உருதிரண்ட நாட்களனைத்தின் வடிவமனைத்தும் மும்மன வீட்டினுள், அலமார்ந்து திரிய, கைவிட முடியா வலியோடு தூக்கிச் சென்றே பழகும் லாவகத்திலிருந்து, அனைத்து ரணங்களையும் ஒருசேரத் துடைத்துப் பாரம் குறைக்கும் முயற்சிகள் சில நேரம் படைப்புகளிலும் ஏற்படலாம்.
மேல் நோக்கிய மேகங்களோடுப் பேசித்திரியும் மாயம் இங்கில்லை. காலுரசும் நுரைகடலின்பப் பேதங்களைக் கண்டு வியக்கும் வியப்பில்லை. அது அதுபாட்டுக்கென வாழும், பூக்களோடு உடனமர்ந்து பேசுவதில்லை. இக்கவிதைத் தொகுப்பிலுள்ள இவைகள், வேறு மாதிரியான படைப்புச் செயல்பாடுகள்.
வசமானவைகள் சில பொழுதுகளில் வெளியேறத் துடிக்கலாம். பெற்றவைகள் விடுபடக் கேட்கலாம். நடந்தவைகள் மறக்கக் கூறலாம். யாதாயினும் உள்பாடுகள் காணமுடியாத வேதனைகளோடு உள்ளேயே சுற்றிச்சுற்றித் தன்னையும், தான் சேர்ந்தாரையும் சுகப் படுத்திக் கொள்ளும் வியாபகத்தன்மை கொண்டதென இக்கவிதைகளைப் படிக்கும்பொழுது உள்ளுணர்ந்து கொள்ள முடிகின்றது.
கவிஞர் அமீர்ஜானின், ”குடையற்றவனின் மழை” கவிதைத் தொகுப்பை மேற்காணும் வகைக்குள் தான் அடக்க முடியும். பாரம் முழுமையாகக் கொட்டப்பட்டிருக்கிறன. அழகுணர்ச்சியுடன் வேண்டுமானால், மடை மாற்றிக் கொள்ளலாம். அர்த்தச் செறிவும், உணர்வுப் பெருக்கும், சூழலின் நெருடல்களும், தெவிட்டாத பாசமும், எங்கும் விரவிக் கிடக்கின்றன.
ஒற்றைப் பேனாவின் வழி, ஓராயிரம் சுகவலிகள் இறக்கி வைக்கப்பட்ட மந்திர லேகியமுள்ள சீசா இந்நூல்.
இக்கவிதைகளுக்குள், வார்த்தைகளில்லை. நடந்தவைகள் நடந்தவை களாகவே சிலை வடிக்கப்பட்டுள்ளன. வசனமிலாத படங்கள் போல், கண்முன் காட்சிகள் விரிகின்றன. கவிஞர் என்ன நோக்கோடுக் காட்சியைக் கண்டாரோ, அதே கண்கள் அதைப் பார்க்கிற பொழுதுகளிலும், படிக்கிற பொழுதும் நம்மை வந்தடைகின்றன.
சமூகச் சீரழிவுகள், உள்மனப் போராட்டங்கள், பாசம், விரக்தி, கோபம், மாய உலகு எனப் பெரிய வட்டத்திற்குள் அனைத்துக் கவிதைகளும் இங்குமங்கும் அலைகின்றன. உயிரோடு அலையவிட்ட படியினால், தொட நாம் எத்தனித்த பொழுதே, நமக்குள் ஊடுருவி, நாமாகி விடுகின்றன.
பல கவிதைகள் அர்த்த முதுமையையும், பல கவிதைகள் கால முதுமையையும் அடையாளப்படுத்துகின்றன. விடுபடப் போகிறோம் என்கிற பயமேலிடல் கவிஞரின் வார்த்தைகளில் தீவிரத்துவம் அடைந்திருக்கிறது என்பதை(க்) [கவிஞரின் இறப்பின் பின்னேக் கவிதையைக் காணும் பொழுது, இதை] வார்த்தைகள் சொல்லி அழுகின்றன.
”திசை மாறி வந்த பட்டாம்பூச்சியொன்று
அமர்ந்து கொள்ள
அந்த இருளின் முதுகைத் தேடி
சிறகசைத்துக் கொண்டிருந்தது.”
சூபி ஞானத்தின் வழி, வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, இவ்வாழ்க்கை மிகச்சிறிதெனப் படுகிறது. இறப்பின் பின் ஏதெனத் தெரியாததாகலின் இருளென வியாபித்திருக்கும். அதைத் தேடிப் பட்டாம்பூச்சியாகிய உயிர் சிறகடித்துப் பறந்து செல்கிறது.
இறப்பின் நிலைப்பாட்டை ’அகிம்சையின் இம்சை’யைக் கவிதையில் அழகாகச் சிந்தித்து அழகுறக் கூறும்பொழுது,
”மவுனத்தைப்
பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறது
பிரேத பேரமைதி”.
”நசுங்கினாலும்
அவஸ்தைப் படப் பிடிங்கி வெளிவர
மலரின் மரணத்தில்
நறுமணம்”
என்கிறார். அமைதியும், மவுனமும் ஒன்று தானே? இவருக்கு இல்லையாம். எப்படி இல்லை எனக் கேட்டால் ”பிரேதம் போல் எந்தவித அசைவின்றி உணர்வின்றி இருப்பது பேரமைதி, அசைவும், உணர்வும் மிகைப்படாமலிருப்பது மவுனம்” எனக் கவிதை மூலம் விளக்குகிறார். மலரெனத் தன்னுயிரை உருவகித்து மணம் வீசும் தன்மை கூறுகிறார்.
உணர்வு இருந்தும், இல்லாதிருப்பதை ’இறந்தமைக்குச் சமம்’ என்கிறார். உணர்வோடு கூடிய மனித உயிரே மகத்தானது என்பதை ’நீ எப்படி?’ எனும் கவிதையில், விளக்கம் அளிக்கிறார். அதாவது,
”உறங்கிக் கொண்டிருப்பதைச்
சாக்காடென்றான்.
பாட்டனுக்குப் பாட்டன்
எக்காட்டில் இருக்கிறாய்?
நீ…
படுக்கையில் இருந்தால்
பிணம்.
நடந்தால்
நடைப்பிணம்.
உணர்வோங்க இருந்தால் தான்
உயிர்ப்பில் இருப்பதாகப்
பொருள்.”
என்பதாக அமைகிறது. வீடுகளில் சந்தோஷங்களும், மகிழ்ச்சியும் தழைத்தோங்க வேண்டும். அங்கு பாசமெனும் இசை ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாது, வெறுமையும் விரக்தியும் நிலவுமானால், அது வீடாயினும் வீடல்ல, அது மயானம் என்கிறார்.
”வாழ்ந்து கொண்டிருக்கும்
மயானத்தில் சூழப்பட்ட
யாருமற்ற வீடுகள்
கூரை வேய்ந்திருந்தாலும்
வீடெல்லாம் வீடல்ல”.
மனம் நிம்மதியற்ற பொழுதுகளில், குளம், மரம் யாவும் வெறுமையே போதிக்கின்றன. அதன் நடத்தைகளும் அவ்வாறே இருக்கின்றன.
”ஈரமற்றுப் போனாலும்
வாய் திறந்து கொரட்டையிடும்
குளங்கள்”.
”எங்கெங்கோ இருந்தாலும்
நிழலற்றுத்தான் இருக்கின்றன
மரங்கள்”
இந்த இரு இடங்களிலும், நிழலற்ற மரங்கள், நீரற்ற குளங்கள், என்பதெல்லாம், காணும் காட்சிகளில் இல்லை. அடி ஆழ மனவெளி வெறுமையின் வெளிப்பாடுகள் தான் இவைகள். எங்கோ, எதற்கோ, தேடித்தேடி அலைந்து திரிந்து, அது கிடைக்காமல் வாடும் நிலைப்பாட்டைக் கவிஞர் பல இடங்களில் விரக்தியுடன் எழுதி இருப்பதைத் தெளிவாக உணர முடிகின்றது. இதனை,
தென்னம்பாளையென
சிரித்துக் குலுங்கிய மனம் எல்லாம்
விடுவிக்க துணிய
உயிர்களில் எதிரொலிக்கும்
விரக்தியின் வேட்கை”.
எனும் கவிதை வரிகள் மூலமும், கீழ்காணும் கவிதை வரிகள் மூலமும் மெய்ப்பிக்கலாம்.
”ஆடையற்றவனுக்கு
ஆடைகளை
நெய்து கொடுத்தாலும்
நிர்வாணங்களோடு தான் திரிய
வேண்டி இருக்கிறது
நிர்பந்தங்கள்”.
”ஆணிவேர்” எனும் கவிதையை, மிக நுண்மையாக உருவகப்படுத்திப் புனைந்து இருக்கின்றார். அதில், மரங்களையும், மனிதர்களையும் உருவகிக்கின்றார். சோக உணர்வு மேலிடத் தம்மை, ஆணிவேராகக் கொண்டு, வாழ்வை இனம் காட்டுகிறார். அதில், வெறுமையையும், விரக்தியையும், எதிர்பார்ப்பும் உள்ளக் கிடங்கில் இருப்பதை, வலியுடனே வெளிப்படுத்தியுள்ளார்.
”முறிந்து விழும் பொழுதும்,
தொங்கும்போதும்,
விழுந்து விட்ட போதிலும்,
கைப்பிடித்து
அரவணைக்கவோ காப்பாற்றுவோ
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை”.
கவிஞர் அமீர்ஜானின் ’குடையற்றவனின் மழை’ எனும் இக்கவிதைகளில், சமகாலப் பிரச்சினைகள், அரசியல், உள்மனப் போராட்டங்கள், ஞானக் கவிதைகள், மாய உலகைக் காட்டும் மாய பிம்பங்கள், பாசம், காதல் போன்றவையுடன் இயற்கையின் மறுபக்கம் குறித்தும், அழகாகக் கவிதைகள் புனையப்பட்டுள்ளன, ஆனாலும், அதில் வெறுமையான வாழ்நாட்கள், யாருமற்ற வெளி, தனிமை, சோகம், வலிமிகுந்த நெருடல்கள் என உள்வெளியோடு பேசுவதான உணர்வுமிக்க கவிதைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அவை, இறப்பைத் தொட்டுப்பார்த்து நலம் விசாரிக்கின்றன. விரக்தியை இலைபோட்டுப் பரிமாறுகின்றனர்.
கவிஞரின் கவித்துவம் பல இடங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குத் தரமிக்கதான கவித்துவத்தை நிறைத்து வைத்து இருக்கின்றன.
மனதில் ஏதும் இல்லை எனும்படி, மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் கவிதைப் பேழைக்குள், பேனா மை வழியாக அனைத்தையும் அடைத்துத் தன் மனதை மென்மையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
கவிஞர் அமீர்ஜானின் கவிதைகள் இன்னும் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய அற்புதமான கவிதைப் புத்தகம் ஆகும்.
பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
வேல்டெக் கல்லூரி, ஆவடி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கவிதைகளின் சாறு பிழிந்து காட்டப்பட்டுள்ளது. .