கவிதை தின கவிதை – து.பா.பரமேஸ்வரி

கவிதை தின கவிதை – து.பா.பரமேஸ்வரி




ஒரு கவிதை என்ன செய்யும்…

பிழைகளை காட்சிப் பெருக்கிப்
காட்சிகளைப் படிமமாக்கும்..

படிமங்களை படிவங்களாக்கி
உணர்வுகளை நிரப்பச் செய்யும்

கலைகளைக் கனவுக்குள் பொருத்தி

உணர்வுக்கு உயிர் கொடுக்கும்

கனவுகளை ருசிக்கப் பண்ணி.
நனவுகளை உடுத்திக் கொள்ளும்…

நனவுகளோ
நகக்கண்ணுக்குள்‌ ஒளித்து வைக்கும் நினைவுகளை
சொட்டுச் சொட்டாய் உதிரச் செய்யும்..
கவிதைத் தேன் சமைந்துக் கிடக்கும்
கவிஞனின் உயிர்நாடிக்குள்…

து.பா.பரமேஸ்வரி
சென்னை.

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




நான் என்‌ செய்வேன்?
**************************
உயிரொன்று தோன்ற
உளம் பூக்க ஊட்டமானாள் அன்னை.
மகனே தன் வாரிசெனப் பூரித்தான் அப்பன்..
இரட்டைப் பிள்ளை போல..
அங்கலாய்த்தாள் அப்பத்தா
பேரனோ பேத்தியோ இரண்டும் சுகமே..
பொக்கை வாய் சிவக்கக் கொக்கரித்தார் தாத்தன்..

உற்றார்கொண்டாட..
உறவுகள் மகிழ்ந்திருக்க..
முழங்கை முடிச்சுகள் ஸ்வரங்கள் இசைக்க
அன்னை அரவணைப்பில் களித்திருந்தேன்..
வெப்பத் திமிரில் வலசைபோனேன்..

நிதம் மல்லிகை வாசம்..
பொழுதொன்றில் ருசியான உண்டியின் சுவாசம்…

இருள் கவ்விய அறைக்குள்
ஈரைந்து கால தவமிருந்தேன்..
வானகமெங்கும் சிறந்திருக்கப்
பொழுதொன்றிலும் கனா கண்டேன்..

முட்டி மோதி முத்தெடுத்தேன்
முக்காடு போர்த்தி மூலையில் சாத்தப்பட்டேன்…

கண் சிமிட்டி விழித்தேன்..
சுற்றும் முற்றும் ரசித்தேன்.

பூவுலக சரித்திரங்கள் பல கதைக்கத் தித்தித்தேன்
அவை அத்தனையும் எனக்கானதே என்பதை
அப்போதுணரும் திறனற்றேன்..

சூழல் குறிகள் யாவும்
சுற்றியே வளைத்திட திணறிப்போனேன்
சுக்குநூறாகிச் சுருங்கியே திசைமறந்தேன்..

அழு குரல் ஒலித்தன..
ஆரவாரங்கள் அறுந்தன
கொண்டாடிய குரல் ஒன்றும்
கண்ணீரில் கனத்தே அமர்ந்தன..

கூர்ந்துற்றேன்..
கொஞ்சம் போல குனிந்து நோக்கினேன்..
நானல்ல என்பதில் துடித்து நொடிந்தேன்
கூனிக்குறுகியே வெலவெலத்து உருகினேன்.
கண்ணீர் பெருக்க இனம் மறந்து இற்றுத் தான் போனேன்..

ஆங்கே இரு பாலுறுப்புகள் அருகருகே அமிழக் கண்டேன்
வேதனையில் துப்பிய விழி நீரை மீண்டும் விழுங்கி ஆற்றினேன்.
வல்லுறவு குற்றம் தாங்க
இன்றே நிரந்தர மூலமானேன்

ஏனிந்த புதுவகை…
இறை எதற்கிழைத்தவிந்தக் தீராதவாதை..

ஆசுவாசமற்ற எனதிந்தப் பிறப்பு..
அவசியமற்ற அனாயாச சிறப்பு.
ஆயாசமாய் மக்கள் இனி இடிந்துரைக்கவிருக்கும்..
எனக்கே எனக்கான எகத்தாளச் சிரிப்பு..

குற்றமற்ற எனைக் கொண்டாட வேண்டாம் உறவுகளே
கொடுங்கோலின்றி எனைக் கொண்டால் போதும் மனிதர்களே..

அங்ஙனம் விட்டொழிக்க விலையோ கொஞ்சமே இனி..
வாங்கவோ விற்கவோ
அதுவும் கூட கெஞ்சுமே நனி..

வாய்க்கும் அது பத்தாது.
எனை வார்த்தெடுக்கவும்
மிச்சமிருக்காது…

புதிரான பாதைகள் புதுவிதமாய் விழுங்கின
மலமற்ற குடல் மலடிபோல மருவியே மிரண்டன..
கொடிசூடிய தொப்புளோ அங்ஙனமே சுருங்கின….
மரணகாலம் கூட களமிறங்க
கலகமற்று கைகழுவின..

இருபாலுறுப்பும் ஒருமித்தமான மனிதமானேன்
திருனர் சமூகத்தின் இருனரானேன்..
இனியோ…
இருபாலினர் மத்தியில் நான் மட்டும் இதரரானேன்..

மூண்ட போரில் மாளாத மணக்கோலம்..
*****************************************************
தொலைத்த உனது முகப்பொழிலைத் தேடியே
கனத்து நிற்கின்றன இமைகள்..

காதல் மொழிகளை மகன் கேட்கும் முன் மென்றுச் சுவைத்த நாவு
சுருண்டு உழல்கிறது..
இறுதியாய் பருகிய உனது பன்னீர் துளிகளை ருசித்தே..

வாரேன் என விடைப்பெற்றாய்..
மீள்வாய் எப்போது என்றே சுளித்தன உனது கரம் பற்றிய எனது விரல்கள்..

பசலையில் பரிதவிக்கிறது
கருஞ்சாந்துக் குறியீடாக….
நீயற்ற புருவ மத்திமம்..

உனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
மஞ்ச குளிப்பதை மறந்து பச்சையம் உடுத்தினேன்..

செய்தி உடன் வர..
கூடடைந்த புல்லலுருவியாய்
புசிக்க அமர்ந்து..
உடன் கைகழுவினாய்..
கைநழுவ வேண்டியே..

எங்கு தொலைந்தாய்
எங்கு தேடுவேன்

என்றறிந்தே..
உயிரை எனது அறைக்குள் புகுத்தி..
உடலை மட்டும் கயவனின் வேள்வித் தீக்கிரையாக்கினாய் போல…

குற்றவாளி பிறப்பதல்ல..
*****************************
உன்னைத் தவிர
எல்லோர் அழைப்பும் கொஞ்சும்..
நூறைத் தாண்டி உனை கெஞ்சியது எனது அழைப்புகள்….

உன்னைத் தவிர..
கனவுகள் பலதும் நனவுகள் சிலதும் நானே..
குப்பைக் கூடையில் அனாதையாய் முதல் நினைவுப் பரிசு…

உன்னைத் தவிர..
பலர் வாழ்விலும் நானே..
வீழ்விலும் உடனிருந்தேனே..
தூக்கியெறிந்த கலாப வாழ்வு கலங்கியது நேற்று…..

உன்னைத் தவிர…
பக்குவ முகிழ்வில் சமைந்த சமையலைக்
கொண்டாடிய நாவுகள் ஏராளம் ..
தூக்கியெறிந்த பாயாசம்
உவர்த்துக் கிடக்கிறது உலர்ந்து….

உன்னைத் தவிர..
நொடிந்தேங்கும் பாடுகளுக்கு
அலைபேசி விலையானேன்..
விருந்தான அந்தரங்கத்தை
மருந்தாக கசந்துத் துப்பிய உமிழ்நீர்
அறைகிறது முகத்தில்…

இன்று..
ஆசைக்காதலியாய் அந்தரங்க உயரூதியம் பெற்றேன்…
ஆயிரங்கால பதிவிரதயாய் ஓரங்க பதவிநீக்கம் செய்தபின்..

து.பா.பரமேஸ்வரி
சென்னை.

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பெயரற்ற காலம்
********************
என் பெயர் சொல்லி…சொல்லி
யார் யாரோ அழைக்கிறார்கள்
அழைத்தவர்களை இன்னும்
யாரென்று அறிய முடியவில்லை
என் பெயர்
எனக்கு மறந்து
போய்க் கொண்டிருக்கிறது
ஆளற்ற காடுகளில்
காருண்யத்தின் பெரு மழை
பெருக்கெடுத்துப்
பாய்கிறது நதியாய்…
பள்ளத் தாக்குகளில்
நேசத்தின் எதிரொலிகள்
மனிதரோடு கலந்து வாழ்வதில் தான்
அன்பின் அர்த்தம் பிரதியாகிறது
பூ பூவா பறந்து திரியும்
பட்டுப் பூச்சிகளின் கோலாகலத்தில்
மலையைத் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நிறங்கள் இணைந்த வானவில்
அலைகளின் மீது நுரைகள் போல
சிறு சிறு நண்டுகள்
படகுத் துறையில் கூடிக்கிடக்கும்
படகுகளின் மீது கடற் பறவைகள்
கனவுகளைத் தொட்டுப் போகின்றன
தீராத துக்கங்களின்

குளம்படிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
மனதுள் தேடிப் பார்க்கிறேன்
யுத்தமெனும் மாயரக்கனின்
அழியாத காலடிச்சுவடுகள் ஒளிர்கின்றன
குருதி வண்ணத்தில்….
சிதைந்து கிடக்கும்
மனித உறுப்புகளின் சிதிலங்கள்
வாழ்வின் கரைகளில்..
காற்று வருகிறது
காற்று போகிறது
இலைகள் நடுங்குகின்றன
வானத்தில் பறவைகள்
பறந்து எங்கோ போகின்றன.

பூஜ்யக் கனவுகள்
*********************
பனிக்குடம் உடலின் கவசக்கூடு
மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது
பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை
முகிழ்த்துகிறது
நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது
ஆட்கள் ஓடி வந்தார்கள்
உடல்கள் தவிர எல்லாம் களவு போனது
சொல் விஷம் பருகினாள்
நாக்கில் பாம்புகள் துள்ளின
வானத்தைப் பிடிக்க வலை வீசினேன்
சில மேகங்கள் மட்டும் சிக்கின
கையில் எடுக்கையில் பறந்து போய்விட்டன
போனது வாழ்க்கை
காட்டுக்கிழங்கைத் தேடி அலைந்ததில்
புளிச்சிப்பழங்கள் கிட்டின வேட்டையாடுகின்றன மணிப்புறாக்கள்
பசி பிடுங்கித் தின்ன
வேடிக்கை பார்க்கிறான்
புன்முறுவல் காட்டினால் புன்னகைப்பேன்
வணக்கம் சொன்னால் வணங்குவேன்
எளிய மனிதனுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை
போராளி போராளி என்று பீற்றுகிறான்
போராட்டமென்றால் பதுங்கு குழி தேடுகிறான்
பதுங்கித்தான் புலி பாயுமாம்
தனிமையைக் குறித்து வருத்தப்படுகிறேன்
என்னை நினைத்து தனிமை ஆதங்கப்படுகிறது
எங்களைப் பற்றி எவரும் வேதனைப்படவேண்டாம்
முகத்தில் பல முகமூடிகள்
தலையில் கனத்த கிரீடம்
பத்துகாசுக்கு பிரயோஜனமில்லை என புலம்பும் எழுத்தாள சக்கரவர்த்தி(னி)கள்
தேவதைகள் அரக்கர்களிடம் சிக்குகிறார்கள்
தேயும் நிலவாய் சிதைக்கப்படுகிறார்கள்
திடீரென்று காணாமலாக்கப்படுகிறார்கள்.

இறகு நடனம்
****************
மேகத்தில் என் உயிர்
பூமியில் என் உடல்
மழையாய் உயிர்த்து நடனமாகிறேன்
உன் சமாதானங்கள் ஆறுதலாயில்லை
உன் தேற்றல்கள் வலியை தீர்க்கவில்லை
முறிந்த கிளையாய் துவள்கிறேன்
சட்டென்று விலகிப் போனாய்
பட்டென்று உதிர்ந்து வீழ்ந்தேன்
மண்ணாவதைத் தவிர வேறு வழியில்லை
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில் இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்.

தீராத கவலை
*****************
பல்லிளித்து எச்சில் வடிய சிரிக்கும்
கடைவாய் நக்கி சப்புக்கொட்டும்
பெண் கண்ட ஆண் நாய்
ஆண்மை என்பது பெண்மையைப் போற்றுவதாகும்
பெண்மை என்பது ஆண்மையை நேசிப்பதாகும்
போற்றுதலும் நேசித்தலும் வாழ்வை பூஜிப்பதாகும்
எங்கிருந்தோ வருவார்கள்
எதிர்பாராமல் உதவிடுவார்கள்
வந்த சுவடு தெரியாமல்
வந்த வழி போவார்கள்
என் படகை மிதக்க விட்டிருக்கிறேன்
இதயம் லேசாகிப் பறக்கிறது
பயணத்தை தொடங்க வேண்டும்
தடுமாறித் தடுமாறி விழுகிறேன்
கைதூக்கிவிட தனிமை பதறி ஓடிவருகிறது
மனசெல்லாம் தவிப்பு
ஜன்னலருகே அமர்ந்திடணும்
ஓடிச்செல்லும் காட்சிகளோடு பறக்கணும்
வாகனப்பயணத்தில் நான் பறவையாகணும்
என்னை அறிந்தவர்களுக்கு புரியவைக்கமுடியவில்லை
என் நட்பு சுற்றத்தினருக்கு விளங்க வைக்க முடியவில்லை
கவிதை எழுதுவது நானல்ல என்று.

வசந்ததீபன்

மகேஷ் கவிதைகள்

மகேஷ் கவிதைகள்




ஆழம்!
**********
சிதறிய பாகங்களை
கிளறியபடி நகர்கிறது
கைவிடப்பட்ட
ஓர்
அநாதை நினைவு!

வனங்களை விழுங்கிய
பூங்காவினுள் கொதிக்கிறது
பாலைவன அனல்!

சிதைந்த சொற்களின் மீது
நடனமாடியவன்
வேடம் கலைக்கிறான்!

சொற்களைப் பதிந்து கொண்ட
உணர்வுகளில்
விழுகிறது
பெருங்கீறல்!

பல்வேறு வெளிகளில்
தயங்கி
வார்த்தைக்கு வலிக்காமல்
வரி கோர்த்தவனுக்கு
பரிசாகிறது
புதைகுழி!

அகன்றுவிட்ட நாட்களை
கோர்த்துக் கொள்கிறது
அகத்தேடல்!

நட்புக்கும் உறவுக்கும்
அவப்பெயரிட விரும்பாத
அஞ்ஞான உணர்வொன்று
அமிழ்ந்து கிடக்கிறது
மன மூலையில்!

கனவுகள்!
**************
ஓரங்கட்டப்பட்ட
இருக்கைகளில்
உறங்கிக்கொண்டன
ஓராயிரம் கனவுகள்!

காடு மலை
கடல் நதி
ஆகாயமெனக்கடந்து
நட்சத்திரங்களை
சமீபித்தபின்
கட்டப்பட்டன கைகள்!

பறவையின் இறகுகளைக்
துணைக்கழைத்துக்கொண்ட

வானத்தில்
பலியிடப்பட்டது
புலியின் வீரம்!

இறகுகளை இறுக்கிக்கட்டவும்
ஏதோ ஒரு
சமிக்ஞை மின்னல்
விரைகிறது!

கற்பனை தேசத்துக்
காவிய வெள்ளங்களை
அணைகட்டுகிறது அழுத்தம்!

கனவு கவிழ்தலின்
வீதி வியாபாரம்

விதியாய்க்களைகட்டுதல்
அமோகம்!

கரைகளை
உடைத்தெறிந்த விபரீதங்களில்
ஊசலாடும்
உயர் கனவுகள்!

இரவின்
அழகு தேசங்களில்
ஏற்றி வைத்த
கனவு தீபங்களை
அணைத்து விரையும்
பாழான பகல்கள்!

இன்னும்
நீள் வரிசை கட்டி
நின்று தவமிருக்கும்
நிறைவேற்றச்சொல்லிக்
கெஞ்சும்
அழியாக்கனவுகள்!

உணர்வெனும் பறவை!
*****************************
சிறகொடிந்த பறவையான
உணர்வொன்று
உடைந்து விழுந்து
அழுகிறது!

அம்பெய்த வேடன்
அடுத்த குறிக்கு
ஆயத்தமாகிறான்!

சந்தோஷ மயக்கங்களில்
வானம் தொட்ட உணர்வு
அடிபட்டு
அழுந்தித்தவிக்கிறது!

மீட்பர்
யாரேனும்
உணர்வு காக்கலாம்
எனக்கணிக்கவியலாது!

எப்படியோ மீளும்
உணர்வுப் பறவை
எனும் நேர்மறைகள்
பலிக்கலாம்!

ஆயின்
கடுஞ்சொல் புனைந்து
எய்த வேடன் வீழ்ந்ததாய்
நினைவடுக்கங்களில்

பதிவேடுகள்
ஏதும்
அகப்படவில்லை!

எங்கேனும்
சொற்கள் படபடக்கும்
ஓர்
நாவரசனை வினவலாம்!

– மகேஷ்

சந்துருவின் கவிதைகள்

சந்துருவின் கவிதைகள்




1)
எதிரிகளிடமிருந்து காப்பாற்ற
குட்டியைக் கவ்விச் செல்லும்
மிருகம் போல் எல்லோரும்
வாழ்க்கையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள்

பாதுகாப்பான இடத்தில்
இறக்கி வைத்து
இரைதேட நினைப்பவர்களுக்குக்
குட்டியைத் தவறவிடக் கூடாதென்ற கவனம்
அருகிலிருக்கும் மனிதர்களிடம்
சந்தேகங்களைத் தந்து விடுகிறது.

துறைமுகத்தில்
சிதறிக் கிடக்கும்
தானியங்களைப்போல்
கண் முன்னே காய்த்துத் தொங்கும் கனவுகள்
அள்ளிக்கொள்ள அழைக்கின்றன

சிந்தியிருப்பதை கூட்டி வாருபவர்களுக்குக்
கூடைகளெங்கும்
கல்லும் மண்ணும்
சேர்ந்தே கிடைக்கின்றன

விரட்டும் கற்களுக்கு அஞ்சாமல்
துறைமுகத்துப் புறாக்கள் மட்டும்
லாவகமாய் விலகி அமர்ந்து
தானியங்களைக் கொத்துகின்றன

கரையிலிறங்கிய உற்சாகத்தில்
பிரத்தியேக உணவை
கப்பல் கேப்டன்
பறவைகளுக்கு விசிறுகிறான்
அவன் கால்களைச் சுற்றி
சிறகுகள் உரசும்
நன்றியின் பூக்கள்.

மற்றவவை போல்
பசித்த நேரத்தில் உண்ணவும்
நினைத்த நேரத்தில் கூடடையவும்
மனிதர்களால் முடிவதில்லை.

கூட்டமாய்ப் பறந்து
கட்டடங்களில் அமரும்
புறாக்களின் வாயில்
குஞ்சுகளுக்கான
மகிழ்ச்சி.

ஒரே சமயத்தில்
புறாக்களின் அலகுகளாகவும்
வீசுபவனின் கரங்களாகிவிடவும்
ஏங்குகிறது மனம்.
*********************

2)
பத்து குண்டு இருபது ரூபாய்
உப்புக்காற்றில் ஆடும் பலூனை
சுடும் சிறுவன்
நான்கு பலூன் வீழ்த்துகிறான்
எட்டு தீர்ந்த பின்
மொத்தம் முடிந்ததென்று
சாதிக்கிறான் கடைக்காரன்.

சற்று தள்ளி
அதே விலை
வேறு சிறுவன்
ஐந்து பலூன் வீழ்த்துகிறான்
பத்து முடிந்தும்
மேலும் ஒரு குண்டை
பரிசாகத் தருகிறான்.

தள்ளுவண்டி மீன் வாசம்
முதல் கடை ஈர்க்கிறது.
துணியால் துடைத்த கடாயில்
மீன் மிதக்க எண்ணை ஊற்றி
நேற்றைய மீனைப் பதமாக

சூடாக்கித் தருகிறாள்.

கூட்டம் குறைந்த அடுத்த கடை
புதிய மீன்
மிதமான எண்ணை
வயிற்றையும் கணக்கில் வைத்து
பொரித்துத் தருகிறாள்
வேறொருத்தி.

இரண்டு காட்சி
இரண்டு பார்வை
யூகிக்க முடியாத
வாழ்க்கை…!

 – சந்துரு.ஆர்.சி

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




பிறழ்
*******
நரகத்தில் தான் வாழ்கிறேன்
நரகம் எனத் தெரிந்து தான் வாழ்கிறேன்
நரகத்தில் உயிரோடு தான் இருக்கிறேன்
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில்
இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்
அழிக்க வேண்டிய சொல்
அன்பைக் குடிக்கும் வெயில்
அதிகாரம்
கபர்குழியில் சாந்தமானான் கவிஞன்
கவிதைகளின் கோபம் கூடுகிறது
காலம் ஒருநாள் கண்ணீர் சிந்தும்
கடந்து செல்கிறான் கவிஞன்
கண்ணீர் வழிய கசிகிறேன்
மனம் காலத்தைத் தூற்றுகிறது
ஆண் சிட்டுக்குருவி சிறு குச்சியைக் கொண்டு வந்தது
பெண் குருவியும் ஒன்று
இரண்டும் கட்டியது காதல்
ஆபத்தில் கை கொடுப்பதல்ல
துக்கத்தில் பகிர்ந்து கொள்வதல்ல
இதயத்தில் இடம் கொடுப்பது நட்பு
காலம் கண்ணீர் வடிக்கிறது
கவிஞனின் ஆன்மாவில் துடிப்படங்கவில்லை
கனவுகளில் நரகம் மெல்ல வளர்கிறது
தியாகம் இங்கே சிரிப்புக்குள்ளாகிறது
களவாணித்தனம் பெருமையோடு போற்றப்படுகிறது
இவர்கள் என்ன ஜனங்கள்?

இது என்னதேசம்.?

தூண்டில்காரனின் தியானம்
***********************************
ஆயுதம் தீர்வல்ல
அகிம்சை தீர்வல்ல

அநியாயங்களை எதிர்க்கும் மக்கள் திரளின் கோபமே தீர்வு
மழை பெய்கிறது
மண் மணம் எழவில்லை
சாக்கடை நாத்தம் சகிக்க முடியவில்லை
முச்சந்தியில் அலங்காரம்
கோலாகல ஊர்வலம்
கடைசியில் கடலில் பிணம்
பறக்க நினைக்கிறேன்
கூர் அம்புகள் குறிபார்க்குமே
பறக்கும் ஆசையோடு நடக்கிறேன்
மார்க்ஸிசம் வேணுமா ?
நக்சலிசம் வேணுமா ?
அடையாள அரசியல் வேணுமா?
விடுதலை அரசியல் வேணும்
எதிரிகளை விட்டு விட்டீர்கள்
தோழர்களோடு மல்லுக்கு நிற்கிறீர்கள்
ஞாபகம் கொள்ளுங்கள்
எதிரி இரக்கமற்றவன்
ஓடிக் கொண்டிருக்கும் ஆறு
ஆடிக் கொண்டிருக்கும் மரம்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அன்பை மொழிபெயர்த்தேன்
கணக்கற்ற பூக்கள் பறவைகள்
எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கின
பாழ் நிலத்தின் வழியே பயணிக்கிறேன்
ஆதுரத்துடன் என்னை உற்று நோக்குகிறது
ஏதும் உதவமுடியாத அதன் இயலாமை வெக்கையாய் கமழ்கிறது
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டாதவர்கள்
வேண்டுதலும் வேண்டாமையும் அவரவருக்குரியது.

வசந்ததீபன்

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்




காற்றின் சிறகில் அமர்ந்தவன்
***********************************
கனவுகள் இடையறாது தின்கின்றன
அவன் மெளனமாய் இருக்கிறான்
தீராத மெளனம் அமைதியில்லை
பாவமன்னிப்புக் கேட்கப் போகாதீர்கள்
சாத்தான்கள்
உங்கள் உடலைத் தின்னும்
கையாலாகாத கர்த்தர்
வேடிக்கை பார்ப்பார்
கடும் விஷமாய் வலி ஏறுகிறது
கண்ணீர் திரளுகிறது
வெடிபடும் வழி தான் புலப்படவில்லை.
மெளனத்துள் கரைய விரும்பினான்
கொந்தளிப்பு சூழலுள் பீறிட்டது
ஏகாந்தம் உடைபட
எதிர் வீட்டு நாயின் குரைப்பொலி
தூர ஒலிபெருக்கியின்
மந்திர உச்சரிப்பொலி
மழை வராமல்
ஒரே காற்றின் இரைச்சல்
மன வேதனை
உடல் நீயின்றி வேக
உயிரின் கொதியாட்டம்
விழிகளில் நீராய் வழிகிறது
நாடோடியாய்த் திரிவது
பறவையாய்ப் பாவனை கொள்வது
விடுபடுவது கனவுகளிலிருந்து எக்காலம்?

எரி நட்சத்திரத்தின் கதை
******************************
இறந்த பிறகு வாழ்க்கை தேவையில்லை
இறப்பிற்கு முன் தான் வாழ வேண்டும்
மரணத்திற்குப் பின் நடப்பதை அறிந்தவரில்லை
எல்லா நட்சத்திரங்களையும் பார்க்கிறேன்
எதுவும் என்னைப் பார்க்கவில்லை
இப்படித் தான் போகுது என் வாழ்க்கை
சொற்களெல்லாம்
இசையை நோக்கிப் போகின்றன
இசை கனவுகளாக குமிழியிடுகின்றன
கனவுக் குமிழிகளில்
நான் படகோட்டுகிறேன்
தலைவர்களைக் கண்டோம்
தொண்டர்களாய்ச் சீரழிந்தோம்
நிம்மதியான வாழ்வைப் பெறவில்லை
நிம்மதியில்லாமல் பிறந்தேன்
நிம்மதியில்லாமல் வாழ்கிறேன்
நிம்மதியில்லாமல் இறப்பேன்
கடந்தவை கனக்கின்றன
நடப்பவை உறுத்துகின்றன
வருபவை புகைகின்றன
காக்கா சத்தம் கேட்கலை
குருவி சத்தம் கேட்கலை
எந்திரங்களின் சத்தம் தான் கேட்கிறது.

– வசந்ததீபன்

பகல்வேட்டை கவிதை – புதியமாதவி

பகல்வேட்டை கவிதை – புதியமாதவி




பகல்வேட்டை
****************
என் வனம் உன் ராஜாங்கம் அல்ல.
பூத்துக்குலுங்குவதும்
பூமியதிர பொருமுவதும்
அருவியின் ஆர்ப்பரிப்பும்
காட்டாற்று வெள்ளமும்
உன் கட்டுப்பாட்டுக்குள் வராது.
வனத்தில் புலிகள் உண்டு.
காட்டுப்பன்றிகள் உண்டு.
நரிகளும் உண்டு.
வேட்டையாட வந்தவன் நீ.
புலியாக வா
உன் ஓவ்வொரு பார்வையும்
பாய்ச்சலாய் இருக்கட்டும்.
உன் கூரிய நகங்களால்
வேட்டையாடு.
தொங்கும் தசைகள் கிழித்து
புசி.
அப்போதும் பசி அடங்கவில்லையா
என் கருப்பைக் கிழித்து
கனவுகள் எடுத்து வீசு.
பாறையில் கசியும் ரத்தம்
பருகியது போக மீதியைத் தொட்டு
உன் மேனி எங்கும் பூசிக்கொள்.
மறந்துவிடாதே
வனத்தின் யட்சி
விழித்துக்கொள்ளும்
இரவு வருவதற்குள் புறப்பட்டு விடு.
பகல்வேட்டை பகற்கனவு.

-புதியமாதவி

வா கண்ணே!!! கவிதை – ம.வி

வா கண்ணே!!! கவிதை – ம.வி




வா கண்ணே வா…
எதுவும் தவறில்லை எனச் சொல்லும் உலகில்
நீ பெண்ணாகப் பிறந்தது மட்டும் எப்படித் தவறாகும்? …

வா கண்ணே வா…
ஆடை சுதந்திரம் என்று நீ அணியும் ஆடையில்
அவன் திணிக்கும் ஆண்மையின் வக்கிரம் எப்படி உன் தவறாகும்…

வா கண்ணே வா…
மழலையின் சிரிப்பிலும் மங்கையின் அழகிலும்
அரக்கனின் கண்ணுக்கு காமம் தான் தெரியும் என்றால்
அது எப்படி உன் தவறாகும்…

வா கண்ணே வா…
சாதிக்க நினைத்து சாலைக்கு வந்தாய்
அடுப்படியில் உன்னை அடக்கித் தான் வைத்தார்கள்…
வெகுண்டு எழுந்து நீ வெளியிலே வந்தாய்
வெறி நாய்களால் உனை விரட்டினார்கள்…
கண்களில் கனவுகள்..
நெஞ்சினில் ஏக்கங்கள்..
மூன்று வயது குழந்தைக்கும் முட்டி தெரிய ஆடை வேண்டாம்..
முதிர் வயது மூதாட்டிக்கும் முந்தி சேலை மூட வேண்டும்..
எத்தனைத் துயரம் தான் தாங்குவாயோ…

இது எப்போது மாறும் என்று ஏங்குவாயோ…
போதும் நீ பொறுத்தது போதும் பெண்ணே
நீ முன் செல்லும் பாதை உன் கண்கள் முன்னே
தடைகளை தகர்த்து நீ செல்வாய் பெண்ணே
கனவுகள் மெய்ப்பட வெல்வாய் பெண்ணே
நீ உலகத்தின் உச்சிக்கு செல்லும் வேளை
வரும் சரித்திரம் உன் பெயர் சொல்லும் நாளை!!!

– ம.வி !