நூல்அறிமுகம்: பெளலோ கொய்லோ *ரஸவாதி* – அன்பூநூல்: ரஸவாதி
ஆசிரியர்: பெளலோ கொய்லோ
தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 157
விலை: 120
அந்தலூசியாவைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவன் சந்தியாகு. புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவன். பிரபஞ்சத்தின் மீதும் பயணங்களின் மீதும் தீராக் காதலுடையவன். புதையல் பற்றிய கனவொன்றை இருமுறை கண்டதன் தொடர்ச்சியாய்.. அந்தக் கனவை நோக்கிய பயணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதில் முனையும் இவனை… பெற்றோர் பாதிரியாராக்க ஆசைப்பட.. இவனோ ஊரைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட… ஆடு மேய்ப்பதொன்றே அதற்குச் சாத்தியமென்று சொல்லி மூன்று பழங்கால தங்க நாணயங்களைத் தந்து வழியனுப்புகிறார் தந்தை.
அந்தக் காசுக்கு ஆட்டுமந்தையொன்றை வாங்கிக்கொண்டு தன் கனவை நோக்கிப் பயணப்படுகிறான் சந்தியாகு. வழியில் நாடோடிக் கிழவியொருத்தியிடம் தன் கனவுக்கான விளக்கத்தைக் கேட்டுக் கொண்டதற்காக கிடைக்கப் போகும் புதையலில் பத்தில் ஒரு பங்கைத் தருவதாக அவளுக்கு வாக்கு கொடுக்கிறான். அதன்பிறகு ஒரு கிழட்டு ராஜாவிடம் தன்னிடம் இருக்கும் ஆடுகளில் பத்தில் ஒரு பங்கினைத் தந்து..
பிரமிடுக்கு அருகில்தான்..தான் தேடும் புதையல் இருப்பதாக அறிந்துகொண்டு.. தன் தேடலைத் தொடருகிறான். தொடரும் தனது பயணத்தில் ஆடுகள், பணமென்று தன் இருப்பு மொத்தமுமாய் இழந்து..
நிர்கதியானதொரு நிலையில் ஒரு பளிங்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்து தன் பயணத்திற்கான சேமிப்பைச் சேகரித்துக் கொண்டு.. தன் கனவு நோக்கி நகர்தலில்.. ஒரு ரஸசாதியுடனான சந்திப்பும்..
தான் இது நாள் வரைக்கும் தேடியலைகிற புதையலுக்கும் மேலானதொரு காதலில் முட்டிக்கொள்வதுமாக நீண்டு நெடிதுயரும் இந்தப் பயணத்தின் முற்றுப்புள்ளியை தொடங்கின புள்ளிக்கே இழுத்து வந்து சேர்க்கிறது இதுகாறும் அவனை அலைக்கழித்து வந்த புதையலின் பாதை.


புதையல் கைவரப் பெற்றதா இல்லையா என்பதை விடவும்… தன்னைத் துரத்தும் தன் கனவினைத் தேடிக் கண்டடையும் இந்தப் பயணத்தின் வழி நெடுகிலுமாய்.. அவன் சந்திக்கும்  ஏமாற்றங்களும்.. கற்றுக்கொள்ளும் பாடங்களும் சேகரித்துக் கொள்ளும் அனுபவங்களும் தான் புத்தகத்தில் நிறைந்து வழியும் வாழ்வின் தேடலுக்கான ரஸவாதங்கள்.
பழகிய, பழக்கப்பட்ட சூழ்நிலைகளில் பொருந்தியிருப்பதை விடவும் தனக்குப் பழக்கமில்லாத புதிய சூழல்களை அணுகுவதும் புதியவைகளைக் கற்றுக்கொள்வதுமாக அவ்விடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் இருக்கிறது வாழ்வை அணுகும் சாகசத்தின் முடிச்சு என்பதனை நமக்கு உணரத் தருகின்றன புத்தகமெங்கும் கிடைக்கும் பொளலோவின் இப்படியான வார்த்தைப் பொறிகள்..
“வாழ்க்கையில் எளிமையான விசயங்கள் தான் ரொம்பவும் அசாதாரணமானவை. புத்திசாலிகள் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்”.
” நீ ஒன்றை அடைய விரும்பினால், அதில் வெற்றி பெறுவதற்கு இந்தப் பிரபஞ்சம் மொத்தமும் முயற்சி செய்யும்”.
மொத்தத்தில்…
உன் இதயம் சொல்வதைக் கேள். உனக்கான கதவைத் திறக்கும் சாவி அதுமட்டுமே என்பது தான் இந்த புத்தகம் நமக்குள் நடத்தும் ரஸவாதமாக நான் உணருகிறேன்.
இதைத்தான்  ரத்தினச் சுருக்கமாக நம் பாட்டிமார்கள்… மிக எளிமையாக போகிற போக்கில் சொல்லிச் செல்வார்கள்…
” எண்ணம் போல் வாழ்வு” என்று.
அவ்வளவே தான் வாழ்வென்பது.
வாசித்துப் பாருங்கள்…
உங்களுக்குள்ளும் பல கதவுகளைத் திறக்கலாம் … இந்த ரஸவாதி.