இதுவும் கடந்து போகும் | Ithuvum Kadanthu Pogum

சில ஆண்டுகளாக எனது தேடல் பதின்பருவக் குழந்தைகளுக்கான நூல். தோழர் துரை ஆனந்த் குமார் அவர்களுடைய ‘இதுவும் கடந்து போகும்’ ,என் தேடலுக்கான நூல்களுள் ஒன்றாகப் பார்க்கிறேன்.

உரை ஆனந்த்குமார் அவர்கள் அபுதாபியில் வசித்து வருகிறார். KIDS TAMI STORIES சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர். ‘கெட்டிக்காரக் குட்டித்தவளை’ இவரது முதல் படைப்பு. தற்போதைய இவரது வெளியீடு ‘இதுவும் கடந்து போகும்’!

பதின்ம வயதினருக்கான புதினம். மருத்துவத் தம்பதிகள் இருவர், அவர்களது குழந்தைகள், அக்குழந்தைகளின் நண்பர்கள், அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், அவற்றின் மூலம் பதின்ம வயதினருக்கு உணர்த்தப்படும் செய்திகள்-இவைதான் இந்தப் புதினம்.

11 வயது துவங்கி 19 வயதுக் குழந்தைகளுக்கான நூல் என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் வயதைக் கொண்டு துவங்குவதாக அமைத்திருப்பது சிறப்பு. அந்த அத்தியாயத்திற்கு உரிய வயதினர் பெரும்பாலும் எதிர்கொள்ளக்கூடிய பொதுவான பிரச்சினைகள் பலவற்றுள் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒவ்வொரு அத்தியாயமும் தருவதாக அமைத்துள்ளார் தோழர் துரை ஆனந்தகுமார் அவர்கள்.

பதின்பருவக் குழந்தைகளுக்கு நேரும் அத்தனை இடர்ப்பாடுகளுக்கும் துரை ஆனந்த்குமார் இப்புதினம் வழிபரிந்துரைக்கும் ஒரே மாமருந்து, பெற்றோரும் உற்றாரும் உறவினரும் ‘அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது’ ஒன்றே என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறார் வழிநெடுகிலும்.

யாரும் வாசிக்கக்கூடிய மிக எளிமையான நடை.கதையினூடாக பாத்திரங்களின் வழி குறிப்பிட்ட இந்த வயதுக குழந்தைகளின் இயல்புகளைக் காட்சிப்படுத்தி இருப்பது அழகு.

11-19 வயதுக் குழந்தைகள் எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்க வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் இந்தக் கேள்வி மனதில் தோன்றும் இந்த குழப்பத்தை சுற்றியிருப்பவர்கள் அவர்களுக்கு உண்டாக்கியிருப்பார்கள்..நாம் குழந்தையா பெரியவரா என்ற ஐயம். அவங்களுக்கு சரியான ஒரு வழிகாட்டல் முதல் கதையில் இருக்கிறது.. உருவத்தால் வளர்ந்தாலும் உள்ளத்தால் குழந்தைமையைக் கொண்டாடிக் கொண்டே இரு என்று..

தனிமைப்படுத்திக் கொள்ளுதல்.பதின்பருவக் குழந்தைகளிடம் எந்தச்சிக்கல் ஏற்பட்டாலும் அது ஏற்படும் போதெல்லாம் அதற்கான முதல் அறிகுறி. அதைக் கண்டுகொண்டதும் உற்றாரும் அண்டை அயலாரும்என்ன செய்யஸவேண்டும்? அப்படியே விட்டுவிட்டால் தானாகச் சரியாகி விடுவார்கள் என்பது பொதுவான நமது சமூக சித்தாந்தம். என்னைப்பொறுத்தவரையில் இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் அவர்களது சமவயதினரைக் கொண்டே அத்தனிமையிலிருந்து அவர்களை நகர்த்திக் கொண்டுவருவது குறித்து இரண்டாவது கதை பேசுகிறது.

பதின்பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களிடம் யார் பேச வேண்டும்? யார் பேசக் கூடுகிறது? ரவி, லாவண்யாவிடம் ‘ஒரு கைனகாலஜிஸ்ட். உன்னாலயே விஷயத்தைக் குழந்தைகள் காட்ட எடுத்துச் சொல்ல முடியலைன்னா, மத்த பெற்றோர்கள் எப்படிச் சொல்வாங்க?’, என்று கேட்கும் கேள்வி இந்த சமுதாயத்திற்கான கேள்வி.

இன்றைக்கும் பல பெற்றோர்களுக்கு இவற்றைப் பற்றி எல்லாம் தம் குழந்தைகளிடம் பேச வேண்டும் என்பதே தெரியவில்லை. பெரும்பான்மையான கல்வியறிவு பெற்ற பெற்றோர்களின் நிலையே இப்படி எனும்போது கல்வியறிவற்ற பெற்றோர்களின் நிலை? சிந்திக்க வைத்த கதை. இந்த இடத்தில் தான் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆசிரியர் இரண்டாவது பெற்றோராக இருந்தாக வேண்டிய முக்கியமான தருணம் இது.

நிலா என்னும் பாத்திரத்தின் மூலம் இந்த வயதுக் குழந்தைகள் பெரியவர்களின் பேச்சில் இருக்கும் உண்மையை உணய்ந்திருந்தாலும் கூட விரும்பியோ விரும்பாமலோ எப்படி அவற்றுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும்கூட கதையினூடே கதைத்திருக்கிறார்.

உடல்வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் என்றதும் பெண்குழந்தைகளின் மாற்றங்கள், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்று ஒட்டுமொத்த கவனக்குவிப்பும் பெண்குழந்தைகள் குறித்து இருக்கும் நிலையில் மானவ்விடம் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ‘குரல் உடைதல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘மனம் என்னும் மாயவலை’ கதை என்னை மிகவும் கவர்ந்தது.

பருவத்தில் ஏற்படும் தற்காலிக ஈர்ப்பை ‘அது தற்காலிகமானது;அதைக் கடந்து போனால் வாழ்க்கை சிறப்பாக அமையும்’ என்ற கருத்தை வலியுறுத்துகின்ற ‘இதுவும் கடந்து போகும்’ கதை ஓர் ஒப்பற்ற கதை என்பதாக நான் உணர்கிறேன். ரேஷ்மா, ரிஸ்வான் என்ற கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல் பருவ ஈர்ப்பைக் கையாள பதின்பருவக் குழந்தைகளுக்கான அற்புதமான வழிகாட்டல்.

இந்தப் பருவக் குழந்தைகளுக்கு என்ன புரிய வேண்டும்? எல்லோரும் சாதாரணமானவர்களே; யாரும் தேவதைகளோ தேவதூதர்களோ அல்லர் என்பது புரியவேண்டும். ‘எல்லாம் தெரிந்த ஜேக்’ கதையைப் படித்தால், படிப்பவருக்கு அது எளிதில் விளங்கும்படியான கதை.

ஒரு குழந்தைக்கு வீட்டில் கிடைக்கவேண்டிய பாதுகாப்பும்,ஆதரவும் கிடைக்காவிட்டால் வீட்டுக்கு வெளியில் அயலாரிடமிருந்து மெல்லிய அன்பையோ அரவணைப்பையோ எதிர்கொள்ள நேரிடும் சூழலில் அதுதான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்துகொண்டு தம்மையும் தம் வாழ்வையும் தொலைத்துவிடுகின்ற தன்ஷிகாக்கள், தம் விருப்பம் நிறைவேறாதபோது தற்கொலைதான் அதற்கான தீர்வென்று தம்மைத் தாமே வன்கொடுமை செய்துகொள்வது இனி ஒரு வேளை குறையக்கூடும், துரை ஆனந்த் குமார் அவர்களின் ‘இதுவும் கடந்து போகும்’ தொகுப்பை வாசித்தால்!

மனிதன் ஒரு சமூகப்பிராணி. அவனால் எப்போதுமே தனித்து வாழ இயலவில்லை. தனித்து வாழ்தல் சுகிக்காது என்றுதான் கடவுள் ஆதாமிற்குத் துணையாக இருக்கட்டுமென்று ஏவாளைப் படைத்தாராம். அது தொடங்கியே மனிதன் தனித்து வாழவில்லை. எப்போதும் எங்கிருந்தாலும் அருகில் இருப்பவர்களுடன் சேர்ந்தோ, சார்ந்தோ வாழும்படியாகவே நமது வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

‘உன் நண்பன் யாரென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்’ என்றொரு புகழ்பெற்ற மேனாட்டறிஞரின் வாய்மொழி நாம் அறிந்ததே. நல்ல நண்பர்களை அமைத்துக் கொள்வது வாழ்வின் வெற்றிக்கான வழி. பிறப்புக்கும் இடையிலான இந்த வாழ்வில் நாமே நமக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய உறவு, நட்பே. அதிலும் பதின்பருவத் தோழமைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?

மஜீத்திற்கு மட்டுமா தன்னை ‘பழம்’ என்று சொல்லிவிடுவார்களோ என்று பயம் இருக்கிறது.இங்கு பலருக்கு இருக்கிறது. தீய பழக்கங்கள் உள்ள குழுவினரிடையே அவர்களையொத்த பளக்கங்கள் இல்லாதவர்கள் பயணிக்கும் போது இதுமாதிரியான ‘பழம்’ பட்டத்திற்கு அஞ்சுவது தேவையற்றது. மற்றவர்கள் நம்மைத் தவறாகப் பேசுவதால் கேலிகிண்டல் செய்வதால் என்ன நடந்துவிடப போகிறது? இந்த ‘மிதமிஞ்சிய எச்சரிக்கை’க்கு எதிர்காலத்தையா அடகு வைப்பது?இதுபோன்ற சமயங்களில் தவிர்க்கும் வழிகளுள் ஒன்று மறுத்துரைப்பது. எட்டாவது அத்தியாயத்தில் சாயிராவோடு நமக்கும் இதை சொல்லிக் கொடுக்கிறார் துரை ஆனந்த்குமார்.

நாம் எல்லோரும் பார்த்த ஒரு விளம்பரம்தான். ‘கறை நல்லது’ என்று சொல்லும். நாமும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளும்படி அந்த விளம்பரம் அமைக்கப்பட்டிருக்கும். அப்படித்தான்.ஆபத்து நல்லதா?.நல்லது என்கிறார் துரை ஆனந்த் குமார். ஆபத்தொன்று வரும்போதுதான் அதை எதிர்கொள்ளும் திறன் ஒரு குழந்தைக்கு.. அல்ல குழந்தையோ இளைஞனோ அல்லாத ஒருவனுக்கு அவசியமானது. ‘பிரச்சினைகள் தான் நம்மை நமக்கும் மற்றவர்களுக்கும் அடையாளம் காட்டுவது’ என்றொரு பிரசித்திபெற்ற வாசகம் உண்டு. அவ்வாறே ஒன்பதாம் அத்தியாயமும் ஆபத்தைக் கடந்துவரும் வழியைப் போதிக்கிறது.

இல்லாத எதையும் இட்டுக்கெட்டும் மெனக்கெடல்கள் இல்லாத எளிமையான படைப்பு. நோக்கம் என்னவோ அதை மட்டுமே வாசகருக்குக் கடத்தும் வல்லமை கொண்டிருக்கிறது. நேரடியாகச் சொல்லத் தயங்குபவற்றை ஒரு கல்வியறிவு பெற்ற மருத்துவர்களான பெற்றோர் எப்படிப் பக்குவமாகக் கையாண்டு சிக்கல் களைகிறார்கள் என்பதை மிகச்சரியான உரையாடல்களோடு அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.

இது பதின்ம வயதினருக்கு மட்டுமான நூல் அன்று. அவ்வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்களது ஆசிரியர்கள் ஆகியோருக்குமான நூலுமேயாகும். பதின்ம வயதினருக்கு ஏற்படும்சிக்கல்களைப் போலவே அச்சிக்கல்களை எதிர்கொள்வதும், கவனமாகச் சரிசெய்வதும் பெரும் சிக்கலாக இருக்கும் நம் சமூகத்தில் அனைவருக்குமான நூலாகவே ‘இதுவும் கடந்து போகும்’ விளங்கும்.

இந்த நூலுக்கு ஓவியர் திரு.அனந்த பத்மநாபன் அவர்களுடைய ஓவியங்களும் கூட கதையை மேலும் கதைகதையாய்ப் பேசுகின்றன. சிறப்பானதொரு நூலை வெளியிட்டமைக்காக டிஸ்கவரி புத்தக நிறுவனத்தாருக்கு வாழ்த்தும் அன்பும்.

நூலின் தகவல் 

நூல்                     : இதுவும் கடந்து போகும்

ஆசிரியர்        : துரை ஆனந்த் குமார்

வெளீயீடு        : டிஸ்கவரி புக் பேலஸ்

விலை            : ரூ. 100 /

 

எழுதியவர் 

தங்கத்துரை அரசி

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *