவதாரங்கள் தற்போது அதிகமாகவே காணக்கிடைக்கிறது.
“நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் செயல்பாடுகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டறிய மக்கள் தெரிந்து கொள்ளாத வரை அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும், தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வோராகவுமே இருப்பார்கள்” “வர்க்கமற்ற சோஷலிசம், வர்க்கமல்லாத அரசியல் இவை குறித்த எல்லாத் தத்துவங்களும் அப்பட்டமான அபத்தமே” என்கிறார் லெனின்.
#மார்க்சியம் பற்றி மட்டுமல்ல, மார்க்ஸ் வாழ்க்கை பற்றிய லெனினின் குறிப்பும் பல முக்கியமான அவதானிப்புகளை முன்வைத்துள்ளது.
“மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். ஏங்கல்ஸ் மட்டும் தன்னல மறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார்” என்று குறிப்பிடுகிறார் லெனின்.
சாதாரண விமர்சனங்களை கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பக்குவமற்று போய்விடுகிறோம் நாம். “சில சமயங்களில் தமக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும் அவர் (மார்க்ஸ்) முறியடிக்க வேண்டியிருந்தது” எனப் பதிவு செய்கிறார் லெனின்.
பொதுவாகவே வாசிப்பு நம்மை மேம்படுத்துவதோடு, களப்பணியாற்ற ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். அதிலும் மார்க்சிய தத்துவம் குறித்த புத்தகங்களும், ரஷ்ய இலக்கியங்களும் நமக்கான உத்வேகத்தையும், சிந்தனை தெளிவையும் பலமடங்கு உயர்த்தும். அத்தகைய சிறந்த புத்தகமாகவே “மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்” என்கிற லெனினின் இப்புத்தகம் திகழ்கிறது.
நூல்: மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்
ஆசிரியர்: V.I. லெனின்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018
பக்கம் : 96 – விலை : ரூ.80/-
தொலைபேசி: 044 – 24332924
 

[button link=”https://thamizhbooks.com/marxiyathin-varalaatru-valarchiyin-sirappiyalbugal.html”]  புத்தகத்தை இங்கு வாங்கலாம்[/button]

 
நன்றி: தீக்கதிர் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *