nool arimugam ; isaiyum thamizhum isaithamizh thathavum - pichumani நூல் அறிமுகம்: இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் -பிச்சுமணிnool arimugam ; isaiyum thamizhum isaithamizh thathavum - pichumani நூல் அறிமுகம்: இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் -பிச்சுமணி

1874 ‘ல் பதினாறு வயது இளம் வாலிபர் தென்பகுதியில் ஒரு சிற்றூரில் இருந்து நடந்தே திண்டுக்கல் செல்கிறார். ஏன் செல்கிறார்? அதுவும் கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தூரம் எதற்காக செல்லவேண்டும்?

ஆரம்ப உயர் கல்வி தனது பிறப்பிடத்தின் அருகிலுள்ள பள்ளியில் படித்து விட்டு, பிறப்பிடத்தின் மற்றொரு ஊரில் 14 வயதிலேயே ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து, ஆசிரியர் பணியை செழுமை படுத்த, தான் முறையாக ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவு தாகத்தில் ; தமிழ் மோகத்தில் சுரண்டையிலிருந்து திண்டுக்கல் நிர்மல் ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு நடந்தே சென்றார்.

ஆசிரியர், கவிஞர், ஓவியர், வேளாண் விஞ்ஞானி, அச்சுக்கலை, புகைப்படக் கலைஞர், சித்தமருத்துவர், தமிழிசை அறிஞர் என்று பன்முகம் கொண்ட தமிழ்நாட்டின் தமிழிசை தந்தை என போற்றப்படும் ஆப்ரகாம் பண்டிதர் தான் அந்த வாலிபர்.தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டும் கற்றவற்றை ஆய்வுகள் செய்து கொண்டும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெரும் பெருமை தேடித் தந்து தமிழக வரலாற்றில் தடம் பதித்த மகத்தான ஆளுமை ஆப்ரகாம் பண்டிதர் அவர்கள்.

முதலில் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்கிறேன். பண்டிதர் வாழ்க்கை வரலாறு குறித்து ஓரளவுக்கேனும் நான் அறிந்திருந்தாலும்.. இசை குறித்து எதுவும் தெரியாது. இசையைப் பொறுத்தளவில் நானொரு பூச்சியம் தான். இந்த எண்ணம் என்னைப் போன்று பலருக்கு இருக்கலாம்..

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரதி புத்தகாலயம் வெளியிடாக தோழர் களப்பிரன் எழுதிய இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் என்ற நூல் தமிழிசை வரலாறு குறித்தும் பண்டிதர் தமிழிசை ஆய்வுகள் குறித்தும் மிக நுட்பமாக அறிந்து கொள்ளவதோடு இந்த தமிழ் சமூகத்தில் தூக்கிப் பிடித்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுகிற பணியை மொழியை இசையை நேசிக்கிற ஒவ்வொரும் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக இருப்பதாகவே கருதுகிறேன்.

“எளிய மனிதன் கூட ஒரு கதையை படித்து புரிந்து கொள்வதைப் போல் இசையையும் கேட்டவுடன் அதன் இராக அமைப்புக்களை அறியும் நுட்ப ஞானம் எளிய மனிதருக்கும் இயல்பாக இருந்த மண் இது” என்று இந்நூலில் குறிப்பிடும் போது அதை உணர முடிகிறது.

உலகத்தில் உள்ள எல்லா படைப்புகளும் உழைப்பின் மூலம் கிடைத்தது என்றால், இசை மட்டும் எப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சொத்தாக இருக்கமுடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆய்ச்சியர் குரவையில் ஆடும் எளிய பெண்களுக்கு இருந்த இசை ஞானம், சங்க இலக்கியத்தில் வாழும் எளிய மனிதர்களுக்கு இருந்த இசை ஞானம் இன்றைக்கு இருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு இல்லாமல் போனது ஏன் என்று நாம் யோசிக்க வேண்டாமா? என்ற கேள்வியே இந்த புத்தகத்தை படிக்க வேண்டிய கட்டாயத்தை தந்துவிடுகிறது

ஆப்ரகாம் பண்டிதர் யார்? தமிழிசை வரலாற்றில் அவர் பங்களிப்பு என்ன?
பண்டிதரின் கர்ணாமிர்தசாரகம் இசை ஆய்வு நூல் சொல்லும் சாராம்சம் என்ன?
கர்நாடக இசை என்பது என்ன? இந்துஸ்தானி என்றால் என்ன? இசையின் மும்மூர்த்திகள் யார் அந்த பட்டியல் இரட்டை பட்டியலாக இருப்பது ஏன்?
ஆப்ரகாம் பண்டிதரை நாம் ஏன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கு பதிலை தருவதோடு இன்னும் ஆழமாக இசை குறித்து தேடிப் படிக்கவும் இந்நூல் தூண்டிவிடுகிறது.

தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய அளவிளான பணிகளை, தமிழிசையில் தனி ஒரு மனிதராக செய்து முடித்தவர் ஆப்ரகாம் பண்டிதர் அவர்கள்.

இசை சார்ந்து இயங்கும் கல்விக்கூடங்கள் ஆப்ரகாம் பண்டிதரை அறிந்திருக்கிறார்களா? தமிழிசைக்கென இயங்கும் கல்லூரிகளில் இசைப் பல்கலைக்கழகளில் ஆப்ரகாம் பண்டிதர் பற்றி பாடத்திட்டங்கள் இருக்கிறதா? முனைவர் பட்டம் பெறுபவர்கள் ஆப்ரகாம் பண்டிதர் கண்டுப்பிடித்த ஆய்வுகளை முன்னெடுக்கிறார்களா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் தமிழிசை முன்னோடி ஆப்ரகாம் பண்டிதரை முழுமையாய் கொண்டு செல்லாமல் இருப்பதை வருத்துடன் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த புத்தகம் சிறிய புத்தகம் தான் ஆனால் தமிழிசையும் ஆப்ரகாம் பண்டிதரையும் ஆழமாய் அறிய உதவும் கையேடு.
தமிழ் மொழியை,மண்ணை, இசையை நேசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

ஜூலை முடிந்து ஆகஸ்ட் பிறந்து விட்டது. ஆகஸ்ட் 2 ஆப்ரகாம் பண்டிதர் பிறந்தநாள். 

இசைத்தமிழ் தாத்தாவை 
தமிழ் சமூகத்திற்கு

கொண்டு செல்வோம்!
கொண்டாடுவோம்!!

நன்றி.

புத்தகம் வாங்க:  https://thamizhbooks.com/product/isaiyum-thamizhum-isai-thamizh-thathavum/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *