”அதென்னண்ணே எஸ்.எஸ்.ஆர்.யுனிவர்ஸ் பார்ன்னு இந்தப் பாருக்கு பேர் வச்சிருக்கீங்க..” ஜான் கேட்டான். அரசரங்கன் சிரித்துக் கொண்டார். அச்சிரிப்பு அவருக்கான பெருமிதமாகவும் கேட்டவனுக்கான நக்கலாகவும் அதிர்ந்தது.

“அது தம்பி ஒரு எஸ்ஸு சுயமாய்.., அடுத்த எஸ்ஸு சம்பாரிச்ச.., ஆர்ங்கிறது ராஜ்ஜியம்., அதாவது சுயமாய் சம்பாரிச்ச ராஜ்ஜியம்ன்னு அர்த்தம்.. பெறகு அந்த யுனிவர்ஸ்ங்கிறது பிரபஞ்சம் பார்ன்னாத்தேன் உங்களுக்கேத் தெரியுமே..” என்றவர் மீண்டும் அதே சிரிப்பினைச் சிரித்தார்.

“எனக்கென்னமோ சூட்சமமா சம்பாரிச்ச ராஜரங்கன்னு உங்களச் சொல்லலாம் போல தோணுதுண்ணே” என்றான் ஜான். அதற்கும் அதே சிரிப்பினைச் சிரித்தவர்..

“தம்பி நல்லாப் பேசுறீங்க.. முன்னாடி கவுண்டர்ல சொல்லிருக்கேன் பணத்த வாங்கிட்டு கெளம்புங்க., நாளைக்குப் பத்திர ஆபிஸுக்கு வந்து பதிஞ்சு கொடுத்திட்டு மீதிய வாங்கிக்கங்க., அம்மாவத் தூக்கிட்டு வர்றதுக்கு நானே கார அனுப்பி வைக்கிறேன்.”  என்றார். சரிங்கண்ணே என்ற ஜான் கிளம்பினான்.

“மாமா பாருக்கு பின்னால இருக்குற இடம்..”

“ஆமா ஆண்டவரோடது.. அடுத்தவாரம் முடிஞ்சிருமே..” என்றார் அரசரங்கன் அவரது உதவியாளரும் மச்சினனுமான கோதண்டம் சொல்லிமுடிப்பதற்கு முன்பாகவே.

“அதில்ல மாமா பேசி வச்சிருந்தோம்ல்ல.. இப்ப திடீர்ன்னு மொரண்டு பிடிக்கிறாப்ல., யாரோ தூண்டி விட்டிருக்காங்க போல., போலிஸ் ஸ்டேசனுக்குப் போவோம் இல்ல நேரா கோர்ட்டுக்கே போவோம்ன்னு சொல்றாப்ள..” தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெதுவாகச் சொன்னான் கோதண்டம். அரசரங்கன் வழக்கமான சிரிப்பைச் சிரித்தவாறே..

“கோதண்டம் பச்சப்புள்ளையாப் பேசுற., போலிசும் கோர்ட்டும் நமக்காத்தானே இருக்கு., அவென் அங்க போனா அந்த இடத்த நாம வாங்காம விட்டுருவோமா., இந்தத் தெருவவே நம்ம கைக்குள்ள கொண்டாந்த்துட்டோம்., ஒன்னு ரெண்டில்ல நாப்பது வீடுன்னு ஒனக்கே தெரியும்ல., இன்னும் மிச்சம்ன்னு ஆண்டவரச் சேத்து ஆறேழு வீடு இருக்குமா.,  பொறுமையா இரு அவனவனுக்குன்னு ஒரு சிக்கல் வரும்.. அப்ப பாத்துக்குவோம்..”

“இல்ல மாமா நாளுக்கு நாள் பார்ல கூட்டம் அதிகமாயிட்டே இருக்கு.. பைக் காருன்னு நிக்க இடமில்ல., அந்த இடத்த வேகமா முடிச்சோம்ன்னா கொஞ்சம் வசதிப்படும்., அவனுக்கு என்னக்கிச் சிக்கல் வர்றது நாம என்னக்கி முடிக்கிறது..” என்ற கோதண்டத்தின் பார்வையில் நக்கலும் எரிச்சலும் தெரிந்தது.

“அப்ப ஒன்னு பண்ணுவோம் வழக்கம் போல சிக்கல நாமளே கெளப்பிவிடுவோம்.. முத்துக்காளைய வரச் சொல்லி., அவெங்கிட்ட., அந்த வீட்டுப் புள்ளைக பள்ளியோடம் போறப்ப வர்றப்ப தன்ணியப்போட்டு அசிங்கமா சத்தம் போடச் சொல்லு., பத்து மணிக்கு மேல அவெய்ங்க வீட்டுப் பக்கம் நாலு பயல்கள விட்டு கஞ்சாவ ஊதச் சொல்லு., வீட்டு வாச முன்னாடி வாந்தியெடுக்கச் சொல்லு., தானா வருவாய்ங்க நம்மகிட்ட., ” ஹ்ஹேம் என்று கோதண்டத்தைப் போடா என்பது போல் செருமிக்கொண்டார் அரசரங்கன்.

”இதெல்லாம் சொல்லி ஆண்டவர மெரட்டியாச்சு மாமா., நீங்க பேள்றத மோள்றத அள்ளுறதும்., ஒங்க வசவக் கேக்குறதும் எங்களுக்கொன்னும் புதுசில்ல., பாத்துக்கிராலாம்ன்னு திமிராச் சொல்றான்..” கோதண்டத்தின் வார்த்தைகளில் கொலைவெறி இருந்தது.

“எஸ்.சி வீட்டுப் பயல்லே., இப்பத்தேன் பேசத் துணிஞ்சுட்டாய்ங்கே., அவனுக்கு முன்னாடியே அந்த இடத்த நாம வாங்கின மாதிரியா ஒரு போலி டாக்குமெண்ட்டப் போடு., மத்தத பாத்துக்கிருவோம்..” என்ற அரசரங்கனின் வார்த்தைக்கு சரிங்க மாமா என்று கிளம்பியவனைத் திரும்ப அழைத்தார்.

“கோதண்டம் ஆண்டவர் சொந்தக்காரப்பய எவனையாவது புடி., அவெம் மூலமா நம்ம சாமியார்கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்லு., அந்த இடம் ஆண்வடர்கிட்ட இருந்தா கொலபழி விழுகும்., நோய்நொடி வரும்., அந்த இடத்துல கெட்ட ஆவிகளோட சுத்தல் இருக்கு., பரிகாரம் அதிதுன்னு சொல்லி மனசக் கலச்சிருவாப்ல., அவெஞ் சரிப்பட்டு வல்லைன்னா., அவெம் பொண்டாட்டியையாவது சாமியார்கிட்ட கூட்டிட்டுப் போயிரணும் புரியுதா..” என்றார் அரசரங்கன்.

“அப்படியே நடந்தாலும் எடத்த நமக்கு விக்க மாட்டாம் போல மாமா..”

“ நீ என்னடா எதுக்கெடுத்தாலும் இப்படியே பேசுற.. இந்த நாப்பது வீட்டையும் எப்படி முடிச்சோம்., கேட்டொடனையே குடுத்திட்டாய்ங்களா என்ன., நமக்குத் தெரிஞ்ச எவனாவதொருத்தம் பேர்ல முடிப்போம்., பெறகு நமக்கு மாத்திக்குவோம்., மொதல்ல அவெம் இருக்குற எடத்த விட்டு போனாப் போதும்ன்ற நெலமைக்கு வரணும்.. எல்லாத்தியும் வெலாவாரியாக் கேட்டுக்கிட்டு.. போ போயி ஆகுற வேலையப் பாரு..” என்ற அரசரங்கன் தான் உட்கார்ந்திருந்த அந்த குசன் நாற்காலியில் உடம்பை ஆட்டி அழுந்த அமர்ந்தார். கோதண்டம் தனது செல்போன் செல்பி கேமராவில் தனது நெற்றி நாமத்தை சரிபார்த்து கொண்டு கிளம்பினான்.

இன்று உள்ள அரசியல் சூழலில் வெளியூரிலிருந்து வந்து அரசரங்கன் போல அக்கிரமம் செய்பவர்களைப் பற்றி நினைத்தாலே கைபர் போலன் கணவாய்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. இந்த ஊருக்கு பத்து ஊர் தள்ளி இருந்த ஊரில் இருந்து இவர்கள் இங்கே வந்திருந்தாலும் கைபர் போலன் கணவாய் கடந்து வந்தவர்களின் வாசனை இவரிடம் அதிகமாகவே அடித்தது. சரி கதைக்கு வருவோம்..

பனிரெண்டு மணிக்கெல்லாம் பாரைத் திறந்தாக வேண்டும். வாடிக்கையாளர்கள் வாடிவிடக்கூடாது என்பதில் எப்பொழுதும் கவனமாயிருக்கும் அரசரங்கன் அதற்கான வேலைகளைத் தொடர்ந்தார். ஒருபக்கம் சீட்டாட்ட டேபிள்கள் தயாராயின. இதில் அவருக்குத் தனி வருமானம் டேபிள் காசு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் தேறும்.

இடியாய் இவர் பேசி பார் திறப்பதற்கான முன்னோட்டப் பணிகளைத் தூண்ட மின்னலாய் ஓடித் தவித்து வேலையை சடசடவென செய்தார்கள் அவரது பணியாட்கள். இத்தனைக்கும் ஒரு நேரச் சோத்துக்கும் ஒருநாள் முழுசாக குடும்பத்தை நடத்த முடியாத சம்பளத்துக்கும்.

அதிகாலையிலிருந்தே அந்தக் கடைவீதி தனக்கான சுறுசுறுப்பைத் தொடங்கியிருந்தது. எல்லாவகையான கடைகளும் உள்ள அப்பகுதி வழக்கமான டீக்கடைத் திறப்போடு அன்றைய பயணத்தை துவக்கியது. பொழுது விடிய விடிய ஒவ்வொரு கடைகளாக திறந்து கொண்டிருந்தனர். உலகத்தில் என்ன எது எப்படி நடந்தாளும் கதிரவன் வழக்கம் போல் கிழக்கே உதிக்கத் தொடங்கினான்.

அவன் பெயர் உமர்முக்தார். அவனது அத்தாவிற்கு புரட்சியாளர் உமர்முக்தார் என்றால் அவ்வளவு பிடிக்கும் அதனாலேயே மகனுக்கு அந்தப் பெயரை வைத்து அழைத்து அழைத்துப் பூரித்துப் போயிருந்தார். அந்த உமர்முக்தார் தான் அந்த கடைவீதியில் அமைந்திருக்கும் அந்த பெரிய கேட்டின் வாயிலில் ஆடை அரைகுறையாக கலைந்து பாதி நிர்வாணமாய் மட்ட மலாக்கப் படுத்துக்கிடந்தான். அநேகமாக அவனது உடுப்புக்கள் சலவை கண்டு வருடத்திற்கும் மேலாகியிருக்கும் போல. அவனது உடம்பும் முகமும் தலைமுடியும் தாடியும் அவனது உடுப்புக்களோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

கதிரொளி அவன் முகத்தில் பட்டுத் தெறிக்க தனது இரு கைகளையும் குறுக்கே வைத்து கண்களை மூடிக் கொண்டான். மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

கடைவீதியில் எல்லாக் கடைகளும் திறந்திருந்தன., மக்கள் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டிருந்தத்து. உமர்முக்தார் படுத்திருந்த அந்த பெரிய கேட் மட்டும் இன்னும் திறக்கவில்லை.

அந்தப்பக்கமாக பேண்ட் சர்ட் போட்டு இன்சர்ட் செய்து முகத்திற்கு ரிச் ஆக கண்ணாடி அணிந்து மின்னும்வாக்கில் பாலீஷ் போட்ட ஷூ அணிந்து வந்த அவன் உமர்முக்தாரின் நிலையைப் பார்த்த்தும் நின்றான். நின்றவன் முகத்தில் அட்சரேகைகளும் தீர்க்கரேகைகளும் மாறி மாறி பல ரேகைகளாக ஓடின.. உமர்முக்தாரின் முகத்திலிருந்து கால் வரை மெதுவாக அவன் கண்களை ஓடவிட்டான். ஆச்சரியப்பட்டான் ச் கொட்டினான். திரும்ப காலிலிருந்து முகம் வரை அவன் கண்களை ஓடவிட்டான் ஆச்சரியப்பட்டான் ச் கொட்டினான்., வானத்தைப் பார்த்தான் தன் தலையை ஆட்டி நெற்றியில் கைவைத்து ப்ச் என்று உதட்டைப்பிதுக்கினான். தனது பாக்கெட்டிலிருந்த டச் போனை எடுத்து பார்த்தான் மீண்டும் வெறுப்பாய் ச் சொல்லிக்கொண்டான். உமர்முக்தார் படுத்திருந்த இடத்திலிருந்து முப்பதடியில் இருக்கும் மெயின்ரோட்டிற்கு வேகமாகப் போனான் இரண்டு புறமும் திரும்பிப் பார்த்தான். மீண்டும் ச் சொன்னான்., திரும்ப உமர்முக்தாரிடம் வந்தான். முகத்திலிருந்து அவனது கால் வரை தன் கண்களை மீண்டும் ஒடவிட்டான்..

”யார்ண்ணே அது ஒருத்தம் படுத்துக் கெடைய்க்கான்.. இன்னொருத்தேன் அவனுக்கும் ரோட்டுக்குமா போய்ட்டு வந்திட்டே இருக்கான்..” அந்தத் தெருவிலிருந்த அந்தப் பேப்பர் மார்ட்டுக்கு வந்தவர் பேப்பர் கடைக்காரரிடம் நக்கலாய்க் கேட்டார்.

“அதவிடுங்கண்ணே வழக்கமா நடக்குறதுதேன்.. அந்தக் கண்ணாடி போட்டவந்தேன் புதுசா இருக்கான்., யாருன்னு தெரியல்ல.. காலைல கட தொறந்தததிலிருந்தே இது நடந்துக்கிட்டு இருக்கு., வேணும்ன்னா கொஞ்சம் நேரம் இருந்து பாத்துட்டுப் போங்க..” என்றார் பேப்பர் கடைக்காரர்.

“ நீங்க வேற., நமக்கு ஆயிரஞ்சோலி இருக்குண்ணே., “ என்றார் வந்தவர்.

உமர்முக்தார் தனது முகத்தை மறைத்திருந்த கைகளை விலக்கி பளிச்சென்று கண்களைத் திறந்தான். கண்ணாடிக்காரன் கொஞ்சம் பயந்து பின்வாங்கினான்.

“யென்னா.. பாத்துட்டையில., போடா., வீடியோ எடுத்தயா., போ போயி வாட்ஸப் பேஸ்புக்குன்னு போடு.. போடா..” என்று நிதானமாகச் சொன்னான் உமர்முக்கதார். சொன்னவன் திரும்ப பழைய நிலைக்கே சென்றுவிட்டான். அந்த நிதான வார்த்தை கண்ணாடிக்காரனை பயமுருத்தியிருக்க வேண்டும் போல அவனது முகத்தில் பாய்ந்து கொண்டிருந்த அட்ச தீர்க்க ரேகைகள் நெளிய மீண்டும் வானத்தைப் பார்த்தான் தலையை ஆட்டி ப்ச் என்றான்.

Muslim | The Asian Age

“அடியே..” என்ற உமர்முக்தாரின் கரத்த குரலுக்கு ஒட்டமெடுத்தான். சுற்றி முற்றி இருந்த கடைக்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என இந்தக் காட்சிகளை அவரவருக்குத் தகுந்த மாதிரி பேசிச் சிரித்து ஆச்சரியப்பட்டு கவலைப்பட்டு கோபப்பட்டுக் கொண்டார்கள்.

உமர்முக்தார் நிலைமாறாது அப்படியே கிடந்தான். அந்தப் பெரிய கேட் திறந்தது. உள்ளே இருந்து வாளி நிறைய தண்ணீரோடு இரண்டு பேர் வந்தார்கள். உமர்முக்தார் மூஞ்சியில் தண்ணீரை சுளீரென்று அடித்தார்கள். அவன் எரிச்சலாய் முகத்தைச் சிலுப்பினான். தரைகளில் கையை ஊன்றி இறுக்கமாக எழுந்தான், கலைந்திருந்த ஆடைகளை சரிசெய்தான். கொஞ்சநேரம் வாளியில் தளும்பிக்கொண்டிருந்த மீதத் தண்ணீரைப் பார்த்துக் கொண்டே இருந்தான். தளும்பல் குறைந்து வானத்தின் நீலமும் வெள்ளையும் தெரிய தனது முகத்தைப் பார்த்தான். நேற்றிரவு ஒருமணி வரையிலும் அவன் குடித்த பிராந்தி ஒமட்டிக்கொண்டு வந்தது. அப்படியே ஓடிச் சென்று அந்தக் கேட்டின் நடுவாசலில் வாந்தியெடுத்தான். எல்லோரும் முகத்தைச் சுழித்தார்கள். இவனும் சுத்தி முத்தி பார்த்து முகத்தைச் சுழித்துவிட்டுத் திரும்ப கேட்டுக்கு முன்னால் அவன் படுத்திருந்த அதே இடத்தில் திரும்பவும் போய் பழைய நிலையிலேயே படுத்துக் கொண்டான்.

“இவந்தேன் இப்படிச் செய்வான்னு தெரியும்ல அந்தாளு வந்து அனுப்பி வைக்க வேண்டியது தான.. அவெம் பிரச்சன என்னென்னா., தெனமும் அந்தாளுதேன் இவனக் கவனிச்சுக்கிறான்னு ஊருக்குத் தெரியனும்.. இவனுக்கென்னான்னா அந்தாளுதேன் கைத்தாக்கலா தூக்கிட்டுப் போயி திரும்ப சரக்கும் செலவுக்குப் பணமும் கொடுத்தனுப்பனும்.. என்னா பொழப்புடா கர்மம்..” புலம்பினார் பேப்பர் கடைக்காரர். அவரது கடைக்குள் இருந்த தொலைக்காட்சியில் வள்ளுவருக்கு காவியணிந்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

“வள்ளுவர அவ்வளவு சீக்கிரமா அவனுக விடமாட்டாய்ங்க போல., கம்யூனிஸ்ட்கட்சிக்காரு அருணேஞ் சொல்றது கரெக்ட்டு தான..” என்றார் பேப்பர் வாங்க வந்தவர்.

“அரசியல் நமக்கெதுக்குங்க., பொழப்பு சரியாப் போனாப் போதும்ங்க.,” என்றார் பேப்பர் கடைக்காரர்.

சின்னானும் காசியும் வேகமாக வந்தார்கள். போனில் பேசிக் கொண்டிருந்த அரசரங்கன் கண்ஜாடையில் என்ன என்று கேட்க..

“வழக்கம்போல திரும்ப படுத்துக்கிட்டாண்ணே.., என்னைக்குமில்லாம கேட்டு முன்னாடி பேண்டு வேற வச்சிருக்கான்..” என்றான் சின்னான்.

“..க்காளி அவனெல்லாம் குண்டியில குத்தணும்ண்ணே..” என்றான் காசி.

“குண்டியில குத்துனா கேஸில்லாம்மா தப்பிச்சுக்கிறலாம்ன்னு பாக்குற., நல்ல ஆம்பளன்னா அவன நெஞ்சுல குத்தி தூக்கியெறியனும்டா.. அய்யா ம் ன்னாருன்னா இப்பக்கூட செஞ்சுவிட்டுருவேன்” என்றான் சின்னான் காசியிடம்.

“ சும்மா இருங்கடா நீங்க ஏன் அடிச்சுக்கிறீங்க., நாந்தேன் நம்ம வாட்ச்மேன அந்த இடத்துல பேளச் சொன்னேன்., நீங்க போய் சுத்தம் பண்ற வழியப் பாருங்க..” என்று அதட்டினார் அரசரங்கன்.

“அய்யா நீங்க போயி..” என்ற சின்னானிடம்

“எல்லாத்துக்கும் எப்படி காய் நகட்டனும்ன்னு எனக்குத் தெரியும்டா., எதையும் சட்டுப் புட்டுன்னு முடிக்ககூடாது., இதெல்லாம் ஒங்களுக்கும் வெளங்காது., நீங்க வேலையப் பாருங்க நான் போயி அவனப் பாத்துக்கிறேன்.” என்ற அரசரங்கன் உமர்முக்தாரை நோக்கி கிளம்பினார்.

படுத்துக்கிடந்த உமர்முக்தாரை தட்டி எழுப்பினார் அரசரங்கன். அவரது வார்த்தைகள் அன்பாய் வெளிப்பட கண்களில் குரூரம் தாண்டவமாடியது. எழுந்த உமர்முக்கதார் அவர் தோளில் தோதாக கைபோட்டுச் சாய்ந்து கொண்டான்.

“ யேம் முக்தாரு தினமும் நீ கேக்கலன்னாலும் அண்ணே ஒனக்காக குவாட்டர் பிராந்தியும் சிக்கன் பிரியாணியும் கொடுக்குறேன். எல்லாத்தியும் வாங்கிக்கிட்டு அண்ணே யேவாரத்துகே எடஞ்சல் பண்றியேப்பா., அல்லா தப்பா நெனைக்க மாட்டாரா., இதெல்லாம் ஹராம் இல்லையா..” என்றார் அரசரங்கன் கருணையாய் சுற்றியிருப்பவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் கேட்கும்படியாய்.

“என்னது ஹேராம்..மா., அந்தப் பேரச் சொல்ல ஒங்களுகெல்லாம் துப்பில்ல., ஹேராம்ன்னு சொன்ன காந்திய சுட்டுக் கொன்ன நாடுதான இது.” என்றான் உமர்முக்தாரும் சத்தமாக.

“அப்படில்லாம் பேசக் கூடாதுப்பா., தப்பில்ல..” அரசரங்கனின் அந்த வார்த்தையில் நடிப்பு நர்த்தனமாடியது. அப்படியே குழைந்து உருகினார்.

“ஏன் பேசக்கூடாது உண்மைய யாரு வேணும்ன்னாலும் பேசலாம்ல்ல., ராமர் யாரு., தம்பிக்காக நாட்டக் கொடுத்துட்டு காட்டுக்குப் போனவரு., நீயி எங்கத்தா கூடப் பழகுன பழக்கத்துக்கு இந்த எடத்த ஏமாத்தி வாங்கிக்கிட்ட., என்னையும் சீட்டாட வச்சு நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்ட., இன்னக்கி எஸ் எஸ் ஆர் யுனிவர்ஸ் பார்., ஜொலிக்குது. எங்கத்தாவும் அம்மாவும் ஏமாந்த வலியிலேயே உக்கிச் செத்து போனாக..” உமர்முக்தார் பேசப் பேச சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இங்கே வேடிக்கை பார்ப்பவர்களே எதிர்காலத்தில் அரசரங்கனை நல்லவர் எனச் சொல்லப் போகிறவர்கள். அதற்காகவே உமர்முக்தாரின் அத்தனை பேச்சுக்களையும் அரசரங்கன் தனக்கு வந்த வெறியை பல்லை இறுக்கிக் கொண்டு அடக்கினார். ஏனென்றால் கொள்ளையடித்தாலும் கொலை செய்தாலும் மக்கள் நல்லவன் என்று சொல்லும்படி நடிக்கத் தெரிய வேண்டும் என்பது அவரது ஃபார்முலா.

“ பல்லு ஒன்னுக்கொன்னு சண்ட போட்டு வெளில வந்துரப் போகுதுண்ணே., நீ நல்லத்தான இருக்க., சிரிண்ணே..” என்றான் உமர்முக்தார்.

“ இது அல்லாவுக்கே அடுக்காது முக்தாரு., நீ திரும்பத் திரும்ப ஹராமாப் பேசுற..” என்றார்.

“ சும்மா அப்படிச் சொல்லாதண்ணே., நீ ஹராம் ஹராம்ன்னு சொல்றப்ப எல்லாம் எனக்கு ஹேராம் ஹேராம்ன்னு காதுல விழுகுது. ஒன்னோட வாயில இருந்து அந்த மாதிரி கேக்குறத நான் விரும்பல., மொதல்ல ஒன்னோட நெத்தியில போட்டிருக்கிற நாமத்த அழி., நாமம் போட்டவனையெல்லாம் கெட்டவனா நெனைக்க வேண்டியிருக்கு..” என்றவனுக்கு பாரிலிருந்து குவாட்டரை கொண்டுவந்து கொடுத்தார்கள்.

அரசரங்கன் அவனது பாக்கெட்டில் நூறு ரூபாயை வைத்துவிட்டார். தனது பாக்கெட்டையும் அரசரங்கனையும் மாறி மாறிப் பார்த்த உமர்முக்தார்.,

“என்னண்ணே பாட்டில்ல வெசத்த யேதும் கலந்திருக்கியா.. இன்னைக்கி இல்லாட்டியும் என்னைக்காவது கலக்கத்தேம் போற.. அதான உந்திட்டமே ” அரசரங்கனிடம் சொல்லிக் கொண்டே அவனுக்குக் கிடைத்த குவாட்டர் பாட்டிலை அங்கேயே உடைத்து அப்படியே குடித்துச் செருமினான்.

“ஏண்ணே இந்தக் குடிக்காரப்பயலுக்குப் பின்னாடி இப்படியோரு கத இருக்கா., பாவம்ண்ணே., வலி., அதேம் அந்த ஆள அந்தப் பேச்சு பேசுறாம்போல.,” என்ற பேப்பர் வாங்க வந்தவர் பேப்பர் கடைக்காரரிடம் தொடர்ந்தார்..

“ எங்கூர்ல இப்படித்தாண்ணே ஒரு கிறுக்குப்பய கோயில் முன்னாடியே படுத்துகெடப்பான்..” என்றார் ஆச்சரியமும் கேள்வியுமாய்.

“ஏங்க எதெதுக்குப் போய் முடிச்சுப் போடுறீங்க., நமக்கெதுக்குங்க அந்தப் பேச்செல்லாம்., இந்தாங்க உங்களுக்கு பண்டல் போட்டாச்சு..” என்றார் பேப்பர் கடைக்காரர் பண்டலை முடிந்து கொண்டே.

கடையிலிருந்த தொலைக்காட்சியில் பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் புதிதாக மசூதி கட்டிக் கொள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு கொடுக்க வேண்டும் என்றும் ஐந்துபேர் கொண்ட உச்சநீதிமன்ற பென்ச்சின் தீர்ப்பை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருந்தார். செய்தியைக் கவனித்த பேப்பர் வாங்க வந்தவர்..

“என்னண்ணே இப்படி தீர்ப்புச் சொல்லிட்டாக..” என்றார்.

“நமக்கெதுக்குங்க அதெல்லாம்., அரசியல் பேசாதீங்க., காசக் குடுத்துட்டு பண்டலத் தூக்கிட்டு கெளம்புங்க..” என்றார் பேப்பர் கடைக்காரர்.

அவரும் என்னமோண்ணே என்றவாறு பண்டலைத் தூக்கிச் சுமந்து கொண்டு கிளம்பினார்.

 

அய்.தமிழ்மணி,

46கே5, புதிய நகராட்சி அலுவலகத் தெரு,

கம்பம் – 625 516 தேனி மாவட்டம்.

9025555041, 7373073573 – [email protected]

 

 

5 thoughts on “ சிறுகதை: ”இடம்” – அய்.தமிழ்மணி”
  1. எளிமையான வடிவம்.
    சரியான செய்கை.

    கதையில் பாபர் மசூதி இடிப்பை இணைத்த ‘இடம்’ அருமை.

    வாழ்த்துக்கள். 💐💐💐

  2. அருமையான. நடை.
    வலுவான களம்.
    படைப்பாளி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
    தொடரவும்

  3. ஆ.முத்துக்குமார் சின்னமனூர் தமுஎகச says:

    🙏🙏🙏💐💐💐👍👍👍👍!நிலத்தை ஏழைகளிடமிருந்து பறிக்கும் அதிகார கும்பலின் முகத்தை தோலுரித்துக்காட்டிய சிறுகதை.நமக்கு அரசியல் எதுக்குணே சமூக குத்தல் அருமை.ஹேராம்,
    பின்புறத்தில் குத்தினால் கேஸ் இல்லாம தப்பிச்சிடலாம் என்பவை நறுக்கு தெரித்த இடங்கள்!!!!👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐

  4. மத்திய அரசின் அடாவடி அரசியலையும்,மாநில அரசின் மது அரசியலையும் கதையில் கையாண்டவிதம அருமை!
    அதிலும் ஹராம், ஹேராம்,நாமம் போடுவதே கேடு செய்யவே போன்ற கதையின் நகர்வுகள் அருமை!
    வாழ்வில் நாம் கண்டும் காணாது கடந்து போகும் விடயங்களை கதையாக நகர்கின்றது.
    வாழ்த்துக்கள் !

  5. இடத்தை அடிச்சுப் புடுங்க பார்த்திருக்கிறோம். ஆனால் அரசரங்கன் ஒரு டைப்பா ஆட்டையப் போடுறாரே. அப்புறம் கோயிலுக்கு முன்னாடியும் உமர்முக்தர் போல ஒருவர் இருக்கிறார் என்று தூக்கி வாரி போடுகிறார் ஆசிரியர்.

    அத்தனையும் பேப்பர் கடைக்காரர் போல பார்த்துக்கொண்டு கடக்கிறோம் நாமும்.அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *