கட்டுப்பாட்டை இழந்த ஓர் ஆளுநர் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

கட்டுப்பாட்டை இழந்த ஓர் ஆளுநர் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




கேரளம் தற்போது கட்டுப்பாட்டை இழந்த வினோதமான ஓர் ஆளுநரின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒருநாள் அவர் கேரளப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார். மற்றொரு நாள் அவர் அரசாங்கத்தில் உள்ள ஓர் அமைச்சர் மீதான “விருப்பத்தைத் திரும்பப் பெறுவதாக”க் (“withdraws pleasure”) கூறி, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டார்.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தைத் தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளுநர் ஆரிப் முகமது கான், வேந்தராகப் பொறுப்பேற்ற சமயத்தில், அக்டோபர் 25 அன்று காலை 11.30 மணியளவில் மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களையும் ராஜினாமா செய்யக் கோரினார். இவ்வாறு கோரிய கடிதம் அக்டோபர் 24 அன்று அனுப்பப்பட்டது.

எட்டு துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய மறுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஒன்பதாவது துணை வேந்தர்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீக்கப்பட்டவராவார். அவர்கள் அளித்திட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சற்று முன்பு, ஆளுநர் தன் நிலையிலிருந்து பின்வாங்கிக் கொண்டு, அனைத்துத் துணை வேந்தர்களுக்கும் ‘நியமன நடைமுறையில் முறைகேடுகள் செய்தமைக்காக தங்களுடைய பதவிகளிலிருந்து ஏன் வேலை நீக்கம் செய்யப்படக் கூடாது என்பதற்கு நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று கோரி காரணம் கோரும் அறிவிப்பை அனுப்பினார். பின்னர், இதேபோன்று காரணம் கோரும் அறிவிப்பை மேலும் இரு துணை வேந்தர்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

இவ்வாறான ஆளுநரின் இந்நடவடிக்கை சமீபத்தில் அவர் மேற்கொண்ட பல அருவருப்பான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். முன்னதாக, ஆளுநர், கண்ணூர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மறுநியமனத்தின்போது அவருடைய நியமன உத்தரவில் கையெழுத்திட்டபின், அவர் மறுநியமனத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினார். இந்த நியமனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்நியமனத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மிகவும் சமீபத்தில் ஆளுநர், கேரளப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மற்றும் அதன் செனட்டிற்கு எதிராகவும் போர்க்களத்தை மேற்கொண்டார். காலியாக இருக்கும் துணை வேந்தர் பதவிக்கு ஒருவரைத் தேர்வு செய்திட, இருந்து வந்த தேர்வுக்குழுவின் விதிமுறைகள் சம்பந்தமாக உள்ள சட்டத்தின் ஷரத்துக்களையெல்லாம் ஓரங்கட்டி வைத்திட வேண்டும் என்று கோரினார். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை செனட் எதிர்த்தபோது, செனட்டில் இருந்த 15 பேர் செனட் உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து தான்தோன்றித்தனமாக நீக்கம் செய்யப்பட்டனர்.

இப்போதைய துணை வேந்தர்களுக்கு எதிராக ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நடப்பு நடவடிக்கை, அவர் இந்தப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.

இந்தப் பல்கலைக் கழகங்கள் சம்பந்தமாக உள்ள சட்டங்களின்கீழ், வேந்தர் எந்தவொரு நபரையும் துணை வேந்தர் பதவியிலிருந்து தன்னிஷ்டத்திற்கு நீக்க முடியாது. உதாரணமாக, இந்தப் பல்கலைக் கழகங்களின் சட்டங்களின்கீழ், ஒரு துணை வேந்தர் நிதி மோசடி அல்லது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கிறது- இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் மீது உயர்நீதிமன்ற நீதிபதியால் விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, ஆளுநர், துணை வேந்தர்களை டிஸ்மிஸ் செய்திடுவேன் என்று மிரட்டுவதெல்லாம் சட்டவிரோதமாகும், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களுக்கு எதிரானதாகும்.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில், ஒரு குறிப்பிட்ட நியமனம் சம்பந்தமாக, அந்தப் பல்கலைக்கழகத்தில் எழுந்த புகாரின் மீதான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இதர அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி ஆளுநர் நடவடிக்கை எடுத்ததற்கு எவ்வித சட்ட அடிப்படையும் கிடையாது. பல்கலைக் கழகங்கள் சிலவற்றின் சட்டங்களின்படி, பல்கலைக் கழகங்களின் தேர்வுக்குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஒருவரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவரும் இருப்பதோடு, மாநில அரசாங்கத்தின் சார்பில் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். இதேமுறைதான் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற வேறு சில மாநிலங்களும் பின்பற்றுகின்றன. தேர்வுக் குழுவில், மாநில அரசின் சார்பில் எவரும் இருக்கக்கூடாது என்கிற ஆளுநரின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல.

ஆளுநர் கான் அவர்களுடைய நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் என்ன? பல்கலைக் கழகங்களின் சுயாட்சியைப் பாதுகாக்கவும், ஆளும் கட்சியின் நபர்கள் துணை வேந்தர்களாகப் பொறுப்பேற்பதைத் தடுக்கவுமே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதாக அவர் வாதிடுகிறார். இது, ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்வதற்காகவே மாநிலப் பல்கலைக் கழகங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மூடிமறைப்பதற்கான பச்சோந்தித்தனமேயாகும்.

ஆளுநர் கான் அவர்களால் தன்னுடைய பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற பதவி துஷ்பிரயோகம் செய்யப்படுவது தனித்த ஒன்று அல்ல. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில், ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறார்கள், துணை வேந்தர்கள் மற்றும் கேந்திரமான பொறுப்புகளில் நபர்கள் நியமனங்கள் செய்யப்படுவதில் தடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, பஞ்சாப்பில் நடைபெற்றுள்ள சம்பவமாகும். அங்கே ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித், பாபா ஃபக்ரித் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக புகழ்பெற்ற இதயநோய் நிபுணர் (cardiologist) ஒருவர் நியமனம் செய்யப்பட்டதை நிராகரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் நியமனமும் “சட்டவிரோதம்” என்று கூறி அவரையும் நீக்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக ஆளுநர்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தான்தோன்றித் தனமான முறையில் தலையிடுவதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களின் சட்டமன்றங்களால் மாநிலப் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கேரளாவில், இந்த ஆண்டு செப்டம்பர் 1 அன்று பல்கலைக் கழக சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு (The University Laws (Amendment) Bill) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தமானது, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுக்குழுவில் ஏற்கனவே 3 பேர்கள் இருந்ததை 5 பேர்கள் என அதிகரித்திருக்கிறது. ஆனாலும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் அளிக்கவும் இல்லை, அதனை விளக்கம் அல்லது ஆட்சேபனைகளைக் கோரி திருப்பி அனுப்பவும் இல்லை.

ஆளுநரின் ஆட்சேபனைப் போக்கு குறித்து விமர்சனங்கள் எழும்போது, ஆளுநர் கான், தன்னை விமர்சனம் செய்திடும் எந்த அமைச்சரையும் தனக்கு “விருப்பம்” இல்லை எனக்கூறி விலக்கிடுவேன் என்று மிரட்டத்தொடங்கி இருக்கிறார். இப்போது அவர், நிதி அமைச்சர், கே.என். பாலகோபாலை, தனக்கு “விருப்பம்” இல்லாத அமைச்சர் என அறிவித்து, அமைச்சரவையிலிருந்து அவரை நீக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இவ்வாறு, அவர் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அவருக்கு அளிக்கப்படாத அதிகாரங்களைப் பிரயோகிக்கத் தொடங்கி இருக்கிறார்.

துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான பரிகாரம், பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக அம்மாநிலத்தில் உள்ள ஆளுநர்களைக் கருதும் போக்கை நிறுத்துவதேயாகும். ஐமுகூ அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான எம்.எம்.புஞ்ச்சி ஆணையத்தின் பரிந்துரை இவ்வாறுதான் கூறுகிறது. இந்த ஆணையமானது, ஆளுநர்களைப் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாகக் கருதும் வழக்கத்திற்கு (convention) முடிவு கட்ட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

கேரளாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆளுநர் தலையிடுவதற்கு எதிரான போராட்டம் முக்கியமானதாகும். ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றால், அவை நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலைத் திணிக்க ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். ஆளுநரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்த்து முறியடிக்கப்படும். கேரள இடது ஜனநாயக முன்னணி, வரும் நவம்பர் 15 அன்று இந்த விஷயம் தொடர்பாக ஆளுநர் மாளிகை நோக்கி மக்கள் பேரணியை நடத்திட வேண்டும் என்றும், அப்போது கேரளாவில் உயர்கல்வி அமைப்புமுறையின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்பினை அடித்துவீழ்த்திட இவர்கள் செய்திடும் சூழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டப்படக்கூடிய விதத்தில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.

(அக்டோபர் 26, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்

நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்




சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத் போஸ் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியதுபோல், நமது கல்வி முறையால் யாரையும் உருவாக்க முடிந்ததா என்பது அந்தச் சிறுமியின் கேள்வி. புதுடெல்லியில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் சிலருக்குப் பிரதமர் இந்திரா காந்தி அதை அனுப்பி, உண்மையில் அப்படி உருவானவர்கள் குறித்து அந்தச் சிறுமிக்கு எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தச் சிறுமி என்ன ஆனார் என்பதும் தெரியாது என்றாலும், நாடு விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டிலும்கூட அந்தக் கேள்விக்குச் சரியான பதில் நம்மிடம் இல்லை. இந்த ஆண்டும் இந்தியர் எவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பதை எந்தச் சலனமும் இன்றி நாம் எளிதாகக் கடந்துவிட்டோம். நோபல் பரிசை விடுங்கள்; பொதுவாகவே நம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகள் எந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வுக்குரியது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அறிவியல்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது ராமன், சாகா, போஸ் போன்ற இந்திய அறிவியலாளர்கள் கேம்பிரிட்ஜிலும் ஆக்ஸ்போர்டிலும் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. கல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட இந்தியக் கல்விக்கூடங்களில்தான் இயங்கினர். அவற்றுக்குச் சுதந்திரப் போராட்டச் சதி நடப்பதாகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொடுக்காத தொல்லை இல்லை. போதுமான நிதி ஆதாரம் என்றைக்குமே கிடைத்திடாத நிலையில்தான் அறிவியல் ஆராய்ச்சி இங்கு பல சாதனைகளைப் படைத்தது. சுதந்திரத்துக்கு முன்பே சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இந்தியப் பல்துறை அறிவியலாளர்களின் 6,000 ஆய்வுகள் வெளிவந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலை: இந்திய அறிவியலில் அடிப்படை ஆய்வின் இன்றைய நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேலைக்குச் செல்வது எனும் சமூக அழுத்தம் இன்றைய இளைஞர்களை ஆய்வு வட்டத்துக்கு வெளியே நிறுத்திவிட்டது. அதையும் மீறி உள்ளே வருபவர்களைப் பல்கலைக்கழக ஆய்வுச் சூழல் விரட்டியடிக்கிறது; சிலர் தற்கொலை வரைகூடப் போகிறார்கள். ஆய்வு நிதியைப் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்ற மோசமான அதிகாரச் சுரண்டலாலும் ஊழல்களாலும் கருத்தரங்கங்கள் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிட்டன. ஆய்விதழில் வெளிவரும் அளவுக்குத் திறம்பட அறிவியல் ஆய்வுகளை எழுதும் மாணவர், அவர் பெயரில் அந்த ஆய்வை வெளியிட்டுவிட முடியாது. ஆய்வுக்கு வழிநடத்தும் பேராசிரியர்கள் பலர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த அற்புதங்களைத் தாம் வெளியிட்டுக்கொள்ளும் வெட்கக்கேடான சூழலே இந்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவுகிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஆய்வுத் துறையைப் புறக்கணித்து, பொருளீட்டுவதே வெற்றி எனப் பொறியியல், மருத்துவம் படிக்கச் சென்று, பலர் காணாமல் போனது உண்மை. ஆய்வுத் துறைகளான இயற்பியல், வேதியியல் என அடிப்படை அறிவியலுக்குள் தப்பித்தவறி நுழைபவர்கள் காண்பது என்ன? இந்தியாவில் இன்று முனைவர் பட்ட ஆய்வுகளில் மூன்றில் இரண்டு போலியானவை. தரம்வாய்ந்த ஆய்வுகளுக்கு அரசின் நிதியுதவி பெருமளவு குறைந்துவிட்டது. அறிவியல் சார்ந்த ‘பட்நாகர் விருது’ உட்பட 300 விருதுகளை நீக்கிவிட்டு, நோபல் போன்று ஒரே விருதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் நம் ஆய்வுச் சூழலை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.

நோபல் அறிஞர்களின் பின்னணி: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிரான்ஸின் அலான் ஆஸ்பெக்ட், அந்நாட்டின் 72ஆவது நோபல் அறிஞர். பிரான்ஸின் பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் மதிப்பெண்கள் கிடையாது; ஆறு படிநிலைத் தரச்சான்று தரப்படுகிறது. அறிவியல் பட்டப்படிப்பு, ஆறு மாத ஆய்வக உதவியாளர் பணியிடப் பயிற்சியை உள்ளடக்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாந்தே பேபு, அந்நாட்டின் 32ஆவது நோபல் அறிஞர். ஸ்வீடனில் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களைத் தத்தெடுத்து உலகெங்கும் செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது. வேதியியலில் நோபல் பரிசு பெறும் மோர்டன் மேல்டால் டென்மார்க்கைச் சேர்ந்தவர். அங்கே பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை விருப்பமான அறிவியல் துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதுவரை 14 நோபல் அறிஞர்களைத் தந்த டென்மார்க்கில் மொத்தம் எட்டுப் பல்கலைக்கழகங்களே உள்ளன. ஆஸ்திரியா நம்மைவிடப் பல மடங்கு சிறிய நாடு. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் ஆண்டன் ஸாய்லிங்கர் ஆஸ்திரியாவின் 23ஆவது நோபல் விருதாளர். இங்கு பாக்சோ சூலன் கல்விச் சீர்திருத்தம் அறிமுகமான பிறகு, பயன்பாட்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவற்றில் பல பள்ளிகளோடு நேரடித் தொடர்புடையவை. பள்ளிப் பருவத்திலிருந்தே கோடை விடுமுறையில் மாணவர்கள் அங்கு சிறப்புப் பயிற்சிகள் பெறவும் முடியும். அறிவியல் என்பதே ராக்கெட்டும் ஏவுகணையும் மட்டும்தான் என்கிற நிலை அங்கு இல்லை.

கல்லூரி – பள்ளி இணக்கம் எப்போது?: நாம் நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களை மட்டுமே குறை கூற முடியாது. நம் பள்ளிக் கல்வி பொதுத்தேர்வு மையக் கல்வியாக இருப்பது முதல் சிக்கல். பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட அறிவியல் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆளில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் ஒரு இணக்கமும் பிணைப்பும் ஏற்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்த ‘இன்ஸ்பயர்’, ‘மானக்’ போலவும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு போலவும் பல திட்டங்களோடு அந்தந்த ஊர்களின் கல்லூரிகள் பள்ளிக்குள் நுழைய வேண்டும். புத்தக அறிவைக் கடந்து செயல்பட பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உண்மையான முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளும் நோபல் பெறும் அளவுக்கான திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளும் சுயசிந்தனை, தேடல் சார்ந்தவை. வெற்று மனப்பாடப் பொதுத்தேர்வு மதிப்பெண் கல்வியைத் தூக்கி எறியாதவரை பிரதமர் இந்திராவிடம் அந்தச் சிறுமி அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் சரியான பதிலைத் தர முடியாது என்பதே துயரமான உண்மை.

ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected]

நன்றி: இந்து தமிழ் திசை

“ஆனந்தின் அகழ்வாராய்ச்சி அமானுஷ்யம்”. (சிறுகதை ) மரு. உடலியங்கியல் பாலா.

“ஆனந்தின் அகழ்வாராய்ச்சி அமானுஷ்யம்”. (சிறுகதை ) மரு. உடலியங்கியல் பாலா.




ஆனந்தும் அமுதாவும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தால் , புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கியாலஜி” எனும் அகழ்வாராய்ச்சி பட்டப்படிப்பின் முதல் பேட்ச் மாணவர்கள்.

அது 60களை ஒட்டிய காலக்கட்டம்.. அந்த வகுப்பில் மொத்தமே 12மாணவர்கள் தான் சேர்த்திருந்தனர். அதில் இருந்த இரண்டு மாணவியருள் அமுதாவும் ஒருத்தி. ஆனந்த், அமுதா. இருவரும் அந்த பாடத்தில் ஆர்வம் மிகுந்த, படுசுட்டி மாணவர்கள்.

ஒத்த குணம், ஒத்த ஆர்வம் இருந்ததால் இருவருக்கும் இடையே ஒரு இனம்புரியாத நட்பு மலர்ந்தது. அந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் மாதாமாதம், இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு அரசு அருங்காட்சியகம், அல்லது புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்கள், அல்லது அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களில், கல்வி சுற்றுலா செல்வது, பாடத்திட்டத்தின் ஓரு பகுதி.

மஹாபலிபுரத்தில் ஆரம்பித்து, அஜந்தா, எல்லோரா என அவர்கள் சென்று வராத இடங்களே இல்லை எனலாம். . அவ்வாறு செல்லும் போது, இவர்கள் நட்பும் புரிதலும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இருவரும் பல விஷயங்களை அலசி ஆராய்வர்!
பல கருத்து பரிமாற்றங்கள், படிப்பு சம்பந்தப்பட்ட பகிர்வுகள், சிற்சில சமயங்களில், ஆரோக்கியமான சர்ச்சைகள், விவாதங்கள், வாக்குவாதங்கள் நடைபெறுவதும் உண்டு.

மெட்ராஸில் இருக்கும் நாட்களில் இருவரும், மாலைவேளைகளில், கட்டாயம், கன்னிமரா நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், தேவநேய பாவாணர் நூலகம், அரசு நூலகம் என ஏதேனும் ஒரு நூலகத்தில் ஆஜராகி, லைப்ரேரியன் விரட்டும் வரை பற்பல நூல்களை படித்தும், குறிப்புக்கள் எடுத்தும், வீட்டுக்கு கொண்டு வந்தும்… ஆழ்ந்து அலசி ஆராய்வார்கள். வரலாற்று சான்றுகள் பற்றி ஆராய்ந்து அறிந்து விவாதித்து மகிழ்வதில் இருவருக்கும், ஒரு அலாதி பிரியம்.

ஒருமுறை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில், நூல்களை தேடிக்கொண்டு இருந்தபோது, ஒரு அரியஅண்மையில் வெளிவந்த!
சீன அகழ்வாராய்ச்சி நிபுணர் எழுதிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட,”பண்டைய மனித உடல்களின் அதிசயங்கள்” என தலைப்பு இடப்பட்ட மிக கனமான நூல் ஒன்று,

அனந்தன் கையில் அகப்பட்டது. அந்த நூலை, எடுக்கும்போதே அது தவறி கீழே விழ, ஒரு அமானுஷிய பயம் அவனுள் தொற்றி கொண்டது.அதை படிக்கும் ஆர்வம், ஏனோ இனந்தெரியாத உந்துதலை அவனுள் உண்டுபண்ணியது! அமுதா, ஏதோ ஒரு காரணத்தால், அன்று அவனுடன் வரவில்லை.

அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவன், அதன் சுவாரஸ்யமான ஆச்சர்யத்தில் ஆட்கொள்ளபட்டு, பித்து பிடித்தவன் போல் தொடர்ந்து படிக்க, வழக்கம் போல் லைப்ரேரியின் அவனைநெருங்கி , “நேரமாகி விட்டது!கிளம்புங்க” என கூறி அவனை உசுப்ப …
அவனோ, அந்த புத்தகத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதி கேட்டான். அவரோ “இது மிக மிக அரிய புத்தகம், உலகம் முழுதுமே, இதன் சில பிரதிகள் மட்டுமே உண்டு. ஆகவே இதை கொண்டு செல்ல அனுமதி இல்லை. நாளை வந்து படித்துகொள்” என்று கூறி அவனை வழி அனுப்பி வைத்தார்.

வீடு வந்து சாப்பிட்டு படுத்த அவனுக்கு, உறக்கம் வரவில்லை, அந்த புத்தகத்தை சுற்றியே அவன் நினைவுகள் ஆலாபனை செய்து கொண்டிருந்தது i. அந்த புத்தகத்தில், அந்த சைனாகாரன் “அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும், பதப்படுத்தபட்ட, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடல்களைக்கூட சிற்சில அரிய இரசாயண பொருட்களின் உதவியால், ஒரு சில நிமிடங்கள் உயிர் பெற செய்து, “சங்கேத நயன பாஷையில்” அதனுடன் உரையாடலாம்.. அவ்வாறு தான் பலமுறை உரையாடி பல அறிய சரித்திர சான்றுகள் பெற்றதாகவும்” குறிப்பிட்டிருந்தான்…

அதைப் பற்றிய மேல் விவரங்களை படிக்கும் போது, நேரம் கடந்து விட்டதால், அவன் நூலகம் விட்டு வெளியேற நேர்ந்தது.
“சே.. என்ன துரதிர்ஷ்டம் !அந்த புத்தகத்தை இப்பவே!இந்த நொடியே முழுவதுமாய் படிக்கணும் போல ஆர்வமா இருக்கே!
இன்னிக்கு பார்த்து அமுதா வேறு வரவில்லையே!நாளைக்கு முதல் வேலையா அவளை பார்த்து இதை பற்றி பேசவேண்டும்.. நாளை அவளுடன் நூலகம் சென்று, சேர்ந்து படிக்க வேண்டும்.. இதை பற்றி விவாதம் செய்ய வேண்டும்”என ஏதேதோ தனக்குள் சொல்லிக்கொண்டே உறங்கி போனான்.

பொழுவிடிந்து முதல் வேலையாக, அமுதாவை கல்லூரியில் சந்தித்து, நடந்ததை கூறி, அவள் பதிலுக்காக காத்திருக்க, அவளோ” ஆனந்த் இந்த சீனாக்காரனுங்க நிறைய புருடா விடுவானுக!அதெப்படி பண்டைகால உடல்கள் உயிர்பெறும்,? அதுவும் சில நிமிடம் மட்டும்.!.. அதுகள் எப்படி சங்கேத பாஷையில் பேசும்… இதில் இரண்டு விஷயங்கள் இடிக்குது… “ஒண்ணு அந்த விசேஷ இரசாயன பொருட்கள்.”. இன்னொன்று அந்த “சங்கேத நயன பாஷை”…முதலாவதான அந்த இரசாயன பொருட்கள் எங்கு கிடைக்கும்?
அதை எப்படி தயார் செய்வது.? .. இரண்டாவது அந்த சங்கேத பாஷையை எங்கு எப்படி கற்று கொள்வது.? “.. என்று நீண்ட விவாதம் செய்தாள் ..

அவன் பொறுமையாக “அமுதா !சீனர்கள், இரசவாதத்தில் கைதேர்ந்தவர்கள்!அவன் கூறுவதில் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது… அந்த புத்தகத்தை உடனே முழுவதும் படிக்க வேண்டும்.. அதில் இதைபற்றிய விளக்கமான குறிப்புக்கள் இருக்கலாம், என்று நான் உறுதியாக நம்புகிறேன். வா, நாம் உடனே அந்த நூல்நிலையம் செல்லலாம்!” என்று அவளைக் கட்டாயப்படுத்தி, அங்கு இட்டுச் செல்கிறான்.

ஏதோ ஒரு பரபரப்பு அவனை தொற்றிக்கொள்ள, அவன் வைத்து சென்ற இடத்தில், அந்த நூலை தேடுகிறான்..ஆனால் அந்த புத்தகம் அங்கு இல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்து, லைப்ரேரியன் இடம் சென்று, “ஐயா நேற்று நான் படித்த அந்த புத்தகத்தை காணவில்லையே! எங்கு வைத்து இருக்கீங்க? ” என கேட்க,

அவரோ அலட்சியமாக “எந்த புத்தம்.? எத்தனையோ பேர், எத்தனையோ புத்தம் படித்துச் செல்கின்றனர்..! அங்கேயே சென்று சரியாக நிதானமாய் தேடிப்பாரும்” என்று ஏனோதானோவென்று பதில் கூறி விட்டு, அவசரமாக அகன்றுவிட… இவன் விரக்தியுடன்.. மீண்டும் அங்கு சென்று நீண்ட நேரம், அமுதாவுடன் சேர்ந்து தேடியம் அந்த புத்தகம் கிடைக்காததால் வருத்தப்பட… அவளோ “என்னப்பா எதாவது கனவு கினவு கண்டியா? .. அதுக்குத்தான் ஓவரா படிக்க கூடாதுன்றது !மூளை குழம்பிடுச்சோ! “என்று அவனை கிண்டல் அடித்து சிரிக்க, அவன் “இதில் ஏதோ சூழ்ச்சி நடக்குது.. அந்த லைப்ரேரியன் ஏதோ திருட்டு வேலை பண்றான்” என கோபத்துடன் கூச்சலிட, அமுதா அவனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து செல்கிறாள்…

இது நடந்த பிறகு, ஆனந்த், ஏதோ பறிகொடுத்தவன் போல் காணப்பட்டான். சதா சர்வ காலமும் சிந்தனையிலேயே இருந்தான்… அமுதாவிடம் முன்புபோல் சரியா பேசுவது கூட இல்லை.. அவளோ இவனிடம் வலியப்போய்,

“என்ன ஆச்சு ஆனந்த்? ஏன் இப்படி இருக்கே? உடம்பு கிடம்பு சரியில்லையா? “என்று கேட்டாள்.

அவனோ “அதெல்லாம் ஒண்ணுமில்ல! நல்லாத்தானே இருக்கேன்!!” என்று சொல்லி மழுப்பினான். அவளுக்கு இவன் மேல் எதோ ஒரு புதிரான, பற்று ஏற்படுவதை எண்ணி, அது காதலா? என தன்னை தானே கேட்டு கொண்டாள்…! அந்த நினைப்பே அவளுக்கு ஆயிரம் இன்ப உணர்ச்சி தந்தது !

இந்த நேரத்தில்தான்,… ஹரியானாவை ஒட்டிய ஓரு பின்தங்கிய கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில், பற்பல அதிசயமான பண்டைய பொருட்கள் கண்டு பிடிக்க படுவதாக, நாட்டின் அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்க, நம் ஆனந்த் அமுதா கோஷ்டியும், அதில் பங்குபெற அங்கு புறப்பட்டது. ஆனந்த், ஓரு பெரிய வினோதமான ஹாண்ட்பேக் ஒன்றை, மிகவும் பாதுகாப்பாக அணைத்தவாறு தன்னுடன் அந்த பயணத்தின்போது கொண்டு வந்திருந்தான். அமுதாவுக்கு அது ஆச்சர்யமாகவும் அச்சமாகவும் இருந்தது. அவனிடம் அதைபற்றி கேட்க அவனோ “அது ஒண்ணும் இல்லை.என் துணிமணிகள்” என்றுஏதோ கூறி மழுப்பினான்.

அந்த ஆகழ்வாராய்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்க, இவர்களும் அதில் ஆர்வமாக பங்கு கொண்டனர். ஆனந்த் முகத்தில் பல வினோத மாறுதல்கள் தெரிய தொடங்க, அமுதா ஏனோ அவனை பற்றி நிரம்ப கவலை பட்டாள் . அவனுக்கு தெரியாமல் அவன் நிழல் போல், பின்தொடர்ந்து அவனை கண்காணிக்க தொடங்கினாள். அவனோ உறக்கமின்றி சதாசர்வ காலமும், சிந்தனை வயப்பட்டு இருந்தான்.

அன்று அதிகாலையிலேயே..பணி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சுறுசுறுப்பாய் நடைபெற, பற்பல நாணயங்கள், தங்க காசுகள் மண்பாண்டங்கள், சிற்பங்கள், எலும்பு கூடுகள், என அரிய பெரிய பொருட்கள் கிடைத்த வண்ணம் இருக்க, அனைவரும் ஆச்சர்யாபட்டு வியந்துபோயினர். அந்தி சாயும் நேரம், அனைவரையும் திகில் அடைய செய்யும் வகையில், ஒரு இளம் பெண்ணின் பாடம் செய்யப்பட்ட பிரேதம் கண்டெடுக்கப் பட்டது. இதனால் அந்த குழு மொத்தமும், அமானுஷ்ய அமைதியில் உறைந்து நின்றது. அந்த பெண்ணின் உடல்.. சிரித்தவாறு, எந்த மாறுதலும் அடையாமல் ஓரு உயிரோட்டத்துடன் இருப்பது கண்டு, அனைவரும், பிரம்மிப்புடன் அஞ்சி நின்றனர்… அந்த ஆராய்ச்சி குழு உயரதிகாரி “மாணவர்களே .. இந்த உடல் என் கணிப்புப்படி, ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் பழமை ஆனதாக இருக்கும் என நம்புகிறேன்!

அவர்கள் பாடம் செய்த நேர்த்தியால் இன்றும்… சற்றும் சிதிலமடையாமல், உயிரோட்டமாய் உள்ளது..” என கூற அனைவரும், “அதை” பத்திரமாக எடுத்து சென்று, விசேஷ அறையில் பாதுகாத்து வைத்து கலைந்தனர்.

ஆனந்த் முகத்தில் அன்று ஓரு புரியாத பிரகாசம் புலப்பட்டது. அந்த இளம்பெண்ணின் பிரேதத்தை வெளியில் எடுப்பதற்கு, அவன் மிகவும் ஒத்துழைப்பு தந்தான். அந்த பிரேதம் அறையில் வைக்கப்படும் வரை அதனிடம் மிகவும் நெருக்கம் காட்டினான். அதன் சற்றே திறந்திருந்த விழியை…வைத்த கண் வாங்காமல் உற்று நோக்கியபடியே இருந்தான். இதைஎல்லாம் அமுதா உன்னிப்பாக கவனித்து கொண்டே இருந்தாள்! “ஆனந்த்க்கு எதாவது ஆகிவிடுமோ?” என்றஅச்சம் அவள் ஆழ்மனதில் ஊடுருவி .. அவளை வெகுவாக பாதித்தது.

இந்த களேபரம் ஓய்ந்ததும், அவனிடமே இதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்து இருந்தாலும், அந்த சந்தர்ப்பம் வாய்க்காதவாறு, அவன் இவளிடம் இருந்து நழுவி, நழுவி சென்று கொண்டே இருந்தான்.

இரவுச் சாப்பாட்டின் போது அமுதா அவன் அருகில் அமர்ந்து “என்ன? ஐயா இன்று ரொம்ப குஷியா இருக்கீங்க போல!” என்று கிண்டல் அடிப்பது போல் அவனை சீண்டினாள். இதைக் கேட்ட அவன் முகம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சியை காட்ட, அவள் சற்றே அதிர்ந்துபோய் “என்ன பதிலே காணும்? என கூற..

அவன் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை! எப்போதும் போல் தான் இருக்கேன். சாப்பிடும் போது பேசாமல் ஒழுங்கா சாப்பிடு! “என பொய் சிரிப்புடன் அவளை நோக்க அவள் முகம் தொங்கிபோனது. அவன் சரியாக சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்து கொண்டான். ஏதோ ஒரு அவசரம் அவன் செய்கையில் தென்பட்டது.

இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை, அந்த சடலம் பாதுகாக்கபட்ட அறைக்கு வெகு அருகிலேயே இருந்தது. நடுஇரவில் அந்த பிரதேசமே ஒரு மயான அமைதியில் உறங்கி கொண்டு இருக்க.. ஆனந்த் மெல்ல எழுந்து, சுற்றும் முற்றும் பார்த்து, அனைவரும் (குறிப்பாக அமுதா,) நன்கு உறங்குகிறார்களா என ஊர்ஜீத படுத்தி கொண்டான். பிறகு மெல்ல, தன் மர்ம ஹாண்ட் பேக்குடன், அடிமேல் அடி வைத்து, அந்த பயங்கர சூழலில், அந்த பிணவறை நோக்கி நடந்தான்…

அமுதா உறங்குவதுபோல் பாசாங்கு செய்து.. அவனைப் பின்தொடர்ந்தாள்.. அவன் மெல்ல அந்த அறையை நெருங்கினான். காவலாளியோ கள்ள சாராய போதையில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தான்.அவன் தன்னிடமிருந்த கள்ள சாவியால், பூட்டை திறந்து உள்ளே நுழைந்து, தன் டார்ச் லைட் ஒளியில், பாடம் செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் இறந்த அந்த சவத்தை நெருங்கி, அதன் விழிகளை உற்று நோக்குகிறான். அவன் முகம் மலர்கிறது.

தன் ஹாண்ட் பேக்கை சத்தமின்றி திறந்து, சில பல இரசாயன குப்பிகளில் இருந்த, வேதி பொருட்களை கலக்க, ஒரு அருவருப்பான, குமட்டல் வாடை பரவுகிறது, அவன் மூக்கில் கர்சீப் கட்டி கொண்டு, அந்த கலவையை, மாட்டு ஊசி சிரஞ்சில் எடுத்து, அந்த பெண் பிரேதத்தின், கண், வாய், காது, ஆசனவாய், மற்றும் பிறப்புஉறுப்பில், மெல்ல மெல்ல செலுத்த, அந்த பிரேதத்தில் மெல்ல விசித்திரமான மாறுபாடுகள் தெரிய துவங்குகிறது.. சில பல நொடிகளில், அது லேசாக அசைந்து, கைகால்களை நீட்டி எழுந்து நின்று, அவனை பார்த்து புன்னகை செய்தது ! ஆனந்த் தன் ஆராய்ச்சி வெற்றியடைந்ததால்.. மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்கிறான்.

அவன், அந்த ரகசிய பையில் இருந்த சில, ஓலை சுவடிகளை எடுத்து, ஏதோ ஒரு புரியாத மொழியில், வார்த்தைகளை உச்சரித்து,..
மெல்ல, அதனுடன் பேச முற்படுகிறான். சிறிது நேரத்துக்கு பிறகு “அது” மெல்ல உலாவியபடி, இவன் பாஷையிலேயே, வினாக்களுக்கு பதில் தர தொடங்குகிறது.. அதன் குரல் புரியாத மொழியில் நாராசமான கீச்சு குரலில் மென்மையாக ஒலிக்க, அதன் விழியும் விரிந்து.. ஏதோ ஒரு சோகத்துடன் பேச முற்பட, இவன் அதன் பின்னால் ஓடியவாறு அதன் பதில்களை புரிந்து கொண்டு வியப்பு அடைகிறான்.

அவன் ஏதோ ஒரு முக்கிய வினா ஒன்றை எழுப்ப, அந்த பெண் வெகுண்டெழுந்து கோபத்தின் உச்சிக்கு சென்று, இவனை அலேக்காக தூக்கி.. அரக்கி போல் பற்களை காட்டி, எங்கோ வீசி அடிக்க அவன் நொடியில் மறைந்து போகிறான்! கரைந்து போகிறான்!.

இவை அனைத்தையும், சாவி துவாரம் வழியாக, திகிலுடன் நடுங்கியபடி பார்த்து கொண்டு இருந்த அமுதா.. “ஐயோ, ஆனந்த் என்ன ஆச்சு! எங்கே போய்ட்ட?” என்று அலறியபடி, மயங்கி விழ, அவள் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் விழித்து கொண்டு, கூட்டமாய் சேர்ந்து “என்ன ஆச்சு! ஏது நடந்தது? ஆனந்த் எங்கே ?” என்று அவளை பயத்துடன் விசாரிக்க, அவள் தலைமை ஆராய்ச்சியாளரின் தனி அறைக்கு சென்று , நடந்தது அனைத்தையும், ஒன்று விடாமல் விவரிக்க..அவர் வியப்பின் எல்லைக்கே செல்கிறார்.

இதற்கு இடையே அந்த குழு மொத்தமும் , அந்த அறைக்குள் சென்று வெளிச்சம் போட்டு தேட அந்த இளம் பெண்ணின் உடல் மட்டும், அப்படியே அதே நிலையில் கிடந்தது.. ஆனால் எங்கு வலைவீசி தேடியும் ஆனந்த்தை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அவன் “எங்கே போனான்! எப்படி மறைந்தான் ! என்ன ஆனான்? ” என்ற எந்த தகவலும், யாருக்கும் கடைசிவரை கிடைக்கவேயில்லை!
அமுதா, மட்டும், மிகவும் மனதளவில் உடைந்துபோய் ஆனந்தை, எண்ணி எண்ணி அழுத வண்ணம் இருந்தாள்.ஒரிரு நாளில் அனைவரும் சோகத்துடன் மெட்ராஸ் திரும்பினர்.

இருபது ஆண்டுகள் உருண்டோடின.. அமுதா “இந்திய அகழ்வாராய்ச்சித் துறை”யின், தலைமை இயக்குனராக பெரிய பதவியில் நியமிக்கப் படுகிறார். ஆனாலும் , அவள் ஆனந்த் நினைவாய் திருமணமே செய்து கொள்ளவில்லை. “என்றேனும் ஒரு நாள் அவன் நிச்சயம் திரும்பி வருவான்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்தாள். அப்போது, அவளுக்கு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடக்கும், “சர்வதேச அகழ்வாராய்ச்சி உச்சி மாநாட்டில்” இந்திய பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

மாநாட்டின் திறப்பு விழாவில், தலைமை ஏற்று “அகழ்வாராய்ச்சி பிரேதங்களின் அதிசயங்கள்”என்ற தலைப்பில் பேசும் “ஆனன்ஹூசூச்சின்” வருகைக்காக, அனைத்து நாட்டின் பிரதிநிதிகளும்ஆவலாய்க் காத்திருக்க, உள்ளே நுழைந்த அவர், அச்சு அசல் நம் ஆனந்த் போல் இருப்பதை கண்டு, அமுதா “ஆனந்த்!ஆனந்த்!” என்று கூவியபடி அவனை நோக்கி ஓடி சென்று, அவனை நெருங்கி மூச்சிரைத்தபடி அப்படியே சிலையாகி நிற்க.. அவரோ ஒன்றும் புரியாமல்” எஸ்!வாட் கேன் ஐ டூ பார் யூ “என்று புன்னகைக்க.. அவன் கண்களையே உற்று பார்த்து, அதில் புதைந்திருந்த போலித்தனத்தை, இனம் கண்டு, சினம் கொண்டு ஏமாற்றம் அடைந்து, உறைந்து நிற்கிறாள்… அப்பாவி அமுதா !!

வரலாற்று உண்மையைச் சொல்ல மறுக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – பேரா. அருண்கண்ணன்

வரலாற்று உண்மையைச் சொல்ல மறுக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – பேரா. அருண்கண்ணன்




கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி  வெளியான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள 1000 திரையரங்குகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நடந்த காஷ்மீர் வன்முறையில் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறிய வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் விவேக் அக்னி ஹோத்திரி.

இந்தக் கட்டுரையை எழுதும் வரை இத்திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வருமானத்தை

ஈட்டியுள்ளது. நம்முடைய பிரதமர் மோடி இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு, அத்திரைப்பட குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும் மார்ச் 15-ஆம் தேதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வெகுவாக திரைப்படத்தைப் பாராட்டியதுடன் உறுப்பினர்களை இத்திரைப்படத்தைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.

பாஜக ஆட்சி செய்கிற எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இத்திரைப்படத்துக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் முதல்வர் இத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் இத்திரைப்படத்தைப் பார்க்கக் காவல் துறையினருக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு வழங்குவதாக அறிவித்தது. மேலும், மேற்கு வங்கம் ராஜஸ்தான் போன்ற மாநில அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியான பாஜக இத்திரைப்படத்திற்கு வரிச்சலுகை கொடுக்குமாறு வலியுறுத்தியது. இது தவிர, தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும் என்று பேசியுள்ளார்.  ஒன்றிய, மாநில பாஜக அரசாங்கமும் அதனுடைய தலைவர்கள், சங் பரிவார அமைப்புகள்  இத்திரைப்படத்தைப் பெரிதும் ஆதரித்தும் விளம்பரப்படுத்தியதுமே இப்படியான ஒரு திரைப்படத்தைப் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னைத் தள்ளியது.

திரைப்படத்தின் கதைச் சுருக்கம்
காஷ்மீரைச் சேர்ந்த கிருஷ்ணா பண்டிட் ஏன்யு (ANU)  பல்கலைக்கழகத்தில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்) படித்துக் கொண்டிருக்கிறார்.  அங்கு பணிபுரிகிற பேராசிரியர் ராதிகா மேனனின் வழிகாட்டுதலின் படி மாணவர் தலைவர் தேர்தலில்   போட்டியிடுகிறார் கிருஷ்ணா பண்டிட். அந்த மாணவர் தேர்தலில் காஷ்மீர் முக்கியமான பேசுபொருள் என்று கூறப்படுகிறது. இன்றைய ஆட்சியாளர்களின் காஷ்மீர் குறித்தான கதையாடல்களை முறியடிப்பதற்கு காஷ்மிரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவுசெய்து அவரை மூளைச்சலவை செய்து இத்தேர்தலில் போட்டியிட வைக்கிறார் பேராசிரியர் ராதிகா மேனன். இதற்கிடையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாள் கிருஷ்ணாவின் தாத்தா இறந்து விடுகிறார். தாத்தாவின் கடைசி ஆசையான அவருடைய அஸ்தியை அவருக்குச்சொந்தமான மண்ணில் கரைப்பதற்காக காஷ்மீருக்குக் கொண்டு  செல்கிறார் கிருஷ்ணா.

தேர்தல் நெருங்குவதால் முதலில் ஆட்சேபிக்கிற ராதிகா மேனன் பிறகு கிருஷ்ணா இரண்டே நாட்களில் திரும்பிவிடுவேன் என்று உறுதி அளித்ததால், காஷ்மீரில் சில தொடர்புகளைக் கொடுத்து இந்தப் பயணத்தின் பொழுது சந்தித்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார். அஸ்தியுடன் செல்கிற கிரிஷ்ணாவைச் சந்திப்பதற்காக அவருடைய தாத்தாவின் முன்னாள் நண்பர்களான காஷ்மீரின்  முன்னாள் டிஜிபி ஹரி நரைன், அமெரிக்காவில் இருந்து மருத்துவர் மகேஷ் குமார், பத்திரிகையாளர் விஷ்ணு ராம் ஆகியவர்கள் முன்னாள் காஷ்மீரில் இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரியான பிரம்மா தத்தின் விட்டில் காஷ்மீரில் ஒன்று சேருகின்றனர். அன்று நடக்கிற உரையாடலின் வழியாக தன்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் ஆகிய அனைவரும் ஏற்கனவே சொல்லப்பட்டது போல் விபத்தில் இறக்கவில்லை என்றும், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற உண்மையையும் தெரிந்து கொள்கிறான் கிருஷ்ணா. மேலும், ராதிகா மேனன் சந்திக்கச் சொல்கிற அந்த நபரை   அப்பயணத்தின் பொழுது சந்திக்கிறான். அந்த நபர் ஒரு  தீவிரவாத அமைப்பின் தலைவர் என்பதும் அந்த நபர் தான் தன்னுடைய குடும்பத்தினரைக் கொன்றவன் என்பதையும் தெரிந்து கொள்கிறான் கிருஷ்ணா.

காஷ்மீரில் இருந்து திரும்பிய கிருஷ்ணா பல்கலைக்கழகத்தில் தேர்தலுக்காக நடக்கிற விவாதத்தில் ராதிகா மேனன் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பேசுகிறான். ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்த முயற்சிக்கிறார் ராதிகா. ஆனால் மாணவர்கள் பேச்சைத் தொடருமாறு கேட்கின்றனர். படத்தின் இறுதிப் பகுதியில்தான் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்தப் பேச்சில் கிருஷ்ணா தன்னுடைய அம்மா அண்ணன் ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 24 பேர்  இராணுவ உடை அணிந்த தீவிரவாதிகளால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டதை விவரிக்கிறார். அதே நேரத்தில் அந்தக் காட்சிகள் நமக்கு காட்டப்படுகின்றன. மிகக் கொடூரமான அந்தக் கொலை குறித்த காட்சிகளின் முடிவில் கிருஷ்ணா காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பேசுவதுடன் படம் நிறைவு பெறுகிறது.

காஷ்மீரின் சுருக்கமான வரலாறு
1975-இல் இந்திரா காந்திக்கும் சேக் அப்துல்லாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய தேசிய காங்கிரசின் துணையுடன் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராகப் பதவி ஏற்கிறார். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமானுல்லாஹ் கான் மற்றும் முஹம்மத் மக்பூல் பாட் ஆகிய இருவரும் இணைந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை உருவாக்குகின்றனர். ஜம்மு காஷ்மீரை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறச் செய்வதே முன்னணியின் நோக்கம். 1984-இல் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானவுடன் காஷ்மீரின் ஆளுநராக ஜக்மோகன் நியமிக்கப்படுகிறார். அதற்கு அடுத்த சில நாட்களுக்குள்  ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுடன் பரூக் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டு அவருடைய மைத்துனரான குலாம் சாவின் கையில் ஆட்சியை ஒப்படைக்கிறார் ஜக்மோகன். அதே  ஆண்டில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் முஹம்மத் மக்பூல் பாட் தூக்கிலிடப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் கோபத்தை வரவழைக்கிறது.

1986-யில் குலாம் ஷா அரசு மசூதி கட்டுவதாக அறிவித்த இடம் பழமையான இந்துக் கோவில் இருந்த இடம் என்று சர்ச்சை கிளம்புகிறது. இதேகால கட்டத்தில் பிரச்சனைக்கு உரிய அயோத்தியில் உள்ள பாபர் மசூதியின்/ ராம ஜென்ம பூமியின் கதவுகள் இந்துக்களின் வழிபாட்டிற்காகத் திறந்து விடுகிறது ராஜீவ் காந்தி அரசாங்கம். இந்நிகழ்வுகளின் விளைவாக ஜம்மு காஷ்மீரில் கலவரம் நடைபெறுகிறது. இதனைக் காரணம் காட்டி குலாம் சாவின் ஆட்சியைக் கலைத்து விட்டு பரூக் அப்துல்லாவை ஆட்சியில் அமர்த்துகிறார் ஆளுநர் ஜக்மோகன். அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பல முறைகேடுகளைச் செய்து காங்கிரசுடன் இணைந்து  பரூக் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார். இத்தேர்தல் காஷ்மீரின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

இத்தேர்தலில் நடந்த முறைகேடுகளினால் தோற்கடிக்கப்பட்டவர்களில் ஒருவரான யூசப் ஷா 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான கிஜுபுல் முஜாஹுதீனை உருவாக்கினார். அவரின் தேர்தல் முகவராக செயல்பட்ட யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக பின்னாளில் உருவெடுக்கிறார்.

தொடர்ச்சியான ஒன்றிய அரசின் தலையீடு மற்றும் தேர்தலில் நடந்த குளறுபடிகளாலும், காஷ்மீரின் இளம் தலைமுறையினர் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். உலக அளவில் ஏற்பட்டு வந்த மாற்றங்களும் சோவியத் ஆப்கன் யுத்தம் ஆகியவை ஆயுதம் ஏந்த ஏதுவான சூழலாக அமைந்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் சோவியத் ஆப்கன் யுத்தத்தில் ரஷ்யாவிற்கு எதிராகச் சண்டையிடுவதற்காக அமெரிக்கா சவூதி அரேபியாவின் உதவியுடன் உலகம் முழுக்க திரட்டப்பட்ட  இஸ்லாமிய இளைஞர்களில்  சிலர் இச்சண்டையின் முடிவில் காஷ்மீருக்குள் வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் 1988-ஆம் ஆண்டு தொடங்கி காஷ்மீரில் தொடர்ச்சியாக பலரும் கொல்லப்படுகின்றனர். இதில் பண்டிட்டுகள், தேசிய மாநாட்டுக் கட்சியின் அரசியல் தலைவர்கள், என பல தரப்பினரும் கொல்லப்படுகின்றனர். இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் 1990 களில் பண்டிட்டுகளுக்கு எதிராக நடந்த வன்முறைகளை அணுக வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இரண்டு இலட்சத்திற்கும் மேலான இஸ்லாமியர்கள் ஜம்முவில் கொல்லப்பட்டனர். அதேபோல் பாகிஸ்தான் படையினரால் சிறிய எண்ணிக்கையில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகும் 1980களின் இறுதி வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு சமூகங்களும் இணக்கமாகவே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று கூறுகிற அரசியல் கட்சிகளும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டு, காஷ்மீர் தனிநாடாக  இருக்க வேண்டும் என்ற சொல்லக்கூடிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளும்,  பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேர்க்கப்பட வேண்டும் என்று  சொல்கிற கிஜுபுல் முஜாஹுதீன் போன்ற வெவ்வேறு கருத்துகளை உடைய அமைப்புகளும் காஷ்மீரில் செயல்பட்டன என்பதயும்  கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2019-இல்  மோடி தலைமையிலான ஒன்றிய அரசு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்தை வழங்கக்கூடிய 370 ஆவது பிரிவை நீக்கிய பிறகு  அங்கு  நிலைமை முற்றிலும் வேறு மாதிரியாக  மாறியுள்ளதை  புரிந்து கொள்வதும் அவசியம்.

திரைப்பட காட்சிகளும் அதன் முரண்களும்
பண்டிட்டுகளின் சங்கமான சங்கார்ஷ் சமிதியின் அறிக்கையானது 1990க்கும்  2011க்கும் இடையில் 399 பண்டிட்டுகள் இறந்துள்ளனர் என்றும் இதில் 7 விழுக்காட்டினர் 1990 களில் இறந்துள்ளனர் என்று கூறுகின்றது. மேலும் அலெக்சாண்டர் இவான்ஸ் என்கிற ஆய்வாளரின் கணக்குப்படி 1,70,00 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்ததாக மதிப்பிடுகிறார். ஜம்மு காஷ்மீர் அரசின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைப்பின் அறிக்கையானது 1990-ஆம் ஆண்டு  60,000 குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது. மேலும் அதே கால கட்டத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாகவும்,   50,000 இஸ்லாமியர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியதாகவும் குறிப்பிடுகிறார் காஷ்மீரின் வரலாற்றை ஆய்வு செய்யும் அசோக் பாண்டே.

உண்மை இப்படி இருக்கையில் 1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் நடந்த காஷ்மிரி வன்முறையில் 4,000 பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள்  5 லட்சம் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து புலம் பெயர்ந்ததாகவும் திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் புலம்பெயர்ந்ததையும் பற்றி எந்தக் காட்சிகளும் திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை. இந்த நிகழ்வுகள் நடைபெறும் பொழுது மத்தியில் காங்கிரஸ் கட்சியும் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷேக் அப்துல்லா வும் பொறுப்பில் இருந்ததாகவும் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில் அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தது வி.பி சிங்கின் அரசு. அதனோடு   1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜக்மோகன் மீண்டும் ஆளுநராக பொறுப்பு ஏற்கிறார். ஜக்மோகன்  ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதும் பின்னாளில் அவர் பாஜகவில் பாராளுமன்ற உறுப்பினராகவும் வாஜ்பாயின் தலைமையிலான அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு நடந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்கு ஜக்மோகனின் தவறான நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என பல்வேறு பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின. இத்தகைய விடயங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியையும் இச்சம்vபவங்கள் நடைபெற்றதைத் தடுக்காமல் இருந்தனர் என்று பார்வையாளர்களை நம்பவைக்க முயற்சிக்கிறது  திரைப்படம்.

நிச்சயமாக 1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் அன்று பண்டிட்டுகளுக்கு எதிராக நடந்த வன்முறையும் படுகொலைகளும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதைக் காட்சி படுத்தியதிலும் பிரச்சனையில்லை. ஜக்மோகன் பொறுப்பேற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு 21-ஆம் தேதி ஸ்ரீநகரில் அமைதியாகப் போராடிய இஸ்லாமியர்கள் ஐம்பதுபேரை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதும் வெளி உலகிற்குத் தெரிய வேண்டிய காட்சிகள்தான். இருப்பினும் இதையெல்லாம் இயக்குநர் காட்சிப்படுத்தவில்லை.

திரைப்படத்தின் கடைசிப் பகுதியில் கிருஷ்ணாவின் அம்மா அண்ணன் சிவா உட்பட இருபத்து நாலு பேரைக் கொல்லுகிற காட்சிகள் 2004-ஆம் ஆண்டு நந்திமார்கில் லக்சர் இ தொய்பா (Lashkar-e-Taiba) வினரால் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் காட்சிகளை 1990-களில் நடைபெற்றதைப் போன்று படத்தில் சித்தரித்துள்ளார். புனைவில் இதற்கு இடமிருக்கிறது என்றாலும், உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் இதையெல்லாம்  கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

1998-யில்  வண்தகாமாவிலும் 2004-யில் நந்திமார்கிலும் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டது உண்மைதான். அக்கொலைகளை உலகுக்கு எடுத்துக்கூறி அக்கொலைகளை செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது முக்கியமானதுதான். அதேபோல் 1990யில் ஹன்ட்வாராவிலும் 1993யில் சபூர் மற்றும் பிஜ்பெஹராவிலும் vஇஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. விவேக் அக்னி ஹோத்திரி இப்படுகொலைகளைச் சொல்லாமல் விடுவதை இயக்குனருக்கான சுதந்திரம் என்றெல்லாம் எடுத்துக் கொள்ளமுடியாது.

இது ஒரு புறம் இருக்கட்டும், இருபத்து நாலு பேர் படு கொலை செய்யப்படுவதற்கு முன்னால் கிருஷ்ணாவின் அம்மாவின் ( சாரா) காவிநிற உடை தீவிரவாத அமைப்பின் தலைவரால் கிழிக்கப்பட்டு அரை நிர்வாணமாக காட்டப்படுகிறார்.  திரைப்படத்தின் வேறு ஒரு காட்சியில் சாராவைக் காப்பற்றுவதற்காக அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பார் ஆசிரியரான ஒரு வயதான இஸ்லாமியர். ஆனால் அதை சாரா மறுத்துவிடுவார். அந்த வயதானவர் திடீரென கடைசிக் காட்சிகளில் தோன்றி சாராவின் முகத்தில் காரித் துப்புகிறார். பிறகு சாரா பக்கத்தில் உள்ள மரஅறுப்பு மிசினுக்குள் படுக்க வைக்கபட்டு மிகக்கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகிறது. மேலும், மற்றவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு நெத்தியில் சுடப்படுகின்றனர். அவர்களுடைய நெத்தியில் இருக்கும் பெரிய குங்குமப் பொட்டின் மீதுதான் குண்டுகள் பாயச்சப்படுகின்றன. உண்மையில் 2004-லில் நந்திமார்கில் நடந்த சம்பவங்களுடன் பலவிடயங்கள் சேர்க்கப்பட்டு காட்சிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும் இத்திரைப்படத்தில் வருகின்ற ஒவ்வொரு இஸ்லாமிய கதாப்பாத்திரமும்(சிறுவர்கள் பெண்கள் உட்பட) திட்டமிட்டு இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரானவர்களாகக் காட்சிப்படுத்தப் படுகின்றனர்.

ஜம்மு &காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 தான் 1990 களில் நடந்த பண்டிட்டுகளின் படு கொலைகளுக்கும் அவர்களின் புலப்பெயர்விற்க்கும் காராணம் என வாதிடும் கிருஷ்ணாவின் தாத்தா கதாப்பாத்திரம். அதற்காகத் தான் 6,000 கடிதங்கள் வரை பிரதமருக்கு எழுதியுள்ளதாகக் கிருஷ்ணாவிடம் குறிப்பிடுவார். கிருஷ்ணாவின் தாத்தா ஒரு ஆசிரியர் மேலும் காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினையை உலகு அறியச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறவர். அப்படியான ஒருவரிடம் 30 ஆண்டுகள் வளரும் கிருஷ்ணாவிற்கு காஷ்மீர் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பதும் ராதிகா மேனனால் மூளைச்சலவை செய்வதைப் போன்றும் திரைக்கதை அமைத்திருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

2016-ம் ஆண்டு  பிப்ரவரி  9-ம் நாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உமர் காலித், பட்டாச்சாரியா போன்ற மாணவர்கள் சிலர் 2013-இல் தூக்கிலிடபட்ட அப்சல் குருவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் நடத்துகின்றனர். அக்கூட்டத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தடுத்து நிறுத்துகின்றனர். இக் கூட்டத்தில் தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு உமர் காலித் அன்றைக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக இருந்த கண்ணையா குமார் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னணியில்தான் கிருஷ்ணா இப்பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும், ராதிகா மேனன் (இடதுசாரி பேராசிரியர்) கிருஷ்ணா போன்ற அப்பாவி மாணவர்களைத் தவறாக இந்திய தேசத்தின் நலனுக்கு எதிராக வழிநடத்துவதைப் போன்றும் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்தலில் காஷ்மீர் ஒரு மையப் புள்ளி என்று சொல்வதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது. ஒரு காட்சியில் கிருஷ்ணாவின் தாத்தா கிருஷ்ணாவிடம் ஆசாதி (தமிழில்- சுதந்திரம், இப்படத்தில் பல்கலைக்கழக காட்சிகளில் பலமுறை பயன்படுத்தப்படும் கோசம்) என்பதே தீவிரவாத சொல் என்றும், மேலும் காஷ்மீரின் விடுதலையைக் கோரும் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும்  பிரிவினைவாதிகள் என்றும் குறிப்பிடுகிறார்.  இப்படியான பல பொய்களின் ஊடாக ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுடன் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள், மனித உரிமைப் போராளிகள் ஆகிய அனைவரையும் இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரிகள் என்று கட்டமைக்கின்றார் இயக்குனர்.

உலகில் மிக நீண்ட காலமாக ராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள பிரேதேசங்களில் ஒன்றான காஷ்மீரில் எடுக்கப்பட்ட படத்தில், ராணுவ வாகனங்களை ஒரு காட்சியில் கூட பார்க்கமுடியவில்லை. மேலும் படத்தில் அனைத்துக் காவல் துறையினரையும்  தீவிரவாதிகளுக்கு பயந்து ஓடி ஒளிபவர்களாக காட்சியமைத்திருப்பதெல்லாம் எதார்த்தமானவைகள் அல்ல. இப்படி பல விடயங்களை வலிந்து காட்டுவதும், சில விடயங்களை காட்டாமல் விட்டு விடுவதிலும் உள்ள இயக்குனரின்  அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சங் பரிவார அமைப்புகளின் வெறுப்புப் பிரச்சாரம்
திரைப்படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் சிலர் திரைப்படத்தின் இறுதியில் இஸ்லாமியர்களைத் தாக்கவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கவும் அறைகூவல் விடும் பல காட்சிகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. இவைகளெல்லாம் நன்கு திட்டமிடப்பட்டு சங் பரிவார அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டவை என்பது தி வயர் (The Wire.in) இணையதளத்தில் விரிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு ஜந்தர் மந்தரில் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட ராகேஷ் சிசொடியா சில கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து ப்ரொஜெக்டரில் இத்திரைப்படத்தை திரையிட்டுள்ளார்.  மேலும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாங்கள் திரைப்படத்திற்கான டிக்கட் பெற்று  அதிக எண்ணிக்கையில் நபர்களை அழைத்துக் கொண்டு சென்று திரைப்படத்தை பார்வையிடுவதாகவும் கூறுகின்றனர். கோயம்புத்தூரில் கூட இந்த்துத்துவ அமைப்புகள் பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில்  அதிகரித்து வருவது பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். இது போன்ற சூழலில் இத்திரைப்படமும் அதை ஒட்டி நடைபெறக் கூடிய நிகழ்வுகளும்  இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை நியாயப்படுத்தவும் இந்நிலைமைகள் மேலும் மோசமடைய  மட்டுமே பயன்படும் என்பது பெரிதும் அச்சத்தை வரவழைக்கிறது.

இறுதியாக
ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்குகிற படைப்பிற்கென்று சில பொறுப்புகள் உண்டு. வரலாற்றின் போக்கில் இருந்து ஒரு சம்பவத்தை மட்டும் தனியாக எடுத்து ஒரு பக்க சார்புடன் படைப்பை உருவாக்கும் பொழுது பார்வையாளனுக்கு அந்நிகழ்வை முழுமையாகப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். அர்பன் நக்சல் என்ற புத்தகத்தை எழுதியவரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் விவேக் அக்னி ஹோத்திரியிடம்  அப்படியான ஒரு பக்க சார்பில்லாத  படைப்பை எதிர்பார்ப்பது அபத்தம்.   அவரே தொடர்ச்சியாக தான் இத்திரைப்படத்தை இயக்கியதற்கு ஒரு நோக்கம் இருப்பதாகச்  சொல்லிவருகிறார். அவருடைய நோக்கம்  எதுவாயினும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதில்  இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

இறுதியாக ஒன்றைச்  சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். சமீபத்தில் வெளியான இரண்டு அறிக்கைகள் இந்தியாவில் இனப்படுகொலைகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்மை எச்சரித்துள்ளன. அந்த அறிக்கைகளில் ஒன்று அமெரிக்காவில் உள்ள இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பினுடையது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி ஸ்டாண்டன் அமெரிக்க காங்கிரசில் பேசும்பொழுது இந்தியாவில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான் ஆரம்பக் கட்ட கூறுகள் தென்படுவதாகவும், அது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறலாம் என்றும் கூறியுள்ளார். இந்த   கிரிகோரி ஸ்டாண்டன்தான் 1989-ல் ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெறலாம் என்று முதலில் எச்சரித்தவர். 1994-ல் ருவாண்டாவில் அவர் எச்சரித்தது போல் டுட்சி இனத்தை சேர்ந்த நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் பேர்  இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. அப்படியான கிரிகோரி ஸ்டாண்டன் இந்தியாவில் இனப்படுகொலை நடைபெறலாம் என்று எச்சரிப்பதை  நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை

நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூர

கலப்பு கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு – இந்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் கண்டனம் | தமிழில்: தா.சந்திரகுரு

கலப்பு கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு – இந்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் கண்டனம் | தமிழில்: தா.சந்திரகுரு

இணையவழி மற்றும் நேரடி வகுப்புகளின் கலவையாக இருக்கின்ற கலப்பு கற்றல் முறையை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் அமைப்புகளிடமிருந்து பலத்த கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிற கொள்கை…
மாநில பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கபளீகரம்: எப்படித் தடுப்பது?? – நா.மணி

மாநில பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கபளீகரம்: எப்படித் தடுப்பது?? – நா.மணி

தமிழ் நாட்டின் தற்போதைய உயர் கல்வி சேர்க்கை விகிதம் 49 விழுக்காடு. ஆனால், நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கையோ 2030 ஆம் ஆண்டில் 50 விழுக்காட்டை எட்ட திட்டமிடுகிறது. அத்தகைய எட்டும் வழிமுறைகள் அனைத்தும் 50 விழுக்காடு என்ற நிலையை…