thodar 16 : karupputhan sirappu - a.bakkiyam தொடர் 16: கருப்புதான் சிறப்பு - அ.பாக்கியம்thodar 16 : karupputhan sirappu - a.bakkiyam தொடர் 16: கருப்புதான் சிறப்பு - அ.பாக்கியம்

கருப்புதான் சிறப்பு

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தபிறகு முகமதுஅலி, குத்துச்சண்டை வளையத்துக்கு வெளியே நேரடியாக மக்களிடம் வலம்வந்து கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கள் பொதுமக்களை வியட்நாம் போருக்கு எதிராக திருப்புவதற்கும், சிவில் உரிமைகள் இயக்கம் தனது வேகத்தை அதிகப்படுத்துவதற்கும் உதவி செய்தது. அதாவது நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று முகமது அலி, யுத்த எதிர்ப்பு உரை நிகழ்த்தினார். ஒரு குத்துச்சண்டை வீரருக்கு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேசுவது என்பது புதிய களமாகத்தான் இருந்தது.

இதுபோன்ற செயல்களில் அவருக்கு முன்அனுபவம் இல்லை. ஆனால் அடக்குமுறைகளும், அவமானங்களும், நிறவெறி தாக்குதல்களும் அவரை இயல்பான எழுச்சிமிகு பேச்சாளராக மாற்றிவிட்டது. குத்துச் சண்டை வளையத்திற்குள் அவரது கை பேசியது. பொது வெளியில் அவரது வாய் பேசியது. அவரது ‘கை வீச்சு’ வெற்றியை ஈட்டித் தந்தது. ‘வாய் வீச்சு’ கருப்பின மக்களிடைய எழுச்சியை ஏற்படுத்தியது. 1968ஆம் ஆண்டு முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களிடையே 200க்கும் மேற்பட்ட கூட்டங்களில் முகமது அலி எழுச்சி உரையாற்றி இருக்கிறார்.

அவற்றில் புகழ்பெற்ற உரை கருப்புதான் சிறப்பு (black is the best) என்ற உரையாகும். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டக் குழுவான பிளாக் பவர் (black power) என்ற அமைப்பின் சார்பில் பேசினார். இந்த நிகழ்விற்கு தலைமையேற்ற சமூகவியல் பேராசிரியர் நாதன் ஹேர், முகமது அலியை பேச அழைத்த பொழுது அரங்கமே ஆர்ப்பரித்தது. 4000 க்கும் அதிகமான மாணவர்கள் சமூக அறிவியலாளர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்தனர். அங்குதான், புகழ்பெற்ற கருப்புதான் சிறப்பு என்ற நீண்ட சொற்பொழிவை முகமது அலி நிகழ்த்தினார்

இதுபோன்ற சொற்பொழிவுகளில் ஒன்றை முகமது அலி மறக்காமல் குறிப்பிடுவார். “நான் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து வியட்நாமுக்கு செல்லாததால் நிறைய இழந்து விட்டேன் என்று பலரும் கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்வேன். நான் அப்படிப்பட்ட முடிவை எடுத்ததால்தான் எனக்கு மன நிம்மதி உள்ளது. எனது மனசாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை என்பதில் நான் தெளிவாக உள்ளேன். நான் இரவில் நிம்மதியாக தூங்கி காலையில் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்கிறேன். எனது முடிவில் நான் பெருமை கொள்கிறேன். என் முடிவுக்காக என்னை சிறைக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சியுடன் செல்வேன்” என்று கூறுவார். அவருடைய இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அலியின் பேச்சுக்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல… உலகெங்கும் போருக்கு எதிரான செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைந்தது.

ஆதரிப்பவர்கள் அடக்கப்பட்டார்கள்

முகமது அலியின் செயல்பாடுகள் பல கருப்பின அமெரிக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்த அதே நேரத்தில் ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் ஊதுகுழலான பத்திரிகைகளுக்கும் அவர் வேண்டாதவராக காட்சியளித்தார். அவரை ஒரு வெறுக்கப்பட்ட மனிதனாக கருதினர். ஏராளமான கொலை மிரட்டல்களை அலி, அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டே இருந்தார். அதைப்பற்றி எல்லாம் அவர் கவலை கொள்ளவும் இல்லை; அதுகுறித்து பெரிதாக எங்கும் பேசிக் கொள்வதும் இல்லை. முகமது அலியை மட்டுமல்ல… அவருக்கு ஆதரவாக இருந்தவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள்.

விளையாட்டுத் துறை சிறப்பு செய்தியாளர் ஜெர்ரி இசன் பெர்க் என்பவர் கூறியதாவது: முகமது அலிக்கு ஆதரவாக எழுதக்கூடாது; அவரைப் பற்றிய எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று எங்கள் பத்திரிகையை மிரட்டினார்கள். நாங்கள் முகமது அலிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டபோது, பத்திரிகை அலுவலகத்தை காலி செய்யும்படி மிரட்டினார்கள். காலி செய்யவில்லை என்றால் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று அச்சுறுத்தி அலுவலகத்தை காலி செய்ய வைத்தார்கள். பத்திரிகையாளர்களின் கார்களை அடித்து நொறுக்கினார்கள் என்று தெரிவித்தார். இதுபோன்று முகமது அலிக்கு ஆதரவானவர்கள் மீது எண்ணற்ற தாக்குதல்கள் நடந்த வண்ணமே இருந்தது.

முகமது அலியின் தகவல் தொடர்புகள் அனைத்தையுமே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) மினாரெட் என்ற குறியீட்டை உருவாக்கி ரகசியமாக கண்காணித்தது. அலியுடன் பேசிய செனட்டர்கள் பிராங்க் சர்ச், ஹோவர்ட் பேக்கர், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், முக்கிய அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் ஆகியவர்களின் பேச்சுக்களை இடைமறித்து ஒட்டுகேட்டது. முகமதுஅலியின் நடவடிக்கைகள் வெகுஜன ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க அரசு அச்சப்பட்டது.

அதே நேரத்தில் கருப்பின மக்களிடையே முகமது அலியின் புகழ் ஓங்கி இருக்கிறது என்றும், இவர்களது நடவடிக்கை முற்றிலும் சட்ட விரோதமாக இல்லாவிட்டாலும் அமெரிக்காவின் மதிப்பை இழக்க செய்கிறது என்று இந்த தகவல் ஒட்டுக்கேட்பு மூலம் அறிந்து கொண்டனர். இதையடுத்து அமெரிக்க அரசு முகமது அலிக்கும் மற்றவர்களுக்கும் நெருக்கடியை கொடுத்தது. ஆனாலும் முகமது அலி தனது முடிவில் உறுதியாக இருந்தார். குத்துச்சண்டை இல்லை என்றாலும் நிறவெறிக்கு எதிராகவும் யுத்தத்திற்கு எதிராகவும் களமாடிக் கொண்டிருந்தார்.

மன வலிமைக்கு சாட்சி

அலியின் யுத்த எதிர்ப்பு பற்றி பலரும் சமகாலத்திலும் பிற்காலத்திலும் நினைவு கூர்ந்து இருப்பது அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. முகமது அலியைக் குறித்து பிரபலமான நியூயார்க் பத்திரிகையில் எழுத்தாளர் வில்லியம் ரோடன் எழுதுகிற பொழுது, முகமது அலியின் செயல்கள் ஒரு விளையாட்டு வீரரின் மகத்துவத்தை, திறமைகளை கடந்து, மக்கள்முன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றது. உங்கள் மக்களின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அவர்களுக்கு உதவிட நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் நாடு அதன் அடிப்படை அரசியல் சாசன அமைப்பின்படி செயல்படுகிறதா? என்ற கேள்விகளை முன் வைக்கிறது. அவர் எழுப்பிய கேள்விகளின் மூலம் அவரின் செயலின் நியாயத்தை என்னால் உணர முடிந்தது எனக்குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற பேஸ் பால் விளையாட்டு வீரர் கரீம் அப்துல் ஜப்பார் “எனது உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு அலியை பிடிக்கவில்லை. காரணம் அவர் அரசுக்கு எதிராக இருந்தார் என்பதுதான். குத்துச்சண்டையில் முகத்தில் குத்துவதுபோல், முகமது அலி, அதிகார வர்க்கத்தின் மூக்கில் கடித்து விட்டு வந்துள்ளார். ஒரு கருப்பினத்தவர் என்பதில் அவர் பெருமிதம் கொண்டார். அவருக்கு இவ்வளவு திறமை இருக்கிறது என்பது கூட அவரை ஆபத்தானவர் என்று நினைக்க வைத்தது. இந்த காரணங்களுக்காக நான் அவரை அதிகமாக நேசித்தேன்” என்று குறிப்பிட்டார்.

வியட்நாம் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்காவில் பரவலாக அரசுக்கு ஆதரவு இருந்த நேரத்தில், முகமது அலி துணிச்சலாக எடுத்த முடிவைபற்றி அமெரிக்காவில் புகழ்பெற்ற சிவில் உரிமை செயல்பாட்டாளர், வானொலி பேச்சாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி ஆளுமை, அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட அல் ஷார்ப்டன் (Al Sharpton) கூறும்பொழுது, “உலகின் மிகப்பெரிய சாம்பியன் பட்டம் வென்றவர். பிரபலமாகி புகழின் உச்சிக்கு சென்றவர், அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி, கொட்டி குவிக்கப்படும் டாலர்களை புறந்தள்ளி, ஒரு மாபெரும் முடிவெடுத்தார். அவர் எடுத்த முடிவு முழுமையான உணர்வை பிரதிபலித்தது.

போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள் செய்தது மிகப் பெரிய தியாகம். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் உயிரை நிச்சயம் இழப்போம் என்று தெரியாது. ஆனால், முகமது அலியோ புகழ் பறிப்பு, பண இழப்பு, சிறைக்குச் செல்வது உறுதி என தெரிந்தும் அதை செய்தார் என்றால் அது தியாகத்தின் மற்றொரு நிலை” என்று முகமது அலியின் துணிச்சலை பற்றியும் தியாகத்தைப் பற்றியும் அவர் விவரித்தது அமெரிக்க கருப்பின மக்களை ஆகர்ஷித்தது.

சிவில் உரிமை தலைவர்களில் ஒருவரான ரால்ப் அபர்னாதியால் என்பவர் 1970 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் முகமது அலிக்கு மார்டின் லூதர் கிங் விருதை வழங்கினார். அவர் முகமது அலியைப் பற்றி குறிப்பிடும் பொழுது ‘‘மன வலிமைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சாட்சி அவர்’ என்று கூறினார்.

முகமது அலி, குத்துச்சண்டை களத்திற்கு வெளியே மூன்றரை ஆண்டுகளை முழுக்க முழுக்க அரசியல் செயல்பாட்டுக் களமாக மாற்றிக் கொண்டார். குத்துச்சண்டை வளையத்துக்குள் இருந்து ஏற்படுத்திய தாக்கத்தைவிட அதற்கு வெளியே அவர் ஆற்றிய பணிகள் அமெரிக்க சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவெளியில் முகமது அலியின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில் முகமது அலியின் மேல்முறையீடு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *