ஒரு மொட்டும் சில ஹைக்கூக்களும்
***************************************
மொட்டு
*********
பூந்தோட்டத்தில் தான்
எவ்வளவு மொட்டுக்கள்!
இன்னும் மலரவில்லை
பொழுதும் புலரவில்லை
எப்போது மலருமோ?
யார் கூந்தலில் மணக்குமோ?
இன்னும் மலராத
இந்தத் தோட்டத்து மொட்டுக்கள்
மலர்ந்த மலர்கள்
ஈரக் காற்றில் கலந்து
மணம் வீசி மகிழ்ந்தன
மலராத மொட்டுக்களை
தேடிப் பறிக்க
குளிரும் காலையில் விரைந்து
விறைத்து நின்றன விரல்கள்
அரிய கண்டுபிடிப்பு தான்
வேகமாய்ப் பூப்பறிக்கும் – இந்த
பிஞ்சுவிரல் எந்திரங்கள்
பூந்தோட்டத்தில் தான்
எவ்வளவு மொட்டுக்கள்!
இன்னும் மலரவில்லை
பொழுதும் புலரவில்லை!!
ஹைக்கூக்கள்
****************
இவ்வளவு வேகமாக
வளர்ந்தது இதுக்குத் தானா?
தொடங்கியது தேய்பிறை
ஒரு வீட்டில்
இத்தனை விலங்குகள் எதற்கு?
கரடி பொம்மைகள்
மழையால் குழியான சாலையில்
மெதுவாக ஊர்கின்றன..
நத்தைகள்
பசியைப் போக்கி விட்டு
பற்றி எரிகின்றன..
மத்தாப்புகள்
கறார் டோல்கேட்டில்
கட்டணம் தள்ளுபடியாம்
கட்சிக்கொடிக் கார்களுக்கு
ஆங்கிலத்தில் சொன்ன குருவிபெயர்
கடைசிவரை விளங்கவில்லை
தாத்தாவுக்கு!
மேலே தொப்பென்று விழுந்தும்
இதமாய்த்தான் இருக்கிறது
தூங்கும் குழந்தையின் கால்
ஆம்புலன்சில் சவப்பெட்டி
அருகே கண்களை மூடியபடி
உறங்கும் ஓட்டுநர்
வாரி வழங்கிய வானம்
திட்டித் தீர்க்குது
நகரம்
நட்சத்திரங்களின் கண்சிமட்டலில்
நாணமுற்றதோ பூமி?
இருட்டில் மறைந்துக் கொண்டது!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

