ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்திடுவதற்காகவும், எதிர்காலத்தில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், ‘பிஏஜிடி’ என்கிற ‘குப்கார் பிரகடனத்திற்காக மக்கள் கூட்டணி’ (PAGD – People’s Alliance for Gupkar Declaration) என்னும் அமைப்பு மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

முதல் ‘குப்கார் பிரகடனம்’ 2019 ஆகஸ்ட் 4 அன்று அமைக்கப்பட்டது. அப்போது குப்கார் சாலையில் அமைந்துள்ள ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் ஆறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்தார்கள். அப்போதுதான் ‘குப்கார் பிரகடனம்’ என்று பெயரிடப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-A ஆகிய பிரிவுகளின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாப்பது குறித்துப் பேசியுள்ளது. இதற்கு அடுத்த நாள், ஆகஸ்ட் 5 அன்று, மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-A ஆகிய பிரிவுகளை ரத்து செய்வதற்கும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தை ரத்து செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசமைப்புச்சட்ட அந்தஸ்தின் மீது ஏவப்பட்டுள்ள நாணமற்ற தாக்குதலைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் இயங்கிவரும் பாஜக மற்றும் அதனைத் தொங்கிக்கொண்டிருப்பவர்களைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் மிகப்பெரிய அளவில் கைது செய்யப்பட்டனர். இதனுடன் சேர்ந்துகொண்டு சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் மீதும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதும் கடுமையான முறையில் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று, (முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தவிர) மற்ற முக்கிய அரசியல்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டபின்னர், குப்கார் குழுவின் இரண்டாவது கூட்டம் நடந்தது. தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி, மக்கள் மாநாட்டுக் கட்சி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை முந்தைய குப்கார் அறிக்கையின் நிலைப்பாட்டையே மீளவும் உயர்த்திப்பிடிப்பதாக அறிவித்தன. அவர்கள் கூறியிருப்பதாவது: “அரசமைப்புச்சட்டம் மற்றும் அதுதொடர்பாக அவ்வப்போது அளிக்கப்பட்ட உத்தரவாதங்களின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டமைத்திடுவதற்கானக் கூட்டுப் போராட்டத்திற்கான உறுதிமொழியை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மாநிலத்தின் மீதான எவ்விதமான பிளவும் எங்களுக்கு ஏற்புடையது அல்ல.”



குப்கார் பிரகடனம்-2, ஜம்மு-காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து, மாநில அமைப்பு மற்றும்  உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அனைத்து சக்திகளையும் மீளவும் அணிதிரட்டுவதற்கான முதல் நடவடிக்கையாகும்.

பிடிபி தலைவர் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டபின்னர், மற்றுமொரு கூட்டம் குப்தார் குழுவினரால் அக்டோபர் 15 அன்று நடந்தது. இதில்தான் குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டது. தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி, மக்கள் மாநாட்டுக் கட்சி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் இயக்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த ஏழு கட்சிக் குழு மீண்டும் அக்டோபர் 24 அன்று சந்தித்து, கூட்டணியின் நிர்வாகிகளை அறிவித்தது.

ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், பிரதேசக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலந்துகொண்டார். எனினும் அவர் அடுத்து நடைபெற்ற இரு கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமையானது, ‘அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட விதத்தைத்தான் எதிர்க்கிறதேயொழிய, அது மீண்டும் மீட்டமைக்கப்பட வேண்டும் என்று கோரவில்லை’ என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. பீகார் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை மீட்டமைப்பது தொடர்பாக மோடி தாக்குதல் தொடுத்தபின்னர், இதே நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீளவும் வலியுறுத்தி இருக்கிறார். இதுதான் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் ஊசலாட்டத்திற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

ஜவஹர்லால் நேருவும் சர்தார் பட்டேலும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களுடனும் ஷேக் அப்துல்லாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாகத்தான், அரசமைப்புச் சட்டத்தில் 370ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது என்பதையும், இந்திய ஒன்றியத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சேர்க்கப்பட்டது என்பதையும் காங்கிரஸ் கட்சி மறக்கக் கூடாது.  நேரு, இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்பினை மனதில்கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது இந்தியாவுடன் இணைவது மிகவும் சுமுகமாக அமைந்திடும் என்று பார்த்தார். இத்தகைய மதச்சார்பற்ற பாரம்பர்ய மாண்பினை காங்கிரஸ் கட்சி எந்தவிதத்திலும் சமரசத்திற்கு உள்ளாக்கக் கூடாது.

People's Alliance sans dialogue is in political desert | Greater Kashmir

புதிய அரசியல் கூட்டணி, எப்போதும் இருதுருவங்களாக இயங்கிக் கொண்டிருந்த இரு மாநிலக் கட்சிகளை – தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பிடிபி – ஒன்றாகக் கொண்டுவந்திருக்கிறது. இது ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை.  தங்கள் மாநில மக்களின் அடையாளம் மற்றும் உரிமைகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலை எதிர்த்து முறியடித்திட மாநிலத்தில் இயங்கும் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்ததன் விளைவாகவே இது உருவாகி இருக்கிறது.

மத்திய அரசு, இப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலம் சம்பந்தமான சட்டங்களில் மாற்றத்தை அறிவித்திருக்கிறது. அதன்படி, மாநிலத்திற்கு வெளியே வாழ்பவர்களும் அங்கே நிலம் வாங்க முடியும். முன்னதாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த நிரந்தரக் குடியிருப்புவாசிகள் மட்டுமே அவ்வாறு வாங்க முடியும் என்றிருந்தது. இந்த நடவடிக்கையானது அங்கே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தையும் (domicile law) மீறக் கூடிய ஒன்றாகும். இதன்மூலம் அந்த நிலத்தையும், அதன் வளங்களையும் சுரண்டுவதற்கும், அதன் மக்கள்தொகை அமைப்புமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.



அரசமைப்புச்சட்டத்திற்குட்பட்டு அம்மாநிலத்தின் சுயாட்சியை மீட்டமைத்திடுவதற்கும், மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, இப்போது உருவாக்கப்பட்டுள்ள மக்கள் கூட்டணிக்கு முன்பு பெரிய அளவில் கடமைகள் இருக்கின்றன.   இவற்றை இது மேற்கொள்வதற்கு முதல் கட்டமாக இது, அம்மாநிலத்தில் ஜனநாயக அரசியலையும், ஜனநாயக உரிமைகளையும் மீட்டமைப்பதற்கு முதற்கண் போராட வேண்டும். இது இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். மேலும் மக்கள் கூட்டணியானது இது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மட்டுமான கூட்டணி என்பதுபோன்ற கருத்து இருந்தால் அதனை அகற்றிவிட வேண்டும். ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் மற்றும் மக்கள் கருத்தை வென்றெடுக்கும் விதத்திலும், ஒரு பொதுவான கோரிக்கை சாசனத்தை தயாரித்தால்தான்,  அங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் பிளவுவாத அரசியலை முறியடித்திடமுடியும்.

மக்கள் கூட்டணி, நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவினையும் பெற்றிட வேண்டும். சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து மீதான தாக்குதல்கள் நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது விரிவான அளவில் ஏவப்பட்ட தாக்குதலின்   அச்சுறுத்தும் அடையாளமாகும். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம் மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் தன்வசம் மத்தியத்துவப்படுத்தும் நோக்கத்துடன் மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவ நெறிமுறைகளையும், உரிமைகளையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை, சமீபத்தில் மத்திய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டத் தொகைகளை அளிக்க மறுப்பதில், மாநிலங்களின் உள்விவகாரங்களில் தங்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூலம் தலையிடுவதில், பார்த்து வருகிறோம். இவை அனைத்தும் இதன் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகும். இப்போது ஜம்மு-காஷ்மீரில் உருவாகியுள்ள மக்கள் கூட்டணி  நாட்டில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாப்பதற்கான ஒட்டுமொத்த போராட்டத்தின் ஓர் அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும்.

பாஜக, வழக்கம்போலவே, மக்கள் கூட்டணியை, “தேச விரோதக் கூட்டணி” என்ற முறையில் தாக்கி இருக்கிறது. மேலும் அது பாகிஸ்தானின் கட்டளைப்படி நடந்துகொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது. ஆனால், மோடி அரசாங்கம் எதார்த்த நிலைமைகளை அறிந்துகொள்ள வேண்டும். மிகவும் கொடூரமான முறையில் ஓராண்டு காலத்திற்கும் மேலாக அங்கே ஏவப்பட்ட ஒடுக்குமுறைக்குப் பின்னர், மக்கள் அந்நியப்பட்டிருப்பது, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் அந்நியப்பட்டிருப்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து சக்திகளுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்க மத்திய அரசு தயாராக இல்லை என்றால், அங்கே ஜனநாயக வழியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. மத்திய மோடி அரசாங்கமும், பாஜகவும் எவ்வளவு மோசமான முறையில் ராணுவ ரீதியாகவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்றும் கூறி அடக்குமுறை நடவடிக்கைகளைப் பின்பற்றினாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சனையை அரசியல்ரீதியாகத்தான் கையாள வேண்டும் என்கிற அடிப்படை உண்மையை அவர்களால் உதாசீனம் செய்திட முடியாது.  வாஜ்பாய் அரசாங்கக் காலத்தின்போது, அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர், லாகூருக்குப் பேருந்து   போக்குவரத்தைக் கூட தொடங்கி வைத்தார். அப்போதிருந்த உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியின் தலைமையின்கீழ், இஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் பிரதிநிதிகள் உட்பட தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.



காஷ்மீரில் இயங்கிவரும் பிரதான அரசியல் சக்திகளுடன், இந்தியாவுடன் இருப்பதையே விரும்பும் பிரதான அரசியல் சக்திகளுடன் மோடி அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடத்த விரும்பவில்லை என்றால், மிகவும் சிக்கலாகிப் போயிருக்கிற காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் முன்னேற்றம் எதையும் காண முடியாது. அது நாட்டின் கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்துவது தொடரும்.

(அக்டோபர் 28, 2020)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *