Modi's hypocrisy at the G7 conference Peoples Democracy Editorial Tamil Translation by Veeramani. Book day is Branch of Bharathi Puthakalayam



பிரதமர் நரேந்திர மோடி, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதிலும், பாசாங்குத்தனமான தோரணையை வெளிப்படுத்துவதிலும் அசாத்தியமான திறமையைப் பெற்றிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அப்படியிருந்தும்கூட, இங்கிலாந்திற்குத் தென்மேற்கில் உள்ள கோர்ன்வாலில் நடைபெற்ற ஜி.7 என்னும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உச்சி மாநாட்டில் அவருடைய பாசாங்குத்தனம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த மாநாட்டின் சார்பாக “வெளிப்படையான சமூகங்கள்” (“open societies”) என்ற அமர்வில் விருந்தினர் நாடுகளாக (guest countries) ஆப்ரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் அழைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாட்டில்தான் “இந்தியாவின் நாகரிகம் ஜனநாயகம் (democracy), சிந்தனைச் சுதந்திரம் (freedom of thought) மற்றும் சுதந்திரம் (liberty) ஆகியவற்ளை அளிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக” பிரதமர் மோடி பிரகடனம் செய்திருக்கிறார். மேலும் “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு” என்ற முறையில் “இந்தியா ஜி.7 நாடுகளின் இயற்கையான கூட்டாளி” என்றும், “எதேச்சாதிகாரம்” போன்ற தீங்குகளிலிருந்து விளைந்திடும் அச்சுறுத்தல்களிலிருந்து அவற்றின் விழுமியங்களைப் பாதுகாத்திடும் விருந்தினர் பங்காளிகள் (guest partners) என்றும் பிரகடனம் செய்திருக்கிறார். தற்போது உலகின் மிகப் பெரிய எதேச்சாதிகார ஆட்சியாளராக இருந்திடும் ஒருவர்தான், கிஞ்சிற்றும் தயக்கம் எதுவுமின்றி, இவ்வாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பின்னர் இந்த வெளிப்படையான சமூகங்கள் அமர்வானது ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை இணையம் வழியிலும் அல்லாமலும் இருக்கின்ற அனைவருக்குமான மனித உரிமைகள் (“human rights for all both online and offline) குறித்தும், அமைதியான முறையில் கூடுவதற்கும், அமைப்பை உருவாக்குவதற்கும், இணைந்துகொள்வதற்குமான உரிமை ஆகியவற்றைக்குறித்தும் பேசுகிறது. இந்த அறிக்கையில் பிரதமர் மோடியும் கையெழுத்திட்டிருக் கிறார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது; “நாம், “அதிகரித்துவரும் எதேச்சாதிகாரம்”, “மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மோசடிகள்” மற்றும் “அரசியல்ரீதியாகத் தூண்டிவிடப்பட்டு மூடப்படும் இணையத் தொடர்புகள்” (“politically motivated internet shutdowns”) போன்ற பல்வேறு முனைகளிலிருந்தும் நம் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் (democracy) அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்துவருகிறோம்.

இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிற அச்சுறுத்தல்கள் குறித்தும், ஜனநாயகத்தின் மாண்புகள் குறித்தும் கூறுவதற்கு மோடி அரசாங்கத்திடம் மோசமான மற்றும் இருண்ட பகுதிகளே இருக்கின்றன். எண்ணற்றோரைத் தடுப்புக் காவலில் அடைத்து வைத்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியை நடத்தும் அதே சமயத்தில் “சிந்தனைத் சுதந்திரம்” குறித்தும், சுதந்திரம் குறித்தும் அம்மாநாட்டில் தம்பட்டம் அடித்திருக்கிறார்.

அதிகாரபூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2015க்கும் 2019க்கும் இடையே கடந்த ஐந்தாண்டுகளில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் 5,128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019இல் இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தேசத்துரோகக் குற்றப் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை 229ஆக இக்காலத்தில் உயர்ந்திருக்கிறது. இது 2020இலும் பின்னர் 2021இல் கடந்த முதல் ஐந்து மாதங்களிலும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கிறது.

தில்லி உயர்நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு பிணை உத்தரவு பிறப்பிக்கையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பாகக் கடும் வார்த்தைகளில் விமர்சனங்கள் செய்தபின்னரும், அரசாங்கம் தன் கடுமையைத் தணித்துக்கொள்ள மறுக்கிறது. இவ்வாறு தில்லி உயர்நீதிமன்றம் மாணவர்களைப் பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிடும் தில்லிக் காவல்துறை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

“இணைய சுதந்திரம்” (“on line freedom”) மற்றும் “இணையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவைத்தல்” (“internet shutdowns”) ஆகியவற்றைப் பொறுத்தவரையில், உலகம் முழுவதும் இணையத்தின் செயல்பாடுகள் இதுவரையிலும் 155 தடவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் 109 தடவைகள் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்த நிறுத்திவைப்பில் 70 சதவீதம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. எனினும், மோடி “இணையத்தின் செயல்பாடுகள் அரசியல்ரீதியாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன” என்றும், இது சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் (democracy) ஓர் அச்சுறுத்தல் என்றும் ஜி7 மாநாட்டில் மிகவும் குதூகலத்துடன் பேசியிருக்கிறார்.

ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை, எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் (Reporters Without Borders) கூற்றின்படி, இந்தியா உலகின் ஊடக சுதந்திர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 180 நாடுகளில் 142ஆவது இடத்தை வகிக்கிறது. புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules), அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பது கிரிமினல் குற்றம் என்கிறது, குடிமக்களின் அந்தரங்க உரிமைகளை மீறுகிறது மற்றும் சுய-தணிக்கை (self-censorship)யை ஊக்குவிக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் அனைத்து செய்தி ஊடகங்களும், இணையதளங்களும் இப்போது அரசின் ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டிற்குள்ளும் தணிக்கைக்குள்ளும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்து குண்டர்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள் மற்றும் வன்முறை வெளியாட்டங்கள் எதுவும் இவற்றின்கீழ் கொண்டுவரப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை.

“வெளிப்படை சமூகங்கள் அறிக்கையில்” கூறப்பட்டுள்ள தரநிர்ணயங்களின்படி எதேச்சாதிகார மோடி அரசாங்கம், சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான ஓர் அச்சுறுத்தல் என அடையாளம் காட்டப்பட வேண்டும்.

ஜி.7 எனப்படும் பணக்காரர்களின் மன்றம் (richmen’s club), பிரதமர் மோடியின் வாய்ச்சவடால்களைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்திருக்க வேண்டும். ஏனெனில் ஜி7 உச்சிமாநாட்டின் கவனம் சீனா என்பதாகும். ஜி.7இல் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களாலும் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது சீனா குறித்துப் பல்வேறு விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உருவானதே சீனாவில்தான் என்றும், நியாயமற்ற சந்தையல்லாத கொள்கைகளை (unfair non-market policies) அது கடைப்பிடிப்பதாகவும், மனித உரிமைகளுக்கு அங்கே மதிப்பில்லை என்றும், அதன் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் ராணுவ வலுவை எதிர்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் பல்வேறு வகைகளில் விமர்சனங்களைச் செய்திருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் மோடியை அவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஆனாலும் அவர், அமெரிக்கா தலைமை வகித்திடும் மேற்கத்திய கூட்டணியின் இளைய பங்காளியாகத்தான் அவர்களால் வரவேற்கப்பட்டிருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளின் கண்களுக்கு, இந்தியாவில் அரசியல் கைதிகள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது, ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது, இணையதளம் முடக்கப்படுவது போன்றவை எல்லாம் அற்ப விஷயங்களாகத் தெரிகின்றன.

மோடி, ஜி.7 நாடுகளின் மாநாட்டில் ஓர் ஓரத்தில் அமர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதற்காக, பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஜி.7 நாடுகள் என்பவை ஏகாதிபத்திய பணக்கார நாடுகளின் மன்றம் (club) என்பதுதான் இன்றைக்கும் எதார்த்த உண்மையாகும். இங்கே நடைபெற்ற உச்சிமாநாட்டில் வளர்முக நாடுகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 100 கோடி தவணைகள் தடுப்பு மருந்துகள் (1 billion doses of vaccines) வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் இயங்கும் பல்வேறு சுகாதார மற்றும் குடிமை சமூகங்கள் தேவைப்படும் அளவில் இது ஒரு சிறு அளவேயாகும் என்று கூறியிருக்கின்றன. ஜி.7 நாடுகள் 1000 கோடி தவணைகள் தடுப்பு மருந்துகள் அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவைகளாகும். ஆனாலும், பணக்கார முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களுக்கு, கொள்ளை லாபம் ஈட்டுவதைவிட மக்களின் நலன்கள் முக்கியமானது அல்ல.

ஜி.7 உச்சி மாநாடும் அதனைத் தொடர்ந்து பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற நேட்டோ கூட்டணி நாடுகளின் கூட்டமும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டுமேயொழிய, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு அல்ல என்று மிகவும் தெளிவாகவே கூறியிருக்கின்றன.

(ஜூன் 17, 2021)

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (Peoples Democracy)
(தமிழில்: ச.வீரமணி)



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *