எலும்புன்னா எனக்கு ரொம்ப பிடிக்குமே.. – பேரா.சோ.மோகனாஎன்னம்மா கண்ணு..நல்லியா?

கண்ணு நீங்கள் மட்டன் சாப்பிடுபவரா? அப்படின்னா நல்லி எலும்புன்னு ஒரு நீள எலும்பைக் குழம்பில் போடுவார்களே..அது என்னான்னு தெரியுமா? ஆஹா.. அதன் சுவையே சுவை.. அதன் நடுவில் இருக்கும், கொழ கொழன்னு கரும்பழுப்பு நிறத்தில் ஒரு பொருள் இருக்கும். அதற்கு எலும்பு மஜ்ஜை ன்னு பேரு .. அதன் ருசியை அடிச்சிகிட,ஆளே கிடையாதுப்பா.அம்புட்டு ருசி.. அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாதுங்கோ.!..அதை சாப்பிட்டாத்தான் தெரியுமுங்கோ. அப்படி ஒரு ருசி..!அதனால் தான் அம்மாவிடம் குழந்தைகள்,, எனக்கு நல்லி ன்னு, எனக்கு நல்லி ன்னு ஒரு வேண்டுகோள்..தட்டுவாங்க. இதற்கிடையில், அப்பா ஊடேயே எனக்கு ஒரு நல்லி கிடைக்குமா என்பார். ? ஆனா,கறிக்கடைக்காரர், ஒரு ரெண்டு துண்டு தான் நல்லி ரொம்ப பிகுவோட தருவாரு.. அதுக்குத்தான் வீட்டுல இத்தனை அடிதடி..பா!

எனக்கு மட்டும், எனக்கும் மட்டும் எலும்புதானுங்க..! எலும்பு பாயா சாப்பிட்டு இருக்கீங்களா..படா சுவை.. இப்பவே நாக்கில் எச்சில் ஊறுகிறதா ?

என் உணவு ஆட்டின் தொடை எலும்புதாங்கோ..!

என்னப்பா கண்ணு, என்னமோ உனக்குத்தான் நல்லி எலும்பு பிடிக்கும்னு நினைக்காதேபா..!….ஏதோ நாம்தான் மட்டன சாப்பிடுறவங்க, மாசம் ரெண்டு தடவைதான் எடுப்போம்.என்றெல்லாம் சவடால் வேணாங்கோ நம்மைவிட பலே கில்லாடிகளும் உலகில் உண்டு. ஆனால் எலும்பை மட்டுமே சாப்பிடுற பறவை பார்த்திருக்கிறீர்களா? இருக்குப்பா..பறவை எலும்பு சாப்பிடுமா என்கிறீர்களா? ஆமப்பு,.. நெசமாத்தான் இதனை lammergeyer என்றும் சொல்கின்றனர் சொல்றேன். அது பேரு என்ன தெரியுமா? அதுதான் தாடிக்கார வல்லூறு .. ( bearded vulture. (Gypaetus barbatus))… அதனை “இரை பிடுங்கும் பறவை” என்றும் கூட சொல்வதுண்டு.. இந்த தாடிக்காரரின் உணவு, எங்கேயும், எப்போதும் வெறும் எலும்பு மட்டும்தான். அது மட்டுமல்ல, வேண்டியது ஆட்டின் தொடை எலும்பு மட்டுமே..அதிலுள்ள எலும்பு மஜ்ஜை தான் இவரின் பிடித்தமான, ஒரே உணவு, தன உணவில் 85–90% எலும்பு மஜ்ஜை வேணும் இவருக்கு.ஆனா இவரு தானா தனக்கு வேட்டையாட மாட்டாரு..மற்ற விலங்குகள் வேட்டையாடி கழித்துப் போட்ட எலும்புகளைப் பொறுக்கி அதனை உடைத்து, அதனுள் இருக்கும் எலும்பு மஜ்ஜையை நன்கு இஷ்டமாக, விரும்பி, ருசித்து ரசித்து உண்ணுவார். உலகிலேயே எலும்பை மட்டுமே உணவாகக் கொள்ளும் உயிரினம் தாடிக்கார வல்லூறு மட்டுமே. இது எப்புடீ..?

Bearded Vulture, Bird Of Prey, Eat, Meat, Raptor, Birds

நான் தனியானவன்…!

தாடிக்கார வல்லூறின் முந்தைய செல்லப் பெயர் “எலும்பு உடைப்பான்(“bone breaker”) என்பது தான். தாடிக்கார வல்லூறு பாரம்பரியமாகப் பழைய உலக வல்லூறுகளைச் சேர்ந்தது., குறிப்பாக, எகிப்திய வல்லூறுகளுக்குச் சொந்தக்காரர் இவர். ஆனால் . இதன் சிறகுகள் நிறைந்த கழுத்தும், டைமன்ட்/சாய் சதுர அமைப்பிலான வாலும் இதற்கு ரொம்பவே தனித்தன்மை நிலையைப் பெற்றுத்தருகிறது.பொதுவாக மற்ற விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு இப்படிப்பட்ட வாலமைப்பு இருப்பதில்லை.

எங்க ஊரு..மலைமேலேங்கோ…!

தாடிக்கார வல்லூறு.ஆப்பிரிக்கா,.ஐரோப்பா, காஸ்பியன் கடலை ஒட்டி, இந்தியா மற்றும் திபெத் போன்ற இடங்களில், குறிப்பாக உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. இவைகளின் வாழிடம் எங்கு தெரியுமா? மலையின் மேல், செங்குத்தான பாறைகளில், சில சமயம் புல்வெளிகளில்,மலைக் கணவாய்களில் வசிக்கும் .இந்த வல்லூறு சுமார் 3500 அடி உயரத்துக்குக் கீழே பொதுவாக வசிப்பதே இல்லை. ஐரோப்பாவில் 6,600அடி உயரத்திலும், ஆப்பிரிக்காவில் 14,800 அடி உயரத்திலும், ஆசியாவில் 16,000 அடி உயரத்திலும்,இந்தியாவில் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் 24,600 அடி உயரத்திலும் வாழ்கிறது. செங்குத்து மலைக்குன்றுகளின் மேல் தான் இவர் முட்டையிடுவார். எங்கேயும் எப்போதும் மலை மேல்தான் வாழ்க்கை. மலைமேல் வாழ்வைத்தான் என்று பாட வேண்டியதுதான்.

இந்தியர்களே..பெரியவர்களாய்..!

பொதுவாக, தாடிக்கார வல்லூறை எளிதில் இனம் காண முடியும், இதன் முகத்தில் பக்கவாட்டில் கருப்பு பட்டிகள் உண்டு. கண்களைச் சுற்றிச் சிவப்பு வளையம் காணப்படும். துடுப்பு போன்ற வால். கழுத்திலும்,உடம்பிலும் அடர் ஆரஞ்சு நிற இறகுகள் நிரம்பி இருக்கும். வல்லூறின் எடை , சுமார் 4.5-7.9 கிலோ வரை இருக்கும். இதன் இரண்டு இறகுகளையும் பரப்பினால் சுமார் 2.5 மீட்டர் அகலம் வரை நீளும்.. மேலும் பெண் வல்லூறு ஆணைவிடக் கொஞ்சம் பெரிசும் கூட.. அதுவும் இந்திய வல்லூறுகள் தான் உலகிலேயே பெரியவையாம். இவை இந்திய -சீன எல்லையில் நம்மைப்போலன்றி, சண்டை போடாமல் வாழ்கின்றன.. இந்தியாவில் சுமார் 200 வல்லூறுகள் வாழ்கின்றன. உலகிலேயே மொத்தமே சுமார் 2,000-10,000 தாடிக்கார வல்லூறுகள் மட்டுமே வாழ்கின்றன.

Nature, Animals, Birds, Raptor, Bearded Vulture

என்னமோ போ..நாங்க குறையுறோம்..!

பொதுவாகத் தாடிக்கார வல்லூறுகள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஜோடியுடன்தான் வாழ்கின்றன. இதன் வாழ்நாள் 40 ஆண்டுகள். இவை குளிர்காலத்தின் இடையில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே இடுகின்றன. இவை வசந்தத்தின் துவக்கத்தில் குஞ்சு பொரிக்கிறது.. இந்த வல்லூறு 6 வயது வந்ததுமே.. முட்டையிடத் தொடங்குகிறது. பொதுவாக முட்டை 52 -58 நாட்களில் பொரிந்து குஞ்சு வெளிவந்துவிடும். ஒரு முட்டை பொரிந்து வந்த குஞ்சு, இரண்டாவது முட்டையிலிருந்து வந்த குஞ்சை கொன்றுவிடும். முதல் முட்டை பொரிக்காவிட்டால் இரண்டாவது பல்வேறு காரணிகளால் பொரிப்பதும் இல்லை. எனவே போகப்போக இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எனவேதான் உயிரியல் வல்லுநர்கள் இதனை அருகி வரும் இனமாக , 2014 ஜூலையிலிருந்து, இதனைச் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளனர்.

  நாம புதுசா சாப்பிடலைங்க..!

   எல்லா வல்லூறுகளைப் போலவும் , இவையும் இறந்த விலங்குகளையே உண்ணுகின்றன. அதுவும் மற்ற  விலங்குகள் சாப்பிட்டுவிட்டு விட்டுப்போன, மிச்ச சொச்சத்தையே   இவை உண்ணுகின்றன. அதுவும் இவருக்கு ரொம்ப பிடித்தது.. எலும்புதான்.. அதுவும் வெள்ளாட்டின் நல்லி எலும்புதான் என்று சொன்னால் நம்ப  மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை தம்பி.. தாடிக்கார வல்லூறின் உணவு  எலும்பு மஜ்ஜை மட்டுமே. எதனைச் சாப்பிட்டாலும்,,அதான்பா கல்லை சாப்பிட்டாலும் கூட ஜீரணிக்கக் கூடிய அற்புதமான  உணவு மண்டலத்தைப் பெற்றிருக்கும் ஜீவன்தான் இந்த தாடிக்கார வல்லூறு.

   நீங்க மட்டுமா புத்திசாலி..நானும் கூடத்தான் அப்பு..!

   தாடிக்கார வல்லூறு எப்படி இந்த எலும்பை எப்படிச் சாப்பிடுகிறது என்றால்.. அது உணவை விட மிகவும், சுவையானதும், வியப்பானதுமான விஷயமாகும். இந்த வல்லூறு, ஆட்டின் தொடை எலும்பை விழுங்க முடியாது என்று பழக்கத்தில் தெரிந்து  கொள்கிறது. பின்னர் அதனை உடைத்துச் சாப்பிட கற்றுக் கொள்கிறது அது எப்படிங்க  ஒரு பறவை மனுஷனைப் போல எலும்பை உடைக்கிறது, நண்பா.. அதுதான் அதுதான். உடைக்க முடியாத சின்ன சின்ன எலும்புகளை அப்படியே விழுங்கிவிடுகிறது. எலும்பை இதன் சீரண மண்டலத்தின் நீர் எளிதாகச் செரிமானம் செய்துவிடும்.இதன் வயிற்றில் உள்ள சீரணநீர் அதிக அமிலத்தன்மை உள்ளது இதன் pH ஒன்றை விடக் குறைவு. எனவே பல், தோல், குளம்பு, எலும்பு எதுவானாலும் சீரணம் ஆகும்.

Image result for bearded vulture

  எப்படி..எப்படி..?

     இந்த வல்லூறு பெரிய எலும்பைத் தூக்கிக் கொண்டு மலைப்பாறைகளின் மேல் பறக்கும். தாடிக்கார வல்லூறுகள் சுமார் தன் எடையுள்ள எலும்பைக் கூட சுமக்கும் வலுவுள்ளவை. சமயத்தில் இணையர்கள் இணைந்தே வேட்டையை நடத்துவார்கள். அது  சுமார்  50–150 மீட்டர் உயரத்தில் பறக்கும் போது, திடீரென கீழே இறங்கும். அப்போது அதன் அலகில் உள்ள எலும்பை ஒரு பாறை மீது வீசிப் போடும். உயரத்திலிருந்து விழும் எலும்பு, மோதும் வேகத்தில் உடையும் அல்லவா? அப்போது அதன் உள்ளே உள்ள எலும்பு மஜ்ஜையும் வெளியே சிதறும். அதனை இந்த வல்லூறு வேடிக்கை பார்க்காமல், உடனே அங்கும் இங்கும், ஜெட் வேகத்தில் சுற்றிச் சுற்றி  பறந்து,  பறந்து அத்துணை எலும்பு மஜ்ஜையையும் லபக் லபக் லபக்கென்று விழுங்கி வைக்கும். நினைக்கவே என்ன கொஞ்சம் கற்பனை செய்யக் கூட முடியாத விஷயம்தான். ஆனால் இதுதான் நண்பா உண்மை. ஒருக்கால், ஒரே தடவையில் எலும்பு உடையாவிட்டால்,என்ன செய்யும் என்கிறீர்களா? அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறார்.. இவர். அதுதான், எலும்பை  இது  மீண்டும் கொண்டு போய் தூக்கிப் போட்டு உடைத்துச் சாப்பிடும். இப்படி எலும்பு உடைப்பில் நிபுணத்துவம் பெற, இந்த சாகசக் கலையைக் கற்றுக் கொள்ள இந்த வல்லூறு எவ்வளவு காலம் பயிற்சி மேற்கொள்ளும் என எண்ணுகிறீர்கள்? sis சின்ன குஞ்சுகள் எலும்பை உடைக்க  கற்றுக் கொள்ளும் காலம் சுமார் 7 ஆண்டுகள் வரை என்றால், நீங்கள் நம்புகிறீர்களா? ஆனா இதுதான்  உண்மைங்க; சமயத்தில், இவை ஆமைகளைக்கூடத் தூக்கிச்   சென்று மோதி உடைத்துச் சாப்பிடும்.