தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் ‘புல்லி பாய்’ செயலி – மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு
‘சுல்லி டீல்ஸ்’ செயலிக்குப் பிறகு இப்போது மிகவும் இழிவான ‘புல்லி பாய்’ செயலி முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களுக்குள் நுழைந்துள்ளது. குற்றவாளிகள் மீது ஆறு மாதங்களுக்கு முன்பாக முதல் சம்பவத்தின் போதே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருந்தால், இப்போது சமீபத்தில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வு நடந்திருக்காது என்று பெண் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஐந்து பெண்கள் அமைப்புகள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளன. அதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளரான மரியம் தவாலே டெக்கான் ஹெரால்டின் ஷெமின் ஜாயிடம் உரையாடினார்.
பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கசப்பான செய்தியுடன் இந்தப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இப்போது ‘புல்லி பாய்’ என்ற செயலியை நாம் காண்கிறோம். இந்தச் செயலி ‘சுல்லி டீல்ஸ்’ பிரச்சனை ஓய்ந்த சில மாதங்களிலேயே வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அநீதிக்கு எதிராக, தங்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரலை உயர்த்தி வருகின்ற துணிச்சலான சிறுபான்மைப் பெண்களை அச்சுறுத்துவதாக, கலவரப்படுத்துவதாகவே அது இருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியால் இந்த வகையான அரசியல் சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகின்ற தந்திரங்களாக அவை இருக்கின்றன. சிறுபான்மையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என்பதைக் காண முடிவது இதுபோன்ற குண்டர்களை மேலும் ஊக்குவிக்கிறது.
‘சுல்லி டீல்ஸ்’ வந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று நினைக்கிறீர்களா? அதுவே ‘புல்லி பாய்’ செயலிக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு உத்வேகத்தை அளித்ததா?
முற்றிலும் சரி. முதல் தகவல் அறிக்கை பதிவானதும் இணையதளம் அல்லது செயலி முடக்கப்பட்டது என்பதே அமைச்சர் கூறிய முதல் விஷயமாக இருந்தது. அவர்கள் மீது தண்டனை அளிக்கின்ற வகையிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களைத் தொட்டு விடாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரைக் கொல்வதற்கான வெளிப்படையான அழைப்பை விடுத்த தர்ம சன்சத் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மனுவாதிகளின் கருத்துப்படி அவர்கள் தேச விரோதிகள் கிடையாது. ஆனால் அதே சமயத்தில் அநீதிக்கும், கொடுமைகளுக்கும் எதிராக குரலை உயர்த்துபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு எதிராகத்தான் நாம் இப்போது போராட வேண்டியுள்ளது.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், பிரகதிஷீல் மகிளா சங்கதன், அகில இந்திய மகிளா சன்ஸ்கிருதிக் சங்கதன் (NFIW, AIDWA, AIPWA, PMS, AIMSS) ஆகிய ஐந்து பெண்கள் அமைப்புகள் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக ஓராண்டிற்குள்ளாக இரண்டாவது முறையாக பெண்கள் வெறுப்பு குறித்து உருவாகியுள்ள வெட்கக்கேடான காட்சியை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக எழுதி வருகின்ற, போராடுகின்ற துணிச்சலான முஸ்லீம் பெண்களை அவமானப்படுத்தவும், பயமுறுத்தவுமே இதுபோன்று செய்யப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உத்தரப் பிரதேசம், தில்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச் செயல்கள் குறித்து அரசு நிர்வாகத்தின் பிரிவுகள், நீதித்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மை அவை வெறுமனே பார்வையாளர்களாக இருந்து வருகின்ற போக்கின் ஒரு பகுதியாகவே உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து மதத் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தண்டனை எதுவுமின்றி இனப்படுகொலைத் தாக்குதல்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அட்டூழியம் நடைபெற்றுள்ளது என்பதையும் நாங்கள் அந்தக் கடிதத்தில் குடியரசுத் தலைவருக்கு நினைவுபடுத்திக் காட்டியுள்ளோம்.
சமீபத்திய நிகழ்வை சமூகத்தில் உள்ள மதச்சார்பற்ற பிரிவினரை மேலும் ஓரம் கட்டுகின்ற வலதுசாரிகளின் திட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆமாம். மதச்சார்பற்ற வெளியை மட்டுமல்லாது, முற்போக்கான, ஜனநாயக, மதச்சார்பற்ற விழுமியங்களை முன்னிறுத்தி நம் நாட்டில் குரல் எழுப்ப முயன்று கொண்டிருக்கும் அனைவரையும் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டமாகவே அது உள்ளது. நமது அரசியலமைப்பை தங்களுடைய ‘மனுவாதி’ முறைக்கு மாற்ற இந்த பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி விரும்புகிறது.
அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஆம். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் அடிபணிந்து செல்ல வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும், எதிராக குரல் உயர்த்தக் கூடாது.
பெண்களின் திருமண வயதை பதினெட்டு ஆண்டுகள் என்பதிலிருந்து இருபத்தியோரு ஆண்டுகளாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த நேரத்தில் இத்தகைய தாக்குதல்கள் வந்துள்ளன. அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கிய முயற்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கி இருப்பதாக நான் கூற மாட்டேன். உண்மையில் அது ‘மனுவாதி’ கலாச்சார அமைப்பை நாட்டின் மீது திணிக்கும் பாதையை நோக்கியதாக இருக்கின்றது. ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் என்றிருக்க முடியாது என்றாலும் அது பாலினம் சார்ந்த சட்டமாக இருக்கலாம் என்று நாங்கள் கூறியுள்ளோம்.
பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
அந்த திருத்தத்தில் பல சிக்கல்கள் உள்ளன. கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே அரசாங்கம் முன்வைக்கின்ற வாதங்களாக இருக்கின்றன. அந்த இரண்டு வாதங்களும் பொய்யாகவே இருக்கின்றன. சிறுமிகள், பெண்களுடைய வாழ்நாள் முழுவதற்கும் அவர்களுக்கான ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது, அதே நேரத்தில் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவது – குறிப்பாக குடும்பம், சமூகம், கண்காணிப்பு அமைப்புகள் அல்லது அரசாங்கத்தால் வற்புறுத்தப்படாமலும், கட்டாயப்படுத்தாமலும் திருமணம், தாய்மை குறித்து முடிவெடுக்கும் உரிமைகளை வயதுவந்த பெண்களுக்கு வழங்குவதன் மூலம் தாய், குழந்தை ஆரோக்கியம் குறித்து இருந்து வருகின்ற பிரச்சனைகளைத் திறம்பட தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்.
மேலும் அந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வயது வந்தவர்களுக்கிடையில் நடைபெறுவதாக இருக்கின்ற இருவரும் ஒருமித்து செய்து கொள்ளும் திருமணம் குற்றச்செயலாகி விடும் என்பதால், வயது வந்த பெண்களின் சுதந்திரம் மேலும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாது திருமண வயதை உயர்த்தி, ஒருமித்த உறவை குற்றப்படுத்திய செயலுக்காக ஒரு பையனை சிறையில் அடைப்பதற்கு நாம் எப்படி சம்மதிப்பது?
2000ஆம் ஆண்டிலிருந்து பதின்ம வயது திருமணங்கள் 51 சதவிகிதம் குறைந்திருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் வெளியான அரசு அறிக்கை, திருமணம் செய்து கொள்கின்ற சராசரி வயது 22.1 ஆண்டுகள் என்று அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. சிறுமிகளோ அல்லது சிறுவர்களோ முன்கூட்டியே திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை என்பதே அதன் பொருள் ஆகும்.
அப்படியென்றால் அவ்வாறான திருமணங்கள் எங்கே நடந்து கொண்டிருக்கின்றன? அவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் அடிப்படையில் வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கு வழி இல்லாது மிகவும் ஏழ்மையில் உழல்கின்ற மக்களாகவே இருக்கின்றார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நிதி சுதந்திரம் அடிப்படைத் தேவையாக உள்ளது. அதேசமயம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் பெண்களிடையே அதிக அளவிலே வேலையின்மை நிலைமையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த அரசால் அதற்கெல்லாம் தீர்வு காண முடியவில்லை. அந்தக் காரணிகள் எதையும் தீர்த்து வைக்காமல், இந்திய மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற இந்த முடிவை அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
https://www.deccanherald.com/national/bulli-bai-app-to-intimidate-the-courageous-minority-women-says-mariam-dhawale-1067727.html
நன்றி: டெக்கான் ஹெரால்டு
தமிழில்: தா.சந்திரகுரு