இரவு ஏன் அழுகிறது? சிறுகதை – குமரகுரு
இரவொரு மாயக் கழுதை. அது சுமக்கும் பொதி நட்சத்திரங்கள். மாயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அது விடியலில் மாயமாய் மறைந்து விடுவதால். இரவை மறைக்கத் துவங்கிய மனிதனுக்கு மின்சாரம்தான் துருப்பு சீட்டு. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நெடும் இரவுகளில், மொட்டை மாடிகளில் மினுக்கும் உரையாடல்களின் ஓசையை இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நிலா கேட்கிறது.
அப்படிப்பட்ட ஒரு இரவில் தொலைக்காட்சியில் ரைம்ஸ் பார்க்காமல் நட்சத்திரங்களை இணைத்து படம் வரைவது பிடித்து போன ஒரு சிறுமியை தினமும் மொட்டை மாடியில் பார்க்கிறேன். அவள் ஆட்காட்டி விரலை ஊசியாகவும் காற்றை நூலாகவும் உருமாற்றி என்னென்னவோ வரைகிறாள். எனக்கு அது எதுவெதுவாகவோத் தெரிகிறது.
இரவு பிடிபடாத நாட்களில் உறங்கி விடுகிறது உலகம். உலகம் பிடிபடாத நாட்களில் வரவே வராத உறக்கத்தை கண்கள் சிவக்க சிவக்கப் பார்த்தபடியிருப்பதுதான் பலருக்கு வாய்த்திருக்கிறது. சில நேரங்களில் இப்படி பல நாட்களாய் உறங்காதவனின் சிவந்த விழிதான் சூரியனோ என்று கூட தோன்றும்.
இரவு விலகி பகல் நுழையும் நேரத்தில் சைக்கிளில் வந்து பால் பாக்கொட்டுகளையும் செய்தித் தாள்களையும் விநியோகித்து செல்லும் சிறுவர்களின் சைக்கிள் கேரியரில் அமர்ந்து கொண்டாட்டமாக பயணிக்கும் இரவு.
காற்று சில்லென்று வீசுமொரு டிசம்பர் மாதத்தின் இரவில் தெருவோரத்தில் பீடியைப் புகைத்தபடி நடந்து செல்லும் வயசாளியின் இருமல் ஒலி கேட்டு அமைதியாகி விடும் நாய் கூட்டமும் உண்டு. அவை அந்த இருமலை ஒரு சமிக்ஞையாக கொண்டு இரவைத் திருட வரும் எவனிடமோவிருந்து இரவைக் காப்பாற்ற கதறி, அந்த இருமலொலியில் இரவு பத்திரப்பட்டுவிட்ட சமாதானத்தில் அமைதியாகிவிடுகின்றன போல.
கடை மூடும் நேரம் சரியாக டாஸ்மாக்கில் வாங்கிய குவாட்டரை எடுத்துக் கொண்டு வாட்டர் பாக்கெட்டைப் பிதுக்கியடித்து பிளாஸ்டிக் கிளாஸைக் கழுவி, அதில் பானத்தையும் நீரையும் கலந்ததும் வரும் நிறம்தான் இரவோ?
கவலைகளற்ற நாளில் தோழனின் தோள் மீது கைப் போட்டு நடக்கும் தோழியைப் போல் இரவு குதூகலமாக நடந்து செல்கிறது. எப்படித்தான் அதனால் சற்றும் சலனமின்றி இருக்க முடியுமோத் தெரியவில்லை.
நடுநிசியில், மூடப்பட்டிருக்கும் கடை வாசலில் அமர்ந்து கொண்டு கம்பளிக்குள் நடுங்கி கொண்டிருப்பவனின் கண் முன் நிசப்தமான கண்ணாடி குடுவைக்குள் குலுங்காமல் நிற்கும் நீரைப் போல கிடந்த இரவை “வ்ர்ரூம்ம்ம்!!” என்ற ஒலியுடன் அசைத்து செல்லும் ஒரு வாகனத்தின் ஒலி தூரம் செல்ல செல்ல மறைந்ததும் மீண்டும் இரவு அதே போல் அமைதியாக அசையாமல் அப்படியே இருப்பதைக் கம்பளிக்குள் நடுங்குபவன் உணர்வதேயில்லை!!
இப்போதொரு இரவு, வெட்ட வெளியில் மல்லாந்து கிடப்பவனின் கண் முன் குப்புற படுத்திருக்கிறது. அதற்கொரு முகமுண்டு. அந்த முகம் நாமெல்லாம் நினைப்பது போல் கண் காது மூக்கு வாய் கொண்டதல்ல. இரவின் முகம் இருட்டு. அந்த இருட்டு முழுவதும் பரவியிருக்க, முழுதும் நிரம்பிய பெருநதியின் நீரோட்டமென எத்திக்கும் பரவியோடுகிறது. அந்த முகத்தில் கண்ணுக்கு புலப்படாத, மறைந்திருக்கும் இரவின் கண்களிலிருந்து லட்சோபலட்சத் துளிகள் கண்ணீராகப் பொழிகின்றன. அது யாருக்கான கண்ணீரோ? யாருடைய கண்ணீரோ?
பகலெல்லாம் சிரிப்பதைப் போல் நடிக்கும் இரவு, இரவெல்லாம் அழும் ஒலி கேட்பதைப் போல் நினைப்பவனின் மூளையில்தான் கோளாறோ? கிரிக்கெட் பூச்சிகள் இறக்கைகளை உரசத் துவங்கிவிட்டன… தவளைகள் எந்கேயென்றுத் தெரியவில்லை-அமைதியாக எங்கேயோ ஒடுங்கியிருக்கின்றன போல… ஆங்காங்கேப் பறக்கும் இரவுப்பறவைகள்… புதர்களுக்குள் மறைந்தமர்ந்திருக்கும் கொக்குகளின் கண்கள் பச்சை நிற பளிங்கு போல் மின்னுகின்றன… குளத்தங்கரையெல்லாம் நிலாவின் ஒளி வீழ்ந்து குளத்துக்குள் இல்லாத நீரைத் தேடி கொண்டிருக்கிறது… நீரை மட்டுமா காணவில்லை? குளத்தைக் காணாமல் தேடியலையும் நிலாவிற்கு எப்படித் தெரியும்? நான் படுத்திருக்கும் இந்த பூங்காவின் புல்வெளி குளத்தை மண் கொட்டித் தூர் நிரப்பி உருவாக்கப்பட்டதென்பது?
ஒருவேளை அதை நினைத்துதான் இந்த இரவு அழுகிறதோ?