சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைப்பெற்ற வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா –  பேரா. எ. பாவலன்

சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைப்பெற்ற வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா – பேரா. எ. பாவலன்




25.8.2022 அன்று சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக வீரமாமுனிவர் தமிழ் பேரவை சுழற்சி- 2 தொடக்க விழா இனிதே நடைபெற்றது.

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் கலந்து கொண்டார். தொடக்க நிகழ்வாக வரவேற்புரை தமிழ்த் துறைப் பேராசிரியர் ரேவதி ராபர்ட் (தலைவர், வீரமாமுனிவர் தமிழ் பேரவை சுழற்சி- 2) அவர்கள் நிகழ்த்தினார். அப்பொழுது இந்த விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் கல்லூரி செயலாளர் அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே,ச., அவர்களையும், தலைமையுரை நிகழ்த்துவதற்காக கலந்து கொண்ட இணை முதல்வர் முனைவர் ஜெ. ஏ.சார்லஸ் அவர்களையும், வாழ்த்துரை வழங்குவதற்காக வருகை தந்துள்ள தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்களையும், முனைவர் ம. ஜெயப்பிரகாஸ் ரத்தின தியாகு சுழற்சி- 2 தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளர் அவர்களையும், சிறப்பு விருந்தினர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும், மாணவர்களையும் மற்றும் பேராசிரியர் பெருமக்களையும் தன் இனிமையான தமிழால் வரவேற்றார்.

அப்பொழுது இந்த விழா எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் அவர்களையும் ரத்தின சுருக்கமாக, அதே சமயத்தில் கவிஞர் பாலரமணி அவர்களைக் குறித்தும் தன்னுடைய நினைவை அழுத்தமாகப் பதிவு செய்தார். கவிஞர் பாலரமணி அவர்கள் இன்றைய சிறப்பு விருந்தினர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் கணவர்.

அவர் சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவர் எழுதிய அத்துனைப் பெரிய அழகான இலக்கண நூலை வெறும் பத்து ரூபாய்க்கு தமிழ்ச் சமூகத்திற்கு கொடுத்துத் தன் பங்கிற்கு அறிவு பால் ஊட்டிய தகைசால் பெருந்தகை என்ற செய்தியை சுட்டிக்காட்டும் போது ஒரு கணம் அரங்கமே அமைதியானது. அத்துடன் ஆண்டாள் பிரியதர்ஷினியை மிக நேர்த்தியான முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்ததாக ஆசியுரை வழங்குவதற்காக அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே. ச., அவர்கள் தன் பங்கிற்கு தமிழின் உயர்வை தன் நாவால் தட்டி எழுப்பினார். அப்பொழுது வீரமாமுனிவர் எத்துனை பெரிய ஆளுமை மிக்கவர். அவர் தமிழுக்கு செய்த தொண்டுகளை நினைவு கூர்ந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினரையும் இன்முகத்துடன் பாராட்டி வரவேற்றார். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் தமிழ்ப் புலமையைத் தானும் அறிந்திருக்கிறேன். இன்னும் இன்னும் பல படைப்புகளை தந்து இச்சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும். அதேபோன்று ஒரு பொருத்தமான பொழிவாளரை அடையாளம் கண்டு தமிழ்த் துறை பேசிரியர் பெருமக்கள் மாணவர்களுக்கு கல்வி பால் ஊட்டுவதை மகிழ்ச்சிப் பொங்க தன்னுடைய கருத்தை முன்வைத்து உரையற்றினார்.

தலைமையுரை நிகழ்த்திய முனைவர் ஜே. ஏ. சார்லஸ் இணை முதல்வர் அவர்கள், ஆண்டாள் பிரியதர்ஷினி படைப்புகளில் இருந்தே தன்னுடைய உரையை நிகழ்த்தத் தொடங்கினார். அவர், தன்னுடைய எழுத்தால் இலக்கிய உலகத்தில் உச்சம் தொட்டவராக இருந்து கொண்டிருக்கிறார். பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் கூட நல்ல மனித நேயம் மிக்க பண்பாளர் என்பதை நானும் அறிவேன். தமிழ்த் துறை எப்பொழுதும் மாணவர்கள் நலன்களில் அக்கறை கொண்டது என்பதற்கு இந்த வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை ஒரு சாட்சி. இப்படிப்பட்ட தமிழ்த்துறை நடத்தும் விழாவில் பங்கெடுத்து இருப்பதும் எனக்கும் மகிழ்ச்சி. மேலும் துறைத் தலைவர் மற்றும் சுழற்சி- 2 ஒருங்கிணைப்பாளர் மேலும் வீரமாமுனிவர் தமிழ் பேரவையின் தலைவர் அனைவரையும் பாராட்டிய வரவேற்கிறேன். இத்துனை நேரம் பொறுமை காத்து செவிமடுக்கும் மாணவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்து அவர்களையும் வரவேற்று அமைகிறேன் என்று தன்னுடைய தலைமையுரையை அழகாக ஆற்றி முடித்தார்.

அதன் பிறகு தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் வீரமாமுனிவரின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டு சென்றார். அத்தோடு இல்லாமல் சிறப்புரை ஆற்றும் பொழிவாளரை தன் கவிதை மொழியால் அலங்கரித்தார். ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய நூல்களைத் தலைப்பாக அடக்கி… அடுக்கி.‌.. தன் கவிதையின் வார்த்தைகளைக் கோர்த்து… கோர்த்து… வாழ்த்துரை செய்தார். துறைத் தலைவரின் கவிதையைக் கண்ட பொழிவாளர் அவர்கள் புளங்காங்கிதம் அடைந்தார்.

துறைத்தலைவரைத் தொடர்ந்து, சுழற்சி-2 ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. ஜெயப்பிரகாஸ் ரத்தின தியாகு அவர்கள் தன் பங்கிற்கு, செயலர், இணை முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் பாராட்டி வரவேற்பு நிகழ்த்தினார்.

பொருத்த முடைய விழாவிற்கு பொருத்தமானதோர் சிறப்பு விருந்தினராக அமைவது என்பது தனிச் சிறப்பு. அந்த வகையில் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ்த்துறை முன்னெடுத்து இருக்கும் வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை குறித்தும் இலயோலா கல்லூரியின் சிறப்புகளையும் அடுக்கத் தொடங்கினார். அதுவரை சிறப்பு விருந்தினர் என்ன பேசுவார்?, எப்படி பேசுவார்? என்ற ஒரு எதிர்பார்ப்பு மாணவர்களிடம் நிலவியது. அப்பொழுதுதான் இந்தக் கல்லூரிக்கும், தனக்குமான உறவை அவர் ஓர் அற்புதமான கதை மூலம் சொல்லத் தொடங்கினார். தன்னுடைய கணவர் கவிஞர் பாலரமணி இந்தக் கல்லூரியின் பழைய மாணவர். என்னுடைய மகள், தன் தந்தைப் படித்த கல்லூரியிலேயே பயில வேண்டும் என்ற கொள்கையோடு இருந்து நம் இலயோலா கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தான் படித்த கல்லூரியில் தன் பிள்ளையையும் சேர்த்து படிக்க அனுமதிக்கும் எண்ணம் எதன் அடிப்படையில் வாய்க்கப்படுகிறது என்றால்? அந்தக் கல்லூரி தான் படித்தக் காலத்தில் ஏற்பட்ட உணர்வின் அடிப்படையில் தான் அந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும். அந்த வகையில் என்னுடைய கணவர் கவிஞர் பாலரமணி அவர்களும், மகளும் இந்த கல்லூரியில் படித்தவர்கள் அதே கல்லூரியில் நான் தமிழ்த் துறையில் இன்றைக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறேன் என்று நினைக்கும் போது உள்ளபடியே அத்தனை பெருமை கொள்கிறேன் என்று சொல்லும் பொழுது மாணவர்கள் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். அதன் பிறகு மாணவர்கள் கவனம் எங்கும் சிதையா வண்ணம் அவரை நோக்கியே அமைந்திருந்தது. இன்றையக் காலகட்டத்தில் மாணவர்களை அரங்கத்தில் அமைதியாக உட்கார வைப்பது என்பது பெரிய சவால் தான். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதிக் காப்பது பொழிவாளரின் தனித்திறமைப் பொறுத்தது. அதனால்தான் இன்று பேச்சு ஒரு கலையாக மாறி வருகிறது.

வள்ளுவர் சொல்வதைப்போல, செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் ரசனை குறையும் போது தான் அரங்கத்தில் சலசலப்பு ஏற்படும்.

ஆனால் சுமார் 30 நிமிடங்கள் வரை பொழிவாளர் தன் திறமையால் மாணவர்களை இலக்கியத்தின் மீது கவனத்தைத் திருப்பினார். மெல்ல.. மெல்ல… இலக்கியத்திற்கும் வீரமாமுனிவருக்குமானத் தொடர்பு குறித்து விவரிக்கத் தொடங்கினார். இத்தாலி தேசத்தில் இருந்து சமயத் தொண்டு செய்வதற்காக தமிழகத்திற்கு வந்தவர் தொடக்கத்தில் அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், அசாத்தியமான தேடலாலும் தமிழைக் கற்று தேர்ந்து அடுத்த 30 ஆண்டுகள் தமிழைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வீரமாமுனிவர். இது எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை. இன்றையத் தலைமுறைகள் நாம் ஒருவேளை இத்தாலி தேசத்துக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய ஒரு மொழியை கற்று அங்கு எப்படி பாண்டியத்யம் பெற முடியுமோ அப்படித் தான் வீரமாமுனிவர் தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்று தமிழில் ஆகச்சிறந்த நூல்களையும், படைப்புகளையும் வெளிக்கொணந்தார். அதிலும் குறிப்பாகக் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை முதலில் செய்த பெருமைக்குரிய தகை சால் பெருந்தகை வீரமாமுனிவர்.

தொல்காப்பியர் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு நூற்பா ஒன்று “எகரமும் ஒகரமும் இயற்கை அற்றே” இந்த எகரமும் ஒகரமும் இடத்துக்கு ஏற்ப கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள முடியும். குறிலுக்கும் நெடிலுக்குமான வித்தியாசம் தெரியாத ஒரு காலகட்டம். அதுவரை தமிழில் ஆகச் சிறந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனாலும் கூட அவர்கள் குறிலுக்கும், நெடிலுக்குமான வேறுபாட்டைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தமிழே அறியாத வேறு மொழியைப் பேசும் ஒரு மனிதர் தமிழைக் கற்று உணர்ந்ததால் குறிலுக்கும் நெடிலுக்குமான வேறுபாட்டை எளிமையாகச் சொல்லிக் கொடுத்தார். அதேபோன்று ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என்று குறிலுக்கும் நெடிலுக்குமான அடையாளத்தை தெளிவுப்படுத்தினார். தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்து உலகத்தில் தலைசிறந்த ஒரு படைப்பை வெளிக்கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அகராதி இல்லாத காலகட்டத்தில் முதல் முதலில் சதுர அகராதியை கொண்டு வந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய சிறப்பும் அவரைச் சாரும். உரைநடையின் தந்தை என்று போற்றப்படுவதற்கான காரணத்தையும், அதன் பின்புலத்தையும் அத்துனை ரசனையோடு மாணவர்களிடம் எடுத்து உரைத்தார்.

அவ்வப்போது மாணவர்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்காக தன்னுடைய பேச்சை வலிந்து பேசவில்லை. மாறாக தன் பேச்சை வலிமையாக மாற்றியவர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள்.
அந்த வகையில் சரியான காலத்தில், சரியான நேரத்தில் அறுவடை செய்தது போல அவருடைய பேச்சு அத்தனை இனிமையாக அமைந்திருந்தது.

ஏற்கனவே இந்த வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை மாணவர்களுக்காக மாணவர்களே முன்னின்று நடத்திய நிகழ்வு. நிகழ்ச்சி முடிவுக்கு எட்டிய பின்னரும் மாணவர்கள் பிரிய மனமில்லாமல் தாயார் ஆண்டாள் அவர்களிடம் அலாவிய காட்சி ஆசிரியர் பெருமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவிற்கு தமிழ்த்துறை மட்டும் அல்லாமல் மற்ற துறையில் இருந்தும் பேராசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்வில்தமிழ்த்துறை பேராசிரியர்கள் பேரா. யுவராஜ், பேரா. சந்தியாகப்பர், முனைவர் சகாயராஜ், முனைவர் பி. லெனின், பேரா. மைக்கேல், பேரா. ஜெயக்கொடி, பேரா.தரன் கலந்து கொண்டனர்.

மாணவர்களும் இந்த விழாவைக் கொண்டாடி…கொண்டாடி… மகிழ்ந்தனர்.

பேரா. எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை- 34

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. பாரதி சந்திரன்

    சிறப்பு லயோலா கல்லூரி உள்ளாக தமிழ் துறையை நடத்திய விழாவை நேரடியாக கண்டதைப் போல ஒரு திருப்தி தங்கள் செய்தியின் மூலமாக கட்டுரையின் மூலமாக அறிந்து கொண்டோம் ஆண்டாள் பிரியதர்ஷினி மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை உடையவர் அவரின் சிறப்புரை தங்கள் வர்ணனையால் சிறப்பாக விளங்கியது நன்றி நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *