sirukathai: kadavulai kondravar - raman mullippallam சிறுகதை: கடவுளை கொன்றவர் - இராமன் முள்ளிப்பள்ளம்sirukathai: kadavulai kondravar - raman mullippallam சிறுகதை: கடவுளை கொன்றவர் - இராமன் முள்ளிப்பள்ளம்

நீண்ட நாட்களாகவே நந்தகோபால் மனதை உறுத்திய ஒன்று அவர் தனிமையின் முடிவு எப்படி இருக்கும் என்ற சிந்தனையே. ஆம் அவர் தனி மனிதர். வயது எழுபத்தி ஆறு. மனைவி உயிர் நீத்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. ஒரே மகன் துறவறம் பூண்டு இமாலயத்தில் எங்கோ திரிகிறான். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்வது ஒரு வகை, நல்லவேளை அவர் மகன் காதல் தோல்வி அடைந்ததும் தற்கொலையை நாடாமல் துறவறம் நாடினான். பெரிய ஒரு வீட்டில் சுற்றிலும் தோட்டம் நடுவே தனியாக வீட்டினுள் நந்தகோபால். ஒரு வாரம் முன்பு ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு ஏ நாலு அளவு வெள்ளை காகிதம் எடுத்தார். அதில் எழுதினார்.

ஐஸ் பெட்டி வாடகை 5000.

மாலை மற்றும் மலர்கள் 6000

பந்தல் வாடகை 7000

நாற்காலி வாடகை 3000

மின் மயானக் கட்டணம் 4000

இதர செலவு 6000

மொத்தம் 30000/-

அறுபது ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டார். செலவுப் பட்டியலையும் முப்பது ஆயிரம் பணத்தையும் சுருட்டி ஒரு காகிதக் உறையில் போட்டார். ஒரு வாரமாக அதை யாரிடம் கொடுப்பது என்ற சிந்தனை அவர் மனத்தை உறுத்தியது.

அது ஒரு வெள்ளிக்கிழமை. பிற்பகல் மூன்று மணி இருக்கலாம். அதிசயமாக மேக மூட்டம் ஒரு சாரல் வரும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருந்தது. முன் தோட்டத்திற்கு வந்து மேற்கு பக்க எல்லைச் சுவரின் அருகே நின்று பக்கத்து வீட்டுக்காரரை அழைத்தார், ‘’ ஆறுமுகம் சார் ஆறுமுகம் அய்யா’’ எப்படி அழைத்தும் பதில் குரல் இல்லை. மூன்றாம் முறை அழைக்கும் முன் பக்கத்து வீட்டின் கிழக்கு நோக்கிய கதவு திறந்ததது. ‘’அவரு விநாயகர் கோவில் பிரச்னையா போயிருக்கார், கோவிலுக்கு போனா பாக்கலாம்.’’

தூரல் வராவிட்டாலும் மோடமாக இருந்தது. இதுவே சரியான தருணம் என நினைத்த நந்தகோபால், வீட்டினுள் சென்று சட்டை அணிந்தார். வெளியே புறப்பட்டார். அவர் வீடு தெருவில் இரண்டாவது வீடு. தெரு முனைக்கு வந்து வடக்கே வலது புறம் திரும்பினால் இரு நூறு அடி தூரத்தில் கோவில். கோவிலை நெருங்கி விட்டார். ஆரவாரமாக சூடாக பலவகை பேச்சுக்கள்

’’யாரும் கோவில இடிக்க முடியாது.’’

’’ஆனா வேற கோவில் கட்டித் தரோம்னு சொல்றாங்க.’’

’’பாதைய மறிக்கிற கோவில்.’’

’’கோவில் பழசு பாதை புதுசு.’’

’’கோவில மறிச்ச பாதை.’’

எல்லா பேச்சுக்களையும் நிறுத்தும் வகையில் ஆணித்தரமாக வந்தது ஆறுமுகத்தின் சொற்கள், அதுவே முடிவுரை

‘’ நமக்கு சாலை போட்டுத் தருது நகராட்சி, குடி நீர் வசதி செஞ்சு கொடுக்குது, தெரு விளக்கு போடுது நகராட்சி , அதனால நகராட்சி நிர்வாகம் என்ன சொல்லுது பார்ப்போம்’’

நந்தகோபால் மனம் நெகிழ்ந்தது, மகிழ்ந்தது, ஆஹா இவரை தேர்ந்துடுத்தது சரியே என நினத்தார். கூட்டம் கலைந்தது. நந்தகோபால் கைகூப்பினார். பதிலுக்கு ஆறுமுகம் கைகூப்பி விட்டு கேட்டார்

’’நீங்க ஏன் கூட்டத்துக்கு வரல.’’

’’எனக்கு ஒரு மனசு உறுத்துற கவலை’’

’’என்ன சொல்லுங்க.’’

நந்தகோபால் ஆறுமுகம் கையில் செலவுப் பட்டியலையும் முப்பது ஆயிரத்தையும் வைத்து சொன்னார்

’’நான் தனி ஆள் எனக்கு யாரும் இல்லை ஏதாவது ஆச்சுன்னா செலவுக்கு பணம் கூடவே செலவு விவரம் எழுதியிருக்கேன்.’’

அதை படிக்க ஆறுமுகம் மூன்று நிமிடம் எடுத்துக் கொண்டார். அவர் கண்கள் ஈரமாயின.

’’நந்த கோபால் அய்யா நீங்க நூறு வயசு வாழ்வீங்க ‘’ என்றார் தழுதழுத்த குரலில்.பின்னர் ’’இதெல்லாம் வேண்டாம்.’’

’’நந்தகோபால் கையெடுத்து கும்பிட்டார், ‘’தயவுசெய்து ஏத்துக்கனும்.’’

மனம் இறங்கிய ஆறுமுகம் பணத்தையும் செலவுப் பட்டியலையும் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அது ஒரு ஞாயிறு பிற்பகல். ஆறுமுகம் வீட்டில் இருந்து பெரும் ஓலம், அழுகை அனைவரின் நெஞ்சை உருக்கியது. வீட்டு முன் பந்தல் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு ஓரத்தில் கவலையுடன் அமர்ந்திருந்தார் நந்தகோபால். மனதுக்குள் விம்மினார், ‘ஆறூமுகத்திற்கு வந்த சாவு ஏன் தனக்கு வரவில்லை. வியப்பும் வேதனையும் அவரை வாட்டியது. அவர் கொடுத்த செலவுப் பட்டியலும் பணமும் அவர் கைக்கு திரும்பியது.

தெருமுனையில் இடது பக்கம், தெற்கே திரும்பினால் நானூறு அடி தூரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் அருணாச்சலம் வீடு. தயங்கி தயங்கி அவரை கூப்பிட்டார் நந்தகோபால், வீட்டின் வெளியே வந்தவர்

’’ வாங்க நந்தகோபால் அய்யா வாங்க வீட்டுக்குள்ள’’

‘’வாங்க வெளியே காத்தாட நடந்துட்டே பேசுவோம், இதெல்லாம் வெளிய பேசுறதுதான் நல்லது.’’

அருணாச்சலத்திற்கு புரியவில்லை. , இருந்தாலும் வீட்டினுள் சென்றார், சட்டை அணிந்து வெளியே வந்தார். இருவரும் சிறிது தூரம் சென்றனர்.

நந்தகோபால் அருணாச்சலம் கையில் செலவுப் பட்டியலையும் முப்பது ஆயிரத்தையும் வைத்து சொன்னார்

’’நான் தனி ஆள் எனக்கு யாரும் இல்லை ஏதாவது ஆச்சுன்னா செலவுக்கு பணம் கூடவே செலவு விவரம் எழுதியிருக்கேன்.’’

அதை படிக்க அருணாச்சலம் மூன்று நிமிடம் எடுத்துக் கொண்டார். அவர் கண்கள் ஈரமாயின.

’’நந்த கோபால் அய்யா நீங்க நூறு வயசு வாழ்வீங்க ‘’ என்றார் தழுதழுத்த குரலில்.பின்னர் ’’இதெல்லாம் வேண்டாம்.’’

’’நந்தகோபால் கையெடுத்து கும்பிட்டார், ‘’தயவுசெய்து ஏத்துக்கனும்.’’

மனம் இறங்கிய அருணாச்சலம் பணத்தையும் செலவுப் பட்டியலையும் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

இரண்டு நாள் கழித்து புதன் பிற்பகல். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் வீட்டு முன் பந்தல். அவர் மாணவர்கள் சுமார் இரு நூறு பேர் வந்திருந்தனர். சோக காட்சிகள் நந்தகுமார் நெஞ்சை பிளந்தது. மீண்டும் எமன் தவறான வீட்டிற்கு வந்திருக்கிறான். அவர் கொடுத்த செலவுப் பட்டியலும் பணமும் அவர் கைக்கு திரும்பியது.

அடுத்து இது இரண்டு முறை அரங்கேறியது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி முத்துக் கருப்பன். ஓய்வு பெற்ற இரயில் நிலைய அதிகாரி வள்ளியப்பன். பணமும் செலவுப் பட்டியலும் பத்திரமாக நந்தகுமார் கைக்கு திரும்பியது. அப்படியானால் இந்த விவரத்தை இறந்த அனைவரும் தங்கள் மனைவிகளிடம் சொல்லியிருக்கின்றனர். இந்த மனைவிகள் அனைவரும் மாதர் சங்கத்தில் கூறியுள்ளனர். நந்தகோபாலின் இறுதிச் சடங்கு ஏற்பாடு அந்த வட்டாரம் முழுதும் அறியப்பட்ட செய்தியாகிவிட்டது. ஆகவே சமூகம் கூடி ஒரு முடிவு எடுத்தது.

நந்தகோபால் யாரும் இல்லாதவர். சொந்தம் பந்தம் இல்லை. துறவியான மகன் வருடம் ஒரு முறை வருவதாக வருவதாக அறிந்தனர். ஆகவே ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த சமூக கூட்டத்தில் இவ்வாறு முடிவானது. நந்தகோபாலின் நியாயமான கோரிக்கையாகிய இறுதி சடங்கு ஏற்பாடை கோவில் எடுத்துக் கொள்ள வேண்டும், இதை ஒரு மனதாக அனைவரும் ஏற்றனர். அவர் பணமும் செலவுப்பட்டியலும் கோவிலின் கருவறையில் விநாயகர் சிலைக்கு பின் வைக்கப்பட்டது.

அது ஒரு ஞாயிறு. அன்றுதான் நகராட்சிக்கு மலிவு வாடகையில் ஒரு புல்டோசர் கிடைத்தது. முப்பது நிமிடங்களில் கோவிலை அது தரை மட்டமாக்கி விட்டது. ஒரு லாரி வந்து நொறுங்கி விழுந்த கட்டிட துகள்களை அள்ளிக்கொண்டு போயிற்று

’’ ஈமச்சடங்கு செலவுக்கு பணம் கொடுத்து மனுசங்கள கொன்னாரு இப்ப கடைசியா கடவுளையே கொன்னூட்டார்.’’

இப்படித்தான் அந்த குடியிருப்பு மக்கள் பேசிக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *