Kaviyoviyathodar Yuthageethangal - Kombu Mulaitha Narkali 35 Poetry Series by Na ve Arul. நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- கொம்பு முளைத்த நாற்காலி 35

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்




அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம்
உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
விவசாயி தலையில்
மிளகாய்த் தோட்டங்கள்!

அதிகாரத்திற்கு
முதலில் செயலிழக்கும் உறுப்புகள்
அதன் கண்கள்.

அதிகாரம் தற்போது
மிகவும் பழுத்துவிட்டது
ஊன்றுகோல் இல்லாமல் விழுந்துவிடும் ஆபத்து
சுருள் முள்வேலிகள்
ஆணிக் கம்பங்கள்
தெருக்களில் கல்வாரி மலைகள்

அதிகாரத்திற்கு
ஒரு குதிரையின் லாடம் மற்றும்
இரும்புத் தொழிற்சாலை போதும்.
வயல்வெளி அதற்கொரு கிழிந்த ரூபாய் நோட்டு.

கடவுளின் கைத்தொழிலில்
சாத்தான்களின் நிர்வாகம்
ஜனநாயகம் ஒரு ஷோ கேஸ் பொம்மை

அதிகாரம்
வெளுத்துப்போன கர்ப்பப் பையில்தான்
வளரத் தொடங்கியது
அதன் நிழலே அதனை
மெல்ல மெல்லத் தின்னத் தொடங்குவதால்
காணாமல் போய்விடுகிறது
விசித்திரம் என்னவெனில்
அதிகாரத்தின் இறுதி ஊர்வலம்
பட்டாபிஷேகம் போல் பளபளக்கும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Pattapoochiyin siragugalum vettukiliyin kalgalum 34 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்




பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும்
********************************************************************
கடவுளின் தலையை
ஞானி பொருத்திக் கொள்கிறபோது
அவனது பெயர் விவசாயி.

விவசாயியின் இதயம்
எப்போதும் தரிசாய் இருப்பதில்லை
அது
நாற்காலிகளை மரங்களாக்கிவிடுகிறது
மரங்களைத் தோப்பாக்கிவிடுகிறது
தோப்புகளை வனமாக்கிவிடுகிறது.

உலகத்திலேயே தனக்குப் பிடித்தமான ஒன்றை
இடச்சொல்லி
விவசாயியிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தால்
அவன் ஒரு விதையைத்தான் தேர்ந்தெடுப்பான்.

அவன் வளர்த்த அட்டைகள்
அவனது வயலில்
அறுவடைகளை உறிஞ்சத் தொடங்கிய பின்புதான்
அவனது உடலின் குருதி குறைய ஆரம்பித்தது.

அவனது கவலையெல்லாம்
விளைச்சலில் இறங்கும் பூச்சிகள் அல்ல
அவனது வயலில் இறங்கிய
திசையெல்லாம் பறந்துகொண்டிருக்கும்
பட்டாம் பூச்சியின் சிறகுகளும்
வெட்டுக்கிளியின் கால்களும் கொண்ட
புதிய விலங்குகள்!
அவை விநோத மொழி பேசுகின்றன
அவை
பாசனத்திற்கான தாகத்தின் கடலைப்
பருகிவிடுகின்றன.

அவனது கூரையின் வானமும்
தரையின் மண்ணும் களவாடப்படுகின்றன.

அவன் மீது மரணம்
ஒரு மலிவான பொருளைப்போலத் திணிக்கப்படுகிறது.

சாணம் பூச மறந்த விதை
கெட்டுப் போவதைப்போல
எதிரிகளின் மூளை செயலற்றுவிடுகிறது.

விவசாயிகளை வெல்ல நினைப்பவன்
முதலில் ஆயுதங்களைக் கீழே எறிந்தாக வேண்டும்
விவசாயிகள் முன் நிராயுதபாணியாக
நிற்க வேண்டும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Thanthirangal 33 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- தந்திரங்கள் 33

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்




தந்திரங்கள்
*****************
மகாத்மா காந்தியின் மார்பில்
குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை
இன்னும் சொல்லப் போனால்
எப்படி இறந்து போனார் என்பதை
மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும்.

காந்தி பயன்படுத்திய
ஒவ்வொரு பொருளும்
காட்சிக்கு வைக்கப்படுகிற அதே அரங்கத்தில்
அவர் ஒரு விநோதமான ஏலப்பொருளாகிவிட்டார்.

எல்லாவற்றையும் விட
மகாத்மா காந்தியின் உருவப் படத்தில்
வேறொரு பிம்பத்தைச் செருகுவது
ஒரு தந்திரமான கலை.

ஒரு கழிவறையில் வெளித்தள்ளப்படும்
கழிவுகளைப் போல
மகாத்மாவின் நினைவுகள்
மக்களின் மனங்களிலிருந்து
அகற்றிச் சுத்தம் செய்யப்படுகின்றன.

மகாத்மாவின் பிரார்த்தனை உன்னதமானது
அது ஒரு விவசாயியை பிரதமராக்கும்
தூய்மை வாய்ந்தது.
பாராளுமன்றப் பாசனத்திற்கு
ஒரு விவசாயியைத்தான் விரும்பினார்.

இது நம்பிக்கைத் துரோகிகளின் காலம்

விவசாயி என்கிற வார்த்தையை மறந்துபோன
மூளைதான் அரசாங்க நாற்காலியின் காட்சிப்பொருள்
தலைநகரமே மரண பஜனைக்குத் தயாராகிவிட்டது
மகாத்மாவின் கனவுப் பிரதமர்களைக்
குறிபார்த்துக் கொண்டேயிருக்கின்றன
கோட்சேக்களின் குண்டுகள்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Viyugangal 32 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- வியூகங்கள் 32

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: வியூகங்கள் 32 – நா.வே.அருள்




வியூகங்கள்
******************
காட்டுப் பன்றிகள்
வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால்
அமைதியாக உறங்க முடியவில்லை.

இப்போது காட்டுப் பன்றிகள்
யானைகளைப்போலப் பருத்துவிட்டன
அவை
வயல்களை விழுங்கி விடுகின்றன
விவசாயிகளின் கிணறுகளைக்
குருதியால் நிரப்பிவிடுகின்றன.

அவை
முதலில் விவசாயிகளைக் கொன்றுவிட்டு
பிறகு வயல்களைத் தின்றுவிடுகின்றன.

அவை
நாற்காலிகளின் கீழே
சூழ்ச்சிகளின் புதர்களில் வசிக்கின்றன.
அரண்மனையின் முன் கட்டப்பட்டிருந்த
ஆராய்ச்சி மணிகளின் நாவுகளைக் கொறித்துவிடுகின்றன.

ஒரு கடுங்குளிரில்
பனிப் போர்வையின் வெடவெடப்பில்
விவசாயிகள் குப்புற விழுந்த போதுதான்
பின்னாலிருந்து
ஓநாய்களைப்போலத்
தனித்தும் பின் கூட்டமாகவும்
யுத்தத் தந்திரங்களால்
வியூகம் வகுக்கின்றன.

சில நேரங்களில்
காட்டுப் பன்றிகள் இறங்கிய வயல்களில்
விவசாயிகள்
செயலிழந்து தலைகவிழ்ந்து நிற்க நேரிடுவது
நம் காலத்து மிகப் பெரிய அபத்தம்தான்!

கவிதை – நா. வே. அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Oru Nakkin Neelam 31 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- ஒரு நாக்கின் நீளம் 31

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு நாக்கின் நீளம் 31 – நா.வே.அருள்




ஒரு நாக்கின் நீளம்
*****************************
அதிகாரத்தின்
நாக்குக்குச்
சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன.
அது வாய்க்கு வெளியே
வெகுதூரம் பிரயாணம் செய்து
சென்று சேருமிடம் கொலைக்களம்.

வளையும் உலோகத்தாலான அதன் நாக்கு
பொய்களின் உலைக்களத்தில்
வடிவமைக்கப்படுகிறது.
செய்நேர்த்தியுடன் செய்வதற்கு
நாட்பட்ட தீயில்
இதமான சூட்டில்
வாட்டி எடுக்க வேண்டும்.

நடனமிடும் நாக்கு
அழகாகக் குரைப்பதற்குப் பயிற்சிகள்
எடுத்துக் கொள்கிறது.
கால்களை நாவால் சுத்தம் செய்யும்
தொழில் நுட்பம் பழக்க
நிறைய தொழிற்கூடங்கள்..

சுருக்கம் விழுந்த வயிறுகளின் பட்டினிதான்
பொய்களின் நாவுகளுக்கான
ரொட்டித்துண்டு.
சப்பாத்துகளின் தோல் ருசியில்
நாகரிகமாகப் பருத்துவிடுகிறது
நாக்கு.

உலகின் எந்த நதியைவிடவும் நீளமானது
உலகின் எந்த மலையை விடவும் பெரிதானது
உலகின் எந்தக் கடலைவிடவும் ஆழமானது
பொய்களின் நாக்குதான்.

அது புரள்வதற்காக வதைமுகாம்களின் குருதியில்
உமிழ்நீர் சுரந்துகொள்கிறது.
கோட்டை அகழியின்
முதலைகளைத் தீனியாக்கிக் கொள்கிறது.

அதன் ஒற்றை உடலைச் சுமப்பதற்கு
எட்டுக்கால் நாய்கள்
எப்போதும் தயாராய் இருக்கின்றன..

கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையில்
தனது காதலியுடன் இறந்துபோன ஒரு குரங்கை
காட்டுக்கு ராஜாவாகிவிட்டதாகக்
கதை சொல்கிறது.

இப்போதோ சுவற்றில் எழுதப்பட்ட
சரஜீவோ என்கிற வார்த்தையைக் கண்ட
பாபிலோனிய பெல்ஷாஜ்ஜர் போல
மரணத்தின் வீதிகளில்
தலைதெறிக்க ஓடத் தொடங்கிவிட்டது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

பின்குறிப்பு
இட்லரின் பிரச்சார அமைச்சனை அறிஞர் அண்ணா–கோணிப்புளுகன் கோயபல்ஸ் என்பார்.
இட்லர் செத்த பின்பும்கூட கோயபல்ஸ் கடைசி நேரத்தில்

சிவப்பு மிருகங்களுக்கெதிராக -தலைநகரின் மையத்தைப்பாதுகாப்பதற்காக இட்லர் முன்னணிப்படையில் நிற்கிறார்- என்று புளுகினான்.
அதற்கு ஒரு எழுத்தாளன் பதில் எழுதினான்—
உண்மையில் அந்தக்குரங்கு தனது காதலியோடு கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையின்
ஆழத்தில் இறந்து கிடக்கிறது–என்று.
பின்பு பாசிஸ்டுகள் அனைவரும் செஞ்சேனையால் அழிக்கப்பட்டனர். வரலாறு மறப்பதேயில்லை.

Kavithai Ula Poetry Series (Sutru Vazhkai) 9 By Na ve Arul கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை - நா.வே.அருள்

கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்




ஒரு சுற்று வாழ்க்கை
*****************************
கவிஞர்கள் – சந்துரு .ஆர்.சி, நிலாக்கண்ணன், சரஸ்வதி
அர்த்த விளையாட்டாக இருக்கிற வாழ்க்கைதான் அபத்த விளையாட்டாகவும் இருக்கிறது. விசித்திரங்களின் விமான ஓடுதளததில் நத்தையாக நகர்வதும் வாழ்க்கைதான். ஊர்ந்து செல்லும் மரவட்டையின் கால்களாக ஓயாமல் விரைவதும் வாழ்க்கைதான். காசே இல்லாத போது உண்டியலில் கம்பி விட்டு நாணயங்களை எடுக்கிறபோது என்ன சந்தோஷம் வருமோ அப்படியான சந்தோஷங்களைக் கொண்டிருப்பதும் வாழ்க்கைததான். மீண்டும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷங்களை எண்ணிக் காலமெல்லாம் ஏங்க வைப்பதும் வாழ்க்கைதான். மொத்தத்தில் வாழ்க்கையே ஒரு முரண்களின் மூட்டைதான்.

இதில் கொள்கை, சித்தாந்தம் என்று பேசி தம்மை வருத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். விட்டேத்தியாக வாழ்ந்து உடன் இருப்பவர்களை வருத்திக் கொல்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை சேகரித்து வைத்த அனுபவங்களை அவ்வளவு இலேசில் புறந்தள்ளி விட முடிவதில்லை. காலற்றவர்களுக்குச் சக்கர நாற்காலிபோல வாழ்க்கை அவரவருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் செய்கிறது. சிலர் திருப்திப் படுகிறார்கள். சிலர் எதற்குமே திருப்தியுறாமல் அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்துப் பாடத் தோன்றுகிறது…. “இவ்வளவுதான் வாழ்க்கை… இவ்வளவுதான்…”

சந்துரு .ஆர்.சி
**********************
இது அலைபேசிகளின் காலம். ஆனால், சைக்கிள் மிதித்தே களைத்துப் போன கால்களின் வலிகளின் உக்கிரத்தை எந்தச் சுயமியால் எடுத்துக் காட்ட முடியும்? சைக்கிள் சீட் இறுக்கியே விரைவாதம் வந்த எத்தனையோ பேர்களின் வலிகளுக்கு இந்த வாழ்க்கை எந்தக் களிம்பை வைத்திருக்கிறது?

மாதங்கள் கடந்தும்
சாத்தி வைத்த சுவற்றில்
துருப்பிடித்து
சீந்துவாரற்று கிடக்கிறது
பெடலுடைந்த சைக்கிள்.
கலகலத்து ஆடியபோதும்
ஓட்டம் குறையாத அதன் மேல்
அரூபமாய் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறது
ஓட்டை வண்டியை உருட்டியே
ஒவ்வொன்றாய் கரையேற்றி
களைத்துப்போன முதியவனொருவனின்
வாழ்வு…

எல்லாமே சாதாரணமாக நடந்துவிடுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் எல்லாமே யாரோ சிலரின் திட்டமிடுதல்களாலும், தந்திரங்களாலும், அவற்றிற்கு ஆட்படுபவர்களின் வெள்ளந்தித் தனத்தாலும், யோசிப்பின்மையாலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. இது மேய்ப்பர்களின் மேய்ப்பர்கள் காலம்.

மேய்ச்சல் முடித்து
கனத்த வயிற்றுடன்
திரும்புகின்றன மாடுகள்.

வற்றிய வயிற்றுடன்
பின் தொடர்கிறான் மேய்ப்பன்.
வழி நடத்தியவனின்
பசியுணராமல்
நன்றியோடு
குரலெழுப்புகின்றன அவை.

மேய்ப்பனின் எஜமானர்கள்
தந்திரம் மிக்கவர்களென்று
ஒருபோதும்
மந்தைகள் அறிவதில்லை
மேய்ப்பனும்தான்…

நிலாக்கண்ணன்
************************
அம்மா எடுக்காத அவதாரமில்லை. சமையல்காரி முதல் தையல்காரி வரை… அவளது கைகளில் ஊசி குத்திய காயங்கள் ஆறியிருக்கலாம்…. ஆனால் அவள் தைத்துக் கொடுத்த ஆடைகள் கொடுத்த கதகதப்பு மாறியிருக்குமா?…. இன்றைக்கும் ஏங்குகிறோம்….

அவள் ஒரு வயலினிஸ்ட்
கிழிந்த ஆடைகளை
சிறு ஊசியால் வயலினைப்போல மீட்டுவாள்
அந்த இசையை நாங்கள் உடுத்தியிருந்தோம்.
💜💜💜

கவிஞர் சோலை பழநியின் கவிதையொன்று நினைவில் நிழலாடுகிறது. பள்ளிக் கூடத்தில் சத்துணவு சாப்பிடும் சின்னஞ்சிறு பையனுக்கு“ இந்த உலகம் ஒரு சோற்று உருண்டையைப்போலத்தான் தெரிகிறது”. நிலாக் கண்ணனுக்கும் இந்த அனுபவம் நேர்கிறது. சுவரொட்டி ஒட்டும் பையன் கவிஞனின் மனசில் கவிதையினை ஒட்டி விட்டுச் செல்கிறான்.

ஒரு இரவென்பது
நான்கு முனைகளுடன் கூடிய
சதுரமான காகிதமாய் இருக்கிறது
நகரத்தின் மையத்தில்
போஸ்ட்டர் ஒட்டும் சிறுவனுக்கு.
அவன்தான் இரவின் மீது
பசை தடவி
இந்தபூமியில் ஒட்டிவிடுகிறான்.
💜💜💜

கவிதை ஜோசியம் பார்க்கும் கவிஞர்கள் ஏராளம். அவர்களிடம் இருப்பவை ஏராளமான நெல்மணிகள்… சிறகுகள் கத்தரிக்கப்பட்ட சில கிளிகளும்! ஆனால் இந்தக் கவிஞன் சொல்கிற கதையே வேறு…வாழ்க்கையே பொய்த்துப் போன ஒருவன் ஜோசியத்துக்கு உயிர் கொடுக்கிறான்….. மொட்டைப் பனையில் பிடித்த கிளியோடும் விதை நெல்லோடும் செத்துப் போன விவசாயி… ஜோசியக்காரனாக உயிர் பிழைத்துக் கொள்கிறான்…. கவிதையின் கடைசி இரண்டு வரிகள் கண்ணீரை வரவழைத்து விடுகின்றன.

மொட்டைப்பனையில்
பிடித்த கிளியோடும்
கொஞ்சம் விதை நெல்லோடும்
ஊரை விட்டு ஒடி வந்த விவசாயி
மெரினா கடற்கரையில்தான்
ஜோசியம் பார்க்கிறார்
அவரை நீங்கள்
சந்திக்க நேர்ந்தால்
பரிவோடு நலம் விசாரியுங்கள்
ஏனெனில் அவரின்
நெல்மணிகளைத் தின்ற
கிளிகள் நாம்

சரஸ்வதி
************
முகநூல் பல சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறது. உலகம் முழுவதையும் நமது வாசலுக்கு வரவழைத்துவிடுகிறது. அங்கு நேரும் கொண்டாட்டங்கள் நமது கொண்டாட்டங்கள். அங்கு நேரும் துக்கங்கள் நமது துக்கங்கள். ஆனால் மாறி மாறி அலைக் கழிக்கையில் கல்யாண விருந்து சாப்பிட்ட கையோடு காரியத்தில் கலந்துகொண்டு பங்காளிக்குத் “தலைகட்ட” வேண்டியிருக்கிறது. கண்ணீர் புன்னகையாக மாற கால அவகாசம் கூட கிடைப்பதில்லை. இதயத்தின் இடப்புறத்தில் மணமேடை… வலப்புறத்தில் பிணமேடை….இப்படித்தான் வாழ்க்கை கண்ணாமூச்சி ஆடுகிறது. இந்தக் கவிதையின் மூலம் கவிஞர் நமது கண்கட்டை அவிழ்த்து விடுகிறார்.

“ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து விட்டு மனம் கனக்க
தொடுதிரையை மேலேற்றினால்
நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்தச் சொல்கிறது முகநூல்
சட்டென்ற மனமாறுதலைப் பெற முடிந்த இயந்திர உலகில்
சற்று முன் அறிவித்த வருத்தங்களைத்
துடைத்தெறிந்துவிட்டு உடனே சிரித்தபடிச் சொல்ல முடிகிறது பிறந்த நாள் வாழ்த்தொன்றை”

கவிஞர் நினைத்தால் ஒரு தெருவோர வியாபாரி கடவுளாகலாம். கடவுளின் பழைய பிரதிமைகள் அழிக்கப் படுகின்றன. புனைவு வழி விரிவது புதிய கடவுள். ஒரு பெண்தான் நாள்தோறும் பழைய கோலத்தை அழித்துப் புதிய கோலத்தைப் போடுபவள். கடவுளின் முகவரியைத் தேடி அலுத்துப் போனவர்களுக்குக் கவிஞர் கொடுப்பது பசியின் முகவரி….இது கடவுளுக்கே பசியை அடையாளம் காட்டும் கவிதை. வேறு வேறு கோலம் போட்டாலும் வாசல் அழகாகிவிடுகிறது.

மூங்கில்களுக்குள்
இசையை நிரப்பி
விற்று வருகிறார்
அந்த நவீன கிருஷ்ணர்…

உதடுகளின் உரசல்களுக்கும்
முகக் கவசத்திற்குமான
இடைவெளியில்
காற்றாடிக் கொண்டிருக்கிறது
பசி.

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவி உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

 தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்

Kaviyoviyathodar Yuthageethangal - Kanakku 30 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- கணக்கு 30

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கணக்கு 30 – நா.வே.அருள்




கணக்கு
*********************
நாங்கள் காயம்பட்டுத் திரும்பியிருக்கிறோம்
துரோகங்களின் ஆயுதங்கள்
துளைத்துவிட்டன.
இன்று இரவு எங்கள் கூடாரத்தில்
கர்ஜிக்கும் சிங்கத்துடன் உறங்கி எழுவோம்.

பிடரி மயிர் சிலிர்க்க
பிறகு பிறகு என்று
போராடிக் கொண்டே இருப்போம்.

எங்கள் ஓணான்களுடன்
பச்சோந்தியை அனுப்பி வைக்கும்
தந்திர மிருகங்களின்
குணமறிவோம்.

விடுதலை என்பது வலி மிகுந்த
சுயமரியாதை.
அதன் ருசி துரோகிகளுக்குத் தெரியாது.

இது தோல்வியல்ல
துயரங்களைக் குருதியில் குழைத்து
மனம் முழுதும் பூசிக் கொள்கிறோம்
எங்கள் ஏர்க்கலப்பைகள்
ஆயுதங்களாக மாறிவிடுகின்றன.

துரோகிகளின் பாதத் தடங்கள்
இந்தியாவின் பிச்சைப் பாத்திரங்கள்.
எங்களுக்குத் தெரியும்
விடுதலை வீரர்களின் பாதத் தடங்கள்
சுதந்திர தேவியின் மலர் மாலைகள்.

கவிதை – நா.வே.அருள்
கார்த்திகேயன் – ஓவியம்

Kaviyoviyathodar Yuthageethangal - Oru Kondattam Irandu Voorvalangal 29 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29 – நா.வே.அருள்




ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள்
*****************************
அதிகாரம்
தனது இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்த போது
அமைதி
தன் முதல் ஊர்வலத்தை நடத்தத் தொடங்கியது.

இராவணனுக்குச் சமமாக
சுருட்டிவைத்திருந்த சொந்த ஆசனத்திலமர்ந்த
அநுமனைப் போல
அதிகாரங்களின் ஊர்வலத்திற்கு எதிராக
அமைதியின் முதல் ஊர்வலம்!

கருப்பையிலிருந்து வெளிவருகிற குழந்தையைப்போல
புரட்சி
விவசாயியின் கருப்பையிலிருந்து
இந்திய மண்ணை முகர்ந்து பார்க்கிறது.

அதிகாரம் –
தனது இறுதி முடிவை
சட்டங்களின் மூலமாக எழுதுகிறது
வன்முறையின் மூலமாக அமல்படுத்துகிறது
அமைதியின் காவலர்களோ
சமாதானப் புறாக்களை வானில் பறக்கவிட்டு
மனித குலத்தைப் பாதுகாக்கிறார்கள்.

விவசாயி
காட்டின் மகன்
அவன் கர்ப்பத்தில் காடு
மரங்களை நாற்காலியாக்கியவர்கள்
ஒரு காட்டையே அழிக்கிறார்கள்
மேலும் அந்த நாற்காலியைச் சுடுகாட்டில்
சிதையைப்போல அலங்கரிக்கிறார்கள்.

எரிமலைகள்
டிராக்டர்களில் ஊர்வலம்போகப் பழகிக் கொண்டன
எரிமலைக்குள்
அக்கினியின் வரலாறு
ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Viduthalai 28 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- விடுதலை 28

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: விடுதலை 28 – நா.வே.அருள்




விடுதலை
****************
ஒரு விவசாயியின் அரிசியில்
கடவுளின் கையெழுத்து இருக்கிறது
சாத்தான்களால் படிக்க முடிவதில்லை.

ஒரு விவசாயி
மணிலாவை உரிக்கிறபோது
உள்ளே உருளும் இரண்டு பிணங்கள்!.

வயக்காட்டின் சேற்றில்
விவசாயிகளின் வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.

அவர்கள் குடிக்கும் கூழ்
உங்கள் மதுக்கோப்பைகளில்
போதையைத் தருவதில்லை.

குருவிக்காரப் பெண்மணிகள்
மார்பில் குழந்தைகளைக் கட்டி வருவதுபோல
உழைத்துக் களைத்த விவசாயப் பெண்களின்
மடி நிறைய கீரைக் குழந்தைகள்.

இரவு எட்டு மணிக்கு மேல்தான்
அவர்கள் அடுப்பு புகைய ஆரம்பிக்கிறது.
அப்போதெல்லாம் உங்கள்
மதுச் சாலைகளில்
கோப்பைகளின் கிண்கிணியோசைகள்.

அவர்களின் நெற்றிப் பட்டைகள்
தேசியக் கொடிகள்
அவர்களின் வயிற்றுச் சுருக்கங்கள்
தேச வரைபடம்.

மனித மூக்குக்கு
மூக்கணாங்கயிறா?
அவர்கள் காளைகளின் திமில்கள்.

உங்கள் காதுகளில் அடைத்திருக்கும்
பஞ்சினை அகற்றித்தான்
அவர்களின் காயங்களுக்குக் கட்டுப்போட முடியும்.

முன்னோர்களின் ரத்தக்கறை படிந்த
விடுதலை மண்ணை விழுங்கிச் செரிக்க
நவீன சட்டங்களின் கறுப்பு எழுத்துகள் திணறுகின்றன.

உயிரை நீக்கியபின்
பிணத்திற்கு மருத்துவம் பார்க்கிற
விசித்திரங்களே
புதிய வேளாண் சட்டங்கள்!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
அவர்களின் டிராக்டர்களுக்கு
விடுதலை விவசாயம் தெரியும்!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்