எது சரியான வரலாற்று ஆய்வு முறை?

இன்று,வரலாறுகள் திருத்தப்படுவது  மிக மோசமான வகையில் தொடர்கிறது. இந்து தேசிய மதவெறி கண்ணோட்டத்துடன் வரலாற்றுத் துறையில் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன.என்.சி.ஆர்.டி பாடப் புத்தகங்களில் மத்திய அரசு செய்து வரும் மாற்றங்கள் ஒரு எடுத்துக்காட்டு. 

 அறிவியல் ரீதியாக எழுதப்பட்ட வரலாற்றுப் படைப்புகளை  “சரி செய்வதாக” கூறி,  ஒன்றிய பாஜக அரசும், அதன் ஆதரவாளர்களும் வரலாற்றை உருக்குலைத்து வருகின்றனர்.”மகத்தான இந்து மத அடிப்படையிலான கடந்த கால வரலாற்றை” மீட்டு வருவதாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.

 அவர்களின் இந்த “சரி செய்யும் முயற்சி” எதிர்கால இளம் தலைமுறையை மூடத்தனம் நிறைந்த மதவெறியர்களாக மாற்றுமே தவிர, சமூக அக்கறை,பகுத்தறிவு,மனிதநேயம் கொண்ட இளைஞர்களை அது உருவாக்கிடாது.

வரலாறு அபினியாக…..

 மறைந்த வரலாற்று அறிஞர் எரிக் ஹாப்ஸ்வாம் தேசியவாதத்தை பற்றி கூறுகிறபோது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எப்படி அபினி மீது மோகம் இருக்குமோ, அதே போன்று தேசியவாதம் பேசுபவர்களுக்கு வரலாறு இருக்கிறது என்று குறிப்பிட்டார். இன்றைய நடப்புகள் இந்தக் கூற்றினை மெய்ப்பித்து வருகின்றன.

 இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு இருந்தபோது அன்றைய ஆளுகிற கூட்டம் தன்னுடைய நலனுக்கு ஏற்றவாறு வரலாற்று நூல்களை வெளியிட்டது. தங்களது மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் வகையிலான நூல்கள் அன்றைக்கு வெளிவந்தன. 1817 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் மில் எழுதிய “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு” காலனியவாதிகளின் பார்வையிலிருந்து வரலாற்றை விளக்கும் ஒரு நூல்.

 இந்தியாவின் வரலாற்றை “இந்து நாகரிகம்” “இஸ்லாமிய நாகரிகம்” “ஆங்கிலேயர் காலம்’ என்ற வகையில் கால வரையறை செய்து ஜேம்ஸ் மில் வரலாற்றை விளக்கினார்.நாட்டை ஆண்ட மன்னர் பரிவாரங்களின் மத சாய்மானத்தை வைத்து வரலாறு விளக்கப்பட்டது.இந்து, இஸ்லாம் என மத அடிப்படையில் வரலாற்றை விளக்குவதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. 

 இந்திய வரலாறு இந்து தேசம் இஸ்லாமிய தேசம் என்று தனித்தனியானது எனவும், இரண்டும் எப்போதுமே முரண்பட்டு மோதிக் கொண்டு இருந்ததாகவும் ஜேம்ஸ் மில் சித்தரிக்கிறார். தொன்மைக் காலம் இந்துக்களின் காலமாகவும், அன்று இந்து மதம் கோலோச்சியதாகவும், அடுத்து இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும், மூன்றாவது காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்தியா வந்ததாகவும் ஜேம்ஸ் மில் விவரிக்கிறார்.

 எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் மதம் என்கிற ஒரே ஒரு காரணியை மையப்படுத்தி அவர் வரலாற்றை விளக்கினார். ஆர்எஸ்எஸ் தற்போது அமைக்க முற்படுகிற இந்துராஷ்டிரா என்பது அன்றைக்கு ஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டம்தான்.

 ஆக,காலனிய காலகட்டத்தில் அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த நிகழ்ச்சி நிரலையே இன்றைக்கு இந்துத்துவாதிகள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இன்றைய இந்து பெரும்பான்மைவாத கருத்தியலுக்கு வித்திட்டது ஆங்கிலேய அறிவுஜீவிகள்தான்.

 இந்தியாவை சீரழித்தது மேற்கத்திய தத்துவங்கள் என்று தமிழக ஆளுநர் பேசினார்.ஆனால், மத அடிப்படையில் பிளவுபட்டு இருக்க வேண்டும் என்ற ஆங்கிலேயர் கனவை ஆர்எஸ்எஸ் அமலாக்கத் துடிப்பது ஏன்?

  

 ஜேம்ஸ் மில்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இன்றைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.மத தேசியவாதம் அடிப்படையில் இந்து கண்ணோட்டத்தோடும் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடும் வரலாற்றை பார்க்கிற பார்வை வலுப்பட்டு வருகிறது.

 இதற்கு நேர் மாறானது இந்திய தேசியம் என்பது. இந்த இந்திய தேசியம் இந்திய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. இது விடுதலைப் போராட்ட காலத்தில் அனைத்து குடிமகன்களையும் மத, சாதி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, நவீன இந்தியாவை உருவாவதற்கு வித்திட்டது .

 இந்திய தேசியம் ஜனநாயக, மதச்சார்பற்ற அடிப்படையைக் கொண்டது.இந்திய தேசியம் கட்டமைத்த மகத்தான மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையை தகர்ப்பதுதான் மத அடையாளம் சார்ந்த தேசியவாதம்.இதன் வெளிப்பாடாக வரலாற்றைத் திரிக்கிற முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன.

 இந்தியாவை மதம் சார்ந்த இந்து, இஸ்லாம் தேசங்களாகப் பார்க்கும் அழிவுப் பாதையை இந்து தேசியம்  முன்னிறுத்துகிறது.

 வரலாற்று ஆய்வு நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதனை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விளக்கிட வேண்டும். பழைய, புதிய மொழிகளை அறிந்து, தொல்லியல், மொழியியல் உள்ளிட்ட வேறுபட்ட பல துறை சார்ந்த ஆதாரங்களைத் திரட்டி விளக்கங்களை முன்வைக்க வேண்டும்.இது உண்மையான வரலாற்று ஆசிரியரின் கடமை.

 

 ஆனால்,எந்தவிதமான ஆதாரங்களையும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளாமல், வலதுசாரிக் கண்ணோட்டத்துடன்  வரலாறு எழுதப்படுகிறது.காலனியவாதிகளன் கண்ணோட்டத்தை அப்படியே சுவீகரித்து வரலாற்று மோசடிகளை வகுப்புவாதிகள் செய்து வருகின்றனர்.

மார்க்சிய ஆய்வு முறை

 மார்க்சிய தத்துவம் மிகச்சிறந்த வரலாற்று ஆய்வு முறையை வழங்குகிறது. 

 இதனை ஏங்கல்ஸ் ” கம்யூனிஸ்ட் அறிக்கை” முன்னுரையில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“…..அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. 

“ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. 

 “எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்.

 “அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்”

 இது மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம். வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் வழிகாட்டுகிற மிகச் சிறந்த கருவியாக இது விளங்குகிறது.

(தொடரும்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *