ஆயிஷா இரா. நடராசனின் “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூல் அறிமுகம்
மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத் – அருண்குமார் நரசிம்மன்
மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத்
மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகள் என்று நான் எழுத நினைத்தபோது என் மனதில் வந்த நாடுகளில் ஒன்றுதான் ஹைதராபாத். தற்போது உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் ஹைதராபாத் 1948க்கு முன்பு தனி நாடக இருந்து வந்தது, இந்த நாட்டின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.
இந்திய துணைக் கண்டத்தின் தென்-மத்திய பகுதியில் ஹைதராபாத் அமைந்துள்ளது, இது 1724 முதல் 1948 வரை நிஜாம் பரம்பரையில் வந்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. 1680 களில் இப்பகுதி முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது, இருப்பினும், 1724 இல், இந்த பேரரசு பலவீனமடையத் தொடங்கியபோது, முகலாய அதிகாரி ஆசிப் ஜா, பேரரசின் தெற்கு மாகாணங்களின் முகலாய ஆளுநரை தோற்கடித்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றி தன்னை “ஹைதராபாதின் நிஜாம்-அல்-முல்க்” என்று அறிவித்தார்.
அதற்குப்பின் ஹைதராபாத் 1798 இல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டுவரப்பட்டது, ஆனால் உள்நாட்டின் விவகாரங்களை இந்த நாட்டின் நிசாமின் வசமே விட்டது. நிஜாம்கள் இஸ்லாமிய கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை போற்றி பின்பற்றி வந்தனர். இதனால் ஹைதராபாத் முஸ்லீம்களின் அடையாளத்தின் மையமாக மாறியது மற்றும் ஹைதராபாத்தில் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
1947ஆம் ஆண்டில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்து, ஆங்கிலேயர்கள் இரண்டு நாடுகள் உருவாகியநேரத்தில் நேரத்தில், இரண்டு நாடுகளிலும் இருந்த இருந்துவந்த தனிநாடுகளுக்கும் சமஸ்தானங்களுக்கும் அவர்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் பகுதியை சேர்த்துக் கொள்ளவோ அல்லது தனி நாடாக இருந்து கொள்ள வாய்ப்பளித்தது. இந்தியாவில் இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஹைதராபாத் நிஜாம்-ஒஸ்மான் அலி கான், இந்த இரண்டு நாடுகளுடனும் ஹைதராபாதை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்து தனி நாடாக செயல்பட முடிவு செய்தார்.
சுதந்திர இந்திய அரசு ஹைதராபாதை தங்கள் நாட்டுடன் இணைக்க நிஜாம்-ஒஸ்மான் அலி கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் அவரோ இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஹைதராபாதின் முயற்சிகளை இராஜதந்திர வழிகளில் தோற்கடிக்க முயன்றாலும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் ஹைதராபாத் பிரச்சினையைத் தீர்க்க ராணுவ வழிகளை நாடினார்.
இந்திய அரசு ஹைதராபாத் மீது போர் தொடுத்து அந்த நாட்டை இந்தியாவுடன் இணைக்க தங்கள் இராணுவத்தினை அனுப்பியது, இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் போலோ என்று பெயரிடப்பட்டது. செப்டம்பர் 13,1948 அன்று, இந்திய இராணுவப் படைகள் ஹைதராபாதிற்குள் அதிகாலை 4 மணிக்கு நுழைந்தன. சோலாப்பூர்—செகந்திராபாத் நெடுஞ்சாலையில் உள்ள நல்துர்க் கோட்டையில் ஹைதராபாத் காலாட்படையின் 1வது தற்காப்புப் படைக்கும் இந்திய அரசின் 7 வது படைப் பிரிவின் தாக்குதல் படைக்கும் இடையே முதல் போர் நடந்தது.
இரண்டு நாடு படைகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது ஆனால் பெரிய இந்தியப்படையை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் ராணுவம் திக்குமுக்காடியது. இறுதியில் செப்டம்பர் 17 அன்று மாலை 5 மணியளவில், ஹைதராபாத் நிஜாம் போர் நிறுத்தத்தை அறிவித்தார், இதனால் ஆயுத நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ ஜெனரல் ஜோயந்தோ நாத் சௌத்ரி, மாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் ஒரு படையை வழிநடத்தினார், செப்டம்பர் 18 அன்று மேஜர் ஜெனரல் எல். எட்ரூஸ் தலைமையிலான ஹைதராபாத் ராணுவம் சரணடைந்தது.
ஹைதராபாத் சரணடைந்தவுடன் நிஜாம் பதவி விலகினார் மற்றும் சமஸ்தான அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர், நிஜாம் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
தபால் தலை சேகரிப்பாளர்கள் இந்திய தபால் தலைகளை வெளியிட்ட நாடுகள், மாநிலங்களை இரண்டு பிரிவாக பிரிக்கிறார்கள். நிலப்பிரபுத்துவ சமஸ்தானங்கள் தங்கள் சொந்த தபால் சேவையை நடத்தி, அவர்கள் நாட்டிற்குள் பயன்படுத்தக்கூடிய தபால்தலைகளை வெளியிட்ட நாடுகள் என்றும் மற்ற சமஸ்தானங்கள் தங்கள் தபால் சேவையை கையாள பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் அமைப்புடன் ஒப்பந்தம் செய்தது.
ஹைதராபாத் நிலப்பிரபுத்துவ நாடக இருந்துவந்தது, ஹைதராபாத்தின் முதல் தபால் தலை 1869ஆம் ஆண்டு தொடங்கி வெளியிடப்பட்டன, மேலும் 1/2, 1 மற்றும் 2 அனாக்கள் ஆகிய மூன்று வெவ்வேறு மதிப்புகளை கொண்ட ஒரு அரபு எழுத்து வடிவமைப்பைக் கொண்டிருந்தது. 1880 ஆம் ஆண்டில் புதிய வடிவமைப்புடன் அந்த தபால்தலைகள் மாற்றப்பட்டன, அதில் “POST ஸ்டாம்ப்” என்று பொறிக்கப்பட்டது மற்றும் அதன் மதிப்பு இந்தி, தெலுங்கு, உருது மற்றும் தபால் தலையின் மைய பகுதியில் ஆங்கிலம் நான்கு மொழிகளில் அச்சிடப்பட்டது.
இந்த வடிவமைப்பு ஹைதராபாத் தபால்தலைகளுக்கு (அதிக கட்டணம் உட்பட) பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஹைதராபாத் நிசாம் தபால் தலைகளில் ஒரு புதிய வடிவமைப்பினை அறிமுகப்படுத்தினார், அதில் நடுவில் ஹைதராபாத் நிஜாமின் முத்திரை இடம்பெற்றது. முதல் சில ஆண்டுகளில் தபால்தலைகளின் மேல் பகுதியில் ஒரு அரைவட்ட வடிவில் “POSTAGE” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. 1915-16 இல், “POST & RECEIPT” என்ற எழுத்துக்களுடன் கூடுதல் தபால்தலைகள் வெளியிடப்பட்டது.
– அருண்குமார் நரசிம்மன்
நூல் அறிமுகம் : அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் : தமிழில் . ராஜசங்கீதனின் : மானுடத்திற்க்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல – சு.பொ.அகத்தியலிங்கம்
நூல் : மானுடத்திற்க்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல
ஆசிரியர் : அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் தமிழில் : ராஜசங்கீதன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹260.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுகிறது…
ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுவது அசாதாரணமானது. அதுவும் மார்க்சுக்கு பிறகு மோடிவரையிலான தத்துவம் , கோட்பாடு, அரசியல் சார்ந்து உரையாடுவது மிகவும் நுட்பமானதும் ஆழமானதும்கூட. ஆழந்த புலமைமிக்க இருவரின் உரையாடலாக இந்நுல் அமைந்துள்ளது .
ஏற்கனவே இத்துறையில் ஞானம் உள்ளோருக்கு இந்நூல் மறுவாசிப்பாகவும் புத்துணர்வு ஊட்டுவதாகவும் அமையும். புதிய வாசகர் ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து பல செய்திகளை தகவல்களை உள்வாங்கலாம். தெளிவடையலாம்.
சர்வதேச அரசியல் தத்துவப் போக்குகளூடே இலக்கிய கலாச்சாரப் போக்குகளையும் விரவி உரையாடும் இருவரும் மிகவும் பரந்த வாசிப்பும் கூர்ந்த ஞானமும் உடைய செயல்பாட்டாளர்கள். இந்நூலில் அய்ஜாஸ் அஹ்மத் உடன் விஜய் பிரசாத் உரையாடுகிறார் .
அய்ஜாஸ் இந்தியாவில் உத்திரபிரதேசம் முஷாபர் நகரில் 1941 பிறந்து, பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு குடிபெயர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசித்து, மீண்டும் இந்தியா வந்து இங்கு பல காலம் வசித்துவிட்டு, அமெரிக்காவில் இவ்வாண்டு [2022] மார்ச்சில் தன் இறுதி மூச்சை விட்டவர். உலகின் சிறந்த மார்க்சிய அறிஞராக வலம் வந்தவர். இடது , வலது என எல்லா சார்பு நூல்களையும் தேடித்தேடி வாசித்தவர். மார்க்சியத்தை தொடர்ந்து வந்த பல்வேறு தத்துவக் கூறுகளை விமர்சன நோக்கில் ஆய்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். உலகெங்கும் இவரது கட்டுரைகள் அறிவுப் புலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகின்றன. இந்தியச் சூழல் குறித்து நுட்பமாக பேசியவர். இவை அனைத்தின் சாரத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம்.
இவரோடு உரையாடிய விஜய் பிரசாத் நல்ல மார்க்சிய அறிஞர். பரந்த வாசிப்புக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர். இதில் அய்ஜாஸை பல கோணங்களில் பேச வைத்துள்ளார் விஜய் பிரசாத். அதன் மூலம் அறிவார்ந்த செய்திகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். பதினெழு பகுதிகளாக இந்த உரையாடல் நீண்டிருக்கிறது .
“… மொத்த உருது இலக்கியத்திலும் எங்கேயும் புனைவாகக்கூட , இலக்கியத்துவமாகக்கூட, பாகிஸ்தான் உருவாக்கத்துக்கான கொண்டாட்டத்தைப் பார்க்க முடியாது .அது எப்போதுமே துயராகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கும்.” என அய்ஜாஸ் சொன்னதை வாசித்த போது ஒரு நிமிடம் உறைந்து போனேன். எவ்வளவு ஆழமான அவதானிப்பு .
“ ஒரு கட்டத்தில் லெனினைப் பற்றிய உருது மொழி எழுத்துகள் என்னை அலுப்பு கொள்ளச் செய்தன. எனவே மாஸ்கோவிலிருந்து வந்த லெனின் எழுத்துகளை நான் அமர்ந்து திருத்திச் சரியான உருது வார்த்தைகளில் எழுதினேன்..” என்கிற அய்ஜாஸ் அஹ்மத் அனுபவம் நம் அனுபவமாகவே உள்ளது .
“ பிராமணியம் மரபாக இல்லாமல் ஆசாரமாக நெஞ்சில் இருக்கிறது” என்கிற சுவிரா ஜெய்ஸ்வாலுடன் உடன்படும் அய்ஜாஜ் சொன்ன ஒரு செய்தி முக்கியமானது,
“பாகிஸ்தானில் அதிக காலத்துக்கு வாழ்ந்துவிட்டு, அற்புதமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதாலும் – காந்தி, நேரு போன்றோர் இருப்பதாலும் -மதச்சார்பின்மை முதலிய அம்சங்கள் இருப்பதாலும் ஆர்வத்துடன் இங்கு வந்த எனக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கீழ்ப்படியும் தன்மையைப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் உடனடியாக சாதியுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. இங்கு உயர்சாதியினர் பேசுவதுபோல் பாகிஸ்தானில் பேசினால் அடிவாங்குவார்கள். பாகிஸ்தானில் உங்கள் பாலினத்தை வைத்தே அடையாளம் கொள்வீர்கள். உங்கள் வர்க்கம், சாதி, மதத்தைக் கொண்டு அல்ல. இரண்டு ஆண்கள் சந்தித்தால் அணைத்துக் கொள்வார்கள். தில்லிக்கு வந்த பிறகு பல உயர்சாதிக் குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சாதியில் நம்பிக்கைகூட இருக்காது. இடதுசாரிகளாகக் கூட இருப்பார்கள். ஆனால் நண்பர்கள் மத்தியில்கூட இடைவெளியையைக் கடைப்பிடிப்பார்கள். அனைப்பது என்பது வரவேற்புக்கான விஷயமாக அவர்களுக்கு இருப்பதில்லை . அத்தகையத் தன்மையை என்னால் உடனடியாக சாதியுடன் பொருத்த முடிந்தது.”
இதைத் தொடர்ந்து அம்பேத்கரைப் பற்றிப் பேசும்போது ஓரிடத்தில், “ இந்தியாவில் வர்க்கப் புரட்சி ஏற்பட சாதி ஒழிப்பு முன் நிபந்தனை எனத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.
தோழர் இஎம்எஸ், பி.டி.ரணதிவே ஆகியோர் சாதியைப் பற்றி பேசியதை பாராட்டுகிறபோதே, கட்சி நடவடிக்கைகளில் அது பிரதிபலிக்கவில்லை என தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார். இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஒப்புக் கொள்கிற அவர் இன்னும் போக வேண்டியது நெடுந்தொலைவு எனச் சுட்டிக்காட்டுகிறார் .
லெனினுக்கு பிறகான உலகில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலில் ஏற்பட்ட மாற்றங்களும் குழப்பங்களும் ,பின் நவீனத்துவம், கட்டுடைத்தல் , கிராம்ஸியின் பார்வை, ஐரோப்பாவில் உருவான பல்வேறு போக்குகள் குறித்து இந்நூல் நெடுக விமர்சனபூர்வமாக ஆழமாக உரையாடுகிறார் அய்ஜாஸ். சோவியத் யூனியன் தகர்வு , சீனாவின் தற்போதைய போக்கு உள்ளிட்ட எதுவும் அவர் பார்வையிலிருந்து தப்பவில்லை .
இன்னும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் இருப்பதும் , இன்னும் அமெரிக்க கரன்சி உலகில் தனி இடம் பெற்றிருப்பதும் , உலகெங்கும் கலாச்சாரத்தில் அமெரிக்க ஆதிக்கம் நீடிப்பதும் , ராணுவம் சார்ந்த அமெரிக்க பொருளாதாரம், உட்பட பலவற்றை சுட்டி அமெரிக்க வல்லரசின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மிகச் சரியாகச் சொல்லுகிறார் .
ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிடும் போக்கை விமர்சிக்கிறார் ; அதே நேரம் காலகதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இணைத்தே பார்க்கிறார். சோவியத் யூனியன் தகர்வு ,சீனாவின் செயல்பாடுகள் இவற்றின் பின்னணியில் ஒருங்கிணைந்த பார்வையை நோக்கி நகர்த்துகிறார் .
நவதாராளமயத்துக்கும் உலகெங்கும் வலதுசாரி அரசியல் மேலோங்குவதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும் ,இடதுசாரிகளின் தோல்வியையும் தயக்கமின்றி விவாதிக்கிறார். இங்கு சங்பரிவாரின் எழுச்சியையும் மோடியின் வருகையையும் இதனோடு இணைத்துப் பார்த்தும் இதன் தனிக் கூறுகளை உரசிப்பார்த்தும் அய்ஜாஸ் சொல்லும் கருத்துகள் ஆழ்ந்து பரிசீலிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவையே !
கேரளாவில் ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் இடதுசாரிகளுக்கு தந்த தோல்வியையும் சுட்டுகிறார் . இதைப் படித்த போது என்னுள் எழுந்த கேள்வி ; மதவாதம் சூழ்ந்துள்ள நாட்டில் ஒரு மாநில அரசு மதச்சார்ப்பற்று செயல்படுவதில் உள்ள சங்கடங்களும் சவால்களும் முக்கியமானவை . “ஓரடி முன்னே இரடி பின்னே” என்கிற லெனின் சொற்களைத்தான் இங்கும் சொல்ல வேண்டுமோ ?
“பிராமண முறையிலோ சமூக சமத்துவத்துக்கான கொள்கையே கிடையாது . சாதிய முறையின் அடுக்குகள் அத்தகைய கொள்கை இருக்கும் வாய்ப்பையே இல்லாமலாக்கி விடுகிறது” என்கிற அய்ஜாஸ் தன் உரையாடல் போக்கில் அம்பேத்கரின் சரியான பார்வைகளை சுட்டிக்காட்டுகிறார் . மேலும் , “இந்து மதவாதம் குறிப்பிட்ட வலிமையுடன் எதிர்க்கப்பட வேண்டும் என்கிற நேருவின் வாதத்தை நான் ஏற்கிறேன்.” என்கிறார் அய்ஜாஸ் .
மொழிப் பிரச்சனை தவிர்த்து வேறெதுக்கும் தமிழகம் பக்கமோ தென் இந்தியா பக்கமோ தன் பார்வையை பொதுவாக அய்ஜாஸும் திருப்பவில்லை . பொதுவாய் தில்லியில் மையம் கொள்கிற அறிவுப் புலமை வட இந்தியாவை மட்டுமே மையம் கொண்டே இருப்பது தற்செயலானதா ? இடதுசாரிகளுக்கும் இந்த விபத்து ஏற்படுகிறதே என்கிற காத்திரமான கேள்வி என்னுள் எழுகிறது .
ஜோதிபாசுவைபிரதமராக முன் மொழிந்த விவகாரத்தை அவர் நோக்கில் பேசவும் தவறவில்லை . பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து பின் வெளிவந்த தான் அதன் பிறகு வேறு எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராகவில்லை எனினும் அவர்களோடு நெருக்கமாக இருந்தேன் . சிபிஎம் ,சிபிஐ இருபக்கமும் தனக்கு நண்பர்கள் உண்டு என்பவர் ஜோதிபாசு விவாதத்துக்கு பிறகு சம்மந்தமில்லாமல் தானும் கோஷ்டிவாதத்தில் இழுத்துவிடப்பட்டது குறித்து வருந்துகிறார் .
இறுதியாக . “ இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் உங்களை அதன் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறது.” என்கிற விஜய் பிரசாத்தின் கூற்றை அங்கீகரித்து அய்ஜாஸ் சொல்கிறார் ,“ நிச்சயமாக .அதுதான் சரியும்கூட .எனக்கு அது ஆச்சரியம் அளிக்கவில்லை . ஏனெனில் அது எனக்கு சந்தோஷம் தரக்கூடிய உண்மை.”
இந்த நூலில் பல்வேறு அறிஞர்களின் பெயர்களும் ,அவர்களின் வாதமும் விமர்சனபூர்வமாக இடம் பெற்றுள்ளது .நான் அவற்றை எல்லாம் இந்த நூலறிமுகத்தில் சொல்லி புதிய வாசகர்களை மிரட்ட விரும்பவில்லை .அவை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளே ! ஆகவே ,இந்த புத்தகத்தை ஒருவர் தனியே வாசிப்பதைவிட கூட்டாக வாசிப்பதும் விவாதிப்பதுமே பயன் தருவதாக அமையும் என பரிந்துரைக்கிறேன்.
கடினமான நூலை தமிழாக்கம் செய்த ராஜசங்கீதனுக்கு வாழ்த்துகள் .
சு.பொ.அகத்தியலிங்கம்.
குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? – தமிழில்: தா. சந்திரகுரு
தனது அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்தார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆவணங்கள் இல்லாமல் வந்த புலம்பெயர்ந்தோருக்கு – அவர்கள் முஸ்லீம்களாக இல்லாத வரை – இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த சட்டத் திருத்தம் இருந்தது. அத்தகைய சட்டத்தை இயற்றித் தருவதற்கான வாக்குறுதி பாரதிய ஜனதா கட்சியின் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த சட்டத்திருத்தம் இந்திய முஸ்லீம்களைக் குறிவைக்கும் வகையில் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு பேசப்பட்டது.
அவர்கள் விளக்கிடாத தர்க்கம் மிகவும் எளிமையாக இருந்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபடுகின்ற முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அகதிகள்’ என்று தங்களைக் கூறிக் கொள்வதன் மூலம் குடியுரிமையைப் பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகிய இரண்டு முயற்சிகளின் கலவை அனுமதிக்கும். மறுபுறத்தில் பதிவேட்டில் உள்ள சிவப்பு நாடாத்தனம், முஸ்லீம்களைத் துன்புறுத்துவதற்கான கருவியை அரசுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜகவிடமிருந்த உந்துதலைப் பொய்யாக்குகின்ற வகையிலே அந்தச் சட்டத்திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படாமலே இருக்கிறது. மக்களவையின் 2021ஆம் ஆண்டு குளிர்கால அமர்வில் ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தின் கீழ் வருபவர்கள், அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஒரு சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களாக அதற்கென்று உருவாக்கப்படுகின்ற விதிகள் அமையும். நாடாளுமன்ற வழிகாட்டுதல்களில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் என்றிருக்கிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், மோடி அரசு அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகளை இதுவரையிலும் வெளியிடவில்லை. குடியுரிமைக்கு ஒருவரால் கூட விண்ணப்பிக்க முடியாத நிலைமையில், அந்த்ச் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உரியவர்களைச் சென்றடைய முடியாத வெற்றுக் காகிதமாகி விட்டது.
பாஜகவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு பிரச்சனையில், அவர்களுக்கு இதுபோன்று திடீரென்று ஆர்வமின்மை தோன்றக் காரணம் என்ன?
தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள்
தெருக்களில் நடந்த போராட்டங்களே புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான முதல் எதிர்வினையாக இருந்தன. வங்கதேச ஹிந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வரக்கூடும் என்ற அச்சத்தில் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கின. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அடிக்கடி குடியுரிமை சட்டத் திருத்தத்துடன் அமித் ஷா இணைத்துப் பேசி வந்ததால், தங்களுடைய குடியுரிமை நிலைமை குறித்து இந்திய முஸ்லீம்களிடம் அச்சம் உருவாகியிருந்த நிலையில் பிற மாநிலங்களுக்கும் போராட்டங்கள் விரைவில் பரவின.
போராட்டத்தின் வீச்சு மிகப் பெரிய அளவில் இருந்தது. போராட்டக்காரர்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள், அரசு தரப்பு என்று சில இடங்களில் அது வன்முறைக்கு வழிவகுத்தது. அசாமில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். வங்காளத்தில் போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீ வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் இருபது பேர் கொல்லப்பட்டனர். மங்களூரில் நடத்தப்பட்ட காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த கொந்தளிப்பு தேசிய தலைநகரான தில்லியில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பாஜக அரசியல்வாதியான கபில் மிஸ்ரா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்ததைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவிலே வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன.
குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்று பயந்த இந்தியர்களிடமிருந்து தரவு கணக்கீட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும், வன்முறையையும் எதிர்கொள்ளும் வகையிலான பல நிகழ்வுகளுக்கு வரப் போகின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் வழியேற்படுத்திக் கொடுத்தது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றின் விளைவாக மக்களிடம் உருவாகியிருக்கும் நம்பிக்கையின்மை, மனக்கசப்பின் காரணமாக மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பாளர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநில காவல்துறை மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதியதால் பிரச்சனை தீவிரமானது.
மாற்றிக் கொள்ளப்பட்ட திட்டங்கள்
பரவலாக ஏற்பட்டிருந்த அமைதியின்மை பாஜகவால் கிட்டத்தட்ட உடனடியாக மீட்டமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 10 அன்று நாடாளுமன்றத்தில் விவாதித்த போது ‘எங்களுடைய தேர்தல் [2019] அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததால், தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டில் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்ய் தேவையில்லை’ என்று அமித் ஷா மிகக் கடுமையாகக் கூறினார். ஆயினும் அதிலிருந்து பன்னிரண்டு நாட்களுக்குள் ‘இது காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்டது. நாங்கள் அதை உருவாக்கிடவில்லை. அதை பாராளுமன்றத்திற்கு நாங்கள் கொண்டு வரவில்லை, அறிவிக்கவில்லை’ என்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைகழுவுகின்ற வகையிலே பேரணி ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
2019ஆம் ஆண்டில், குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமித் ஷா அடிக்கடி இணைத்து பேசி வந்திருந்த நிலையில், கடும்எதிர்ப்புகளுக்குப் பிறகு சற்றே பின்வாங்கிய பாஜக உண்மையில் அவை இரண்டும் இணைக்கப்படவில்லை என்ற வாதத்தை முன்வைக்கத் துவங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாஜக கூட்டணி கட்சிகளே அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான உணர்வு மிகவும் வலுவாக உள்ளது. திடீரென இப்பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மோடி அரசைப் பொறுத்தவரை அது மிகவும் வலுவான பிரச்சனையாகவே உள்ளது. ‘எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் பிரச்சனையைத் தூண்டுவதற்கு சீனா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகின்ற அதே நேரத்தில் மியான்மரும் அதுபோன்று ஈடுபடக்கூடும் என்று ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா குறித்த பிம்பத்தின் மீது ஏற்பட்ட தாக்குதல்
குடியுரிமை சட்டத் திருத்தம் உள்நாட்டு அளவில் மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாக இருக்கவில்லை. வெளியுறவு விவகாரங்களிலும், குறிப்பாக தன்னுடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக உள்ள வங்கதேசம் தொடர்பான விவகாரங்களில் இந்தியாவிற்கு அது அதிக குழப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குடியுரிமை தொடர்பாக ஏற்பட்டிருந்த அரசியல் வங்கதேசத்தின் மீது கடுமையான வாய்மொழித் தாக்குதல்களை பாஜக அரசியல்வாதிகள் உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்தது. புலம்பெயர்ந்தோரைக் கொண்டு கிழக்கு அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நிரப்பி வருகிறது என்று பாஜகவினர் பலரும் குற்றம் சாட்டினர். 2018ஆம் ஆண்டில் வங்கதேசத்தவரை ‘கறையான்கள்’ என்று அழைக்கும் அளவிற்கு அமித் ஷா சென்றிருந்தார்.
அதுபோன்ற பேச்சுகள் வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 2020ஆம் ஆண்டில் மோடி வங்கதேசத்திற்குச் சென்றிருந்த போது வெடித்த வன்முறையில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு 2015ஆம் ஆண்டு மோடி சென்றிருந்த போதுகூட இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் காணப்படவில்லை என்பது வங்கதேசத்தில் சில பிரிவினர் இந்தியாவை எந்த அளவிற்கு இப்போது எதிர்மறையாகப் பார்க்கின்றனர் என்பதையே குறிக்கிறது.
பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகின்ற வகையில் இந்தியாவின் உறுதியான கூட்டாளியாக இருந்து வரும் வங்கதேசப் பிரதமர் ஹசீனா, வங்கதேசத்தில் பரவலாக ஹிந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து 2021 அக்டோபரில் புதுதில்லியை எச்சரித்திருந்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹசீனா ‘அங்கே [இந்தியாவில்] நம் நாட்டைப் பாதிக்கின்ற, நமது ஹிந்து சமூகத்தைப் புண்படுத்துகின்ற எதுவும் செய்யப்படாமல் அவர்கள் [புதுதில்லி] பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத் திருத்த இந்திய-வங்கதேச உறவுகளைச் சீர்குலைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்று ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின் வகுப்புவாத அம்சம் வங்கதேசத்தில் மட்டுமல்லாது இந்தியாவை தாராளவாத ஜனநாயக நாடாகக் கருதி வந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில், 2020ஆம் ஆண்டில் இந்தியா பத்து இடங்கள் சரிவைக் கண்டுள்ளது. சரிவிற்கான மற்ற காரணிகளுடன் குடியுரிமை சட்டத் திருத்தமும் ஒரு காரணியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சமான திருத்தங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிற்கான தகுதியை ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து ‘ஓரளவிற்கு சுதந்திரம்’ என்று தரமிறக்கியிருந்தது.
பாஜகவிற்கு முற்றிலுமாக இழப்பு
ஒருபுறத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் அறிமுகம் எதிர்மறையான விளைவுகளை – உள்நாட்டு அமைதியின்மையிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேர்வுகளைக் குறைப்பது வரை – ஏற்படுத்தியது. அது பாஜகவுக்கு மிகக் குறைவான நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுத்தது.
ஹிந்துத்துவாவின் தெற்காசியப் பார்வை மீது கவனம் செலுத்துகிற வகையிலேயே குடியுரிமை சட்டத் திருத்தம் இருந்தது. பாஜகவின் முக்கிய கருத்தியல் அடித்தளத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்ததிர்வு கொண்டதாக இருந்த இஸ்ரேல் வடிவமைத்த ‘திரும்பி வருவதற்கான சட்டத்தின்’ மறுபதிப்பாக பிராந்தியத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்குச் செல்வதற்கான உரிமையை ஏற்படுத்தித் தருவதாகவே சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தலில் அது நமத்துப் போனது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மேற்கு வங்கம் – வங்கதேசத்துடன் அதிக தொடர்பு கொண்ட மாநிலம் – ஆர்வத்துடன் இருந்த நிலைமையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அதையொரு பிரச்சினையாக்காமால் கைவிடுவது என்று பாஜக முடிவு செய்தது, அதற்குப் பதிலாக உள்ளூர் ஊழல் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவே அது விரும்பியது.
கூடுதலாக குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டாலும், அது பலனளிக்குமா என்பது குறித்தும் மிகப்பெரிய அளவிலே சந்தேகங்கள் இருந்து வருகின்றன. சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக நடந்த விவாதங்களின் போதே இந்திய உளவுத்துறை குடியுரிமை சட்டத் திருத்தத்தால் மிகக் குறைவான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் மட்டுமே – சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே – பயனடைவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் ஏற்கனவே இந்திய குடியுரிமையை சட்டவிரோதமான முறையில் பெற்றிருப்பார்கள் என்றும் கணித்திருந்தது.
உண்மையில் இந்திய உளவுத்துறையின் அந்தக் கணிப்பை ஏற்கனவே இருந்து வரும் நீண்ட கால விசாவின் செயல்பாட்டிலிருந்து நம்மால் காண முடியும். குடியுரிமை சட்டத் திருத்தத்தைப் போன்று 2015ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால விசா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கிடைத்து வருகிறது என்றாலும் 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முஸ்லீம் அல்லாத 25,782 பேர் மட்டுமே இந்த நீண்ட கால விசாவைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் வசித்து வருகின்ற ஹிந்து, சீக்கிய பாகிஸ்தானியர்கள் இந்த வகையான விசாவைப் பெறுவதில் இருந்து வருகின்ற சிவப்பு நாடாத்தனத்தால் விரக்தியடைந்து தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்வதைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் 2020 நவம்பரில் செய்தி வெளியிட்டது.
ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்டத் திருத்தம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பல கொள்கைகளை மிகவும் தீவிரமாக முன்வைத்து வந்துள்ள போதிலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அக்கறை மிகக் குறைவாகவே அதனிடம் இருந்திருக்கிறது. அதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டாக, நிச்சயமாக வேளாண் சட்டங்களைக் கூறலாம். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, 2021 நவம்பர் மாதத்தில் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
பாஜகவின் அடிப்படை ஹிந்துத்துவா சித்தாந்தத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கும் போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது என்பது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். இரண்டு பாறைகளுக்கு நடுவே வெளிவர இயலாமல் சிக்கியுள்ள மோடி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்திருக்கிறார்.
https://scroll.in/article/1012561/protests-bangladesh-and-north-east-why-modi-hasnt-implemented-caa-two-years-after-it-was-passed
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 9 – ஜா. மாதவராஜ்
“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை.
வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும்.
தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
மேலும் மேலும் பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்”
– கேத்தி பர்ன்ஹாம் மார்ட்டின்
“நாம் காரை ஒட்டிச் செல்கிறோம். அல்லது வேறொருவர் கார் ஒட்ட, நாம் பின்னிருக்கையில் அமர்ந்து செல்கிறோம். அப்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து சக்கரத்தில் மாட்டிக் கொள்ள நேரிட்டால் நமக்கு வேதனையாய் இருக்குமா இருக்காதா? நானும் மனிதன்தான். எங்காவது கெட்டது நடக்கும்போது கவலை வரத்தான் செய்யும்”
குஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட மோடி, 2013ம் ஆண்டு சிறப்பு புலனாய்க் குழுவால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்பு வெளியிட்ட கருத்து அது. “கலவரங்களுக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?” என்பது அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில் அது.மோடி கவலைதான் பட்டிருந்தார். வருத்தப்படும் தொனி கூட அவரது வார்த்தைகளில் இல்லை. அப்படி கார்ச்சக்கரத்தில் மாட்டிக் கொள்லாமல் தப்பிப் பிழைத்த இரண்டு ‘நாய்க் குட்டிகளை’ 17 வருடங்கள் கழித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் போய் சந்தித்தது.

குஜராத்தில் அகமதாபாத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே வசித்து வந்த முகமது ரஃபிக்கும், சேரிப்பகுதியில் வசித்து வந்த பூஜா ஜாதவும்தான் அவர்கள். இருவருமே 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் தப்பிப் பிழைத்த போது, ஒரு வயதுக் குழந்தைகள்.
2019ல் அவர்களுக்கு பதினெட்டு வயதாகி முதன் முறையாக ஓட்டுப் போட தகுதியான பிறகு, ராய்ட்டர்ஸ் நிறுவனம் இருவரையும் அருகருகே நிறுத்தி பேச வைத்தது. “காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தோ, சுவாரசியமான கற்பனைக் கதைகளைக் கேட்டோ குழந்தைகள் வளருவார்கள். நாங்களோ இந்து முஸ்லீம் கலவரங்களைப்பற்றி கேட்டுத்தான் வளர்ந்தோம்” முகமது ரஃபீக் தனது செல்போனை நோண்டியபடி பேசினான். இழப்புகளும், வலியும் அவனது வார்த்தைகளில் தோய்ந்திருந்தன.
ஒரு மாத காலம் நீடித்த கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் மட்டும் 800 முஸ்லீம்களும் 255 இந்துக்களும் கொல்லப்பட்டனர். அங்குள்ள சேரிப்பகுதியில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தார் ரஃபீக்கின் தந்தை. மதவெறிக் கும்பல் அந்த கடைக்குத் தீ வைத்தது. தப்பி ஓடும்போது ரஃபிக்கின் தந்தை காலில் போலீஸின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உயிருக்குப் பயந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். பின்னர் அகமதாபாத்தில் இருக்கும் மிகப் பெரிய குப்பைக் கொட்டும் இட த்திற்கு அருகில் வசித்து வந்தனர். “பிஜேபியின் மீது இருக்கும் ஆத்திரம் என் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது” என்றான் ரஃபீக்.
2002ல் ரஃபீக் குடும்பம் கொடூரமாக விரட்டப்பட்ட இடத்திற்கு அடுத்த சந்திலிருந்து அப்போது தப்பித்த இன்னொரு ஒரு வயது குழந்தைதான் பூஜா ஜாதவ். அவளது பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. கலவரம் முடிந்த பிறகு, சேதமடைந்திருந்த தங்கள் வீட்டிற்கே திரும்ப வந்து வாழ்த் தொடங்கியது அவளது குடும்பம். ஆனால் பக்கத்து வீடுகளில் ஏற்கனவே வசித்து வந்த முஸ்லீம்களுக்கு பதிலாக வேறு முஸ்லீம்கள் இருந்தார்கள். ”எங்களுக்கு வேறு வழியில்லாமல் அங்கு மாட்டிக் கொண்டோம்.” என்றாள் பூஜா.
“மோடியின் வெற்றி என் அம்மாவுக்கு சந்தோஷமளித்தது. அம்மாவின் சந்தோஷம் எனக்கு சந்தோஷம் தந்தது. எனக்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பு இல்லை. ஆனால் மோடி பிடிக்கும்.” என்றாள். “பிஜேபி ஆட்சி செய்யும் போது, பக்கத்தில் வசிக்கும் முஸ்லீம்களால் எங்களுக்கு தொந்தரவு வராது” என்று தொடர்ந்தாள். “முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடைவெளியும், எல்லையும் இருக்க வேண்டும்” என்பதே அவளது முடிவான கருத்தாக இருந்தது. ”மோடி முஸ்லீம்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் நாங்கள் எப்படி நாத்தம் பிடித்த குப்பையில் கிடந்து வாழ்கிறோம் என்பதை வந்து பார்த்திருப்பார். முஸ்லீம்களை அவமதிக்கும் அவரது செயலே எனது அரசியல் முடிவை தீர்மானித்தது” என்றான் ரஃபீக்.

முகமது ரஃபீக்கும், பூஜா ஜாதவ்வும் குஜராத் கலவரங்களிலிருந்து உருவானவர்கள். இருவரின் வாழ்க்கை நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு குடும்பங்களும் அடுத்த வேளை உணவுக்கு அல்லல் பட்டன. இருவருமே படிக்கவில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உழைத்தார்கள். ஒரு நிரந்தரமான வேலை, நல்ல காற்றோட்டமான சூழலில் வசிப்பிடம் வேண்டும் என்னும் கனவுகளைச் சமந்திருந்தார்கள். இருவரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக ஒட்டு போட இருந்தார்கள். அவர்களின் ஒட்டு யாருக்கு என்பதை அறிவதுதான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நோக்கம். பதினேழு வருடங்களும் அவர்களுக்குள் எப்படி உறைந்து போயிருந்தன என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.
தங்கள் அன்றாட வாழ்வின் பிரச்சினைகள், அவைகளுக்கான தீர்வுகள், அதையொட்டிய அரசியல் என்று அவர்களது சிந்தனைகள் விரியாமல், காயடிக்கப்பட்டிருந்தது. உள்ளுக்குள் அச்சம், வன்மம், பாதுகாப்பற்ற உணர்வு எல்லாம் நிறைந்திருந்தது. அவர்களை தனித்தனியாய் இரண்டு கூறுகளாக்கி, இடையே காலம் கோடு கிழித்து வைத்திருந்தது. இதுதான் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் கதை. ஷாஜஹான் பனோவும் அப்படி தப்பிப் பிழைத்த இன்னொரு நாய்க்குட்டிதான். அவனும் கடும் வெறுப்பில்தான் இருந்தான்.
2002ம் ஆண்டு சிறுவனான அவன் தன் அம்மாவோடு அகமதாபாத்தின் முக்கிய சந்தையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த நாளில் கலவரம் வெடித்தது. பயத்தோடு அன்று இரவு முழுவதும் அந்த சந்தையிலேயே ஓளிந்திருந்த அவர்கள் அடுத்த நாள் நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். அங்கே தங்கள் உறவினர்களும், நண்பர்களும் என்ன ஆனார்களோ என பதற்றத்துடன் பல மூஸ்லீம்கள் காத்துக் கிடந்தனர்.
ஒரு மாதம் கழித்தே அவர்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சிட்டிசன் நகரில் ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்து. முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று கட்டித் தந்த குடியிருப்புகள் அவை. இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒல்லியாய் காணப்படும் ஷாஜஹானுக்கு இப்போது 23 வயது.

“இப்படி வசிக்க ஒரு இடமாவது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் நாங்கள் தினம் தினம் இந்தப் புகை, நாற்றம், குப்பைகளுக்குள் கிடந்து சாகிறோம். எந்த வசதியும் இல்லை. ஆனால் நாங்கள் வேறு எங்கே போக முடியும்?” வெறுத்துப் போய் பேசுகிறான் ஷாஜஹான். 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம். ஆனால் கடுமையாய் அடிபட்டு காயங்களோடும், கொடூரமான நினைவுகளோடும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் இப்படி தாங்கள் கால காலமாய் வாழ்ந்த இடங்களை விட்டு அகற்றப்பட்டிருந்தார்கள். வாழ்க்கை முற்றிலுமாக புரட்டிப் போடப்பட்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாய் இருந்தார்கள்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு பெரிதாய் ஒன்றும் செய்யவே இல்லை.” என்றார் வழக்கறிஞர் ஷம்ஷத் பதான். முஸ்லீம் மக்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுத் தர போராடிக்கொண்டு இருந்தவர் அவர். “இன்றைக்கு இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் அடுத்தடுத்த கட்டிட குடியிருப்புகளில் வசிக்கும் காட்சியை பார்க்க முடியாது. பிரிக்கப்பட்ட நகரமாகி விட்டது. முஸ்லீம்கள் ’கெட்டோ’க்களில் வாழத் தள்ளப்பட்டு விட்டார்கள்” என்று மேலும் சொன்னார். (கெட்டோ என்பது சிறுபான்மையினர் மட்டுமே வசிக்கும் மோசமான பகுதி. ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான பாசிஸ்ட் அரசு நடத்திய இனப்படுகொலை காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெட்டோக்களில் யூதர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தார்கள்.)
பதற்றம் நிறைந்த இடங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் இடங்களை விற்பதை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, ‘The Distrubed Areas Act’ 1991ல் மதக்கலவரங்களை தடுக்கும் பொருட்டும், அமைதியை ஏற்படுத்தும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்தச் சட்டத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை கொடுத்து திருத்தம் செய்திருந்தார் மோடி. “அது அரசே முன்னின்று நடத்திய பிரிவினை” என்றார் பதான்.

“அதன் விளைவு, முஸ்லிம்கள் எல்லாம் இழிவான பகுதிகளில் மொத்தம் மொத்தமாய் ஒதுக்கப்பட்டனர். வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் எல்லாம் மாநிலத்தில் வேறு யாருக்காவது இருக்கலாம். நிச்சயமாக முஸ்லீம்களுக்கு இல்லை” என்று அவர் சொல்வதில், 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தொடர்கதை எவ்வளவு கொடுமையானது என்பது தெரியும். மொத்த அவலத்தையும், ஆபத்தையும் இரண்டே வார்த்தைகளில் சொல்கிறது அகமதாபாத்தில் இருக்கும் ஜுஹாபுரா பகுதி. அங்கு மட்டும் நான்கு லட்சம் முஸ்லீம்கள் இப்போது வசித்து வருகிறார்கள். ஏற்கனவே இருந்த முஸ்லீம்களோடு, கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் அங்கு சேர்ந்திருந்தனர். அகமதாபாத்தில் இருக்கும் இந்துக்கள் ஜூஹாபுராவை ‘குட்டி பாகிஸ்தான்’ என்றே அழைக்கிறார்கள்.
இந்துத்துவ அரசியலின் – மோடி ஆட்சியின் – நோக்கமும் பாதையும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. இந்திய பாசிசத்தின் அடையாளமும், தடயமும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. மக்களை பிளவு படுத்தி, சிறுபான்மை மக்களை ஓரிடத்தில் ஒதுக்கி, பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு எதிராக காலமெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரத்தை கேள்வி கேட்பாரில்லாமல் நிறுவும் அராஜகத்தை குஜராத்தில் மோடி காட்டி இருந்தார். மக்களை அவர்களின் நிஜமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல், உணர்வுகளின் வலைகளில் வீழ்த்தி விட்டு, அவர்கள் மீது தங்கள் மிருகத்தனமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாசிச சாம்ராஜ்யத்தின் வேர் குஜராத்தில் ஆழமாக இறங்கி இருந்தது. பாவம் பூஜா ஜாதவ் என்ன செய்வாள்? குஜராத்தில் 2002ற்கு பிறகும் மதக் கலவரங்களும், பதற்றங்களும் நீடித்துக் கொண்டேதான் இருந்தன. வன்மத்தையும், பழிவாங்கும் இயல்புகளையும் விதைத்த நிலத்தில் வேறென்ன விளையும்?
தேசத்தில் நடந்த மதக் கலவரங்களின் சராசரியைக் காட்டிலும், குஜராத்தில் அதிகமாக நடந்து வந்தன என்றே புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 2003ம் ஆண்டிலிருந்தே மதக் கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.

அதிலும் 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பெரும் பதற்றத்தையும் சேதங்களையும் ஏற்படுத்தி இருந்தது. 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 56 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயம் பட்டனர்.
ஆனால் மோடி குஜராத்தில் 2002ற்கு பிறகு கலவரங்களே நடக்கவில்லை என்றும், அமைதி நிலவுவதாகவும், வளர்ச்சி மட்டுமே ஒரே நோக்கமாகவும் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது சாம்ராஜ்ஜியத்தை குஜராத்திலிருந்து இந்தியாவுக்கு விரிவுபடுத்த ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தார். 2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி டெல்லி ரமலான் மைதானத்தில் கூடியிருந்த முஸ்லீம் மக்களிடையே பேசினார். சிறுபான்மை மக்களிடையே திட்டமிட்டு முதன்முறையாக அவர் பேசிய கூட்டம் அது.
“கிரிக்கெட் மேட்சில், பட்டம் விடுவதில், இருசக்கர வாகனம் மோதியதில் உருவாகிய அற்ப காரணங்களுக்காக எல்லாம் மதக்கலவரங்கள் வெடித்த காலம் ஒன்று குஜராத்தில் இருந்தது. என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் மீண்டும் அப்படி கலவரங்கள் நடக்க விடவில்லை. எனது மாநிலம் இப்போது முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஜாதி, மதங்களைத் தாண்டி அனைவரும் சமமானவர்களாகவும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.” இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பயங்கரமானவை என்பது இப்போது உண்மையை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
References:
* Polarised Politics: How two teenagers will vote after surviving 2002 Gujarat riots ( by Rupan Jain, Reuters, April 23, 2019)
* Muslims still consigned to Gujarat’s slums 15 years after 2002 Riots (by Rina Chandran, Wire, July 25, 2017 )
* Gujarat not riot–free since 2002 : Here’s the Proof (First Post, April 07, 2014)
* Meenakshi Lekhi’s Claim About ‘No Riots in Guj Post 2002’ is False ( The quint, Mar 17, 2020)
* 2008 Ahmedabad Bombings (Wikipedia)
* No Guilty feeling about Gujarat riots, says Modi (The Hindu, June 13, 2013)
* No riot in Gujarat during 10 year rule, Modi says in delhi ( The Times of India, Dec 1, 2013)
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்






