Nanotechnology (‘நேனோ‘ வித அறிவு) - Ayesha Era. Natarasan (ஆயிஷா. இரா. நடராசன்). Book Day is Branch of Bharathi Puthakalayam



21 ஆம் நூற்றாண்டின் அறிவியல் தொழில்நுட்பம் மனித உடலில் இருந்து மின்சாரம் எடுக்கும்… இரவில் சூரிய ஒளியை புவியில் தேவையானபோது படரவைக்கும் அறிவியலை அடையும். ஏனெனில் அது நேனோ அறிவியலாக இருக்கும் – மிக்சியோ காக்கூ, 1998 (இயற்பியல் அறிஞர்)

இருபத்தோறாம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. நமது தொடர்பு சொல் ‘அறிவியலே‘ இப்படி நான் இந்த கட்டுரையை தொடங்கும்போது நீங்கள் விநோதமாக பார்ப்பது இயல்புதான் நோம் சாம்ஸ்கி (அமெரிக்க மொழியியல் அறிஞர்) சொல்கிறார்.. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு தொடர்பு (பிரதான) சொல்லை மனித சமூக அடையாளமாக நாம் காணலாம். நோய்தொற்று…. பெட்ரோல் டீசல்விலை… ஜி.எஸ்.டி அது இது என்று இந்த நூற்றாண்டு அல்லோகல்லோ பட்டாலும் ‘அறிவியல்’ என்பதே இந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் கடவு சொல்லாக உள்ளது.

“இந்த நூற்றாண்டின் அறிவியல் இருவிதமாக செயல்படுகிறது” என்று அறிஞர் மார்க் பர்க்கர் (ஜாக் மார்பர்க்கர் -2009) கூறிப்பிடுவார். ஒன்று ஆர்வ மேலிட்டு அறிவியல் மற்றொன்று தேவை மேலீட்டு அறிவியல். ஆர்வ மேலீட்டு கண்டுபிடிப்பு உருவாக்கிய  தொலைநோக்கி (கலீலியோ) தேவை மேலிட்டு கண்பார்வை கண்ணாடி 4 லென்சுகளை  மேம்படுத்தியது ஒரு புரட்சி என்றால்  ஆர்வ அறிவியல் தொழில் புரட்சிக்கு வித்திட்டதா அல்லது தொழில் புரட்சி காரணமாக ஆர்வ அறிவியலில் அதிவேக மாற்றங்களை ஏற்பட்டதா என்று ஒரு விவாதம் இன்றும் தொடர்கிறது.

எது எப்படியோ இந்த 21ம் நூற்றாண்டின் பிரதான மனித பயன்பாட்டு கடவுச்சொல் அறிவியல் என்று ஏன் சொல்கிறோம் என்பதை நாம் சற்றே விரிவாக அலசவேண்டும். கைபேசி முக்கிய காரணம், அத்தோடு இன்னபிற உபயோகிப்பு அன்றாட சாதனங்கள், மாட்டு வண்டிகாரர் கூட ஜிபிஎஸ் பயன்படுத்திடும் விந்தையை ஜியோகிராஃபிகல் தொலைகாட்சி சானலில் பார்த்து வியந்தேன். நோய் பரவல் காலத்தில ரத்த ஆக்ஸிஜன் அளவு அறிய பலர் ஆக்ஸியோ பல்ஸ் மீட்டரை வீட்டிலியே வாங்கி வைத்தது வரை எல்லாமே கருவிமயம் ஆகிவிட்டது ஆன்லைன் கல்வி, இணைய ரயில் டிக்கெட், இ-மெயில் கடிதங்கள், செயற்கை கருத்தரிப்பு, திருப்பதி ஆன்லைன் தரிசனம் என்று வெளுத்து வாங்குகிறார்கள். அறிவியலே வெகுஜன கடவுச்சொல். ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டு அறிவியல் வாதிகளின் கடவுச்சொல் எது. அதுதான் நேனோ, நேனோ தொழில் நுட்பம். சாதாரண மக்கள் அறிவியல் அறிவியல் என பதறவேண்டுமானால் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் நேனோ நேனோ என்று துடிக்கவேண்டும்.

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of inventions)  என்பது உண்மைதான் என்றாலும் அந்தத் ‘தேவை’ மிக சரியாக எது என்பதை அடைவதே பெரிய சவாலாக இருக்கிறது. பிரெஞ்சு எல்லையில் ஜெனிவாவில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) விஞ்ஞானிகள்தான் www (World Wide Web)  எனும் இணையத்தைத் தொடங்கினார்கள். மாபெரும் ஹாட்ரான் மோதுவி எனும் பிரமாண்ட இயற்பியல் துகளியல் செய்களக் கருவி சார்ந்து 10,000 இயற்பியலாளர்களோடு உலக அளவில் தங்களது அன்றாட கணக்கீடுகள்  கண்டுபிடிப்புகளை பகிர்ந்திட அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. டிம்-பெர்னர்-லீ எனும் (டிம்பெல்) கணினிப் பொறியாளர் ஐ.எஸ்.டி எனப்படும் சர்வதேச டிரங்க் கால் தொலைபேசி அமைப்பை கணினிகளில் இணைத்து செர்வர் எனும் அமைப்பிற்கு அடிகோலினார். ஒரு சரியான கூரியர் சேவை –நேரடியாக –தந்தி சமிக்கை வழியே அதை மேலும் விலை குறைவாக செய்திருக்கமுடியும் என்று 1999ல் தணிக்கை குழு அவரை கண்டித்தது. இன்று அப்படி யாராவது சொன்னால் சிரிப்பார்கள் இணையப் புரட்சியே நேனோ புரட்சியின் முதல்படி என்பதை அப்போது பலரும் அறியவில்லை. 

Nanotechnology (‘நேனோ‘ வித அறிவு) - Ayesha Era. Natarasan (ஆயிஷா. இரா. நடராசன்). Book Day is Branch of Bharathi Puthakalayam

இன்னும் கூட தெளிவாக  நேனோவின் அருமையை நாம் அறியவேண்டுமெனில் இன்னொரு வழி இருக்கிறது. உங்களது ஸ்மார்ட்ஃபோன் எனும் கைபேசியில்  ஒரு காலத்தில் தனித்தனி கருவிகளாக இருந்த  புகைபட கருவி, வீடியோ ரெக்கார்டர், ஒளி பதிவுக் கருவி, தட்டச்சு கருவி, திசைகாட்டும் கருவி, டி.வி. ரேடியோ உட்பட 16 கருவிகள் அந்த குட்டி இடத்தில் அழகாக வாகாக அடைந்து கொண்டு அசத்துவது நேனோ தொழில்நுட்பம் எனும் புதிய அறிவியலால்தான். இன்று வகுப்பறை கூட ஆன்லைன் வகுப்பறை என்றான பிறகு இந்த 21 ம் நூற்றாண்டின் மனித வாழ்வை முழுமையாய் ஆக்கிரமித்து பலபடி நிலைகள் உயர்த்தபோகும் அறிவியலை அது இன்னது  என்று முழுமையாக அறியும் அவசியம் இருக்கிறது.

அது என்ன நேனோ தொழில் நுட்பம்? சாதாரண அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அணுக்கள் எவ்வளவு சிறியனவோ, மூலக்கூறு ஒன்றின் அளவு எத்தனை மிகமிக சிறிதோ அந்த அளவை அளவீடாக (Scale) கொண்டு அதற்குள் நுண்ணிய ‘பொருட்களை’ கண்டுபிடிப்புகளை, கருவிகளை உருவாக்க ஆய்வுகள் நடக்கும்துறையே நேனோவியல் ஆகும். நேனோ எனும் சொல் ஒரு அலகை குறிக்கும். 1960ல் நேனோ எனும் சொல் அறிமுகம் ஆனது. நேனஸ் என்பது லத்தின் மொழியில் குள்ள சாத்தான், சித்திர குள்ளன் என்ற அர்த்தத்தை குறிக்கும். ஆகச் சிறிய கண்ணுக்கே புலப்படாத அந்த அளவீட்டு உலகை புரிந்து கொள்வது எளிது. ஒரு நேனோ மீட்டர் என்பது ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு  பில்லியனாவது துகள். அதாவது  ஒரு பில்லியன் நேனோ மீட்டர்தான் ஒரு மீட்டர் ஹைட்ரஜன்  அணுவைவிட  பத்துமடங்கு விட்டம் . இதை புரிந்து கொள்ள இன்னொரு வகையில் முயற்சிப்போம். நமது தலைமுடியின் விட்டம் (அகலம்) எவ்வளவு. ரொம்ப குட்டிதான் அல்லவா. அது 80000 நேனோ மீட்டர்கள்‘!.

அந்த அளவிற்கு மிகமிகமிக சிறிதாக துகளாக்கப்பட்ட அளவில் வேதிப்பொருட்களை கையாளும்போது  இயற்பியல் வேதியியல் விதிகள்  அங்கே பொருந்துவதில்லை. தமிழில் சிலர் இதை மீநுண் தொழில்நுட்பம்  என்றும் அழைக்கிறார்கள். பெரிய பொருட்களை  கருவிகளை செய்ய இரும்பை பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த இரும்பை நேனோ துகள்களாக்கி துல்லியமாக அணு அளவிலும் மூலக்கூறு அளவிலும் தூளாக்கி  பிறகு கையாண்டு செய்தால் அதுவே நேனோ தொழிற்சாலை. ஒரு வேதிப்பொருளின் நிறம், பலம், மின்கடத்தல் திறன், கதிர் வீச்சு தன்மை என யாவுமே நேனோ அளவிலும் பொது அளவிலும் முற்றிலும் வேறுபடுகின்றன. உதாரணமாக கார்பன் நேனோ குழாய்கள் வார்ப்பிரும்பை விட 100 மடங்கு பலம் வாய்ந்தவை. ஆனால் ஆறுமடங்கு எடை குறைவானவை.

‘நேனோ தொழில் நுட்பம் ’ எனும் பதத்தை அறிமுகம் செய்தவர் எரிக் டிரெக்ஸ்லர். வருடம் 1986. ஆனால் இந்த யோசனை 1959ல் இயற்பியல் அறிஞர் ரிச்சர்டு ஃபைன்மனால் There is plenty of Room at the Bottom’ எனும் பிரபல அறிவியல் உரையில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பேருரையில் ரிச்சர்டு ஃபைன்மன் அணுக்களை அவற்றின் அதே அளவில் தனித்தெடுத்து கட்டுப்படுத்தி உருவாக்க முடிந்த பொருட் தொகுப்பின் சாத்தியங்கள் பற்றி விவரித்தார். ஆனால்     டிரெக்ஸ்லர் தனது ‘நேனோ தொழில்நுட்பயுகம்’ எனும் 1986 நூலில் ஃபைன்மனோடு ஜப்பானின் நோரியோ தானிகுச்சி எனும் அறிஞரின் பொறியியல் கோட்பாடுகாளை இணைத்தார். இந்த ‘நேனோ தொழில் நுட்பம்’ புத்தகம்தான் முதன்முதலில்  நேனோ அளவீடு அளவிற்கு முற்றிலும் தனித்தெடுக்கப்பட்ட நுண் துகள், அணுகட்டுப்பாட்டின் வழியே தன்னையும் உருவாக்கிக்கொண்டு பிறவற்றையும் புனையும் ஆற்றலை பெறுகிறது என அறிவித்தது. அது அற்புதமான திருப்புமுனை.

ஆனால் யாராலுமே கண்களால் காணமுடியாத அந்த நுண் உலகை புரிந்து செயலாற்றுவது எளிதாக இருக்கவில்லை. அதற்கான வழி 1981ல் பிறந்தது. ஊடுருவும் அலகீட்டு நேனோ நுண்நோக்கி.  சூரிச் ஆய்வகத்தின் (ஜெர்மனி)  ஜெர்டு பென்னிகு மற்றும் என்ரிச் உரோகிரர் ஆகியோர் அதை சாதித்தனர். 1986ல் இவர்களோடு குவேட் எனும் அறிஞரும் இணைந்து அணுவிசை நுண்ணோக்கியை கண்டுபிடிக்க  பிறந்தது நேனோ யுகம்.

நேனோ துகளாக்கி ஒரு கருவியை உருவாக்குவதால் என்ன பயன்? சொன்னால் நம்ப மாட்டீர்கள். உங்களது கைபேசி சாதாரண தனிமத்தால் சாதாரண முறைபடி உருவானால் முதலில் இத்தனை பயன்பாடுகளை  அடக்கமுடியாது. அப்படியே செய்தாலும் ஒரு மணிநேரம் நீங்கள் இழுக்கும் இழுப்பிற்கு (தடவும் தடவுக்கு) உங்கள் வீட்டு மின்சார பில்லை கட்ட வங்கியில் லோன் போடவேண்டி இருக்கும். நேனோ அளவுக்கு துகளான பிறகு ஆற்றல் மேம்பாடு உறுதி. அத்தோடு பயன்படுத்தும், செலவீனமாகும் ஆற்றலோ மிகமிக குறைவு. புகை இல்லாத சுற்று சூழலுக்கு உதவிடும் தொழில்நுட்பம் குறிப்பாக உடல்நலம் மற்றும் சுகாதார துறைக்கு நேனோ மிகமிக உதவியாக  பல காரியங்களை செய்கிறது. மிக குறைவான விலை, மிக அதிக உற்பத்தி. நேனோகருவிகள் சிறியவை, எடைகுறைவானவை இப்படி நேனோ ஆதரவாளர்கள் ஆடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

Nanotechnology (‘நேனோ‘ வித அறிவு) - Ayesha Era. Natarasan (ஆயிஷா. இரா. நடராசன்). Book Day is Branch of Bharathi Puthakalayam

குறிப்பாக சுகாதாரத்துறை, மருத்துவ உலகம் நேனோ தொழில் நுட்பம் நுழைந்த பிறகு முற்றிலும் மாறி இருக்கிறது. நேனோ ஒளிப்பட கருவிகளை ரத்த நாளங்களில் செலுத்தி புதுவகையான மருத்துவத்திற்கே வழிவகை செய்திருக்கிறார்கள். மலேரியா நுண்கிருமி ஒழிப்பில் 2005ல் பிரமாண்ட  சாதனை. இப்போது நேனோ தொழில்நுட்பம் மருத்துவ துறையோடு கைகோர்த்து  கோவிட் வைரஸை முற்றிலும் விவரித்து தடுப்பு முறைகளையும் முன்வைக்கிறது.உடலில் எந்த உள் உறுப்பில் பிரச்சனையோ அந்த உறுப்பிற்கு நேனோ மருந்து குறிப்புகளை  நேரடியாக அனுப்பி வைத்தியம் பார்க்கும் துரித – சிகிச்சை!  நாம் தையல்கடையில்  அர்ஜெண்டா ஆர்டினரியா என – தைத்த ஒரு காலம் இருந்தது அல்லவா. இப்போது நேனோ மருத்துவத்தில்  அதுதான் பேஷன். 

அரேபிய பாலைவனத்தில் தண்ணீரை மறுபடி மறுபடி பயன்படுத்த உதவும் நேனோ சுழற்சி இந்த பத்தாண்டுகளின் அற்புதம். முற்றிலும் நஞ்சான நீரைக்கூட  உயிர்ப்புடன் மீட்கும் நேனோ வடிகட்டிகள் வந்துவிட்டன. பல நாடுகளில் இன்று விவசாயத்திலும்  நேனோ புகுந்துவிட்டது. மிகசிறிய சென்சார்களை நிலங்களில் பயிர் மேல்தூவி எங்கோ பல மைல்  தொலைவிலிருந்து விளையும் அளவு பூச்சிகளின்  படையெடுப்பு என அறிந்து செயல்படும தொழில் நுட்பம் அது. கூடவே நேனோ உரங்கள் உணவுப்புரட்சிக்கு நடைபோடுகின்றன. உள்ளத்திலேயே அற்புதமானது உப்புமண் போன்ற விளைச்சலுக்கு முற்றிலும் தகுதியே இல்லாத மண்ணில் அல்லது நிலத்தடி நீர் வற்றிய சூழலில் மிகவும் வரண்ட பூமியில் நேனோ –அளவீட்டிற்கு  விளை பயிர்களின் மரபணுக்களை லேசாக உருமாறறம் செய்து காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி விளையும் பேராற்றலை சீனாவில் தரமுடிந்திருக்கிறது நேனோ உணவு என்றே தனிகலாச்சாரம் அங்கேயிருந்து கொரியா, தான்சானியா , ஜார்ஜியா (பனி) என விரிவடைந்தும் வருகிறது.

2004 வரை கடலில் எண்ணெய் கப்பல்கள் கவிழ்ந்தால் கடலில் அந்த பகுதியில் எப்படியான பேரழிவு ஏற்பட்டு வந்தது என்பதை நம்மால் நினைவு கூற முடியும். இன்று நிலமை அப்படி இல்லை. நேனோ துகள்கள் கடலில் சில மணி நேரங்களில் எண்ணெய் அகற்றி பழையபடி ஆக்கிவிடும் சூப்பர் வேக தொழில்நுட்பம் அறிமுகம் ஆகி உள்ளது. மணலில் இருந்து எண்ணெயை பிரித்து, பாறைகள், கடலின்நீர், பறவைகளின்  இறகுகள் என யாவற்றையும் சிலமணி நேரங்களில் பளிச்சென மாற்றிவிடுகிறது. ஹெலிகாப்டரில் இருந்தபடி நேனோதுகள் சுத்திகரிப்பான்களை தூவி அசத்துகிறார்கள்.

முப்பரிமான – உற்பத்தி (3D Production Technology)  தொழில்நுட்பம் இன்று நான்காவது தொழிற்புரட்சி என்று அழைக்கப்படுகிறது. விண்வெளிக்கு பொருட்களை கொண்டு செல்லும் செலவை நேனோ தொழில்நுட்பம் குறைத்துவிட்டது. சாதாரண கம்பிகள் முதல் பெரிய படகுகள் வரை தயாரிக்கிறார்கள். நேனோ தொழில்நுட்ப பயன்பாட்டின் கதாநாயக தனிமம் கார்பன்தான். கார்பன் நேனோ டியூப்களை நம் இந்தியாவில் பஞ்சாபின் மொஹாலியில் உற்பத்தி செய்கிறார்கள். இந்த கார்பன் நேனோ டியூப்கள் எடைகுறைவான வடிவமைக்க எளிதாக உள்ள, வெப்பத்தை மிககுறைவாக வெளிப்படுத்தும், மின்சாரத்தை அட்டகாசமாக கடத்தும், செயல்திறன் மிக்கவை. ஆயிரக்கணக்கான விதமாக பிற நேனோ தனிமங்களோடு கலந்து பல பொருட்களின் உற்பத்தியில் உதவக்கூடியது. நமது கைபேசிகள் போட்டோ வோல்டாயிக்வகை நேனோ வொயர்களை பயன்படுத்துகின்றன. அதனால் கைபேசி உள்ளே  இருக்கும் நேனோ வொயர்கள் (மின்கம்பி) வெளியே கூடதெரியாது. 

நோனோ உயிரிதொழில்நுட்பம் பற்றியும் பார்க்க வேண்டும். அடுத்த பத்தாண்டின் அறிவியலாக அதுவே மலர உள்ளது. மருத்துவத்துறையில் நேனோ அறிவியலின் பங்குகுறித்து தினமும் ஒரு ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகளாவது  வெளிவருகின்றன. புற்றுநோய் முதல் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ்வரை வீழ்த்திட நாம் நேனோ யுகத்திற்குள் மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறோம். 

  1. நோய் பாதித்த திசுக்களை குணப்படுத்தும்  தனிநோக்கத்தோடு கூட சிகிச்சை முறை
      (Drug  Trageting)  பக்கவிளைவுகளை முற்றிலும் நீக்குகிறது.
  2. சாதாரண மருந்துகளை விட அதிவீரியமிக்க ஆனால் குறைந்தஅளவு (mg)    
      எடுக்கத்தக்க நேனோ மாத்திரைகளை அறிமுகம் செய்கிறது.
  3. முற்றிலும் சிதைந்த உயிரிசெல்களை நேரில் உடலுக்கு உள்ளே பயணித்து நேனோ
      கருவிகள் செப்பனிட்டு தனித்து கவனம் செலுத்தி சரிசெய்யும் புதியமருத்துவம்.
  4. மரபணுக்களின் நேனோ ஆய்வு சந்ததி நோய்கள் அடுத்த சந்ததிக்கு பரவாமல் –
      நோய் கடத்தும்  டி.என்.ஏக்களை கண்டறிந்து மாற்றமுடியும். இப்படி
      பலவிந்தைகள்.

உலக அளவில் இன்று மூன்றில் இரண்டு பங்கு ஆய்வுஉதவிகள் ஆய்வு நேனோ தொழில் நுட்பத்திற்கே ஒதுக்கப்படுகின்றன.பிரிட்டிஷ் பாலிசி  ரிசர்ச் குழுமத்தின் மூத்த விஞ்ஞானி பால்மில்லர் கடந்த பத்தாண்டுகளில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இத்துறை  ஆய்வுகளுக்கு அரசுகள் ஒதுக்கியதாக கூறுகிறார். ஏறத்தாழ வளர்ச்சி அடைந்த மேற்கு உலகின் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த வருடாந்திர பட்ஜெட்டும் நேனோ – ஆராய்ச்சியை வைத்தே யோசிக்கப்படுகிறது.

மற்றபடி உலக அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தென்அமெரிக்கா, தாய்லாந்து என பலநாடுகள் நேனோ போட்டியின் உச்சத்தின் உள்ளன. டொராண்டோவின் பயோ எத்திக்ஸ் மையம் இவற்றில் முன்னனி நாடுகள் என்று சீனா , தென்கொரியா மற்றும் இந்தியாவை பட்டியலிட்டுள்ளது.

Nanotechnology (‘நேனோ‘ வித அறிவு) - Ayesha Era. Natarasan (ஆயிஷா. இரா. நடராசன்). Book Day is Branch of Bharathi Puthakalayam
Scanning, Tunneling, Microscope, Scanner, Technology

இந்திய  மண்ணில் வெறும் 60 கோடி பட்ஜெட்டோடு 1999ல் தொடங்கிய பயணம் இன்று வருடத்திற்கு 60,000 கோடி பட்ஜெட்டாக, வளர்ச்சி கண்டுள்ளது. 2013 வரையான ஐந்தாண்டுகளில் மட்டும் 23000 ஆய்வு கட்டுரைகள் (பிச்டி) சமர்பிக்கப்பட்ட பிரமாண்ட துறையாக நேனோ மாறிவிட்டது. தனிப்படை நேனோ ஆராய்ச்சி, மருத்துவ துறையில் நேனோ, தகவல் தொழில்நுட்பத்தில் நேனோ, பாதுகாப்பு தளவாட அறிவியலில் நேனோ, விண்வெளி ஆய்வில் நேனோ என்று பிரித்து இந்தியா கையாளுகிறது. நேனோ கட்டமைப்பு இயல், நேனோ எலெக்ட்ரானிக்ஸ் படிப்புகளை நாம் அறிமுகம் செய்து வளரும் தலைமுறையை தயார் செய்கிறோம். 2019ல் உலகஅளவில் நேனோ குறித்த  ஆய்வுக்கட்டுரைகள்  அதிகம் வெளியிட்ட நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு  அடுத்து இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது . நேச்சர் நேனோ தொழில் நுட்ப சர்வதேச இதழில் இந்திய நேனோ விஞ்ஞானிகளான அரிந்தம் கோஷ் மற்றும் யமுனா கிருஷ்ணன் சர்வதேச அளவில்  இந்திய நேனோ தொழில் நுட்பம் குறித்த ஆய்வுகளின் பங்களிப்பு குறித்து சிறப்பான கவனம் பெற்ற ஏழு ஆய்வுக் குழுக்கள் நன்னீர் தூய்மையாக்கலில் இருந்து ஆடை உற்பத்தி வரை இன்று பெரிய மாற்றங்களை விளைவித்ததை பதிவிட்டனர். 

நேனோ- தொழில்நுட்பம் குறித்த ஆபத்து என்று எதுவுமே இல்லையா. நேனோ தொழில்நுட்பம் எனும் பதத்தை நமக்கு அறிமுகம் செய்த எரிக் டிரெக்ஸ்லர் , தனது தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும் இயந்திரங்களை நேனோ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யும் போது – அவை மிகுந்த ஆபத்தானவையாக மாறும் என்று எச்சரித்தார். இன்று நான்காவது தொழிற்புரட்சி என்பது யாருமே (நேரடியாக) தலையிட வேண்டிய அவசியமற்ற தன்னைத்தானே உற்பத்திசெய்து கொள்ளும் முப்பரிமாண உற்பத்தி (3D – Production) எனும் புதிய வகை தானியங்கி தொழிற்சாலைகள் ஆகும் . பல்கி – பால் எனும் நேனோ மூலக்கூறுகள் புவியில் புதிய சுற்றுசூழல் அச்சுறுத்தலாக மாறியும் வருகிறது. ‘பிளாஸ்டிக்கிற்கு மாற்று … ஆனால்.” என்று ஒரு கட்டுரையை சமீபத்தில் (டெஸ்லா ஆய்வகம், அமெரிக்கா, எழுவர்குழு) வாசித்தேன். தூக்கம் வரவில்லை. இன்று வெள்ளீயம் முதல் தங்கம், மெக்னீசியம் , தோரியம் என நேனோ துகள் இல்லாத இடம் புவியில் இல்லை. கடல் தூய்மை, தூய்மை உற்பத்தி என்பது நம் கண்களுக்குதான். இதோ அலகீட்டு நேனோ நுண்நோக்கி இதன் வழியே பாருங்கள் … என்கிறார்கள் இவர்கள். ஆனால் இந்தகட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரை பெரிதாக அதனால் விளைவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதே ஆறுதல்.

எது எப்படியோ , நமது மகாக்கவி பாரதி அறிவியல் சம்பந்தமாக 1921 ம் ஆண்டு எழுதிய கட்டுரைக்கு ‘நானாவிதஅறிவு’ என்று தலைப்பிட்டார். அறிவு இதழ் என்று சூர்யோதயம் எனும் பத்திரிகை கூட தொடங்கினார். நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த யுகத்தில் இருந்திருந்தால் அவர் ‘நேனோ’ விதஅறிவு என்று தான் தன் கட்டுரைக்கு தலைப்பு வைத்திருப்பார். அந்த அளவுக்கு இன்று உலக அறிவியல், நேனோ அறிவியல் ஆகிவிட்டது என்பதே உண்மை.

துணை நின்றவை:

  1. எஞ்சின் ஆஃப் கிரியேஷன்ஸ் , எரிக்.கே.டெக்ஸ்லர் டபிள்டே வெளியீடு  ISBN 978 – 0-385-19973-5.
  2. ஏ.ஹப்லர், டிஜிட்டல் நேனோ யுகம் , நேனோ வெற்றிடம் , நேனோ புரட்சி – காம்ப்ளக்ஸ் சிட்டி பிரஸ்.
  3. கார்பன் நேனோ டியூப்ஸ், மற்றும் ஆற்றல் மாற்றம் இ.ஷைன் – காம்ப்ளக்ஸ் சிட்டி பிரஸ்.
  4. நேனோ–மருத்துவம், ராஜிவ் சயானி, ஜர்னல் ஆஃப் கட்டேனியஸ், சர்ஜரி இதழ், 32-33
  5. இந்தியாவும் நேனோ தொழில் நுட்ப அறிவியலும் தற்போதைய நிலை- அரிந்தன்கோஷ் , யமுனா கிருஷ்ணன் www.nature.com/nnano/journal /v9/2019

••••

ஆயிஷா. இரா. நடராசன்
தேசிய விருதுபெற்ற அறிவியல் எழுத்தாளர்
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *