” அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத்தொண்டில் இறங்கினேன்” – என்று சொன்னவர் பெரியார். அவர், அவர் என்று சொன்னது வ.உ,சி.யைத் தான்!
அத்தகைய பெருந்தலைவராம் வ.உ.சி., பெரியார் படத்துக்கு தேங்காய் உடைத்து விழுந்து வழங்கினார். பெரியாரையே பெருந்தியாகி என்றார். இவருக்கும் இடையிலான நட்பு என்பது கொள்கையைத் தாண்டிய அன்பு உறவாக இருந்துள்ளது.

வ.உ.சி.யால் தான் தீவிர அரசியலுக்குள் நுழைந்ததாக பெரியார் பேசி இருக்கிறார். விருதை சிவஞானயோகிகள்( 1840-1924) திருக்குற்றாலத்தில் 19.11.1906 அன்று திருவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த திருவிடர் கழகத்தின் கோவில்பட்டி கிளையின் 18 ஆவது ஆண்டு விழா கோவில்பட்டி போர்டு ஹைஸ்கூலில் ( இன்று அது வ.உ.சி.மேனிலைப்பள்ளியாக இருக்கிறது!) நடந்தது. அதில் வ.உ.சி.யும் பெரியாரும் இணைந்து கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பெரியாரைப் புகழ்ந்து வ.உ.சி. பேசுகிறார். அதன்பிறகு பேசிய பெரியார்,
”நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றிச் சொல்லியவைகள் யாவும் என்னிடம் உள்ள அன்பினாலல்லாது அவ்வளவும் உண்மை என்று தாங்கள் நம்பிவிடக்கூடாது என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய பெருங்கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத்தொண்டில் இறங்கினேன்” ( குடிஅரசு 26.6.1927) என்றார். அதாவது வ.உ.சி.யின் தியாகம் ஈ.வெ.இரா.வை வீதிக்கு இழுத்துவந்துள்ளது.

‘பெரியாரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும்” என்று 1928 நாகப்பட்டினத்தில் பேசிய வ.உ.சி. குறிப்பிடுகிறார். அப்படியானால் 1908 முதல் அவர்கள் இருவருக்கும் அறிமுகமும் நட்பும் இருப்பதை உணரமுடிகிறது. இதனை பிற்காலத்தில் தனது உரையிலும் பெரியார் உறுதி செய்கிறார். ”இந்த நாட்டின் விடுதலைக்காக குடும்பத்தோடு நாசமடைந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் வ.உ.சிதம்பரனார் அவர்களேயாகும். வங்காளத்தில் ஏற்பட்ட சுதந்திர உணர்ச்சி இயக்கக் காரணமாக நம் நாட்டிலும் துணி கொளுத்தப்பட்டது. ஆனால் நமது வ.உ.சி. அவர்கள் இதுமட்டும் போதாது என்று வெள்ளையர்களின் கப்பலுக்கு எதிராக கப்பலையும் கட்டி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் பிரயாணக் கப்பலாக ஏற்பாடு செய்தார். அந்தக் காலத்தில் நான் நன்றாக வாழ்ந்திருந்தவன் தான். வ.உ.சி.யின் இந்த முயற்சிக்காக எங்கள் ஊரிலே 35 ஆயிரம் வசூல் செய்து கொடுத்தோம். அதில் எங்கள் பணம் 5 ஆயிரம். முஸ்லீம் நண்பர்களுடையது 5 ஆயிரம், மற்றவர்களும் ஆயிரம், அய்நூறு என்பது போன்று உதவி செய்து அவரது முயற்சிக்கு பலந்தேடினோம்” ( 7.11.1948 சேத்துப்பட்டு வ.உ.சி., இளைஞர் கழக இலவச வாசகசாலை நூல் நிலையத்தை திறப்புவிழா, உலகத் தலைவர் பெரியார் பாகம் 2, பக்கம் 327) என்று பெரியார் பேசி உள்ளார்.

பெரியார் காங்கிரசுக்குள் நுழையும் போது, ( 1908) வ.உ.சி. மிகப்பெரும் தலைவராக இருக்கிறார். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்றுவிட்டார். 1912 இல் வ.உ.சி. வெளியில் வரும்போது காங்கிரசு கட்சியில் திலகர் காலக்கட்டம் முடிந்து காந்தி காலக்கட்டம் தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் 1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கமும் தோன்றிவிட்டது. இதற்கு எதிர்வினையாக பார்ப்பனரல்லாதார் நலனைப் பாதுகாக்க காங்கிரசு கட்சியும் முயற்சித்தாக வேண்டிய சூழல் தோன்றுகிறது. அத்தகைய சிந்தனை கொண்டவர்களின் அமைப்பாக சென்னை மாகாண சங்கம் ( 1917) உருவாக்கப்படுகிறது. இதில் கேசவப்பிள்ளை, திரு.வி.க., வ.உ.சி., பெரியார் போன்றவர்கள் இயங்குகிறார்கள். இந்த சென்னை மாகாண சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டு ஈரோட்டில் இரண்டாம் ஆண்டு விழா நடக்கிறது. இதன் தீர்மானத்தை வடிவமைப்பதில் சேலம் விஜயராகவாச்சாரியார், திரு.வி.க., டாக்டர் வரதராசலு, வ.உ.சி. ஆகிய நால்வரும் முன்னின்றதாக பெரியார் பிற்காலத்தில் எழுதுகிறார். பார்ப்பனரல்லாதார் நலன் குறித்து வ.உ.சி. அழுத்தமான கொள்கை கொண்டதை இதன் மூலம் அறியலாம்.( குடிஅரசு 20.12.1925)

This Fiery Freedom Fighter From Tamil Nadu Challenged the British on the Seas!

இதைத் தொடர்ந்து 1920 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்த 26 ஆவது சென்னை மாநில அரசியல் மாநாட்டில், அரசு வேலைவாய்ப்புகளில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் சமூகங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வ.உ.சி. தீர்மானம் கொண்டுவந்ததாக – இந்து 25.6.1920 ஆங்கில நாளேட்டை ஆதாரமாகக் காட்டி பெ.சு.மணி எழுதுகிறார்.
நெல்லை மாநாட்டின் உள்கூட்டமாக பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடியது. அதில் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை சோமசுந்தரம்பிள்ளை, வ.உ.சி., சிதம்பரம் என். தண்டபாணி ஆகியோர் கொண்டு வந்தனர், பின்னர் இது மாநாட்டின் விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமாநாட்டில் இத்தீர்மானத்தை பெரியார் முன்மொழிந்தார். வ.உ.சி.யும், தண்டபாணியும் வழிமொழிந்தார்கள். இங்கு தான் எஸ்.கஸ்தூரிரெங்கய்யங்கார் உள்ளே புகுந்து குழப்பி தீர்மானத்தை சில வார்த்தை விளையாட்டில் கொண்டு போய்விட்டு கெடுத்துவிட்டார் என்று பெரியார் எழுதுகிறார்.( குடிஅரசு 6.12.1925) ஆனால் இதே மாநாட்டில் கல்வித் துறையில் சமற்கிருதத்துக்கு உள்ள வாய்ப்புகளை தமிழுக்கும் தர வேண்டும் என்ற தீர்மானத்தை பெரியார் கொண்டுவர, அதனை வ.உ.சி.வழிமொழிய அத்தீர்மானம் நிறைவேறியது.

1920 இல் கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று வந்த வ.உ.சி. அதன்பிறகு அக்கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.ஆனால் பெரியார் காங்கிரசில் தொடரவே செய்கிறார். கோவில்பட்டி சென்ற வ.உ.சி. வழக்கறிஞராக தனது தொழிலைத் தொடர்கிறார். அப்போது அவர் நீதிக்கட்சி சார்பு கொண்டு இருந்ததாக பி.ஶ்ரீ.எழுதுகிறார்.  பெரியாரும் காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு வ.உ.சி.யும் அவருடன் இணைகிறார். பெரியாரின் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்திய நூல், ‘ஞானசூரியன்’. இதனை எழுதியவர் சுவாமி தயானந்தசரஸ்வதி. இந்நூலை முதலில் வெளியிட்டவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். இந்நூலை பெரியாருக்கு கொடுத்தவரும் அவரே. இதனை 1928 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்து பெரியார் வெளியிட்டார். பார்ப்பனர் மேலாண்மைக்கு ஆரியம் வழிவகுத்த இலக்கிய ஆவணங்களை அம்பலப்படுத்தும் நூலாக இது அமைந்திருந்ததால் தனது இயக்கத்துக்கு அடித்தளமாக ‘ஞானசூரியனை’க் கருதுகிறார் பெரியார். இந்நூலுக்கு மூன்று பேரிடம் சிறப்புரை பெற்றுள்ளார் பெரியார். வ.உ.சி., மறைமலையடிகள், கா.சுப்பிரமணியனார் ஆகியோரே அந்த மூவர். இந்த சிறப்புரையை 7.10.1927 அன்று கோயிற்பட்டியில் இருந்து எழுதியதாக வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், பார்ப்பனர் எதிர்ப்பில் மட்டுமல்ல, எத்தகைய சீர்திருத்தச் சைவராகவும் வ.உ.சி. இருந்துள்ளார் என்பதை இதன் சிறப்புரை மூலமாக அறியலாம்.

காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்போது மீண்டும் அவருக்கும் வ.உ.சி.க்குமான நட்பு துளிர்க்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பக்கட்டத்தில் சீர்திருத்த சைவர்கள் பலரும், அந்த இயக்கத்தை வழிமொழிந்தார்கள். வழிஏற்படுத்தியும் கொடுத்தார்கள். பெரியார், இராமாயணம் குறித்து பேசும் போது அவர்களும் சேர்ந்து விமர்சித்துப் பேசினார்கள். ஆனால் பெரியார், என்று பெரியபுராணத்தைக் கைவைத்தாரோ அன்றே சைவர்களும் எதிர்க்கத் தொடங்கினார்கள். ஆனால் வ,உ.சி, சீர்திருத்தச் சைவர்களிலும் இன்னும் தீவிரமானவராக இருந்தார். சைவர்கள் மத்தியில் வ.உ.சி.க்கு இருந்த எதிர்ப்பை ஆ.இரா.வேங்கடாசலபதி விரிவாக எழுதி உள்ளார். செட்டிநாட்டில் ஆற்றிய உரைக்காக கடுஞ்சைவர்கள் வ.உ.சி.யை கடுமையாகத் தாக்கியுள்ளனர். என்று ‘சிவநேசன்’ இதழில் நடந்த கருத்துவிவாதங்களை வெளியிட்டுள்ளார். 1929 மார்ச் மாதம் நெல்லையில் நடந்த சைவர் கூட்டத்தில் கலந்து கொண்ட வ.உ.சி. சீர்திருத்த சைவர் அணியையே சார்ந்திருந்தார் என்றும் சலபதி சொல்கிறார். சைவ சமயத்தைச் சீர்திருத்த வேண்டிய முறைகளைப் பற்றி வ.உ.சி. கூறியது ஏற்கப்படாததால் அதில் இருந்து வெளியேறியதாக குமரன்,குடிஅரசு இதழ்களை மேற்கோள் காட்டி சலபதி எழுதுகிறார். இதனடிப்படையில் பார்க்கும் போது சைவத்தை பெரியார் தாக்கிய போது சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறும் சைவராக இருக்காமல், சைவர்கள் கூட்டத்தில் சுயமரியாதைக் கருத்துக்களை விதைத்து அங்கிருந்து வெளியேறும் தீவிர எண்ணம் கொண்டவராக வ.உ.சி. இருந்துள்ளார்.

Image

வ.உ.சி. – பெரியார் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அறிய நாகப்பட்டினம் அடிப்படையாக அமைந்துள்ளது. 1928 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தேசபக்த சமாஜனத்தின் 6 ஆவது ஆண்டு விழா நடந்துள்ளது. அதில் பெரியாரின் படத்தை வ.உ.சி. திறந்து வைத்துள்ளார்.

இதில் கலந்து கொள்ள வ.உ.சி.யுடன் முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், சிதம்பரம் என்.தண்டபாணி, ‘திராவிடன்’ ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வ.உ.சி. அழைத்து வரப்பட்டுள்ளார். பெரியார் படத்தை திறந்து வைத்து பேசும்போது, ” இந்த திரு உருவப்படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை,மாலை,பகல் முதலிய வேளைகளில் வணங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.” ( குடிஅரசு 10.6.1928) என்று பேசினார் வ.உ.சி. அதேபோல் வ.உ.சி.யும் விழுந்து வணங்கி உள்ளார். அவரின் இச்செய்கையை பெரியார் கண்டித்தும் இருக்கிறார்.
” இந்தச் செய்தி அறிந்த எனக்கு மிகக் கஷ்டமாகிவிட்டது. பிறகு அவரையே ( வ.உ.சியை) நேரில் சந்தித்து இந்த அக்கிரமத்தை அய்யா அவர்கள் செய்யலாமா என்று கேட்டேன். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இப்படிச் செய்தால் தான் பார்ப்பனர்கள் என்னை நாஸ்திகன் என்று தூற்றமாட்டார்கள். தோழராகிய ராமசாமி படத்துக்கே இப்படி விழுந்துகும்பிடும்பொழுது நாஸ்திகனாக இருப்பானா?’ என்று கலங்குவர் என்உ பட்டென்று பதில் கூறினார். அவ்வளவு பார்ப்பனீய எதிரியாக இருந்து வந்தவர் நம் வ.உ.சி.( ( 7.11.1948 சேத்துப்பட்டு வ.உ.சி., இளைஞர் கழக இலவச வாசகசாலை நூல் நிலையத்தை திறப்புவிழா, உலகத் தலைவர் பெரியார் பாகம் 2, பக்கம் 327) என்று பேசியுள்ளார் பெரியார். இருவரும் எத்தகைய தலைவர்களாக இருந்துள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நாகப்பட்டினம் நிகழ்ச்சி!

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் குறித்த தெளிவான அரசியல் பார்வை வ.உ.சி.க்கு இருந்தது., அது அவரது பல்வேறு மாநாட்டு உரைகளில் வெளிப்பட்டது.1926 இல் மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாடு, 1927 இல் நடந்த கோவை பார்ப்பனரல்லாதார் மாநாடு, சேலம் அரசியல் மாநாடு ஆகிய மூன்றிலும் வ.உ.சி. கலந்து கொண்டார்.  ” காங்கிரசின் அமைப்பாளர்கள் பிராமணரல்லாதவர்கள். ஆனால் இப்பொழுது அதிகாரம் பிராமணர்களிடம் உள்ளது. இப்பொழுது எடுக்கப்படும் நடவடிக்கை அந்த அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காகத் தான்.” என்று கோவை மாநாட்டிலும்,

5.11.1927 சேலத்தில் நடந்த மூன்றாவது அரசியல் மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசும் போது, ” ”இராஜாங்க உத்தியோகங்களும் ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி நம் தேசத்தாருள் ஒற்றுமையுண்டாகப் போவதில்லை” என்றும் பேசினார். ( விடுதலை 20.11.1947) அதனால் தான் திராவிட இயக்க வரலாற்றில் திருப்புமுனை மாநாடாகச் சொல்லப்படும் தூத்துக்குடி மாநாட்டில் ( 1948 மே8,9) வ.உ.சி.யின் படத்தை திறந்து வைக்கச் சொன்னார் பெரியார். திறந்து வைத்துப் பேசியவர் குத்தூசி எஸ்.குருசாமி.

வ.உ.சி. மறைந்தது 1936 நவம்பர் 18. அதே ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டுக்கு வ.உ.சி. ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார். ” நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில் அதிலும் முக்கியமாக தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் பெருந்தொகையினர்களாகிய பார்ப்பனரல்லாக்தார்கள் பல துறைகளிலும் சிருதொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்துக்குட்பட்டு பின்னைலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவுநிலையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை. அதைப் பற்றி நான் பெரிதும் கவலை அடைகின்றேன். பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித்தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். ” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.( குடிஅரசு 17.5.1936) இதுதான் வ.உ.சி. விடுத்த வெளிப்படையான குரல். இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் குரல்.

மே மாதம் 11 ஆம் நாள் பெரியாருக்கு வ.உ.சி. ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ”சர்வக சாதிப் பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடுவதற்குத் தாங்கள் சொல்வதே சரியான உபாயம். அவ்வாறு சர்வக சாதிப் பார்ப்பனரல்லாதார்களின் மகாநாடு ஒன்று காஞ்சிபுரத்தில் வருகிற ஜூன் மாதத்தில் நடக்கப் போகும் தமிழர் மகாநாட்டுப் பந்தலிலேயே கூட்டுவிக்கும்படியாக நமது நண்பர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்களுக்கு நான் இதனுடன் ஒரு கடிதம் பொறுத்து எழுதியிருக்கிறேன். அவர்கள் பதிலை எதிர்பார்ப்போம்.கடவுள் துணை, தங்களன்புள்ள வ.உ.சிதம்பரம்பிள்ளை” ( விடுதலை 5.9.1972) என்று எழுதி இருக்கிறார் வ.உ.சி. மரணிப்பதற்கு ஆறு மாதத்துக்கு முன்பு எழுதி கடிதத்தில் வ.உ.சி. சொல்கிறார், அனைத்துக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒன்று கூட்டவேண்டும் என்று. இது தான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் கனவு!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “பெரியாரின் ‘நமது சிதம்பரம்’! (பாரதி புத்தகாலயம் நடத்திவரும் வ உசி 149 கருத்தரங்கத்தை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை) – திருமாவேலன் ”
  1. பெரியார் படத்தைப் பெரியவர் வ.உ.சி விழுந்து வணங்கினார் எனக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறான தகவலாகும். பெரியவரைச் சிறுமைப்படுத்துவதாகும். பெரியாருக்கும் பெரியவருக்கும் இருந்த உறவு அன்பும் மதிப்பும் மட்டுமல்ல. நேர்மையானதுமாகும். யாருக்காகவும் எதற்காகவும் வணங்காத பெரியவரைப்போய் படத்தை விழுந்து வணங்கினார் எனத் தவறாகப் பதிவிட்டுள்ளதைப் பேராசிரியர் திருத்தம் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குருசாமி மயில்வாகனன், சிவகங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *