சுதந்திர இந்தியாவின்  73 ஆண்டு தினத்தைக் கொண்டாடப் போகும் இந்த நேரத்தில் மாநில அரசுகளின் உரிமைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அது எத்தகைய நெருக்கடி நிலையில் உள்ளது என்பதை விவாதிப்பது அவசியம். அதிலும் குறிப்பாக மாநில உரிமை குறித்து பல்வேறு தளங்களில் விவாதம் எழுந்துவரும் சூழலில் மாநில அரசின் அதிகாரத்தில் இயங்கும் பொது விநியோகத் திட்டத்தை மையப்படுத்தியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து சிந்திக்க வேண்டியதும் அவசியம். கொரொனா பேரிடர் காலத்தில் வட நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் நடுரோட்டில் நின்றார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தே சொந்த ஊருக்கு புறப்பட்டவர்கள் பசியாலும் , விபத்துக்களாலும் செத்து விழுந்தார்கள். இதே நிலையைத்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் உருவாக்க நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் இதில் இருந்து தப்பித்துச் செல்வதற்கு போக்கிடம் கூட தமிழர்களுக்கு இருக்கப்போவதில்லை. இந்தக் கோரமான நிலையை மாநில சுயாட்சிக்கு வேட்டுவைத்து உருவாக்க முயல்கிறது மத்திய அரசு.

ஒரே நாடு ஒரே கல்வி, ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே சுகாதாரம் என்று தொடர்ச்சியாக மாநில அரசுகளின் உரிமைகளைப் பிடுங்கி கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கும் வரிசையில் அடுத்ததாக  செயல்படுத்தவிருக்கிற திட்டம்தான் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம். இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள எவரும் எந்த மாநிலத்திலும் மானிய விலையில் ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது மட்டும்தான் இந்தத் திட்டத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் கோரும் வாதம். பிழைப்பு தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மக்கள் வயிற்றுக்கும் வாழ்வுக்கும் வழி செய்யும் இந்தத் திட்டத்தை மனிதாபிமானம் உள்ள தமிழர்கள் எதிர்க்கலாமா என்கிற கேள்விக்கு பின்னால் இருக்கிற சூழ்ச்சியை நாம் உணர்ந்து கொள்ள தமிழ்நாட்டில் பொது விநியோக முறை எப்படி இயங்குகிறது என புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா இருந்தபொழுது புத்துயிர் பெற்ற பொது விநியோகத்திட்டம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியால் இன்று ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறது. பொது விநியோக அமைப்பில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் தமிழ்நாட்டைப் பின்பற்றாமல், தமிழ்நாட்டு மக்களின் அகப்பையிலேயே  கைவைக்கும் அளவுக்கு நீண்டிருக்கிறது மத்திய அரசின் கை. 

அத்தியாவசியஉணவுப்பொருளின்றி ஏற்படும் பசி, பட்டினியிலிருந்து ஏழை மக்களைக் காக்க சரியான நேரத்தில், மக்கள் எளிதில் அணுகி பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டவைதான் நியாய விலைக்கடைகள். இவை மாநில அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள பொது விநியோகத்  துறையின் ஒரு பகுதியாக இயங்கி வருகின்றன. இன்றைய தேதிப்படி தமிழ்நாட்டில்  35244 நியாய  விலைக்கடைகள் இயங்கி வருகின்றன என தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களே நியாய விலைக் கடைகளை நடத்துகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே நியாய விலைக்கடைகள் நேரடியாக அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கீழ் இயங்குபவை.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 2006-லேயே ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு அப்போதைய திமுக அரசால் வழங்கப்பட்டது. பின்பு 2007ல் 1  ரூபாயாக குறைக்கப்பட்டது. இதன்பிறகு 2011-லிருந்து அதிமுக அரசால் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே 2007-லிருந்து சிறப்பு பொது விநியோக திட்டத்தின்படி அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணையோடு சேர்த்து கோதுமை, பருப்பு மற்றும் பாமாயிலும்  வழங்கப்படுகிறது. படிப்படியாக நீடித்த வளர்ச்சியை அடையும் பொருட்டு தமிழ்நாட்டு அரசுகள் உருவாக்கிய இந்த திட்டங்களை மொத்தமாக மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுக்கும் திட்டம் தான் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.

பொது விநியோக முறை மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலின் கீழ் வருகிறது. இதைப் பயன்படுத்தி வளர்ச்சி அடையாத மாநிலங்களின் சுமையை தமிழ்நாட்டில் இறக்கி வைக்கப்பார்க்கிறது மத்திய அரசு. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிற மாநில தொழிலாளிகள் இங்கேயே ரேசன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரு வளர்ந்த மாநிலம் மற்ற மாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்கவந்தவர்களுக்கு உதவலாமே, அதனால் ஏற்படும் இன்னல்களையும் தாங்கிக் கொள்ளலாமே என்று தோன்றலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இட ஒதுக்கீட்டின் மூலமாக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பினருக்கு இடம் கிடைக்கும் போது அவர்கள் முன்னேறுவதற்காக,  உயர் வகுப்பினர் இடம் கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாவதில்லையா அதுபோல தமிழகமும் இன்னலை தாங்கிக் கொள்ளவேண்டும் என்கிற அபத்தமான வாதங்களும் வைக்கப்படுகின்றன. அவர்கள் புரிந்துகொள்ளவேண்டியது, தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை சுரண்டியது போலவோ, பிராமணர் பிராமணரல்லாதோரின் வளர்ச்சியை பறித்து அதன் மூலம் முன்னேறியது போலவோ இல்லை. தமிழகத்தின் வளர்ச்சி என்பது திராவிட கட்சிகளின் திட்டமிட்ட செயல்பாட்டாலும், அதற்கு தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்பாலும் ஏற்பட்டவை. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சரியாக செயல்படுத்தியது, கல்வியை பரவலாக்கியது, இட ஒதுக்கீடு கொண்டு வந்து உயர்கல்வியை மேம்படுத்தியது, தெளிவான தொழிற் கொள்கைகளை வகுத்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது என முழு வளர்ச்சியும் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் உரிமை கோரக்கோடிய அளவுக்கு நமக்கே சொந்தமானவை. ஆனால்  சுதந்திர இந்தியாவில் இந்தி பேசும் வட மாநிலங்கள் இன்று வரை வறுமையிலும், அறியமையிலும், கல்வியின்மையிலும் உழன்றுகொண்டிருக்கின்றன.

One Nation One Ration Scheme will be implemented - Says Finance ...

இவை ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் தமிழ்நாட்டு மக்களுக்கே அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில் பற்றாக்குறை உள்ளதாக தெரிகிறது .இது குறித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பொது விநியோக கடைகளில் போதுமான பொருட்கள் இல்லாமல் மக்களை இன்று போய் நாளை வா என தமிழக அரசு அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசோ மத்திய தொகுப்பிலிருந்து போதுமான அளவு ரேசன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும் இதனால் மாநிலத்திற்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை மாநில அரசுதான் கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு மானியம் வழங்கும் சர்க்கரைபோன்ற பொருட்களுக்கும் மானியத்தைக் குறைத்திருப்பதாக பதிவு செய்கிறது தமிழக அரசு. உதாரணத்திற்கு, 2013 முதல் 2017 ஜுன் வரை மாதம் ஒன்றிற்கு 10820 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மத்திய அரசு கிலோ ஒன்றிற்கு 18.50 ரூபாய் என மானியம் வழங்கிவந்தது. ஆனால் 1.6.2017 முதல்  வெறும் 1864 மெட்ரிக் டன்னுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் பதிமூன்று ரூபாய்க்கு ஒரு கிலோ சர்க்கரையை விற்றுவந்த தமிழக அரசு தற்போது அந்தியோதா அன்னயோஜனா அல்லாத குடும்ப அட்டைகளுக்கு 25 ரூபாய்க்கு சர்க்கரை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்திற்கு கிடைத்து வரும் பொருட்களையும் மானியங்களையும் படிப்படியாகக் குறைத்துவிட்டு கிடைக்கும் சொற்ப பொருட்களுக்கும் பங்கு போட வட இந்தியர்களை மத்திய அரசு அனுப்புகிறது. சொந்த மாநிலத்தில் வாழும் மக்களுக்கு சரியான பொதுவிநியோக முறையை உருவாக்காமல், வேலைவாய்ப்பை உருவாக்காமல், கல்வியை சென்று சேர்க்காமல், அவர்கள் மற்ற மாநிலங்களில் பஞ்சம் பிழைக்க செல்லுமிடத்தில் உணவுகிடைக்கவேண்டும் என பாஜக அக்கறைப்படுகிறது என்பதை நம்பமுடியவில்லை.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழர்களின் உணவில் பங்குபோடும் வேலையைமட்டுமல்ல உணவுக் கலாச்சாரத்தையே அழிக்கும் அபாயத்தையும் தனக்குள் வைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் உணவுப்பழக்கம் வெவ்வேறானவை. பொது விநியோகத்திட்டத்தை மத்திய அரசு கையில் எடுப்பதன் மூலம் இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான உணவு முறையை திணிப்பதற்கான ஊன்றுகோலாக இந்த திட்டம் அமையும் என்கிற அச்சம் தமிழ் அடையாளத்தை தாங்கிப் பிடிக்கும் அனைவருக்குமே இருக்கிறது. தமிழரின் உணவுப் பண்பாடை மட்டுமல்ல தமிழரின் அரசியல் ,பொருளாதாரத்தை அடியோடு வீழ்த்தும் வாய்ப்பையும் இந்த ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வழங்குகிறது. 

ஏற்கெனவே தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணிகள், இரயில்வே பணிகள், வங்கிப்பணிகள் என எல்லாவற்றிலும் இந்திபேசும் வட மாநிலத்தவரை மத்திய அரசு குவித்துக்கொண்டிருக்கிறது. இதுபோதாதென்று  இங்குள்ள முறைசாராப் பணியிடங்களையும் வட மாநிலங்களில் இருந்து வருபவர்களை வைத்து நிறைத்துக்கொண்டுள்ளனர்.  இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மற்ற மாநிலத்தவரை தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியமர்த்தும் முயற்சியோ என்கிற சந்தேகம் தோன்றுகிறது. இப்பொழுதே தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஏழில் ஒரு பங்கு இந்தி பேசும் வட நாட்டு மக்கள் வசிக்கிறார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கழகத் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மூலம் இது ஏழில் இருமடங்காகவோ மும்மடங்காகவோ மாறலாம்.  

அது தமிழ்நாட்டின் சமூக, பண்பாட்டு, பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகளேயே மாற்றிவிடும் அளவுக்கு ஆபத்தானது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தமிழ்நாட்டில் மக்கள் திரண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராடிக்கொடிருந்த்பொழுது சவுகார்பேட்டையில் சில வடநாட்டுக்காரர்கள் CAA ஆதரவு போராட்டத்தை நடத்தினார்கள். அவர்கள் கைகளில் டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த இந்த்துத்துவவாதிகளின் வன்முறையை சுட்டிக்காட்டி “டெல்லி எரிந்துவிட்டது. அடுத்தது சென்னையா?” என்ற பதாகைகள் இடம் பெற்றிருந்தன. இது போன்று தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கு புறம்பான கருத்துக்களை விதைக்கிறார்கள். தொடர்ந்து ”ஒரே நாடு” என்கிற வரிசையில் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இன்று சொற்பமாக தெரியும் இவர்கள் நாளை நமது மாநிலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை காவு வாங்கும்  அளவுக்கு வளர்ந்து விடுவார்கள். இன்று ஒரே நாடு ஒரே ரேசன் என்று கூறிஉள்ள மத்திய அரசு நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை கொண்டு வராது என என்ன நிச்சயம்? அப்படி ஒன்று நடந்தால்,  தமிழ்நாட்டு மக்கள் தமிழ்மொழி, திராவிட இனம் என்கிற அடையாளத்தை மறந்து சொந்த மாநிலத்திலேயே அடிமைகளாக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே மாநில சுயாட்சிக்கான குரலை நசுக்குகிற எந்தவொரு செயலானாலும் அதை முற்றிலும் நிராகரிப்போம். மாநில அரசுக்கான தன்னாட்சி அதிகாரம் என்பது இந்திய மக்களுக்கான அடிப்படை அரசியல் உரிமையைக் காக்கும் செயலே என்பதை உரக்கப் பேசுவோம்.

 கட்டுரையாளர் – சில்வியா சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *