Ku. Alagirisami Short Story Raja Vanthirukkirar Synopsis written by Ramachandra Vaidyanath. Book Day Branch of Bharathi Puthakalayam.



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

இவரது உலகை குழந்தைகளே ஆக்ரமித்துக் கொள்ளுகிறார்கள் என்பதை படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.  நுட்பமான நேசவுணர்வு கண்ணியாக கதைகளில் பரவி நிற்கிறது.

ராஜா வந்திருக்கிறார்

கு. அழகிரிசாமி

“எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?” என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி.

செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.  தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்.  மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் யோசனை செய்தாள்.  அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள்.

அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கு இடையே ஒரு போட்டி நடந்தது.  ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.  செல்லையா அந்த வருஷம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை.  அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.  

ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்.  படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி இதோ இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு என்பான்.  செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்.  இருவருமே பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள்.  எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ அவன் ஜெயித்துவிடுவான்.  மற்றவன் தோற்றுப் போவான்.

கணக்கு வாத்தியார் வந்துவிட்டார்.  இருவருடைய போட்டியும் நின்றுவிட்டது.   கடைசியில் சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு ஒரு வேப்பமரத்தில் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.  தம்பையாவுக்கும், மங்கம்மாளுக்கும் தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு சொல்ல முடியாத வருத்தம்.  எல்லோரும் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.  நடந்து செல்லுமபோதே  படப்போட்டி வெறோரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது.  எங்கள் வீட்டில் அது இருக்கே உங்கள் வீட்டில் இருக்கா? என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். 

இந்தப் புது போட்டியின் கடைசியில்தான் ராமசாமி “எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா?” என்று கேட்டான். தம்பையாவோ செல்லையாவோ பதில் சொல்லவில்லை.  மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக் கொண்டு  ராமசாமியின் முன்னால் வந்து நின்றாள்.  “ஐயோ சில்க் சட்டை எதுக்காம்?  ஹும் லேசா சருகு மாதிரி இருக்கும்.   சீக்கிரம் கிழிஞ்சு போகும்”  செல்லையாவின் சட்டையைக் காட்டி “இதுதான் கனமாயிருக்கு, ரொம்ப நாளைக்கு கிழியாம இருக்கும் நல்லாப் பாரு”  என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லிவிட்டு செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.  பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து “தோத்துப் போயிட்டயா” என்று ஏளனம் பண்ணினார்கள்.  இருந்தாலும் போட்டி தொடர்ந்தது.  



மேலத்தெருவுக்கும் நுழையும்போது ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள்.  ராமசாமி வீடு முதலாவதாக வந்தது.  தப்பினோம், பிழைத்தோம் என்று வீட்டுக்குள் பாய்ந்தான்.  உடனே வீதியில் நின்ற அந்த மூவரும் “தோத்தோ நாயே” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டும், கையால் சொடக்குப் போட்டுக் கொண்டும் நின்றார்கள்.  வீட்டுக்குள்ளிருந்து ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களின் ஒருவனான மீசைக்காரன் தலைப்பாகைக் கட்டுடன் வெளியே வந்து  அதட்டினான்.   மூன்று பேரும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டார்கள்,  

மங்கம்மாள் ஒரே ஓட்டமாக ஓடி “அம்மா” என்று தாயம்மாளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டாள்.  

“ஐயா வந்துட்டாரா அம்மா?” என்று தம்பையா கேட்டான்.  “வரலியே” என்று பொய் சொல்லிவிட்டு பொய்ச் சிரிப்பும் சிரித்தாள் தாயம்மாள். மங்கம்மாள் விறுவிறு என்று அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றாள்.   வலது கையிலிருந்த புத்தகக் கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள்.  வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும் புருவங்களுக்க மத்தியிலும் வைத்துக் கொண்டு முகத்தையும் ஒரு பக்கமாக திருப்பிக் கொண்டு “அம்மா, எனக்குத் தெரிஞ்ச போச்சு நீ பொய் சொல்றே, ஐயா வந்துட்டாரு” என்று நீட்டி நீட்டிச் சொன்னாள்.

தாயம்மாள் வீட்டுக்குள் நுழைந்தாள்.  மூலையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியைச் சுட்டிக்காட்டி “அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா” என்றாள்.  மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.  பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர்.  துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான்  என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள்.  துண்டு யாரைச் சேருவது என்று தெரியவில்லை.  உடனே செல்லையா கேட்டான் “துண்டு யாருக்கம்மா?”   “ஐயாவுக்கு” என்றாள் தாயம்மாள்.

“அப்படீன்னா உனக்கு?” என்று மங்கம்மாள் கேட்டாள்.

தாயம்மாள் சிரித்துக் கொண்டு “எனக்குத்தான் ரெண்டு சீலை இருக்கே? இன்னும் எதுக்கு? எல்லாருக்கும் புதுத் துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?” 

“ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்?” என்றாள் மங்கம்மாள்.  “வாயாடி வாயாடி ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே.  துண்டு இல்லாம எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது” என்று சொல்லிவிட்டு மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய். 

குழந்தைகள் சாப்பிடும்போதுதான் அவர்களுடைய அப்பா பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு தூரபந்துவின் திடீர் மரணத்தை முன்னிட்டுச் சென்றிருப்பதாகவும், மறுநாள் மத்தியானத்துக்குள் வந்துவிடுவார் என்றும் வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளோடு தீபாவளி  கொண்டாடிவிடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள்.  

சாப்பாடு முடிந்தது,  ராப்பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பேரும் உட்கார்ந்தார்கள்.  தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு எச்சில் கும்பாக்களைக் கழுவி முற்றத்துக்கு வந்தாள்.  முற்றத்தின் மூலையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு முருங்கைமரம் உண்டு.  அதன் நிழல்ல் கருப்பாக  ஓர் உருவம்  தெரிந்தது.  பக்கத்து வீட்டு நாயாக இருக்கம் என்று நினைத்து உள்ளே வந்துவிட்டாள்.  

தம்பையா அண்ணனைப் பார்த்து துணைக்கு வர்ரயா என்று கூப்பிட்டான்.  இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய்விட்டுவர அவனுக்குப் பயம்.  செல்லையா துணைக்குப் போனான்.  இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கைமரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது.  அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம் ராமசாமியின் வீட்டை நோக்கிக் போகும் இரண்டு பேர் இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கையில் எடுத்துக் கொர்ணடு போனதுதான்.  ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் கொடுத்தன.  இருவரும் கருப்பு உருவத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.



அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும்,  அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர வேறு உடைகள் கிடையாது.   தரையில்  உட்கார்ந்தால் குளிரும் என்று பாதங்கள் மட்டும் தரையில் படும்படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான்.  அவனுக்கு முன்னால் மூன்று எச்சில் இலைகள்,  அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கறி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.  

செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானதுபோல் “டேய் ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே? போடா” என்று அதட்டினான்.

“இருட்டிலே அங்கே என்ன பண்றீக?” என்று சொல்லிக்கொண்டே மரத்தின் பக்கமாக வந்துவிட்டாள்.  அங்கே நின்று யோசிப்பதற்கு நேரமில்லை.  மழை.  ஆகவே மூன்று பேரையும் அவசர அவசரமாக வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு ஓடினாள்.

 சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான்.  அவனுக்கு உடம்பெல்லாம் ஒரே சிரங்கு.  தலையில் பொடுகு வெடித்து பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது.  பக்கத்தில் வந்து நின்றால் ஒரு மாதிரி துர்வாடை.

“யாரோ, யார் பெத்த பிள்ளையோ?” என்று சொல்லிவிட்டு மழையில் நனைந்த குழந்தைகளைத் துவட்டப் பழைய துணியை எடுக்கப்போனாள்.  செல்லையா “போ” என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.  மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் “போயேன்” என்று சிணுங்கிக் கொண்டே சொன்னாள்.  அவ்வளவுதான்.  திடீரென்று மடை திறந்தா மாதிரி கோவென்று அழுதுவிட்டான், 

அம்மா சிறுவனைத் தேற்றினாள்.  “சும்மா இரு தம்பி, அழாதே” என்று இரண்டாவது முறையும் அவள் சொன்னாள்.  பழையை துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் துடைத்துக் கொண்டார்கள்.  “பாவம் அவனுக்கும் குடு”  என்றாள் மங்கம்மாள்.

தாய் தகப்பன் இல்லாத அவன் தன் ஊரான விளாத்திகுளத்திலிருந்து கழுகுமலையிலுள்ள அத்தை வீட்டுக்கு போவதை தாயம்மாள் அறிந்தாள்.  ராஜாவுக்கு சாப்பாடு போட்டாள்.  இரவில் தங்களுடன் ராஜாவை படுக்க வைத்துக் கொண்டனர்.  

வெடிச்சத்தம் ஏங்கோ கேட்டவுடனேயே குழந்தைகள் தனக்கு வேண்டியதைக் கூறத் தொடங்கினர்.  “மத்தாப்பு கொளுத்தினா வயிறு நிறையுதா?  காலையிலே தோசை சுட்டுத் தாரேன், மத்தாப்பு எதுக்கு?” என்று தாயம்மாள் சொன்னாள் மங்கம்மாகேட்கவில்லை சிணுங்கினாள்.  “அந்தப் பையன் சோறு வேணும்னுகூட அழல்லே, நீ  மத்தாப்பு வேணும்னு அழறே?”  மங்கம்மாள் அதற்கும் ஏதோ பதில்  சொல்லிக் கொண்டிருந்தாள்.  “வாடையடிக்கம்மா” என்று தம்பையா அரைத்தூக்கத்தில் சொன்னான்.  மறுநாள் கட்டிக் கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த பீத்தல் இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக் கொண்டு வந்து  ராஜா உட்பட எல்லோருக்கும் சேர்த்து போர்த்தினாள்.  

ராமசாமியும் தூங்காம வேட்டுப் போட்டுக் கொண்டிருந்தான்.  ஒரு ஜமீன்தாரின் மகன்தான் அவனது அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன்.   தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான்.  “ராஜா ராஜா வர்ரார் சிறப்பாச் செய்யணும்” என்று அவன் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.  



கோழி கூவியதும் தாயம்மாள் கண் விழித்தாள்.  விளக்கை ஏற்றினாள்.  ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள்.  ராஜாவோ மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.  தாயம்மாள் விடவில்லை.  சீயக்காய்த் தூளைப் போட்டு தேய்த்ததும் அழுதே விட்டான். 

புதுத்துணிகளுக்கு மஞ்சள் வைத்துச செல்லையாவும், தம்பையாவும் உடுத்திக் கொண்டார்கள்.  மங்கம்மாளும் பாவடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.  ராஜா கௌபீனத்தோடுதான் நின்றான்.  சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா  வேண்டாமா என்று அவள் மனதுக்குள் வேதனை மிக்க போராட்டம்.  மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும் வீதி வழி போவதற்கு கூசியதையும் ஒரு துண்டு வாங்க  வழியில்லையே என்று அவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள்.  

அப்போது மங்கம்மாள் எழுந்து வந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்.  அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லவது போலச் சொன்னாள்.  “பாவம் அவனுக்கு அந்தத் துண்டைக் குடு அம்மா”.  குழந்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினாள்.  தாயம்மாய் முகம் கோரமாக மாறியது.  முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள்.  மங்கம்மாள் தான் சொன்னதற்காகத்தான் அம்மா அழுகிறாள் என்ற பயந்துவிட்டாள். பிறகு தழுதழுத்துக் கொண்டே ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக் கொடுக்கச் சொன்னாள்.  

அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள்.  ராமசாமி நீலநிறமான கால் சட்டையும் அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவள் பக்கத்தில் ஓடி வந்தான்.  மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள்.  இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர்.  சந்தித்த மாத்திரத்தில் மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான் “எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்!”

ஊர்க்காரர்களைப் போல தன் அக்காள் புருஷனை ராஜா என்று சந்தோஷத்தோடு சொன்னானனேயொழிய அவளை போட்டிக்கு அழைப்பதற்காக அல்ல.  ஆனால் அவளுக்கோ அவனுடைய பெருமையை மட்டம் தட்ட வேண்டும் என்று துடித்தது.  ராமசாமியைப் பார்த்து ரேகை சாஸ்திரியிடம் காட்டுவதுபோல்  கையை வைத்துக் கொண்டு மிக மிக ஏளனமாக சொன்னாள் “ஐயோ உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்? எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான்.  வேணும்னா வந்து பாரு”.

சக்தி- ஜூன், 1950

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *