noolarimugam: thaippal enum jeevanadhi-nandhasivam pugazhendhi நூல் அறிமுகம்: தாய்ப்பால் எனும் ஜீவனதி-1 -நந்தசிவம் புகழேந்தி.noolarimugam: thaippal enum jeevanadhi-nandhasivam pugazhendhi நூல் அறிமுகம்: தாய்ப்பால் எனும் ஜீவனதி-1 -நந்தசிவம் புகழேந்தி.

நூலின் பெயர் : தாய்ப்பால் எனும் ஜீவனதி-1.
ஆசிரியர் : டாக்டர் இடங்கர் பாவலன்.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
பக்கங்கள் : 120.
விலை :ரூ :120.

குழந்தைகள் தன்னிடத்தில் ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியம் மனிதர் உள்ளத்தை மறைக்கும் திரையை நீக்க வல்லது.
—மரியா மாண்டிசோரி.

மேற்கண்ட பத்தியில் இத்தாலிய கல்வியாளரும் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளருமான “மரியா மாண்டிசோரி ” அவர்கள் குறிப்பிடும் அந்த ஒரு ரகசியம் “உழைப்பு” ஆகும். குழந்தைகள் இந்த பூவுலகினுள் அடியெடுத்து வைத்த அந்த முதற்கனம் தொட்டு தங்களது உழைப்பை தொடங்கி விடுகின்றார்கள்.

இந்த பூமியில் மனிதனின் பாத்திரத்தில் இருந்து “உழைப்பை” கழித்து விட்டால் இங்கு மிஞ்சப் போவது எதுவுமில்லை. உழைப்பே மானுட முன்னேற்றத்திற்கான கருப்பொருள். சிறப்புமிக்க இந்த உழைப்பை ஆதாரமாகக் கொண்டே குழந்தைகள் இப்பூவுலகை அறிய முற்படுகின்றனர். இந்த அறிதலிலே குழந்தைகள் “இன்பம்” காண்கின்றனர். இந்த இன்பமே குழந்தைகளுக்கு வெற்றியை கொடுக்கிறது. இப்படியாக தன் சுய உழைப்பைக் கொண்டே குழந்தைகள் அனைத்தையும் கற்று அறிந்து கொள்கின்றனர். பிறவி உழைப்பாளிகளான குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உடல் ஆற்றலையும் தரவல்லது “தாய்ப்பால்” ஒன்று மட்டுமே. இந்த சிறப்புமிக்க தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு மாற்று ஆதாரம் உலகில் வேறு எவையுமில்லை. பொதுவாக பெண்களின் பேறுக் காலங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குழந்தை பிரசவித்து தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் கொடுக்கப்படுவதில்லை. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தான அறியாமைகள் நிலவுவது நிதர்சனமே. சில மருத்துவர்களும் சாதாரணமாக புட்டிப் பால் கொடுப்பதை ஊக்குவிப்பவர்களாக இருக்கின்றனர்.

குழந்தைகள் இப் பூவுலகின் பொக்கிஷங்கள். வண்ணக் கனவுகளின் சொந்தக்காரர்கள். பூத்துக் குலுங்கும் மலர்கள். அபூர்வ படைப்பாளர்கள். சிறந்த கேள்வியாளர்கள். அறிதலில் பரவசமடைபவர்கள். சிறந்த விளையாட்டுக்காரர்கள். எதிர்கால சமூக மாற்றத்திற்கான வித்துகள். நாளைய உலகிற்கான நம்பிக்கை நாயகர்கள். இவ்வளவு சிறப்புகளை ஒருங்கேப் பெற்ற நம் குழந்தைகளை நம் அறியாமையின் பொருட்டு நிந்திக்கலாமா? அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கலாமா?

எக்காலத்திலும் இல்லாத வகையில் இக்காலம் தொற்றாத – வாழ்வியல் நோய்களுக்கான காலம் (NCD’S). நாம்,நமது அறியாமையாலும் விழிப்புணர்வின்மையாலும் செய்யும் சில தவறுகளால் குழந்தைகளுக்கு நேரவிருக்கும் தீங்குகளை பற்றி தெரிந்து கொண்டு, அவற்றை தடுத்து நிறுத்தும் சில வழிமுறைகளை படித்து தெரிந்து கொண்டு, அவற்றின் வழி செயல்பட்டாலே எதிர்காலத்தில் நேரவிருக்கும் பல ஆபத்துகளை தடுத்து நிறுத்தலாம்.

நாம் வாழும் இந்த நவயுக- காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி பல உயிர்க்கொல்லி நோய்களுக்கும் தீர்வு கண்டுள்ளது. முன்பெல்லாம் மருத்துவக் கலைச் சொற்களில் மட்டுமே கிடைக்கப்பெற்ற பல நல்ல நூல்கள் தற்பொழுது வெகு ஜனங்களுக்கான எளிய மொழியில் கிடைப்பது நல்ல விஷயமே. அவ்வாறு கிடைக்கும் நல்ல நூல்களை நாமும் வாங்கிப் படித்து நமது அறியாமையை நீக்கிக் கொள்ளலாம் தானே.

அப்படியான ஒரு பயனுள்ள புத்தகம் தான், டாக்டர். இடங்கர் பாவலன் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “தாய்ப்பால் எனும் ஜீவநதி”. மொத்தமாக 120 பக்கங்களில், முறையாக,1. தாய்ப்பாலை மூளை சுரக்கிறது. 2. தாய்ப்பால் என்பது உணவல்ல: உயிர். 3. தாய்ப்பால்: மாயங்கள் புரியும் மந்திர பானம். 4. தாய்ப்பால் :குழந்தைக்காக மட்டுமல்ல அம்மாவுக்காகவும் சுரக்கிறது. 5. தாய்ப்பால்: ஒரு சிறந்த ஹெல்த் பாலிசி. 6. கர்ப்ப காலத்திலேயே தாய்ப்பால் ஊட்ட தயாராகுங்கள். 7. பிரசவ நேரமும் தாய்ப்பால் ஊட்டும் காலமும். 8. தாய்ப்பால்: சிரித்தாலே சுரக்கும் அற்புதப் பால். என மொத்தமாக 8 தலைப்புகளில், பெண்ணின் உடல் அமைப்பு,மாதவிடாய் காலத் தொடக்கம்,மாதவிடாய் காலத்திற்கு பின்னான உடலியல் மாற்றங்கள், கருப்பையின் அமைப்பு, கருத்தரித்தல், பேறுக்காலம், பிரசவ காலம், பிரசவத்திற்கு பிந்தைய காலம், தாய்ப்பால் சுரப்பு, தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் இன்றியமையாமை, தாய்ப்பால் ஊட்டும் முறைகள், மார்பகங்களை முறையாக பராமரித்தல், மார்பகங்களை முறையாக பராமரிக்க தவறும் பட்சத்தில் நேரம் தீங்குகள் மற்றும் அதனால் விளையக்கூடிய நிவர்த்தி செய்யவியலா விளைவுகள், என பெண்ணுடல் தொட்டு பாலூட்டும் காலம் வரையிலான அனைத்தையும் குறித்து எளிய மொழி நடையில், சகலருக்கும் புரியும் வண்ணம் விளக்கப் படங்களுடன் சிறந்த முறையில் இந்த நூலின் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

தாய்ப்பாலை மூளை சுரக்கிறது, பிரசவித்த நாலாவது நாளில் தான் தாய்ப்பால் சுரக்கிறது, முன்பால் மற்றும் பின்பால் என இதுபோன்ற பல புதிய தகவல்களுடன் நம்மை வியப்படையச் செய்து, அறியாமை எனும் இருளை அகற்றவல்ல நல்ல புத்தகம். இளம் பெண்கள், புதுமண தம்பதிகள், தாய்மார்கள் என சமூகத்தில் அனைவரும் அவசியம் வாசித்து பிறருக்கு பரிசளிக்க வேண்டிய நல்ல புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *