sirukathai: pathilal - thangesh சிறுகதை : பதிலாள்- தங்கேஸ்
sirukathai: pathilal - thangesh சிறுகதை : பதிலாள்- தங்கேஸ்

சிறுகதை : பதிலாள்- தங்கேஸ்

மொழி பெயர்ப்பு சிறுகதை 

SUBSTITUTE : மாபசான் ( மூலம் பிரெஞ்ச் )

பதிலாள் ( ஆங்கிலத்திலிருந்து தமிழில் தங்கேஸ் )

 

“ அது மேடம் பண்டாரி தானே “

“” இல்லவே இல்லை “”

“”நான் சொல்றேன் அது மேடம் பண்டாரி தான் “

முதிய , கண்ணியமான , பக்தி இழையோடும் தோற்றம் கொண்ட மேடம் பண்டாரி சரிகை வைத்த தொப்பி அணிந்து கொண்டு அங்கே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் . அவருடைய சுருள் சுருளான பொய் கூந்தல் தலையோடு பசை போட்டு ஒட்டியது போல் அழுத்தமாகப் படிந்திருந்தது .

‘’ அது மேடம் அவர்களே தான் சந்தேகமே இல்லை ‘’

‘’ உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருச்சுக்குன்னு நினைக்கிறேன் ‘’

‘’ நான் உனக்கு சத்தியமே பண்ணித் தர்றேன் அது மேடம் பண்டாரியே தான் ‘’

‘’ அப்படின்னா அவங்களப் பத்தி நீயே சொல்லு பார்க்கலாம் ‘’

‘’ நான் விலாவாரியாகவே சொல்றேன் நீ கேட்டுக்கோ ‘’

மரியாதைக்குரிய வழக்கறிஞர் திரு பண்டாரி உயிரோடு இருந்த காலத்திலேயே இந்தப் பெண்மணி திருமதி பண்டாரி தனது கணவரின் உதவியாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு , தன் வெகு பிரத்யேகமான வேலைகளுக்கெல்லாம் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதாக கிசு கிசுக்கப் பட்டதுண்டு . மற்ற எல்லா நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கும் இருக்கும் இயல்பான கெட்ட குணங்களெல்லாம் திருமதி பண்டாரிக்கும் உண்டு . ஏன் சற்று அதிகமாகவே உண்டு என்று கூட சொல்லலாம்.

‘’ மிகவும் அந்தரங்கமான , தவறுகளை எல்லாம் இருளில் செய்து விட்டு ,வெளியில் நன்னடத்தை சிறிதும் பிசகாத பக்தி பழமாக , தோற்றம் தருவது அவருக்கு என்றுமே கை வந்த கலை தான். . நல்ல இளம் வயது கொண்ட , கட்டுமஸ்தான அழகான இளைஞர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும் . அதற்கான காரணங்களையெல்லாம் நீ அலசி ஆராய்ந்து கொண்டு இருக்க கூடாது. வேறொன்றுமில்லை. உனக்கும் எனக்கும் அழகான பெண்களை பிடிக்கிறதா இல்லையா ? அது போல தான் அவருக்கும் அழகான இளைஞர்களை எப்போதும் பிடித்திருப்பது. ‘’

‘’ முதியவர் திரு பண்டாரி இறந்த பிறகு , இந்த விதவை திருமதி பண்டாரி , தன் கணவர் விட்டுச் சென்ற ஒரு நல்ல நிரந்தர வருமானத்தின் மூலமாக, அமைதியான , குற்றம் சொல்ல முடியாத ஒரு அழகான வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தார் . மற்ற பெண்களைப் போலவே அவர் தேவாலயத்திற்கு மிகுந்த பயபக்தியுடன் சென்று , தன்னுடைய பக்கத்து வீட்டார்களைப் பற்றியெல்லாம் புறம் பேசிக் கொண்டுதானிருந்தார் . அதே நேரம் மற்றவர்கள் தன்னைப் பற்றி அப்படி எதுவும் பேசுவதற்கு இடம் தந்து விடாத படியும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்..’’

‘’ மேடம் இன்னும் கொஞ்சம் முதுமை அடைந்தபோது , ஒரு தவற்றை இரகசியமாக செய்து விட்டு அதை திறமையாக மறைத்து விடும் அதி புத்திசாலித்தனம் அவருக்கு இயற்கையாகவே வந்திருந்தது. . அதன் விளைவாக அவரது முகத்தில் தீய குணங்கள் வந்து மொத்தமாக அப்பிக் கொண்டு ஒரு விஷமத்தனமான தோற்றத்தை அவருக்கு தாராளமாகவே தந்திருந்தது. ஆனால் நான் இப்பொழுது சொல்லப் போவது அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.. இது வேறு ஒரு அசாத்தியமான சம்பவம் . எனக்கென்னவோ இதை கேட்டாலும் நீ அதை நம்பப் போவதில்லை என்று தான் தோன்றுகிறது.. அட சுற்றி வளைத்து சொல்லுவானேன் .உனக்கு நேரடியாகவே நான் சொல்லி விடுகிறேன் இது நடந்தது சென்ற வெள்ளிக்கிழமை தான் போதுமா ? .

** என்னுடைய நண்பர் ஜீன் ஆங்கில் மோர் , குதிரைப் படைப்பிரிவின் கேப்டனாக இருந்தார். . அவரைப் பற்றித் தான் உனக்கு நன்றாகத் தெரியுமே ? அவருடைய படைப் பிரிவு அப்போது ரூட் லா ரீவெட்டில் முகாமிட்டிருந்தது . ஒரு நாள் அதாவது சென்ற வெள்ளிக்கிழமை காலையில் அவர் தன்னுடைய படைப் பிரிவை பார்வையிடச் சென்றபோது அங்கே இரண்டு வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அவர் காண நேர்ந்தது. வாய் சண்டையாக ஆரம்பித்த தகராறு கடைசியில் வாள் சண்டையில் போய் முடியும் அளவிற்கு வளர்ந்து விட்டதாம். சண்டையின் முடிவில் ஒரு வழியாக அவர்கள் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டார்கள் . கேப்டன் அவர்களை அழைத்து விசாரித்த போது அவர்கள் சொன்ன ஒரே பதில் என்னவென்றால் மேடம் பண்டரிக்காக தான் தாங்கள் சண்டையிட்டோம் என்பது ‘’

” ஓஹோ”

‘’ அட என்ன ஓஹோ ? உண்மைதாம்பா இதைப் பற்றி நான் சொல்றதை விட , சண்டை போட்ட அந்த இரண்டு போர் வீரர்களில் ஒருவரான ட்ரூப்பர் சிபலா வே இப்போ உன்கிட்ட அதைப் பற்றி

விலா வாரியாக சொல்லப்போறான் .நீ தான் கேட்டுப் பாரேன் ‘’ என்று கேப்டன் ஜீன் என்னிடம் சொன்னார் ‘’

இப்போது குதிரைப் படை வீரன் ட்ரூப்பர் சிபலா தங்கள் கேப்டனிடம பேச ஆரம்பித்தான்.

‘’ அது நடந்து இப்போ ஏறத்தாழ ஒன்றரை வருடம் இருக்கும் கேப்டன் . ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும்னு நினைக்கிறேன். நான் படை முகாமில் இருந்த ஓய்வறையில் அமர்ந்திருந்தேன். .அப்பொழுது ஒரு பெண் தானாகவே என்னிடம் வந்து பேசினாள். அவள் அங்கே எப்படி என்னை அடையாளம் கண்டு பிடித்து வந்தாள் என்று எனக்கு தெரியவே இல்லை. ஆனால் விஷயம் இதுதான் .

‘’ சொல்லு ‘’

அவள் நேரடியாக என்னிடம் வந்து ‘’ வீரனே நீ வாரத்துக்கு நேர்மையாக பத்து பிராங் கூடுதலாக சம்பாதிக்க ஆசைப்படுகிறாயா ‘’ ? என்று கேட்டாள்.

‘’ நான் சற்றும் யோசிக்காமல் ‘’ கண்டிப்பாக மேடம் ‘’ என்று சொன்னேன்

‘’ அப்டின்னா நாளைக்கு மதியம் சரியா பன்னிரெண்டு மணிக்கு நீ என்னை என் வீட்ல வந்து சந்திக்கணும் சரியா ? . என்று சொல்லி விட்டு கட கடவென்று சரளமாகப் பேச ஆரம்பித்தாள். ‘’ என் பேரு திருமதி பண்டாரி . என்னோட விலாசம் . நம்பர் ஆறு ரூ டி லா டிரான்சி குறிச்சு வச்சுக்கோ மறக்காம வந்து விடு ‘’ என்றாள் ‘’

‘’ நீங்க கண்டிப்பா நாளைக்கு மதியம் அங்கே என்னை எதிர்பார்க்கலாம் மேடம் ‘’ என்றேன் நான் .’’

‘’உடனடியாக அந்தப் பெண் அங்கிருந்து புறப்பட்டு விட்டாள். அப்போது அவளுடைய முகம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததை நான் கவனித்தேன். வாசல் வரை சென்றவள் மறுபடியும் திரும்பி என்னைப் பார்த்து ‘’ வீரனே உனது வரவு நல்வரவாகுக ’’ என்றாள் .உடனே நானும் மரியாதை நிமித்தமாக ‘’ உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டு இருக்கிறேன் மேடம் ‘’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தேன். ‘’

‘’’ நான் அவளிடம் என்னவோ அப்படி அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்லி அனுப்பி விட்டாலும் கூட, மறுநாள் மதியம் அவள் வீட்டிற்கு செல்லும் வரையிலும் ,அது என்ன விஷயமாக இருக்கும் என்று என்னுடைய தலையைப் போட்டு உருட்டிக் கொண்டே தானிருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்புக் கொள்கிறேன் கேப்டன். ஆனாலும் பாருங்கள் கடைசி வரையிலும் அது எனக்கு பிடிபடவில்லை என்பது தான் சுவாரஸ்யம். ‘’

‘’ சரியாக மறுநாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் நான் அந்த வீட்டைக் கண்டு பிடித்து ,கதவில் பொருத்தியிருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். உடனடியாக அந்த பெண் வாசலில் தோன்றி என்னை உள்ளே வர அனுமதித்தாள். வழக்கத்திற்கு மாறாக அவள் தன் தலையைச் சுற்றிலும் நிறைய ரிப்பன்களை கட்டி இருந்தது பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருந்தது.. ‘’

‘’ உடனே நம்ம விரைவாக முடிக்க வேண்டும் தெரிகிறதா ‘’ என்றாள் மேடம் பண்டாரி . மேலும் தன்னுடைய வேலைக்காரி எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து விடுவாள் . என்று சிறிது பதட்டத்துடனேயே தான் அவள் இருந்தாள்.

‘’ நானும் விரைவாகவே முடிக்க விரும்புகிறேன் மேடம் ஆனால் நான் எந்த வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையே ‘’ என்றேன் நான் அப்பாவியாக .

அதை கேட்டதும் அவள் உடனே பயங்கரமாக சிரித்து விட்டாள் பிறகு. ‘’ இது கூட உனக்குப் புரியவில்லையா முட்டாளே ?’’ என்று சற்று கோபமாக என்னிடம் கேட்டாள்.

‘’ சத்தியமாவே சொல்றேன் கேப்டன் . அது என்னான்னு எனக்குப் புரியவேயில்லை. என்றேன். ‘’ கேப்டன் புரிவது கூட கிடக்கட்டும் விட்டு விடலாம் . ஆனால் அந்த மேடம் சொன்ன அர்த்தத்திற்ககு பக்கத்தில் கூட என்னால் நெருங்க முடியவில்லை என்பது தான் மிகவும் பரிதாபம். கடைசியில் நான் தேமே என்று நின்று கொண்டிருக்க ,என்னுடைய அசட்டுத்தனத்தைப் பார்த்துவிட்டு அவளே என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் . பிறகு மெல்லிய குரலில் என்னிடம் கூறினாள்.

‘’ நீ இதைப் பற்றி யாரிடமாவது சொன்னாயானால் ,உன்னை உடனே சிறையில் தள்ளி விடுவேன் ஜாக்கிரதை , . நான் சரியென்று தலையசைத்து வைத்தேன்.. ‘’ அதுமட்டுமில்லை கேப்டன் நான் இதைப்பற்றி யாரிடமும் மூச்சு கூட விடமாட்டேன்னு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் . என்றாள் ‘ கேப்டன் சத்தமில்லாமல் அமர்ந்திருந்தார்.

‘’ ’ கேப்டன் இதைக் கேளுங்க , நானும் அவள் கேட்டபடியே சத்தியம் செய்து. கொடுத்தேன். அதற்குப் பிறகும் கூட அது என்ன தான் வேலை என்று எனக்குச் சொல்லவேயில்லை . ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நானே அது என்ன வேலை என்று அவளிடம் கேட்டு விட்டேன் . சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் அதற்குள் என் நெற்றி தலையெல்லாம் ஒரே வியர்வை ஊற்றெடுத்து விட்டது. .உடனே நான் தலையில் மாட்டி இருந்த தலைக் கவசத்திற்குள்ளிருந்து எனது கைகுட்டையை வெளியில் எடுத்தேன் . உடனே அவள் அதை வாங்கி என்னுடைய புருவத்தை அழுத்தி துடைத்து விட்டாள். பிறகு என் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு என் முகமெங்கும் முத்தம் பதிக்க ஆரம்பித்து விட்டாள். உண்மையிலேயே கேப்டன் அப்போது தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது. ‘’

அடுத்த கட்டமாக ‘’ என்னைப் பார்த்து ‘’ இப்ப நீ தயார் தானே ?’’ என்றாள் . நான் உடனே ‘’ தயாராகத்தான் இருக்கிறேன் மேடம் ‘’ என்று சொல்லி விட்டு சற்று தயங்கினேன். உடனே அவள் எனது தத்தித் தனத்தை நன்றாகப் புரிந்து கொண்டு , இப்போது நான் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை மிக வெளிப்படையாகவே அவளது கைகளால் ஜாடை செய்து காட்டி எனக்கு நன்றாகப் புரியும்படி செய்து விட்டாள். ‘’

‘’ நான் என்னுடைய தலைக்கவசத்தை அங்கே இருந்த ஒரு நாற்காலியின் மீது கழற்றி வைத்துவிட்டு அவள் கொடுத்த வேலையை அதி சிரத்தையாக பார்க்க ஆரம்பித்து விட்டேன், .ஒரு குதிரைப் படை வீரன் தனது பணியில் என்றும் ஓய்வு பெறுவதில்லை என்ற வாசகத்தை அவளுக்கு நிரூபித்து காட்ட வேண்டுமென்ற தீர்மானமான முடிவோடு செயல்பட்டேன். ‘’

‘’உண்மையைச் சொன்னால் எனக்கு அவளைப் பற்றிய அக்கறையெல்லாம் ஒன்றும் இல்லை . சொல்லப்போனால் அவள் ஒன்றும் இளமையின் பொலிவிலும் , அழகின் உச்சத்திலும் இல்லை . நீங்களே சொல்லுங்கள் இந்த மாதிரியாக கூலிக்கு செய்யும் வேலைகளிலெல்லாம் அதிகப்படியாக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது ஒன்றும் சரியில்லை தானே. ? தவிர இந்தக் காலத்தில் ஒருவனுக்கு பிராங்க் நாணயங்கள் என்ன சும்மா விளையாட்டாகவா கிடைத்து விடுகின்றன ? . இது மிகவும் எளிமையானது. நான் அவளுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் .பதிலுக்கு அவள் பிராங்குகளை எனக்குத் தருகிறாள் . அவ்வளவுதான் இது என்று நான் எனக்குள்ளாகவே சமாதானம் சொல்லிக் கொண்டு தொடர்ந்தேன். ‘’

‘’ கண்டிப்பாக பத்து பிராங்குகளில் ஐந்து பிராங்குகளை ஊரில் இருக்கும் என்னுடைய வயதான தந்தைக்கு அனுப்பி வைத்து விட வேண்டுமென்பதில் நான் மிகவும் உறுதியோடு இருந்தேன் . ஆனால் மீதி ஐந்து பிராங்குகள் எனக்கான செலவுகளுக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.. இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டே எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் செவ்வனே முடித்தேன். ,நான் வீட்டுக்கு கிளம்புவதற்கு தயாரான போது .அவள் என்னை அனுமதிக்கவில்லை . வெகு நேரம் என்னை அங்கேயே தங்கியிருக்கும் படி கேட்டுக்கொண்டாள். ‘’

‘’ உடனே நான் அவளிடம் ‘ மேடம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது பாருங்கள் . ஒரு சின்ன கிளாஸ் நிறைய பிராந்தி வேண்டுமென்றால் ரெண்டு ரூபாய் செலவு ஆகும்.. அதுவே இரண்டு கிளாஸ் என்றால் நான்கு ரூபாய். என்றேன். என் வார்த்தைகளின் அர்த்தத்தை அவள் புரிந்து கொண்டு , உடனடியாக ஒரு பத்து பிராங்க் முழு நாணயத்தை என் கைகளில் திணித்தாள் . எனக்கென்னமோ அந்த ஒரே ஒரு ஒற்றை நாணயத்தைப் பார்த்ததும் சப்பென்றாகி விட்டது. அதை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை . ..அது பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தததாலோ என்னவோ அல்லது .அது சட்டை பாக்கெட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டால் அதை தேடி கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்குமென்று என்று நான் நினைத்ததாலோ என்னவோ நான் அந்த நாணயத்தை கைகளில் ஏந்தியபடியே பார்த்துக்கொண்டேயிருந்தேன்.. ‘’

‘’நான் மகிழ்ச்சியற்று அதைப் பார்த்துக் கொண்டிருப்பதை மேடமும் பார்த்து விட்டாள் போலிருக்கிறது. . உடனடியாக அவளுடைய முகம் கோபத்தால் கன்றி சிவந்து போய் விட்டது உடனே அவள் .’’ உனக்கு இது போதாதா என்ன ?’’ என்று என்னைப் பார்த்து கோபமாக கேட்டாள். பதிலுக்கு நான் ‘’ அந்த அர்த்தத்துல இதைப் பார்க்கலை மேடம் . நீங்க என்னவோ பேசுனதை சரியாகத்தான் கொடுத்துட்டீங்க .ஆனா அதையே நீங்க ரெண்டு ஐந்து பிராங்க் நாணயங்களாக பிரிச்சுக் கொடுத்திருந்தீங்கன்னா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கும் ‘’ என்றேன் .’’ .உடனே அவள் இரண்டு ஐந்து பிராங்க் நாணயங்களை என்னிடம் தந்தாள். உடனே நான் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டேன் .’’

‘’ இது இப்படியே ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் தொடர்ந்தது கேப்டன் .. நான் ஒவ்வொரு செவ்வாய் கிழமை மாலையிலும் அவள் வீட்டிற்கு சென்று விடுவேன் . நீங்கள் அன்று தானே முகாமிலிருந்து வெளியில் சென்று வர எங்களுக்கு அனுமதி கொடுக்கிறீர்கள். . அதைத் தவிர எப்பொழுதெல்லாம் வெளியில் சென்று வர நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுப்பீர்களோ அந்த சமயங்களையும் நான் அதற்காகவே பயன்படுத்திக் கொண்டேன்.. நான் அங்கே செல்வதற்கும் முன்பாகவே அவளுடைய வேலைக்காரி கச்சிதமாக படுக்கைக்கு சென்று விடுவாள். அதெல்லாம் எப்படி கனகச்சிதமாக நடக்கிறதென்று எனக்குத் தெரியாது .

‘’ எல்லாம் அப்படித்தான் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் பாருங்கள் சென்ற வாரம் எனக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனதிலிருந்து தான் எல்லாம் நிகழச்சிகள் எல்லாம் தலை கீழாக மாற ஆரம்பித்து விட்டன..வேறு வழியில்லாமல் போனதால் , நான் செவ்வாய் கிழமை மருத்துவமனைக்குச் சென்று விட்டேன். அதனால் அன்று மாலை , அவளது வீட்டிற்கு செல்ல முடியாமல் போய் விட்டது.. மேடம் பண்டாரியைப் பார்க்க முடியாதது எனக்கு மிகவும் மன வேதனையைத் தந்தது. . அதை விட மிகவும் துயரம் தந்தது என்னவென்றால் அன்று எனக்கு கிடைக்க வேண்டிய பத்து பிராங்குகள் கிடைக்காமல் போய் விடுமே என்ற பெரும் கவலை தான். வேறு ஒன்றும் இல்லை இப்படியே சம்பாரித்துப் பழகி விட்டேன் இல்லையா ? ‘’

‘’ நான் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன் .’’ இப்பொழுது எனக்குப் பதிலாக யாராவது ஒரு பதிலாள் அங்கே போனானென்றால் அவள் அந்தப் பதிலாளையும் மேடம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வாள் என்பதில் ஒன்றும் சந்தேகமேயில்லை. அதுவும் அவன் ஒரு படை வீரனாக இருந்து விட்டால் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். . ஆனால் இதை நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு வேறு ஒரு பக்கம் கோபம் கோபமாக வந்தது . உடனே நான் பாமெல்லைத் தேடிச் சென்றேன் அவனும் என்னை மாதிரி கிராமப்புறத்தில் இருந்து படைப்பிரிவுக்குள் வந்தவன் தான். அவனிடம் நான் அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னேன் ‘’

‘’ பாரு பாமெல் ஐந்து பிராங்குகள் உனக்கு எடுத்துக் கொண்டு மீதி ஐந்து பிராங்குகள் எனக்கு ‘நீ தந்து விடவேண்டும் . இதை நான் முதலிலேயே சொல்லி விட்டேன். ‘’ என்றே. . அவனும் சரி சரியென்று தலையாட்டி வைத்தான் . பிறகு நான் கற்றுத் தேர்ந்த இந்த தொழில் நுட்பத்தை மிகவும் சிரமப்பட்டு அவனுக்கு விளக்கிச் சொன்னேன்.

‘’எல்லாம் சரியாகத் தான் சென்றதாம். அவனை உள்ளே நுழைய விட்டு அவள் உடனே கதவை சாத்தி விட்டாளாம். அவனுடைய முகத்தை கூட சரியாக கவனிக்கவில்லை போலும் . தவிர கேப்டன் நீங்களே சொல்லுங்கள். தலைக்கவசத்தை மாட்டி விட்டானென்றால் எல்லா குதிரை வீரனும் ஒரே மாதிரி தானே தோற்றம் கொடுக்கிறான் ?’’

‘’ சரி தான் மேலே சொல்லு ‘

‘’ ஆரம்பத்தில் அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையாம் . ஆனால் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே அது நானில்லை என்று கண்டு கொண்டு விட்டாளாம். உடனே கோபமாக ‘’ நீ யார் ‘’ ‘’ உனக்கு என்ன வேண்டும் ‘’? என்று பாவெல்லை கேட்டிருக்கிறாள். அவனும் மிகவும் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறான். நான் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவனுக்கு சொல்லியனுப்பினபடியே அவனும் நடந்து கொண்டிருக்கிறான். என்னால் அனுப்பி வைக்கப்பட்ட பதிலாள் தான் அவன் என்றும் நான் ஏன் அங்கு செல்ல முடியவில்லையென்றும் விசயங்களை மிகவும் தெளிவாக அவளுக்கு அவன் விளக்கி சொல்லியிருக்கிறான். ‘’

‘’ உடனே அவள் ஒத்துக் கொண்டாள் கேப்டன். அதுமட்டுமல்ல வழக்கமாக என்னிடம் வாங்கிய அதே சத்தியத்தை அவனிடமும் வாங்கி விட்டாள். உங்களுக்குத் தான் தெரியுமே பாமெல்லும் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் மோசமான தோற்றம் கொண்டவனில்லையே . ‘’

‘’ ஆனால் விஷயம் இத்தோடு முடிந்து போய் விடவில்லை கேப்டன் . பாமெல் திரும்பி வந்ததும் நாங்கள் முன்னரே பேசிக் கொண்ட மாதிரி அந்த ஐந்து பிராங்குகளை அவன் என்னிடம் கொடுக்கவில்லை. ‘’

‘’ பாருங்கள் கேப்டன் அது எனக்கான பணமாக மட்டும் இருந்திருந்தால் , நான் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பேசாமல் போயிருந்திருப்பே.ன் ஆனால் இந்த ஐந்து பிராங்குகளை என் அப்பாவுக்கு அனுப்ப வேண்டியது எனது கடமை . அதனால நான் அவனை அப்படியே விட்டு விட விரும்பவில்லை. ‘

‘’ சொன்ன வார்த்தையை நீ எப்ப காப்பாற்ற தவறி விட்டாயோ அப்பொழுதே நீ போர் வீரனோட சீருடையை அணிவதற்கு கொஞ்சமும் அருகதையற்றவனா மாறிப் போயிட்டேடா ‘’ என்று நான் அவனை திட்டினேன்.

‘’ பதிலுக்கு அவனும் தன்னுடைய கை முஷ்டியை உயர்த்திக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டான் கேப்டன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கலாம் தான் .அது பரவாயில்லை .ஆனால் பாமெல் என்ன சொன்னான் தெரியமா ?

* இந்த மாதிரி அசிங்கமான , அசட்டுத்தனமான வேலையைச் செய்யச் சொல்லி என்னை நீ அனுப்பியதற்காக நீ தான் எனக்கு இரண்டு மடங்கு கூலி கொடுக்கணும் ‘’ என்று அவன் என்னிடமே எகிறி விட்டான் .பாருங்கள் .எனக்கு கோபத்தை அடக்க முடியவில்லை . கடைசியில் என்ன நடந்ததென்று உங்களுக்கே தெரியுமே கேப்டன் ‘’ என்றான். ட்ரூப்பர் சிபலா. ‘’

‘’ இதையெல்லாம் என்னிடம் சொல்லி விட்டு கேப்டன் ஜீன் ஆங்கிள் மோர் சிரித்தார் பாருங்கள் ஒரு சிரிப்பு , சிரித்துக்கொண்டே இருந்தார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் வரையில் சிரித்தார்.. கடைசியில் ஒரு வழியாக அவர் சிரிப்பை நிறுத்திய போது அதற்காகவே காத்திருந்தது போலவே அந்த வீரன் அவரிடம் . ‘’ கேப்டன் நான் மேடம் பண்டாரி பற்றி உங்களிடம் சொல்லிய இரகசியங்களையெல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டேன்று நீங்கள் எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் ‘ என்று கெஞ்சினானாம் ‘’’.

‘’ சரி தான் இதைப் பற்றி நீ மறந்து விடு நான் யாரிடமும் ஒரு வார்த்தை சொல்லப் போவதில்லை ‘’ என்று உறுதியளித்திருக்கிறார் கேப்டன். இப்போது புரிந்ததா உனக்கு ?’’

‘’ சரி அதெல்லாம் இருக்கட்டும் ,கடைசியில் இந்தப் பிரச்சினை எப்படி முடிந்தது ? . முதலில் அதை சொல். கேப்டன் ஜீன் எப்படியும் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பார் தானே ? ‘’

‘ அதை நான உனக்கு சொல்ல வேண்டுமென்றால் , நீ இதை யாரிடமும் சொல்லி விட மாட்டாயென்று எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் , அப்படித்தான் கேப்டன் ஜீனும் என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார்.‘’

‘’ சரி அப்படியே ஆகட்டும் இப்போது சொல் ’’

‘’ கடைசியில் மேடம் பண்டாரி அந்த இருவரையுமே தன்னிடம் பணியமர்த்திக் கொண்டாளாம் . அது தான் எதிர்பாராமல் நடந்த திருப்பம் ‘’

‘’ அது எப்படி ? ‘’

‘’ எல்லாம் எளிது தான். மேடம் அவர்கள் இரண்டு பேருக்குமே தனித்தனி நாட்களை ஒதுக்கி கொடுத்து விட்டாள். இப்போது பிரச்சினை ஏன் வரப்போகிறது சொல் ? ‘’ ஒரு குழப்பமும் இல்லாமல் இப்பொழுது .எல்லாமே சுமூகமா போய்கிட்டிருக்கிறதாக கேள்வி ‘’

‘’ ஓ இது உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்காத முடிவு தான். புத்திசாலித்தனமான முடிவும் கூட. ‘’

‘அதுமட்டுமில்லப்பா ட்ரூப்பர் சிபலா இப்போவெல்லாம் தன்னுடைய வயதான அப்பா அம்மாவுக்கு சரியா ஐந்து பிராங்குகளை அனுப்பிகிட்டிருக்கிறான். தெரியுமா ? ‘’

‘’ அப்படின்னா நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதுன்னு சொல்லு ‘’

SUBSTITUTE : பிரெஞ்ச் மொழியில் மூலக் கதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில் தங்கேஸ்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *