Pen andrum indrum 3 webseries by Narmatha devi அத்தியாயம் 4: பெண் அன்றும், இன்றும் - நர்மதா தேவி

மனைவி எனும் மல்ட்டி பர்ப்பஸ் யூஸ் மெஷின்

“நவீன தனிக்குடும்பம் என்பது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்ணின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது” என்கிறார் எங்கெல்ஸ்.

“பையன் வேலைகிடைச்சு அமெரிக்கா போயிட்டானா? சாப்பாட்டுக்கு என்ன பன்றான்?

ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிவச்சி அவங்கூடவே அனுப்பி வச்சிட்டா, அந்தப் பொண்ணு அவனுக்கு சமச்சுப்போட்டு வீட்டப் பாத்துப்பா இல்லையா?

அதுவும், அவனோட துறையிலேயே வேலைபாக்குற மாதிரியான படிச்சப் பொண்ணப் பார்த்துட்டா, இன்னும் உத்தமம்.

அவனால பொண்டாட்டிக்கு சுலபமா அவனோட துறையிலேயே வேலையும் வாங்கிக்கொடுத்துட முடியும்.

அந்தப் பொண்ணு குடும்பத்தையும் பொறுப்பா கவனிச்சுகிட்டு, வேலைக்கும் போயி சமத்தா இருப்பா. குடும்பம் கஷ்டப்படாம சொத்து சுகத்தோட நல்லா வசதியா வாழ முடியுமில்லையா?”

– இதுதான் நமது மத்திய வர்க்க மக்கள் போடும் கணக்கு.

வேலைக்குப் போய் நன்றாகச் சம்பாதிக்கும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் ஆண்மகனால், தனக்கான சாப்பாட்டை தானே சமைத்துக்கொள்ள முடியும். அல்லது, சமையலுக்கு வேலையாள் ஏற்பாடு செய்திட முடியும். அல்லது, ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொள்ள முடியும். ஆனால், இவற்றில் எதையும் ஆண்கள் செய்ய மாட்டார்கள். ‘என்னது ஆம்பிளை சிங்கம் போய் சமைக்கிறதா? சமையலுக்குப் போய் ஆள் போடுறதா? ஹோட்டலில் சாப்பிட்டால் வயிறு கெட்டுவிடாதா!’ இப்படி நிறைய வியாக்கியானங்கள் முன்வைக்கப்படும்.

அதேபோல, துணி துவைப்பதற்கு அவர்களால் வாஷிங் மெஷின் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், அதை ஸ்விட்ச் போட்டு இயக்கும் வேலையைக்கூட அவர்கள் செய்ய முன்வர மாட்டார்கள். வீட்டைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு வீட்டுவேலைப் பணியாளர்களை அவர்கள் தேடலாம். ஆனால், ‘வீட்டுவேலைகளுக்குப் போய் செலவு செய்து காசை வீணடிப்பதா?’ ‘எல்லாவிதமான வீட்டு வேலைகளையும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதற்கான ‘மல்ட்டி பர்ப்பஸ் யூஸ் மெஷின்’ தானே மனைவி?’ ‘அதனால், ஒட்டு மொத்த வீட்டு வேலைக்காகவும் நாம் செய்துகொள்ள வேண்டிய ஒரே ஏற்பாடு ‘திருமணம்’’. இந்த சிந்தனைதான் நமது சமூகத்தில் இருக்கிறது.

ஆகவே, இங்கே திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குக் காதல், பகிர்தலுக்கு இணை வேண்டும் என்கிற உணர்வுப்பூர்வமான தேவைகள் இருப்பதில்லை. ‘குடும்ப அமைப்பு’ இயங்குவதற்கான சமூகக் காரணங்கள் வேறாக இருக்கின்றன.

வீட்டு வேலைகள் செய்வதற்கான ஏற்பாட்டைப் பொறுத்தவரை பணமிருக்கும் மத்தியதர வர்க்கத்துக்கே ‘மனைவி என்கிற அடிமை’ வேண்டும் என்கிறபோது, 10-15 மணிநேரம் உழைத்தாலும் மூன்று வேளை உணவுக்குக்கூட வழியில்லை என்று வாழ்கிற அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமை? படுமோசம்.

விலைவாசி விஷம்போல ஏறிக்கொண்டே போகிறது. எவ்வளவு உழைத்தாலும் உயிர்வாழ்வதற்கான அடிப்படை வருமானம்கூட கிடைக்காது. இந்த நிலையில் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது குடும்பங்களில் பராமரிக்கப்பட்டால்தான், அவர்களால் பிழைத்திருக்கவே முடியும் என்கிற நிலை இருக்கிறது. அந்தப் பராமரிப்புப் பணியை அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் செய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவன் காலை 6 மணி ஷிஃப்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்றால், அவருடைய மனைவி அதிகாலை 4 மணிக்கே எழுந்து, அவருக்கான காலை உணவையும், மதிய உணவையும் தயாரித்துக் கொடுத்தனுப்பி, அவரைப் பராமரிக்கும் பணியைச் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த மனைவியும் ஒரு தொழிலாளி என்றால், தனது கணவருக்கும், வீட்டில் உள்ள பிறருக்கும் தேவையான அனைத்தையும் உறுதிசெய்துவிட்டு, அவரும் வேலைக்குக் கிளம்ப வேண்டும்.

எனவே, நவீன ஒருதாரத் திருமண முறை என்பது பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு நம்முடைய குடும்ப அமைப்புகளே சாட்சிகளாக இருக்கின்றன.

பெண்கள் திருமண பந்தம் என்ற பெயரால் அடிமைகளாக்கப்படும் கொடுமை குறித்து தந்தை பெரியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அந்த அடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஓர்அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாகக் கவனித்தால், நமது நாடு மாத்திரமல்லாமல், உலகத்திலேயே அநேகமாய்க் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிகக் கொடுமையாயும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமாயும் நடத்தப் படுகிறார்கள் என்பதையும் நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால், நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும்விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.” என்கிறார். [பெண் ஏன் அடிமையானாள், 5 வது அத்தியாயம், கல்யாண விடுதலை]

தொழிலாளர்கள் பெறும் கூலி

ஒரு தொழிலாளி ஈட்டும் கூலி என்பது என்ன?

”ஒரு முதலாளி பணம்கொடுத்து ஒரு தொழிலாளரிடம் உழைப்பை வாங்குவதாகவும், பணத்துக்காக தொழிலாளர்கள் தம் உழைப்பை முதலாளிக்கு விற்பதாகவும் (நமக்குத்) தோன்றுகிறது. ஆனால் இது வெறும் பொய்த்தோற்றமே! உண்மையில், தொழிலாளர்கள் பணத்துக்காக முதலாளியிடம் விற்பது அவர்களின் உழைப்புச் சக்தியைத்தான்” என்கிறார் மார்க்ஸ்.

உழைப்புச் சக்தி என்பது உழைப்பைச் செலுத்தும் திறன்.
“உழைப்புச் சக்தி என்பது உயிருள்ள ஒரு தனிமனிதரின் திறனாக அல்லது சக்தியாக இருக்கிறது” என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

உழைப்புச் சக்தியின் மதிப்பை, அதாவது உழைப்பைச் செலுத்தும் திறனின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவது?

உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆகும் உற்பத்திச் செலவே உழைப்புச் சக்தியின் மதிப்பு. சுருக்கமாக, ஒரு தொழிலாளியை உருவாக்கி, பயிற்சி அளித்து, பராமரிப்பதற்கு ஆகும் செலவே உழைப்புச் சக்தியின் மதிப்பு எனக் குறிப்பிடலாம்.

அதாவது, ரத்தமும் சதையுமாக இருக்கிற தொழிலாளியை உற்பத்தி செய்வதற்கு, பராமரிப்பதற்கு, பயிற்றுவிப்பதற்கு, மேலும், தொழிலாளி காலப்போக்கில் மூப்படைந்து, வலுவிழந்து உழைக்கமுடியாமல் போவார் என்பதால், அடுத்த தலைமுறை தொழிலாளியை உற்பத்தி செய்து, பராமரிப்பதற்கு ஆகும் செலவுதான், உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு. ஆக, உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு என்பது தொழிலாளியின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திக்கான செலவு என்று கொள்ள வேண்டும்.

”மனிதனின் சதையையும் குருதியையும் தவிர வேறு சேமிப்பிடம் இல்லாத இந்தத் தனித்துவம் கொண்ட பண்டத்தின் (உழைப்புச் சக்தியின்) விலையைக் குறிக்கும் தனிச்சிறப்பான பெயர்தான் கூலி” என்கிறார் மார்க்ஸ். தொழிலாளியின் பராமரிப்புக்குத் தேவையான வாழ்வாதாரத் தேவைகளின் மதிப்பைக் கணக்கில் கொண்டே ஒரு தொழிலாளியின் கூலியும் நிர்ணயிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச வீட்டு வாடகை இவ்வளவு… வேலைக்கு வந்து போவதற்கான போக்குவரத்து செலவுக்கு இவ்வளவு… உணவை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டால் ஆகும் செலவுக்கு இவ்வளவு… ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டால் இவ்வளவு…தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு இவ்வளவு- இப்படிக் கூட்டி கழித்து, ஒரு வர்க்கமாகத் தொழிலாளர்கள் பிழைத்திருப்பதற்கு எவ்வளவு குறைவாகக் கூலிகொடுத்தால் போதுமோ, அவ்வளவுதான் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் கணக்கில் கொண்டுவரப்படாத பெண்களின் வீட்டு உழைப்பைப் பற்றி நம்மால் அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள முடியும்.

தொழிலாளர்கள் பராமரிப்பில் பெண்களின் பங்கு

தொழிலாளர்களின் இருத்தலுக்கு அவசியமான தேவைகளாக உணவு, இருப்பிடம் உள்ளிட்ட பராமரிப்புத் தேவைகள் இருக்கின்றன. இவை போக, தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இருப்பதற்கு கல்வி, தொழிற்பயிற்சி, மருத்துவ சேவை உள்ளிட்ட அம்சங்களும் தேவைப்படுகின்றன.

கல்வி, தொழிற்பயிற்சி, மருத்து வசதி உள்ளிட்ட தேவைகள் வீட்டிற்கு வெளியே, அரசு உள்ளிட்ட அமைப்புகளால் உறுதிசெய்யப்படுகின்றன. (முதலாளித்துவ நாடுகளில் இவை யாவும் காசு கொடுத்துப் பெறும் சரக்குகளே. சேவைகளாக் கிடைக்காது.)

தொழிலாளர்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமான தேவைகளான உணவு, இருப்பிடம் சார்ந்த தேவைகள் பூர்த்தியாவதற்கு குடும்பத்திற்குள் நடக்கும் உற்பத்தி மிகமிக அவசியமாக இருக்கின்றது. வீட்டிற்குள் நடைபெறுகிற இந்த உற்பத்தி பெண்ணடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாக இருக்கிறது.

தொழிலாளர்களுக்குச் சமைத்துப் போட, அவர்களுடைய உடல்நலம் பேண, வீட்டு வேலைகள் செய்ய, வயதான பெற்றோர்களைக் கவனிக்க, குழந்தைகளைக் கவனிக்க, ‘மனைவி எனும் பெண்’ தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்தாக வேண்டியுள்ளது. இல்லை! இல்லை! ‘மனைவி எனும் அடிமை’ தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்தாக வேண்டியுள்ளது.

இப்படி, குடும்பம் எனும் அமைப்பில் பெண்களால் தொழிலாளர்கள் பராமரிக்கப்படுவதால் முதலாளித்துவ முறைக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

1) பெண்களின் குடும்ப உழைப்பினால் முதலாளித்துவ அமைப்புக்குத் தடையில்லா உழைப்பு கிடைக்கிறது.

இந்தத் தலைமுறை தொழிலாளியைப் பராமரிப்பதோடு, அடுத்த தலைமுறைத் தொழிலாளியையும் பெற்றெடுத்துப் பராமரிக்கும் பணியையும் பெண்கள் வெகுசிறப்பாகச் செய்து வருகிறார்கள். மேலும், ‘எனது கணவன், எனது பிள்ளைகள், எனது குடும்பம்’ என உணர்வு சம்பந்தப்பட்ட சேவையாகக் கருதி, பெண்கள் இந்தப் பராமரிப்புப் பணிகளைச் செய்வதால் முதலாளித்துவ அமைப்புக்கு மிகப்பெரும் பலன் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்குக் குறைவான ஊதியத்தை முதலாளித்துவ முறை வழங்கினாலும், தொழிலாளர்களின் உடல்நலமும், மனநலமும் குடும்ப அளவில் பெண்களால் பேணப்படுகின்றன. தொழிலாளர்களின் உள நலம், உடல் நலம் என்பது அவர்கள் செலுத்துகிற உழைப்பின் தரத்தோடு தொடர்புடையது. இந்த அடிப்படையில் பெண்களின் குடும்ப உழைப்பு முதலாளித்துவ அமைப்புக்கு தங்குதடையற்ற சிறந்த உழைப்பை உறுதிசெய்து உதவி செய்கிறது.

2) பெண்களின் குடும்ப உழைப்பு முதலாளித்துவ அமைப்பின் செலவீனங்களைக் குறைக்க உதவுகிறது.

வீட்டளவில் தொழிலாளர் பராமரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற வேலைகளை சமூகம் பெண்கள் தலையில் சுமத்தி இருக்கிறது. இந்த முக்கியமான சமூகப் பணிகள், தனிப்பட்ட குடும்பங்களின் பணிகளாக்கப்பட்டு பெண்களின் தலைகளில் கட்டப்பட்டுவிட்டதால், முதலாளித்துவ அரசுகளும், நிறுவனங்களும் இந்தப் பராமரிப்புப் பணிகளில் பங்கெடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவை சார்ந்த நலத்திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்யத் தேவையில்லை; அல்லது, போதுமான ஒதுக்கீடுகளை செய்யத் தேவையில்லை. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களும், தொழிலாளர்களின் குழந்தைகள், வயதான பெற்றோர் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு சிறப்புப் படிகள் ஏதும் வழங்கத் தேவையில்லை. மொத்தத்தில் பெண்களின் வீட்டு உழைப்பால் முதலாளித்துவ சமூகத்திற்கு எவ்வளவு செலவு மிச்சமாகிறது!

                                                                                             தொடரும்

ஆதாரங்கள்: 1. குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
2. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005
3. Capital, A Critique of Political Economy, Volume I
4. Wage Labour and Capital, Karl Marx
4. பெண்ணியமும், வர்க்க உணர்வும், அர்ச்சனா பிரசாத், தமிழ் மார்க்சிஸ்ட் கட்டுரை, ஆகஸ்ட் 2022
5. Patriarchy subsidises Capitalism, Sanjay Roy, People’s Democracy, 23 April 2023
6. பெண் ஏன் அடிமையானாள், தந்தை பெரியார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

3 thoughts on “அத்தியாயம் 4: பெண் – அன்றும், இன்றும் – நர்மதாதேவி”
  1. கேடுகெட்ட முதலாளித்துவத்தை தோலுரிக்கும் அதே நேரத்தில் பெண் உழைப்புச் சக்தியை எவ்வளவு வஞ்சகமாய் முதலாளித்துவம் திருடுகிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

  2. விரிவான பார்வையும் தெளிவான எழுத்தும். மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *