nool arimugam: en sariththiram- r.esudoss நூல் அறிமுகம்: என் சரித்திரம் - இரா.இயேசுதாஸ்nool arimugam: en sariththiram- r.esudoss நூல் அறிமுகம்: என் சரித்திரம் - இரா.இயேசுதாஸ்
என் சரித்திரம்.” நூல்…..உ.வே.சாமிநாதையர்
822 பக்கங்கள்…முதல் பதிப்பு 1950
அடையாளம் பதிப்பகம் ..முதல் பதிப்பு..2019
விலை ரூ.450/-

 

19.2.2021 அன்று உத்தமதானபுரத்திற்கு தமுஎகச,வலங்கைமான் கிளை ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்விழாவிற்கு சென்றிருந்த போது அவரைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்நூலைப் படிக்க விரும்பினேன்.  தற்போது கடந்த வாரத்திலிருந்து படித்து முடித்தேன்.

19.2.1855ல் பிறந்த இவர் 28.4.1942ல் காலமாகிறார். இந்நூலில் உ.வே.சா. 1898 வரையான நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார். நூலின் பின் இணைப்பில் அவர் சொந்தமாக எழுதிய மற்றும் பதிப்பித்த தமிழ் பழம்இலக்கியங்கள் 108 ன் பட்டியலும்…அவருடைய வாழ்வின் முக்கியமான தருணங்களும் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.

நான் இங்கே இந்நூலைப்படித்ததனால் ஏற்பட்ட எண்ணங்களை…கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

160 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்றுக் கொள்வதில் மிக்க ஆர்வமுள்ள சிறுவனுக்கு அவன் தொடர்ந்து தன் விருப்பம் போல் பயில எப்படியெல்லாம் துயரங்களை மகிழ்வோடு பெற்றோர் ஏற்றுக்கொண்டனர் என்பதை இந்தச் சரித்திரம் உணர்ச்சிகரமாக முன்னிறுத்துகிறது.

அந்தக்காலத்தில் நிரந்தரமான வேலை…வருமானம் இல்லாத ஒரு பிராமணக் குடும்பம் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் எவ்வளவு கௌரவத்தோடு போராடியது என்பது எதார்த்தமாக இச்சரித்திரம் எடுத்துரைக்கிறது.

திருவாவடுதுறை ஆதீனம் திருமிகு சுப்ரமணிய தேசிகர்…அவர் மறைந்தபின் திருமிகு அம்பலவாணதேசிகர்….உ.வே.சாவின் ஆசிரியர் திருமிகு மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களும் எப்படியெல்லாம் உள்ளார்ந்த நல்மனதோடு மாணவர்களுக்கு தமிழ் போதித்தனர்… பெற்றோரை விடவும் பன்மடங்கு பாசம் காட்டினர் என்பது இக்கால ஆசிரியர்-மாணவர் உறவு நிலையை ஒப்பிடும்போது நம்பமுடியாத அளவுக்கு அதி உன்னதமாக உள்ளது.

சில வரிகளைப்படிக்கும் போது நம் கண்களில் ..நம்மை அறியாமலேயே நீர் கோர்க்கிறது!

காலை நான்கரை மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரைகூட பாடபோதனை கருணையுடனும்..கண்டிப்புடனும்..அதேநேரம் கொண்டாட்டமாகவும்  தொடர்வதை படிக்கும் போது இன்றைய நாம் எவ்வளவு அளவு மீறிய சுதந்திரத்துடன் வளர்ந்தோம்..வளர்க்கிறோம்..என உணரமுடிகிறது.(அன்றைய குருகுலக்கல்வி முறை பற்றி புரிந்து கொள்ளமுடிகிறது) தமிழகத்திலிருந்த பல மடங்கள்…கோவில்கள்…ஜமீன்கள்..அரசர்கள்..தமிழ்ப் பற்றாளர்கள் எவ்வளவு தீவிரமாக தமிழ்மீது பக்தியோடு…காதலோடு…உயிரும் உடலுமாக இருந்தனர் என்பது “என் சரித்திரம்”முழுவதும் பல சம்பவங்களால் கதை கதையாய் நிரம்பியுள்ளது.

ஒரு  நல்ல செயலை செய்து முடிக்கவேண்டும் என்ற உறுதி ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுவிட்டால் அதை நிறைவேற்றிட உதவிகளும்…ஆதரவும்…ஊக்கமூட்டலும்.. தொடர்ந்து எப்படியாவது கிடைத்துவிடும் என்பதற்கு உ.வே.சாவிற்கு கிடைத்த உதவிகளே சாட்சி! சமண நூலான சீவக சிந்தாமணி.பௌத்தநூலான மணிமேகலை.. போன்றவற்றை அச்சு வடிவத்திற்கு கொண்டுவர சாமிநாத’அய்யர்’ எதிர்கொண்ட மதரீதியான  அன்றைய சவால்கள் எதிர்பாராத ஒன்றெனினும்…அதை எப்படி.. உ.வே.சா. எதிர்கொண்டு வென்று சாதித்தார் என்பது உ.வே.சாவின் தமிழ்ப்பற்றை….காதலை.. பறைசாற்றுகிறது.

அவர் ஓலைச்சுவடிகளை தேடி நடையாய் நடந்தும்…வண்டி மூலமும்….பட்டினியோடு..பலமுறை நோயுடன் மேற்கொண்ட பயணங்கள் அவரைக் கையெடுத்துக் கும்பிட மனதைத்தூண்டுகிறது. இதற்கெல்லாம்
அப்பா..அம்மா…மனைவி…குழந்தைகள்… அவர் பணிபுரிந்த நிர்வாகம்..கொஞ்சமும் முகம் சுழிக்காமல் ஆதரித்தது அதற்கும் மேலான அற்புதம்.! 150 ஆண்டுகளுக்கு முன்பு ஓலைச்சுவடிகளில் பலவாறாக விரவிக் கிடந்த செய்யுட்களை ஊர் ஊராய் போய் தேடி..அடையாளம் கண்டு வரிசைப்படுத்தி…பிழை திருத்தி..பிழை நீக்கி.. பின் சரியான விளக்கம்..உரை எழுதி. அதை பணவசதி இல்லாமல் பல பேரிடம்
கடனும்…பலரிடம் முன்பணமும்(தற்போதைய முன்வெளியீட்டுத்திட்டம் போல) பெற்று.. தானே அச்சுப்பிழை(proof correction) பார்த்து அந்தக்கால தொழில்நுட்பச்சூழலில் நூலை அச்சில் வெளிக்கொணர்ந்தது என்பது பத்து மாதம் சுமந்து தானே பிரசவம் பார்த்துக்கொள்வது போன்றதை விட கஷ்டமானது. இப்படியாக சீவக சிந்தாமணி…தொடங்கி பத்துப்பாட்டு..எட்டுத்தொகை…மணிமேகலை.என தொடர்ந்து பல பிரசவங்கள் நடந்தன!.

பல பேர் ஆங்கிலம்படி….சமஸ்கிருதம் படி..என வலியுறுத்திய போது தமிழை உயிரென மதித்த உ.வே.சாவின் பிடிவாதம் தான் அவரைத் தமிழ்த் தாத்தாவாக சாதனை புரிய வைத்தது.

நல்ல சரளமான நடையில் உள்ள உரைநடை தமிழ்நூல்களை படிக்க…படிக்க வைக்க..இந்த காலத்தில் பாடாய்ப் படும்போது .அந்தக்காலத்தில் ஆயிரக்கணக்கான மரபுவழிச் செய்யுட்களை ராகத்துடன் உரையுடன் எப்படித்தான் மனதில் இருத்தினாராகளோ…என ஆச்சர்யமாக உள்ளது!.

தமிழர் ஒவ்வொருவரும் படித்தால் நிச்சயம் தமிழ்மொழியின் செம்மொழி வளத்தையும்..உண்மையான பெருமையையும் …புரிந்துகொள்ளமுடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *