குழந்தைப் பிராயத்திலிருந்து தமிழ் மேல் பற்று ஊற்றெடுக்கிறது. அப்படியொரு பற்று தன்னில் பற்றி வளர தன் தாயே காரணம். தன் தாயுக்கு தமிழ் மேல் உயிர். தமிழ் கவிதைகள் மேல் காதல். ஒரு முறை தான் வாசித்த கவிதையை அப்படியே மெட்டமைத்து, ஒரு வரி விடாமல் பாடுவார். தன் தாயின் இந்த செயல்பாடுகள், தனக்குள், தனக்குத் தெரியாமலேயே பதியம் இட்டுக் கொள்கிறது. தமிழ், கணிதம் என இரண்டும் தனக்கு இரண்டு கண்கள் போல் இருந்தாலும் உயர் கல்வி, வேலை வாய்ப்பு என்று வரும் போது கணிதத்தையே தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குகின்றனர். கணிதம் கற்றுத் தேறி நல்ல கணித ஆசிரியராக வலம் வந்த போதும், தலைமை ஆசிரியர் அதனைத் தொடர்ந்து கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றபோதும் தமிழ் மீது இருந்த தாகம் தணியவில்லை. கொரோனா வந்து மொத்தமாக முடங்கிப் போய் கிடந்தபோது தனது தமிழ் மனத்தை மேலும் தரப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இணைய வழியில் முறைப்படி யாப்பு இலக்கணம் கற்றுக் கொள்கிறார். மரபுக் கவிதைகள் ஆக்கம் செய்ய தொடங்குகிறார்.

அப்படியான தனது கன்னி முயற்சி தான் 96 பக்கங்கள் கொண்ட சிறுவர் மலர்கள் நூல் கவிஞர் ஒளி நிலா அவர்களின் படைப்பு. கோவை ரேணுகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பறவைகள் விலங்குகள் பற்றி 52 கவிதைகளும், 28 இந்திய நகரங்களின் மாண்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லாம் ஒரு பக்கக் கவிதை என்பது வாசிப்பவர்களை எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்து முடிக்க ஊக்குவிக்கிறது. நாம் பார்த்த பாக்காத பல பறவைகள் விலங்குகள் பற்றி தனது கவிதைகளில் தாள, சந்த நயத்துடன் கவிதை புனைந்து இருப்பது நல்ல சுவை மிகுந்த வாசிப்பு விருந்து. அள்ள அள்ளக் குறையாத தமிழ் ஆர்வம், நூலாசிரியருக்கு சிறுவயது முதலே இருந்தாலும், நீண்ட காலம் கணித ஆசிரியராகவும் பின்னர் மாவட்ட கல்வி அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் அவர், கவிஞராக வெளி உலகிற்கு முதல் படைப்பை தர இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டு உள்ளது. ஒரு வேளை முன்பே கவிதை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கி இருந்தால் குழந்தை கவிஞர்
அழ. வள்ளியப்பா போன்று குழந்தைகளின் கவிதை உலகில் வலம் வந்து கொண்டு இருப்பார்.

பொதுவான வாசிப்பின் போது, மனதுக்குள் வாசிக்கிறோமே, அப்படியே வாசிக்க துவங்கினாலும் நான்கு வரிகளில் வாய் விட்டு வாசிக்க பாட தூண்டுகிறது.

பறவைகள் காற்றில் பறக்கின்றன என்று தான் எல்லோரும் சொல்கிறோம். பார்க்கிறோம். ஆனால் கவிஞர் ஒளி நிலா, ” காற்றின் மடியில் பறக்கிறது” என தன் கவித்துவதை வெளிக்காட்டுகிறார்.

தையற்சிட்டை வா அழைக்கும் போது, உன்னை எல்லோர் கண்ணுக்கும் பிடிக்கும். அது போதாது. கருத்தில் அன்பு மிளிர்ந்திட, நண்பன் போல ஓடி வா என்கிறார்.

எளிதாக காணக் கிடைக்காத முள்ளம்பன்றி, வரகுக் கோழி, ஓநாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, மரநாய், காட்டுப்பன்றி, செந்நாய், நீர் கரடி, கழுதைப்புலி என பல பறவைகள் விலங்குகள் பற்றிய கவித்துவம் நிறைந்த பாடல்களை இந்தத் தொகுப்பில் கொடுத்துள்ளதோடு, அவற்றைப் பற்றிய அரிய தகவல்களை கவித்துவமாக சொல்கிறார். உதாரணமாக, பெரிய பல்லி இனத்தை பற்றிய கவிதையில், இந்தப் பல்லிகள் மானைக் கூட கொல்லும் சக்தி படைத்தவை என்று கூறுவது ஆச்சரியம் தரும் உண்மையாக இருக்கிறது.

அதேபோல் நகரங்களைப் பற்றிய கவிதைகளும். திருப்பூர் நகரில் திறமை இருப்போருக்கு வேலை என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் திருப்பூர் நகரம் திறனை வளர்ப்பதால் அது எழில் நகராக விளங்குகிறது என புருவம் உயர்த்த வைக்கிறார். இப்படி ஒவ்வொரு நகரம் பற்றிய கவிதையையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

கவிதை நயம் கவிதைகளின் உள்ளடக்கம். அதனை தனது கற்பனை நயம் கொண்டு குழைத்து தரும் விதம். எடுத்துக் கூறும் உதாரணங்கள் எல்லாம் இந்த நூல் முழுவதையும் வாசிக்க தூண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுவது, இந்நூல் குழந்தைகளிடம் சென்று சேர வேண்டும். நாமே குழந்தைகளிடம் வாசித்தும் காட்டலாம். குழந்தைகளுக்கு சொற்சுவை பயிற்சி கிட்டும். இதில் கூறப்படும் விலங்குகள் பறவைகள் நகரங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆவல் உருப்பெரும். ஒளிநிலா என்ற புனை பெயரில் கவிதையை தந்திருப்பவர் ஐ. ஜோதி சந்திரா. ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர்.

இந்நூலை வாசிக்க விரும்புவோர் ரேணுகா பதிப்பகத்திற்கு 7708293241 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொடர்ந்து இத்தகைய நூல்கள் தமிழ் சமூகத்திற்கு படைத்தளிக்க வேண்டும்.

நா.மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

நூல்: “சிறுவர் மலர்கள்” (சிறார் பாடல்கள்)
ஆசிரியர்: ஒளி நிலா
விலை: ரூ.90/-
பக்கங்கள்: 96

வெளியீடு: ரேணுகா பதிப்பகம் கோவை.
எண்: 7708293241

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *